பிரேசிலில் பெருகும் வறுமையை, வெறுப்பை போக்குவாரா புதிய அதிபர் லுலா!

 









பிரேசில் நாட்டில் ஏற்பட்ட புதிய மாற்றம்!

 

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிபராக தேர்வாகியிருக்கிறார். இதற்கு முன்னர் இருமுறை தொடர்ந்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்திருக்கிறார். தனது 77 வயதில் மீண்டும் அதிபராக லுலா தேர்ந்தெடுக்கப்பட என்ன காரணம் இருக்கப்பட முடியும்? என்று பார்ப்போம்.

தேர்தலில் வெற்றி பெற்ற சதவீதம் பெரிதாக உள்ளது என்று சொல்ல முடியாது. வலதுசாரி பிரதமரான பொல்சனாரோ 49.1 சதவீதம் பெற்றுள்ளார் எனில் லுலா பெற்றுள்ள வாக்குகளின் அளவு 50.9% ஆகும்.

லுலாவும் பொல்சனாரோவும் கொள்கை, செயல்பாடு அளவிலும் மிகவும் வேறுபட்டவர்கள். பொல்சனாரோ எப்படிப்பட்டவர் என்ன அமேசான் காடுகளை அழியவிட்டதில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இவரது ஆட்சிக்காலத்தில் பழங்குடிகளின் வாழிடங்கள் வேகமாக அழிக்கப்பட்டன. நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளே உருவாக்கப்பட்டன. 

77 வயதான லுலா தொழிற்சங்க தலைவராக இருந்தவர். இவர் நாட்டின் அதிபராக 2002, 2010ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். லுலா அதிபராக இருந்தபோது  பல லட்சம் மக்களை வறுமை நிலையிலிருந்து மீட்டுள்ளார்.

 இவரது ஆட்சிக் காலத்தில் பிரேசில் நாட்டின் பொருளாதார நிலை வளர்ச்சியடைந்த்து. அரசுக்கு கிடைத்த நிதியை சமூக நலத்திட்டங்களுக்கு திருப்பி மக்களுக்கு வளம் கிடைக்கச் செய்தார். உதாரணமாக போல்சா ஃபேமிலியா என்ற திட்டத்தைக் கூறலாம். வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு அரசு குறிப்பிட்ட அளவு நிதியை வங்கிக் கணக்கில் செலுத்தும். இதன்மூலம் பிள்ளைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, அவர்களுக்கு சுகாதார பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

 2010ஆம் ஆண்டு லுலா அதிபர் பதவியை விட்டு விலகியபோது அவருக்கு நாட்டில் 90 சதவீத மக்கள் ஆதரவு இருந்தது. பிறகு, தனது தொழிலாளர் கட்சியில் இருந்து டில்மா ரூசெப் என்பவரை தனது அடுத்த தலைவராக்க லுலா தேர்ந்தெடுத்தார். எங்கு பிழையானதோ, ஊழல் குற்றச்சாட்டு லுலா மீதும், ரூசெப் மீதும் கூறப்பட்டது. இதனால் 2018ஆம் ஆண்டு லுலா சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் வழக்கில் லுலா மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. எனவேதான் இப்போது அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

2018ஆம் ஆண்டு வலதுசாரி ஆதரவாளரான பொல்சனாரோ, தாராளவாத கட்சி மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வென்றார். அந்த சூழலில் பிரேசில் நாட்டின் விவசாய பொருட்களும், கச்சா எண்ணெய்யும் விற்பனை விலையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. இப்பிரச்னைகளுக்கு இடதுசாரி தலைவர்கள் காரணம் என பொல்சனாரோ மக்களிடம் பிரசாரம் செய்தார். மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் பணம் கொடுப்பதை தவிர்க்க, பணியாற்றுபவர்களின் பணி ஓய்வு வயதை அதிகரித்தார். இது அதிபரின் நம்பிக்கையை சாய்த்தது. அடுத்து முன்னர் சொன்னதைப் போல அமேசான் காடுகளை தொழில்மயப்படுத்த வெட்டிச் சாய்த்தார். அடுத்து பெருந்தொற்று. மக்கள் நோய்த்தொற்றால் அவலமாக பாதிக்கப்பட்டு இறக்கும்போது அதைப்பற்றி அதிபர் பொல்சனாரோ, நோய் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற நினைப்பில் துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.  

லுலாவின் முன் உள்ள சவால்கள்

சரியும் பொருளாதாரம்

லுலா 2010ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து விலகியபோது பொருளாதாரம் உலகளவில் எட்டாவது இடத்தில் இருந்தது. தற்போது பனிரெண்டாவது இடத்திற்கு சரிந்துவிட்டது. அதை சரிசெய்யும் பொறுப்பு லுலாவிற்கு உள்ளது.  

வேலையின்மை

லுலாவின் காலத்தில் வேலையின்மை குறைவாக இருந்தது. வேலையில் சேருபவர்களின் எண்ணிக்கையும் கூடி வந்தது. தற்போது குறைந்த வேலைக்கு அதிக நபர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் நாடு உள்ளது.

 

பணவீக்கம்

லுலா, 14 சதவீதமாக இருந்த பணவீக்க சதவீதத்தை நான்கு சதவீதமாக குறைத்தார். ஆனால் பிறகு வந்த ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறனின்மையால் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை நோக்கி உயர்ந்துவிட்டது.

அரசின் கடன் சுமை

லுலா ஆட்சியில் இருந்து விலகும்போது அரசின் கடன் சுமை 52 சதவீதத்தை விட குறைவாகவே இருந்தது. இதை உள்நாட்டு உற்பத்தியை ஒப்புநோக்கி கூறுகின்றனர். இன்று இந்த கடன் சுமை அதிகரித்து விட்டது.

அரசியல் பிரிவினை

வலதுசாரி அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் சாதி, மதம் வைத்து அரசியல் செய்து வாக்குகளை பெற முயல்வார்கள்.  இந்த வகையில் பொல்சனாரோவின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் பிரிவினை அதிகரித்துள்ளது. இது நாட்டின்  ஜனநாயகத்தன்மைக்கு ஆபத்து என கார்னெகி உலக அமைதி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

உலக அளவில் மக்கள்தொகை அடிப்படையில் பிரேசில் ஏழாவது பெரிய நாடு. லுலாவின் ஆட்சிப்பொறுப்பிற்கு பிறகும் தொழிலாளர் கட்சி அங்கு ஆட்சியில் இருந்தது. ஆனால் பேருந்து, ரயில் கட்டணத்தை அதிகரித்தது, நாட்டின் மக்கள் கோபத்தை தூண்டியது. இதன் விளைவாக அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்தன. 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட போராட்டங்களின் விளைவாகவும், பல்வேறு போலிச்செய்திகளை வெளியிட்ட நிறுவனங்கள் மூலம் பாகுபாடுகள், வெறுப்பு அதிகரித்தது.

லுலா தேர்தலில் பெற்றுள்ள வெற்றி கூட போட்டியாளரை விட குறைவான வித்தியாசம் கொண்டதுதான். இதுவே நாட்டிலுள்ள பிரச்னைகளை, பாதிப்புகளை நமக்கு நன்றாக உணர்த்தும். ஆம். நாடு இந்த நிலையில்தான் உள்ளது. எதிர்காலத்தில் முதலீட்டாளர்களை ஈர்த்து வறுமை, வேலையின்மை, பிரிவினைவாதம், வெறுப்புணர்வு ஆகியவற்றை சமாளிக்கவும் லுலா கடுமையாக தனது அமைச்சரவையுடன் போராட வேண்டியிருக்கும்.  

இந்தியன் எக்ஸ்பிரஸ் 1.11.2022

கருத்துகள்