கிராமத்து நினைவுகளை உயிர்ப்புடன் நினைவுகூர உதவும் கதைகள் - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - கி.ரா

 












கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்


நூல் தொகுப்பு மா ஞானபாரதி ( பாரதி மார்க்ஸ்)


கி ரா அவர்களின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு.


டிஸ்கவரி ப ப்ளிகேஷன்ஸ்
 

கரிசல் எழுத்தாளர் என அன்புடன் அழைக்கப்படும் கி ராவின் நூல்தொகுப்பு. மொத்தம் 23 கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகள் எவையும் வாசிப்பதற்கு சலிப்போ, அயர்வோ ஊட்டுவன அல்ல. அனைத்து கதைகளும் அதற்கேயான இயல்பில் ஆற்றொழுக்கு போன்ற போக்கில் செல்கின்றன.

சொந்த சீப்பு, ஜடாயு, சுப்பன்னா, கோடாங்கிப் பேய், அங்கணம், சாவஞ்செத்த சாதிகள் ஆகிய கதைகள் எனக்கு பிடித்தமானவையாக தோன்றின.

சொந்த சீப்பு என்பது, ஒரு பொருளை வாங்கி அதன் மீது வளர்த்துக் கொள்ளும் பற்று பற்றியது. ஒரே அறையில் தங்கும் நண்பர்கள் இருந்தால், அங்குள்ள அனைத்து பொருட்களுமே எந்த கேள்வி பதிலுமின்றி பகிரப்படும். அப்படி பகீரப்படும் சீப்பு காரணமாக அதை வாங்கியவர் மனதில் ஏற்படும் கோபமும், அலுப்பும்தான் கதை. நகர வாழ்க்கையில் முதலில் நாம் வாங்கும் பொருள் பெரிய ஈர்ப்பு கொண்டிருக்கும். அதாவது, அதற்கு மனதில் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூறலாம். பிறகு, நிறைய விஷயங்கள் மனதில் இடம்பிடித்துக்கொள்ளும்போது வாங்கிய பொருட்கள் மெல்ல கீழிறங்கும். அதற்கான காலகட்டம் தேவைதானே?

 ஜடாயு கதை அப்படியே புராணத்தில் உள்ள வரிசைதான். ஆனால் இந்த சம்பவம் கிராமத்தில் நடைபெறுகிறது. அநீதியை தட்டிக்கேட்க செல்லும் முதியவர் எப்படி தாக்கப்பட்டு இறக்கிறார் என்பதை ஆசிரியர் துல்லியமாக தந்தி நாளிதழ் போல விவரித்திருக்கிறார். அதைப் படிக்கும்போது யாவருக்கும் பீதி மனதைக் கவ்வும். இதில் உள்ளார்ந்து நாம் அறியும் செய்தி ஏதுமில்லை. கதையின் போக்கில் படித்துவிட்டு அப்படியே செல்லவேண்டியதுதான். பொதுநலம் நாடுபவன் முதலில் இழப்பது மனநிம்மதியைத்தான் என பெரியார் கூறும் கூற்று ஒன்றுண்டு. அதைப்போல இக்கதையில் ஜடாயு போல வந்து பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற முயன்று இறக்கிறார் முதியவர்.

சுப்பன்னா கதை, தான் பிறந்து வளர்ந்த ஊருக்கும் தாத்தா முறையுள்ளவரின் ஊருக்கும் இடையில் மாட்டிக்கொண்ட இளைஞனின் கதை. சுப்பன்னா என்ற உலக நடப்பு தெரியாத இளைஞனின் வாழ்க்கை கதை. எல்லா ஊர்களிலும் ஊரிலுள்ளவர்கள் வேலை சொன்னால் செய்துவிட்டு அதற்கு கூலியாக சோறு அல்லது காசு வாங்கி வாழும் மனிதர்கள் உண்டு அல்லவா, அதேதான் சுப்பன்னாவின் போக்கும். அவனது அம்மா மங்கம்மா இறந்துபோனபிறகு, அவன் வாழ்க்கை பிற வீடுகளில் இரந்துண்ணும்படி ஆகிறது. கதை முடியும்போது நமக்கு அவனது மனநிலை என்ன என்றுதான் தோன்றுகிறது. சொந்த ஊர் என்பது நாமறிந்த நம்மை அறிந்த மனிதர்களைக் கொண்டதுதானே? எனவே இந்த உண்மை புரிந்தவர்களுக்கு சுப்பன்னாவின் நடவடிக்கை ஏன் என்ற கேள்வி பெரிதாக எழவில்லை.

தொண்டு என்ற கதை, ஊராரின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்த பெண்ணின் கதையை  உணர்ச்சிப் பூர்வமாக பேசுகிறது. காமம்மாவின் தொண்டு என்ன என்பதை படிக்கும் வாசகர் மனம் உணரும் நொடி, கதை முழுமையான தன்மை பெறுகிறது. மெல்ல வாசிக்கும் நாம் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறோம். காமம்மாவைப் பற்றி தவறாக பேசும் சொற்களை மறுப்பது போன்ற தன்மையில் குறியீடாக அவள் வாழ்ந்த குடிசை வீட்டை காண்பிக்கிறார் ஆசிரியர்.

இந்த நூல் தொகுப்பில் சற்று மாயத்தன்மை கொண்ட கதைகள் என கோடாங்கிப் பேய், பேதை என இரு சிறுகதைகளைக் கூறலாம். பேய் ஒன்றை ஓட்டும் கோடாங்கி ஒருவனின் வாழ்க்கை எப்படி முடிகிறது என கதை சொல்லிச் செல்கிறது. பேதை கதையில் பெண் ஒருத்தி, முகம் தெரியாத ஒருவனால் கர்ப்பம் தரிக்கிறாள். தனது உறவுகளின் விருப்பத்தை மீறி குழந்தையும் பெற்றுக்கொள்கிறாள். ஆனால் அந்தக் குழந்தை இறந்துபோக அவளுக்கு சித்த பிரமை பிடிக்கிறது. அதன் விளைவாக அவளுக்கு ஏற்படும் பாதிப்பும், ஊரில் ஏற்படும் பீதியும்தான் கதை.

ஜீவன் என்ற கதை அங்குப்பிள்ளை என்ற மாற்றுத்திறனாளியைப் பற்றியது. கதையின் முடிவு, ஒருவரின் மனதையே திகைப்பில் ஆழ்த்தக்கூடியது. எந்த உயிருக்கும் அன்பும் அங்கீகாரமும் முக்கியம். அப்படி அங்குப்பிள்ளையின் பெற்றோரே அவனிடம் பாரபட்சமாக  நடந்துகொள்ள அதை அவன் உணரும் நொடி செய்யும் செயல்தான் சிறுகதையின் இறுதிப்பகுதி. வாய் பேச முடியாதவன் என்றாலும் உணர்வுகள், எண்ணங்கள் கொண்டவன்தானே அவனும்…

கோமதி என்ற கதை திருநங்கை பற்றியது. ஆனால் இதை படிக்கும்போது ஒருவருக்கு மனதில் அவலமான உணர்வுதான் எழுகிறது. இந்த பாத்திரத்தை வைத்து மன உணர்வுகளை வேறுவிதமாகவும் சித்திரிக்க முடியும். ஆனால் கி ரா, முடிந்தவரை மென்மையாக திருநங்கைகளின் மன உணர்வுகளை வெளிப்படுத்த முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அங்கணம் கதையில் குளிக்க, பாத்திரம் கழுவ உருவாக்கப்பட்ட இடம் ஒரு பாத்திரத்தின் உயிர்ப்பைக் கொண்டுள்ளது. முழுக்கதையும் அங்கணத்தின் வரலாறு, அதை பயன்படுத்தியவர்களின் மன உணர்வுகள் என விளக்கமாக செல்கிறது. அங்கணத்தில் புழங்க முடியாமல் வழுக்கி விழுந்தவர்களைப் பற்றி சொல்லும்போது சற்று நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ளது.  நீங்கள் அதை ரசித்துப் படிக்கலாம்.

சாவஞ்செத்த சாதிகள் கதை, இறந்தபிறகும் கூட ஒருவனது வாழ்க்கை எப்படி சாதியால் பிணைக்கப்பட்டுள்ளது. ஒருவனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழிவுபடுத்த சாதி எப்படி கருவியாக பயன்படுகிறது என கூறியிருக்கிறார் ஆசிரியர்.

எழுத்தாளருக்கு பெயர், புகழ், பணம் ஆகியவை எழுத்து மூலம் கிடைப்பது சரிதான். அதை விட பெரியது, அவரது எழுத்தை வாசித்துவிட்டு அதுபற்றிய கருத்துகளை பகிர்வதுதான். எனவே, கி ராவின் கதைகளைப் படியுங்கள். இவரது கதைகளைப் படிக்கும்போது எத்தனை ஆண்டுகள் ஆனாலும்  வறண்ட மண்ணில் மழைத்துளி விழுந்து மண் வாசம் கிளம்புவது போல உணர்வுகள், நினைவுகள்  எழுகின்றன.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்