குற்றவாளிகளிடமிருந்து மக்களைக் காக்கும் ரகசிய ப்ரீமியம் டாக்சி குழு! டாக்சி டிரைவர் - கொரிய டிராமா

 










டாக்சி டிரைவர்
எஸ்பிஎஸ் தென்கொரிய டிராமா – 16 எபிசோடுகள்
ராகுட்டன் விக்கி ஆப்

 

கொரிய நாட்டின் நீதித்துறை தவறவிட்ட சைக்கோ கொலையாளிகள், மோசமான குற்றவாளிகளை ரகசியமாக செயல்படும் அமைப்பு கடத்தி சிறைப்படுத்தி பாதுகாக்கிறது. இதை சியோல் நீதித்துறை அமைப்பு அறியும் போது என்ன ஆகிறது என்பதே கதையின் மையம்.

பொதுவாக நீதித்துறை எப்போதும் ஆளும் அரசின் கைப்பாவையாகவே இருக்கும். அதற்கேற்றபடி ஆட்களை உள்ளே நியமித்து எதிரிகளை அடித்து உதைத்து வளைப்பார்கள். வெளியுலகில் நல்ல பெயரை சம்பாதிக்க கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதோடு, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதரித்து நிதி அளித்து குற்றசெயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொள்வார்கள்.

தொடரில் அப்படி ப்ளூபேர்ட் பௌண்டேஷன் அமைப்பு செயல்படுகிறது. அதன் நோக்கமே, பழிவாங்குவதுதான். யாராவது ஒருவர் பழிவாங்க நினைத்து இந்த அமைப்பை தொடர்பு கொண்டால், அவர்கள் புகார்தாரரை டாக்சியில் கூட்டிக்கொண்டுபோய் புகாரை வாய்மொழியாக பதிவு செய்துகொண்டு திட்டம் வகுத்து அவரது வாழ்க்கையைக் கெடுத்தவர்களை பழிவாங்குவார்கள். இதற்காகும் செலவை புகார்தாரர் கொடுக்கவேண்டும். தவணை அல்லது ஒரே முறையாகவும் கொடுக்கலாம். ஆனால் பழிவாங்குவது இலவசம் கிடையாது. இப்படி சமூகத்தை கெடுப்பவர்களை பழிவாங்க நாயகன் கிம் டு கி தலைமையில் ஒரு குழு இயங்குகிறது. இதற்கான மூளையாக சியோல் என்பவர் இருக்கிறார். இவர் டாக்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அது வெளிப்பார்வைக்குத்தான். ஆனால் முக்கியமான வேலை ப்ளூபேர்ட் பௌண்டேஷன் மூலம் சமூகத்தை கெடுப்பவர்களை பிடித்து சமூகத்திலிருந்து முற்றாக அகற்றி சிறைப்படுத்தி வைப்பதுதான்.

இதற்கு அவர் பான் சியோக் என்ற பெண்ணை நம்புகிறார். ஆனால் அந்த பெண்மணியோ, குற்றவாளிகளை அடைத்து வைக்க சியோலிடம் வாடகை வாங்கிக் கொள்கிறார். மேலும் அவர்களின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து பெரும் பணக்கார ர்களுக்கு விற்றும் வருகிறார்.  இப்படி விற்பது சியோலுக்கு தெரியாது.

இவர்களின் பொருந்தாத கூட்டணியை கிம் டு கி முதலிலேயே எதிர்க்கிறார். பான் சியோக், அதிக வட்டிக்கு கடன் கொடுத்து மக்களை சித்திரவதை செய்கிறாள். இது தவறு என்கிறான். ஆனால் சியோல் குற்றவாளிகளை அடைத்து வைக்க சிறையை அவள்தான் கட்டியிருக்கிறாள். நமக்கு அவளின் ஆதரவு வேண்டும். அவளிடமிருந்து எந்த ஆபத்தும் இல்லை என்கிறாள். ஆனால் கிம் மறுத்து பேசாதபோதும் அவரது பேச்சை அவன் ஏற்றுக்கொள்வதில்லை.

ப்ளூபேர்ட் பௌண்டேஷனில் வேலை செய்யும் பலரும் சைக்கோ கொலையாளிகளால் குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்தவர்கள்தான். இவர்கள் ஒன்றாக சேர்ந்து சமூகத்தில் நடைபெறும் மோசமான குற்றவாளிகளை களையெடுக்கிறார்கள்.  சியோல் புகாரை அனுமதிக்கலாமா என்று முடிவெடுக்கிறார். அதற்குப்பிறகு அதை முன்னெடுப்பது நாயகன் கிம்தான். அவன்தான் புகாருக்கு ஏற்றபடி தனது குழுவினருக்கு வேலையை கொடுக்கிறான்.

தொடர் முழுக்க எங்குமே வளவள விளக்கம், சோர்வான காட்சிகள் என ஏதுமே இல்லை. நாயகனுக்கு அம்மா கிடையாது. மிலிட்டரி அகாடமியில் படித்து வேலை செய்து திரும்ப வரும்போது அவரது அம்மாவை சைக்கோ ஓ சங் சியோல் கொன்று போட்டிருக்கிறான். எப்போதும் வலிமையாக நின்று எதிரிகளை அடித்து துவைப்பவன், அம்மா இறக்கும்போது கேட்கும் குக்கரின் விசில் சத்தம் கேட்டால் மட்டும் மயங்கி விழுந்து விடுவான். பொதுவாக வாழ்க்கையில் மோசமான நிகழ்ச்சிகளை எதிர்கொள்ளும் பலருக்கும் இதுபோல மன, உடல் பலவீனம் இருக்கும். நாயகன் கிம்முக்கு இது மனரீதியான பிரச்னை.

டாக்சி டிரைவர் முழுக்க வன்முறை, அடிதடி, உதை, வெட்டுக்குத்து சார்ந்தது. சண்டைக்காட்சிகள் எல்லாம் பீதிக்கு உள்ளாக்கும் வகையில் படமாக்கியி ருக்கிறார்கள். தொடரின் கதை ஓட்டத்தில் அது பார்க்க நன்றாக உள்ளது.

மூளை வளர்ச்சி குறைந்தவர்களை கடத்தி மீன் பண்ணையில் வேலை செய்ய வைப்பது, பாலியல் காட்சிகளை இணையத்தில் பரப்பும் வலைத்தள நிறுவனம், பள்ளியில் ஏழை மாணவனை அடித்து துன்புறுத்தும் மாணவர்கள் குழு, போனில் பேசி வங்கியின் விவரங்களை பெற்று பணத்தை திருடும் கூட்டம் ஆகியோரின் கதைகள் அவர்களை கிம் குழுவினர் எப்படி ஏமாற்றி பழிவாங்குகிறார்கள் என்பதை நன்றாக படமாக்கியுள்ளனர்.

கிம்முக்கு எதிராக நின்று அவரை சிறையில் அடைக்கவேண்டுமென துடிக்கிறார் வழக்குரைஞர் கங் நா கா. ஒருநாள் நிச்சயம் நாம் காவல்துறையில் சிக்குவோம் என்பதை கிம் ஏற்கெனவே உணர்ந்திருக்கிறான். ஆனால் அதற்கு சற்று நேரம் இருக்கிறது என நினைக்கிறான். கங் நா கா சற்று வேகமாக அவர்களை மோப்பம் பிடித்து பக்கம் வருகிறாள். ஆனால் அவன்தான் குற்றவாளி என நிரூபிக்க அவளிடம் ஆதாரம் இல்லை.  அதை தேடும் பயணத்தில் தன்னை சுற்றியுள்ள குற்ற உலகத்தைப் பற்றி புரிந்துகொள்கிறாள். அவள் மெல்ல கிம்மை புரிந்துகொள்கிறாள். ஆனால் நீதியை யாரும் கையில் எடுக்க கூடாது என்று நினைக்கிறாள். ஆனால் ஒரு சம்பவத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரை இழக்கும்போது, கடும் சோகத்தில் ஆழ்ந்து கிம்மின் உதவியை நாடுகிறாள்.ஆகும் என நினைக்கிறாள். அப்போதுதான் பழிவாங்குவது எந்தளவு சந்தோஷம் தரும் என உணர்கிறாள். குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை அவள் மெல்ல உணரத் தொடங்குகிறாள். அவளுக்கு தெரிந்த விஷயங்களை வைத்து கிம்மைக் கைது செய்தாளா, ப்ளூபேர்ட் பவுண்டேஷனை முடக்கினாளா, பான் சியோக் தன்னைப் பற்றிய உண்மையை அறிந்த கிம் குழுவினரை கொன்றாளா இல்லையா என்பதே இறுதிப்பகுதி.

சமூகம் தானே உருவாக்கும் குற்றவாளிகளால் எவ்வளவு பிரச்னைகளை உருவாக்குகிறது, இதனால் பாதிக்கப்படுபவர்கள் எவ்வளவு பெரிய சுமையை சுமந்துகொண்டு வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் சங்கடப்படுகிறார்கள் என்பதை காட்சியாகவே சொல்ல முயன்றிருக்கிறார்கள். பணத்திற்காக, தனது வாழ்க்கைக்காக யாரையும் பயன்படுத்தலாம் என்ற மனிதர்கள் புற்றுநோய் செல்களாக எப்படி பரவியிருக்கிறார்கள் என்பதையும் இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

தொடரின் இறுதிக்காட்சியில் சைக்கோ கொலையாளி தனது ஒரே மகனைக் காப்பாற்ற தன்னால் பாதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்பது போல காட்சிபடுத்தியிருக்கிறார்கள். ஆனால், அப்பாவியை சித்திரவதை செய்து வழக்கு பதிவு செய்த வழக்குரைஞர், காவல்துறை அதிகாரியை பற்றி ஏதுமே சொல்லாமல் சைக்கோ கொலையாளி மன்னிப்பு கேட்பது போல காட்டியிருப்பது என்ன வகை நீதி?

கிம், குன் ஆகியோருக்கு இடையில் காதல் வர வாய்ப்பு இருந்தது. இருவருக்குமான காட்சிகள் மிக குறைவாக உள்ளன. ஆனால் கிம் தனது வீட்டில் இருக்கும்போது பெரும்பாலும் அங்கு குன் வந்துவிடுகிறாள். வழக்குரைஞர் காங் நா கா வை விட அழகாக இருப்பது ஹேக்கர் குன்தான். 

சமூகத்தைப் பற்றி கவலைப்படுபவரா, அப்படியானால் இந்த டாக்சி டிரைவர் உங்களை  ஊக்கப்படுத்துவான்.

கோமாளிமேடை டீம்



Final episode date: 29 May 2021
Language: Korean
Network: SBS TV
Genres: Action, Crime film
First episode date: 9 April 2021
Based on: The Deluxe Taxi (Red Cage); by Carlos and Lee Jae-jin
Directed by
  • Park Joon-woo (Season 1)
  • Lee-dan (Season 2)
Starring

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்