ஆணக்கொலைகளால் வணங்கப்படும் நிலைக்கு உயர்ந்த நாட்டார் தெய்வங்கள்- ஆ.கொ.சா. பெ.கொ.அ

 









ஆணவக்கொலைச் சாமிகளும், பெருமித கொலை அம்மன்களும்
ஆ.சிவசுப்பிரமணியன்
காலச்சுவடு பதிப்பகம்
மின்னூல்



 

திருநெல்வேலி, தூத்துக்கடி, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள நாட்டார் தெய்வங்களின் பூர்விக வரலாறு பற்றி இந்த ஆய்வு நூல் பேசுகிறது.

நூலின் தொடக்கத்திலேயே நாட்டார் தெய்வங்கள் எப்படி பெருந்தெய்வ வழிபாட்டின் ஓரங்கமாக மாற்றப்படுகிறது என்பதை விளக்கி இந்துத்துவ சக்திகள் செயல்படுவதை ஆசிரியர் விளக்கி விடுகிறார். ஆகவே, நாட்டார் தெய்வங்கள் என்பது வேறு. அதன் வழிபாட்டு முறைகளே வேறு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அதில் உயிர்ப்பலி, கறிச்சோற்று படையல், கொடை, முளைப்பாரி ஆகியவை உண்டு. பெருந்தெய்வ வழிபாட்டில் இவையெல்லாம் இருக்காது.

நாட்டார் தெய்வங்கள் முன்னெப்போதோ நம் கூடவே வாழ்ந்து வந்தவர்கள்தான். அவர்கள் சக மனிதர்களால் சாதி பெருமிதம், பொறாமை, காதல், சொத்து, பாலியல் வன்முறை, குடும்ப கௌரவம் ஆகியவற்றுக்காக பலியானவர்கள்தான். இவர்கள் மீது பின்னாளில் ஏற்படும் குற்றவுணர்ச்சி காரணத்தால் இறந்து போனவர்களை கொன்ற குடும்பத்தினர், கொல்லப்பட்டவரின் உறவினர்கள் சுதை சிற்பமாக வடித்து வழிபடத் தொடங்குகிறார்கள். இப்படித்தான் நாட்டார்  தெய்வங்கள் உருவாகின என்று சொல்லும் ஆசிரியர், இந்திய தமிழ் எழுத்தாளரின் கூற்றுகளை தனது நூலின் மையப்பொருளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கொள்கிறார்.  

நூலில் மாடத்தி அம்மன், புதுப்பட்டி அம்மன், அழகப்பன், அழகம்மை, புலைமாடன் என நிறைய நாட்டார் தெய்வங்கள் பற்றி ய வரலாறு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் கூறும் மற்றொரு விஷயமும் கவனம் கொள்ளத்தக்கதாக உள்ளது. நாட்டார் தெய்வ வழிபாட்டில் உயிர்ப்பலியை ஒருவர் செய்வதும், நாட்டார் தெய்வ வரலாற்றை நினைவுகூர்வதாகவே இருக்கிறது. குறிப்பாக ஆட்டை குறிப்பிட்ட முறையில் கட்டி பலி கொடுப்பது, அடுத்து சுதை சிற்பங்களை விழா காலத்தில் மட்டும் உருவாக்கி பயன்படுத்தி உடைத்து எறிவது, பூசாரி அருள் வந்து ஆடும் ஆட்டம் ஆகியவற்றை  குறிப்பிடலாம். அடுத்து, குறிப்பிட்ட காரணங்களுக்காகவே நாட்டார் தெய்வங்கள் நின்றவாக்கில் அல்லது படுத்த வாக்கில் இருக்கும். இல்லாதபோது கருவறையில் சிலை கூட இல்லாம் வெறுமையாக இருப்பதும் உண்டு. இதை சிலர் புரிந்துகொள்ளாமல் வணிகரீதியாக தெய்வத்தை மாற்ற அதன் வடிவத்தை மாற்றி சிலையாக்கி நேராக நிறுத்துவது ஆகியவற்றைப் பற்றியும் ஆசிரியர் கூறியுள்ளார்.

மேல்சாதிக்காரர்கள் கீழ்சாதிக்காரர்களை அடித்துக் கொன்றதால்தான் நாட்டார் தெய்வங்கள் உருவாகின்றன.இதிலும்தான், சாதி மேலாதிக்கம் உள்ளது. அதாவது நாட்டார் தெய்வங்களில் மேல்சாதி மனிதர்கள் இருந்தாலும அவர்களை கீழ்சாதி ஆட்கள் கும்பிடுகின்றனர். ஆனால் மேல்சாதி ஆட்கள் அவர்களது சாதி என்றால் மட்டுமே நாட்டார் தெய்வங்களை பிரித்து வைத்து கும்பிடுகிறார்கள். கூடவே இருக்கும் தெய்வத்தை கூட கும்பிடாமல் தவிர்க்கிறார்கள். இதையும் நூல் ஆசிரியர் கவனப்படுத்தி இருக்கிறார்.  

மன்னர் கால பாரம்பரியங்களை பெருமையாக பேசினாலும் கூட அவர்கள் எப்படி தங்கள் நாட்டில் உள்ள  பூப்படைந்த பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார்கள். அதை தவிர்க்க பெண்ணின் தந்தையே மகளை நிலவறையும் பூட்டிவைத்து கொல்லுவது, குழிதோண்டு மண்ணை போட்டு மூடுவது ஆகியவற்றையும் செய்திருக்கிறார்கள். இதை படிக்கும்போது மனதில் வேதனை கசிகிறது.

இன்று ஊரேங்கும் டைல்ஸ்போட்ட, டிஜிட்டல் கடிகாரங்களைக் கொண்ட, தானியங்கி தாளங்களைக் கொண்ட தெய்வங்கள் வந்துவிட்டன. எனவே கிழிந்த ஓலைக்குடிசையில் இருக்கும் தெய்வங்கள் சோபையிழந்து, பண்டிகைக்கு அதில் கிடைக்கும் படையலுக்கு காத்திருக்கின்றன. இந்த நாட்டார் தெய்வங்களைப் பற்றி ய வரலாற்றை அறிவது திரும்ப இதுபோல கொடுமைகளை நடக்காமல் இருக்க உதவும். அநீதிகளை தடுக்கவும் முடியும்.


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்