எந்திரம் போன்ற மனிதர்களை உருவாக்கும் அரசும், மத நிறுவனங்களும்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

 2

சரியான கல்வி
ஜே.கிருஷ்ணமூர்த்தி


பள்ளியில் உள்ள கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் மனதில் ஏராளமான குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்களின் மனதிலுள்ள முன்மாதிரிகளை  குறிக்கோள்களை மாணவர்களுக்கு வலியுறுத்திக் கூறுவது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுமா? நிச்சயமாக இல்லை. இது அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல்பாடாகும்.

நீங்கள் நேசிக்கும் குழந்தைகளை அன்பும் அக்கறையும் இல்லாத மனிதர்களிடம் ஒப்படைக்கிறீர்கள். அப்படி குழந்தைகள் ஒப்படைக்கப்படும் இடம்தான், பள்ளி. இதனால் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு மனதில் பயம், பதற்றம், குழப்பம் உண்டாகிறது. அவர்களுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கூட தேவையான அன்பு கிடைப்பதில்லை. இந்த முறையில்தான் மாணவர்கள் மந்தமாக, உணர்ச்சிகள் இல்லாத வணிகம் செய்பவர்களாக உருவாக்குகிறார்கள். இன்றைய பெற்றோர் லட்சியத்தில் உறுதியாக இருந்து தங்களது தேவைக்கு ஏற்ப குழந்தைகளைப் படிக்க வைத்து பட்டம் பெற வைக்கிறார்கள்.

குறிக்கோள்கள், முன்மாதிரிகள் என வடிவமைத்துக்கொள்ளாமல் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது முக்கியம். அப்படி குறிப்பிட்ட முறைகள் நுட்பத்திற்குள் சிக்கினால் அவர்களின் நிகழ்காலம் உடைந்து நொறுங்கிவிடும். குறிப்பிட்ட முறையிலான வாழ்க்கை முறைகளுக்கு பழகினால், அவர்களின் முழு வாழ்க்கையும் தானியங்கு முறை போல செயற்கையாக ஆகிவிடும்தானே?

இப்படிப்பட்ட செயற்கையான ஒழுக்கங்களைக் கொண்ட எந்திர மனிதர்கள் நமக்குத் தேவை இல்லை. நமக்கு சுதந்திரமாக யோசிக்கும் மனிதர்கள்தான் தேவை. எந்திரம் போல இயங்கும் மனிதர்களைக் கொண்ட உலகில் எதிர்காலத்தை எளிதாக கணிக்கலாம்தான். அதை பின்னாளில் உலகம் செய்யும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனால் உயிரோட்டம் கொண்ட மனிதர்கள் எந்திரங்கள் அல்ல. எனவே நமக்கு இந்த முறை பயன்படாது.

 

நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே நிறைய இடைவெளிகள் உண்டு. எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தை பலியிடுவது தியாகம் செய்வது தவறான ஒன்று. ஒரு மனிதரின் மூளையை குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டுமா? நூல்களைப் படித்து அதிலுள்ள நுட்பங்கள், முறைகளின் படி பேராசைகளை, திட்டங்களை நம்பிக்கைகளை, பயங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டுமா?

சரியான கல்விமுறை என்பது, எந்த தத்துவத்தின் படியும் அமைய வேண்டியதில்லை. தத்துவ கல்வி முறை எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைக் கொடுக்கலாம். கல்வி என்பது தனிப்பட்ட மனிதர் சுதந்திரமாகச்  சிந்திப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். அதாவது மன முதிர்ச்சியை முடுக்க வேண்டும். திறனறித் தேர்வு, மனப்பாடம் செய்தல் ஆகியவை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை உருவாக்கி சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துகிறது. மாணவர்களை தூக்கி எறிதல், வறட்சியான பாடங்கள் ஆகியவை குறிப்பிட்ட வணிக சிந்தனை கொண்ட மனிதர்களை உருவாக்குகின்றன. இவர்கள் புதுமைத்திறன் கொண்டவர்கள் அல்ல.

 

நாம் ஒருவருக்கொருவர் கொள்ளும் அன்பு மூலமே பிறரை நாம் அறிந்துகொள்ள முடியும். நம் கல்வி முறையில் இதற்கான வாய்ப்புகள் குறைவு. அரசுக்கு எந்திரம் போன்ற சிந்திக்கிற மனிதர்கள்தான் தேவை. எனவே, அரசு கல்வியை தன் கையில் வைத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. இதன் காரணமாக மக்களை அரசும், மதநிறுவனங்களும் எளிதாக கட்டுப்படுத்த முடிகிறது.

 

வாழ்க்கையில் உறுதியான அமைப்பு முறை ஏதும் கிடையாது. குறிப்பிட்ட செயல்களை பலவந்தமாக செய்யவைக்க முடியாது. வெறும் தகவல் அறிவை மட்டும் கொண்டவர் உலகின் சவால்களை ஏற்றுக்கொண்டு வாழ முடியாது. கல்வி கற்பிப்பதில் தனித்தனியாக பிரிவுகள் பிரித்து ஆண்கள், பெண்கள் என யோசித்தால் அவர்களது வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக இருக்காது.

கல்வியின் அடிப்படை என்பது,  வாழ்க்கையை முழுமையாக எதிர்கொண்டு வாழ்வதற்கான துணிச்சலை அளிப்பதாகும். ஆனால்,  முன் மாதிரிகள், குறிக்கோள்களைக் கொண்டவர்கள் என மதிக்கப்படுபவர்கள் பலரும் வறட்சியான இதயத்தையும் மூளையையும் கொண்டவர்கள்தான்.

குழந்தைகளை அறிந்துகொள்ள நினைப்பவர் எப்போதும் விழிப்புணர்வோடு இருந்து அவர்களை கவனிக்க வேண்டும். கல்வி மூலம் புதிய கருத்துகளை மனதில் பதிய வைக்க முடியும். அதற்குப் பதிலாக பழைய நம்பிக்கைகளை ஒருவரின் மனதில் பதிய வைக்க முயன்றால் ஆழமான அறிவுத்தேடல் என்பது ஒருவரின் சிந்தனை வளரும் பருவத்திலேயே தேங்கி நின்றுவிடும்.

 கல்வி என்பது இன்றைய உலகின் சீரழிவு பற்றியதாக அதை எதிர்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும். குழந்தை வளரும் சூழல், கல்வி, அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை நாம் உறுதிப்படுத்தவேண்டும்.  அப்போதுதான் அவர்கள் வளர்ந்து வந்து அவர்களுக்கு முன்னுள்ள சவால்களை தீர்க்கும் வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இதன் மூலம் அவர்கள் முன்னே நடந்து வரும் பேரழிவுகளை தடுத்து சீர் செய்ய முடியும். இதற்கு ஒருவர்  அதாவது மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் தன்னை அறிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான் தத்துவங்கள், திட்டங்கள், அமைப்பு ஆகியவற்றைத் தாண்டி ஒருவர் சுதந்திரமாக செயல்பட முடியும்.

தி ரைட் கைண்ட் ஆப் எஜூகேஷன் நூலில் இருந்து….. கருத்துகள்