அரசு வழக்குரைஞரை சிறையில் தள்ளி நினைவிழப்புக்கு ஆட்படுத்தும் சைக்கோ! - இன்னோசன்ட் டெஃபென்டெண்ட்

 


இன்னொசென்ட் டிஃபென்டண்ட்
ஜி சங், உம் கி ஜூன், ஜோ ஜே யூன்
தென்கொரிய டிவி தொடர்
18 எபிசோடுகள்
எம்எக்ஸ் பிளேயர்

 

பார்க் ஜூங்கு( ஜி சங்) என்பவர் அரசு வழக்குரைஞர். இவர் பெரு நிறுவனமான சோமியாங் குழுமத்தின் இயக்குநராக உள்ள சுன்கோ என்பவரின் தம்பி மின்கோவை கொலைக்குற்றத்திற்காக கைது செய்ய முயல்கிறார். ஆனால் இந்த முயற்சியால், பார்க் ஜூங்கு அவரது மனைவியை கொன்றார் என குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கூடுதலாக அவரை சிறை அதிகாரிகள் தனிமை அறையில் போட்டு சித்திரவதை செய்ய அவர் நினைவிழப்பு பிரச்னைக்குள்ளாகிறார். இதனால் வழக்கு தாமதமாகிறது.

பார்க் ஜூங்கு நேர்மையான வழக்குரைஞர். எனவே, வழக்குரைஞர் துறையில் அவருக்கு எதிராக பெரும் சதிகள் நடைபெறுகின்றன. அவரது நண்பனே பணத்திற்கும், ஐ.நா கௌன்சிலில் கொரிய வழக்குரைஞர் என்ற பதவிக்கு ஆசைப்பட்டு ஜூங்குவை குற்றவாளியாக்குகிறான். மரணதண்டனை பெற்றுத் தரவும் தயங்குவதில்லை. இந்த நிலையில் பார்க் ஜூங்குவிற்காக பொது வழக்குரைஞராக இளம் பெண் வழக்குரைஞர் வாதாட வருகிறார். அவர் பார்க் ஜூங்குவிடம் ஏற்கெனவே வழக்கில் தோற்றவர். ஆனால் வழக்கில் ஏதோவொன்று ஈர்க்க அவர் அந்த வழக்கை எடுத்துக்கொள்கிறார்.

மின்கோ(உம் கி ஜூன்) என்ற சைக்கோத்தனமான கொலைகாரனை எதிர்த்து பார்க் ஜூங்கு எப்படி ஜெயித்தார், தனது துறையில் உள்ள நம்பிக்கை துரோகிகளை எப்படி சிறையில் அடைத்தார், கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள குழந்தையை எப்படி மீட்டார் என்பதுதான் மீதிக்கதை.

தொடரில் உள்ள கதை நான் லீனியர் முறையில் அமைந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள பார்க் |ஜூங்குவிற்கு தான் யார் என்பதே முதலில் நினைவில் இருப்பதில்லை. மெல்ல அவன் தான் யார் என்பதை தெரிந்துகொள்ளத் தொடங்க கதை மெல்ல நகர்கிறது. தனிமைச்சிறை கொடுமையால் நினைவிழப்பு ஏற்பட தனிமைச்சிறையில் அனைத்தையும் தரையில் எழுதி வைத்திருக்கிறான். ஆனால் அப்படி எழுதியதே மறந்துவிடுவதுதான் பரிதாபம். உண்மையில் இப்படி ஒரு பாத்திரத்தை நிஜ வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது.

முழுக்க விரோதத்தையும், வெறுப்புணர்வையும் உண்டு செரித்து தன்னை நிரூபிப்பதோடு மனைவியை கொலை செய்தவனையும் நீதியின் முன் நிறுத்தவேண்டும். ஆனால் அதற்கு முன், எதிரிகளிடம் உள்ள தன் குழந்தை ஹாயூனை மீட்க வேண்டும். இதற்கு எதிரியாக நினைவிழப்பு இருக்கிறது. இதை எப்படி அவன் கட்டுப்படுத்திக்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டு எதிரிகளை சமாளிக்கிறான் என்பதே கதை. ஒரு எபிசோடு ஒரு மணிநேரம் ஓடுகிறது.

 கொரிய நடிகரான ஜி சங், டிவி தொடர் என்றாலும் அவர் காட்டும் அர்ப்பணிப்பான நடிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. டிவி தொடரின் தொடக்க அத்தியாயங்களில் நினைவிழப்பு ஏற்பட்டு கத்திக்கொண்டிருக்கும் காட்சிகளில், அவரை யாருமே சந்தேகமே படமுடியாது. அந்தளவு பீதியூட்டும்படி நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக நடிப்பு என்றால் அண்ணனைக் கொன்றுவிட்டு அந்த வேடத்தில் உள்ள மின்கோவைச் சொல்லமுடியும். 

அடிபட்டு வலித்தால் கூட எதிரியின் முன் புன்னகைத்துக்கொண்டே அவனின் பலவீனத்தை சொல்லி மனதை உடைத்து நொறுக்குவதை பேசும் காட்சிகள் தொடரில் உள்ளன. பார்த்து ரசியுங்கள். பார்க் |ஜூங்கு சிறையில் இருந்து வெளியே வந்தபிறகுதான் மின்கோவுக்கு நிலைமைகள் சவாலாக மாறுகின்றன. அதுவரை மின்கோவின் ராஜ்யம்தான். இறுதியாக அவர் தன்னை குற்றவாளி என ஒப்புக்கொள்வது கூட காதலியின் நெஞ்சு உருகும் பேச்சைக் கேட்டுத்தான். ஏனெனில் அண்ணனின் மனைவி யார் என்பதில் ஒரு திருப்பம் உள்ளது. அதை நீங்கள் டிவி தொடர் பார்த்து அறிந்தால்தான் மின்கோவின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும்.

மின்கோவின் மனநிலை என்பது ஆய்வுக்குரிய ஒன்று. சிறுவயதில் இருந்தே தாய், தந்தையின் அன்பு கிடைக்காமல் வளர்ந்து வருபவன். இளைஞனான பிறகும் கூட அவனது வாழ்க்கையை அப்பாவே முடிவு செய்கிறார். அப்பாவின் முடிவை ஏற்காதபோது, வாக்கிங் ஸ்டிக்கால் அடி வாங்குகிறான். அவனுக்கு அண்ணனின் ஆதரவும் அன்பும் கூட கிடைப்பதில்லை. இதனால் கடும் வெறுப்பும், வன்முறையையும் கொண்டவனாகிறான்.

பார்க் ஜூங்கு சிறையில் இருக்கும்போது, காட்சிகளின் தீவிரத்தை சற்றுக் குறைப்பது அறையில் நடைபெறும் சிறைக்கைதிகளின் காமெடிதான். அதிலும் செல்லில் உள்ள இரு நண்பர்களின் நகைச்சுவைதான் தொடரில் குறிப்பிட்டு ச் சொல்லக்கூடியது.

எம்எக்ஸ் பிளேயர் ஆட்கள் அரைமணிநேரத்திற்கு எத்தனை விளம்பரம் போடுகிறார்கள் என்ற கணக்கு வைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. உருப்படாத தொடர்களின் விளம்பரங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. இதில் எம்எக்ஸ் கோல்டு என்ற திட்டத்திற்கு பணம் கட்டினால் விளம்பரங்கள் வராது என நினைக்கிறோம். வாய்ப்பிருப்பவர்கள் முயன்று பாருங்கள்.

 கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை