நக்சலைட்டாக இருந்து கல்லூரி மாணவராக மாறியவனின் கதை! ஜல்சா - பவன் கல்யாணம், இலியானா, பார்வதி மெல்டன்

 











ஜல்சா
இயக்கம் திரிவிக்ரம் சீனிவாஸ்
இசை பான் இந்தியா ராக்ஸ்டார் டிஎஸ்பி




பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு மட்டுமேயான படம். படத்தில் எந்த லாஜிக்கும் கிடையாது. அனைத்துமே மேஜிக்தான். அதைப் புரிந்துகொண்டால் மட்டுமே ஒருவர் இந்தப் படத்தைப் பார்க்கமுடியும்.

பவன் கல்யாண் கல்லூரியில் டிகிரிக்கு மேல் டிகிரியாக படித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு காதலி இருக்கிறார். அவர்தான் கமாலினி முகர்ஜி. அவர் போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜின் பெண். இதனால் அவரது காதல், கல்யாணம் வரை செல்வதில்லை. இதனால் தனது காதலி கல்யாணத்திலேயே பந்திக்குப் போய் சாப்பிட்டு வருகிறார். இந்தளவுக்குத்தான் பவன் கல்யாணின் வாழ்க்கை இருக்கிறது. இப்படி இருக்கும் வாழ்க்கை, இரு பெண்களை வல்லுறவு செய்ய முயலும் கேங் ஒன்றை அடித்து துவைக்க மாறுகிறது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு இரு பெண்கள் பவனை காதலிக்கிறேன் என்று சொல்லி வருகிறார்கள். அதில் பாக்கியலட்சுமி என்ற பெண்ணை பவன் காதலிக்கிறார். அவருக்கு முன்பே அந்த பெண் அவரை காதலிக்கிறாள். இந்த நேரத்தில் சிறைக்குள் இருந்தபடியே ஒரு ரவுடி நிலங்களை செட்டில் செய்து வருகிறான். அவன் பவனைத் தேடி வருகிறான். எதற்கு என்பதை படத்தில் சொல்லும் நேரம் முக்கியமானது. ஆனால் பார்வையாளர்களுக்கு சாவகாசமாக தெரிந்துகொள்ளலாம் என நிதானமாக சொல்லுகிறார்கள்.  இடைவேளையில் வரும் சண்டைக்காட்சி நன்றாக இருக்கிறது. அதில்தான் பவன் அவ்வளவு ஜாலியாக இருக்கிறாரே அவரது இறந்தகாலம் எப்படி என்று தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சிக்குப் பிறகு எதுவும் படத்தில் நன்றாக இல்லை.

இடைவேளைக்குப் பிறகு நக்சலைட் பற்றிய காட்சிகள் வருகிறது. முடிந்தவரை அதைப் பற்றி கவனிக்காமல் இருப்பது மனநலனுக்கு நல்லது. அந்தளவு எளிதாக கையாள்கிறார்கள். அமைச்சர் வரும் வழியில் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கிறது. பவனின் சகாக்களை பிரகாஷ்ராஜ் தலைமையிலான குழு கொன்றுவிடுகிறது. மிச்சமிருக்கும் நக்சல் ஒருவர்தான். அது பவன்தான். அமைச்சரை கண்ணி வெடியிலிருந்து அவர் காப்பாற்றுகிறார். அதற்காக அவரை காவல்துறை விட்டுவிடுகிறது என கதை கட்டுகிறார்கள். சீரியசாக இப்படி எடுத்தார்களா, காமெடியாக இப்படி செய்தார்களா என்று புரியவில்லை. 

பாடல்களை ஜாலியாக வண்ணமயமாக எடுத்திருக்கிறார்கள். அதை நீங்கள் ஜாலியாக பார்க்கலாம். சண்டைக் காட்சிகள் ரத்தம் தெறிக்க பார்வையாளர்கள் மிரளும் படி எடுத்திருக்கிறார்கள். இந்த வகையில் இடைவேளை, இறுதிப்பகுதிக்கான சண்டைகளைக் கூறலாம். மற்றபடி படத்தில் எதுவும் சொல்லும்படி இல்லை.

திரிவிக்ரம் என்றாலே படத்தில் வரும் பன்ச்கள்தான் முக்கியமானவை. அந்த வகையில் ஆணைச் சுற்றி வரும் பெண் பற்றி பவன் அடிக்கும் கமெண்ட் சிறப்பு. பவனே படத்தில் பெரும்பாலான காமெடியை செய்து விடுகிறார். இதைத்தாண்டியும் பிரம்மானந்தம் சில காட்சிகளில் வருகிறார். இறுதியில் டைட்டில் கார்ட் ஓடும்போது கூட காமெடி செய்வதாக காட்சிகளை செய்திருக்கிறார்கள். அவையெல்லாமும் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றன.

வில்லன் யார், முகேஷ் ரிஷி. மானத்திற்காக பயந்து அதனால் பக்கவாதம் வந்து படுக்கையில் வீழ்கிறார். அவருக்கு பயம் கொடுத்த பவனின் வாள் பூமிக்குள் போவதோடு அவரது உயிரும் போகிறது என்பதே இறுதிக்காட்சி. படத்தில் சில அரசியல் வசனங்களும் உண்டு. ஆனால் அதெல்லாம் ஆந்திராக்காரர்கள் படம் வந்த சூழலை கணக்கில் எடுத்து சிரித்து மகிழலாம்.  படத்தின் காட்சிகளை ரசிகர்களுக்காகவே இயக்குநர் திரிவிக்ரம் உருவாக்கியுள்ளார்.இ தனால் படத்தின் கதை இன்ன திசையில் போகிறது என யூகிக்கவெல்லாம் தேவையில்லை. நிதானமாக காலை நீட்டிப்போட்டு உட்கார்ந்து ஜாலியாக சிரிக்க ஒரு படம் என எடுத்திருக்கிறார்கள்.

ஜல்சா – சிரிப்புக்காக…

கோமாளிமேடை டீம்


கருத்துகள்