ஒழுக்கம் போதித்தால் குழந்தைகளின் மனம் என்னவாக மாறுகிறது? - ஜே கிருஷ்ணமூர்த்தி

 











ஒழுக்கம் ஏற்படுத்தும் பாதிப்பு


 அரசியல் மற்றும் தொழில்துறை சார்ந்து ஒழுக்கம் என்பது முக்கியமானது. தற்போதையை சமூக அடிப்படையிலும் உளவியல் ரீதியாகவும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. ஒழுக்கம் என்பதை ஒருவர் கடைபிடித்தால் செயலின் இறுதியில் முடிவு எளிதாக கிடைத்துவிடும். இப்படிக் கிடைக்கும் முடிவு எளிதாக இருந்தாலும் இதற்கான அர்த்தம் என்பதை கவனிக்க வேண்டும். அதில்தான் பிரச்னை உள்ளது. ஒழுக்கம் மூலம் முடிவு கிடைத்தாலும் அர்த்தம் என்பதே செயலின் முடிவைத் தீர்மானிக்கிறது.

ஒழுக்கத்தைப் பின்பற்றுவதில் உள்ள ஆபத்துகளில் ஒன்று, மனிதர்களை விட அமைப்பு முறை முக்கியத்துவம் பெற்றுவிடுவதுதான். ஒழுக்கத்தை பின்பற்றுபவர்களின் இதயம், அன்பை இழந்து வெறுமையாகிவிடும். சுதந்திரம் என்பது ஒழுக்கத்தின் காரணமாக வருவ தில்லை. சுதந்திரம் என்பது ஒருவர் தன் வாழ்வில் இறுதியாக அடையும் லட்சியம் அல்லது குறிக்கோள் அல்ல. வாழ்வில் சாதிக்க நினைக்க தொலைவில் உள்ள லட்சியம் என சுதந்திரத்தை நினைக்கிறார்கள். அது உண்மையல்ல.

சுதந்திரம் என்பது ஒருவர் தனக்குத்தானே அளித்துக்கொள்ளும் பாராட்டு சான்றிதழ் அல்லது பிறர் புகழ்ந்து பேசும் வார்த்தைகள் அல்ல. சில பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை முழு ஆற்றலோடு செய்பவர்களுண்டு. இந்த முறையில் அவர், மாணவர்கள் சுதந்திரமாக சிந்திக்க உதவ முடியும். ஆனால் ஆசிரியர் ஏதேனும் ஒரு கருத்தியலை அடிப்படையாக கொண்ட இயங்கினால் மாணவர்களின் சுதந்திரம் என்பது இல்லாமல் போய்விடும். சில நுட்பங்களைப் பயன்படுத்தி கல்வியைக் கற்பிப்பதும் இந்த வகையில் வீணான ஒன்று.

உணர்வு நிலை என்பது ஒருவருக்கு வற்புறுத்தி வராமல் இயல்பாக உருவாக உதவ வேண்டும். குழந்தை பேசுவதை ஒருவர் பலவந்தமாக தடுக்கமுடியும். ஆனால் அந்தக்குகுழந்தையின் துடுக்குத் தனத்தை பிடிவாத த்தை எளிதாக மாற்றிவிட முடியாது.  இந்த பிரச்னைகளை நேருக்கு  நேர் நின்று எதிர்கொண்டுதான் ஒருவர் சரி செய்யமுடியும். வற்புறுத்தல் என்பது பாதிக்கப்படும் குழந்தை மனதில் எதிர்ப்பு உணர்வையும், பயத்தையும் உருவாக்குகிறது.  குழந்தை செய்யும் செயலுக்கு பரிசு கொடுப்பது அல்லது தண்டனை கொடுப்பது, நாளடைவில் அவர்களது புத்தியை மந்தமாக்கி அடிமைத்தனத்தை மனதில் உருவாக்குகிறது. 

இந்த வகையில் கல்வி வழங்கப்படும்போது, குழந்தையின் நிலை என்னவாகும்? இது குழந்தைக்கு தன்னையோ, தன்னைச்சுற்றியுள்ள வெளிப்புற சூழல்களையோ புரிந்துகொள்ள உதவாது. அவர்களது மனதில் பிரிவினையையும், வெறுப்பையும் ஒரே சேர வளர்க்கும். கல்வி வழியாக அன்பு என்பதே குழந்தைகளின் மனதிற்கு சென்று சேரவேண்டும். வற்புறுத்தல், ஒழுக்கம் வழியாக அன்பு குழந்தைகளுக்கு கிடைக்காது.

 

பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதில்லை. பெற்றோர்கள், குழந்தைகள் மீது ஏராளமான ஆசைகளை, விருப்பங்களை கொண்டிருக்கின்றனர். இதன் உண்மையான அர்த்தம், அவர்களுக்கு நிறைய ஆசைகள் உள்ளன என்பதுதான்.  மூளை சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருப்பதால் இதயம் சொல்வதைக் கேட்க  குறைவான நேரமே கிடைக்கிறது. ஒழுக்கத்தை பழகி வருபவர் நாளடைவில் அவருடைய மனதில் எதிர்ப்புணர்வைப் பெறுகிறார். ஒழுக்கத்தில் எப்போதும் புரிந்துகொள்ளல் நிகழ்வது கிடையாது. கவனித்தல் நடக்கும்போது புரிந்துகொள்ளல நடைபெறுகிறது. ஆனால் ஒழுக்கம் என்பதில் முன்முடிவுகள் மட்டுமே உள்ளன.

பள்ளியில் வகுப்பறை  சிறியதாக, மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஆசிரியர் மாணவர் மீது தனிக்கவனம் செலுத்த முடியும். மேலும் அவர்களை எளிதாக புரிந்துகொள்ளவும் முடியும். வற்புறுத்தல் என்பது இங்கு ஏற்படுவதில்லை. மாணவர்கள் பிறருடன் சரியாக நடந்துகொள்ளாத போது ஆசிரியர் அத விசாரித்து அறிய முடியும். ஓய்வு இல்லாதது மோசமான உணவுமுறை. குடும்பச் சண்டை, வேறு வகையான பயம் ஆகியவறை காரணமாக இருக்கலாம்.  

தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் நூலில் இருந்து…..


கருத்துகள்