முடிஞ்சா என்னைப் புடி என சவால் விட்ட ஜாக் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

 







முடிந்தால் என்னைப் பிடி


இப்போது |ஜாக்கின் கதைக்கு வருவோம். மேற்சொன்ன கதைகள் எல்லாம் காவல்துறையினர் யாரேனும் புகார் மூலம் கண்டுபிடித்தவைதான். ஆனால் ஜாக்கைப் பொறுத்தவரை அவர் கொலை சம்பவங்களை சுவாரசியமாக செய்ததை உலகத்திலுள்ள 300 பத்திரிகைகள் பிரசுரித்தன. உண்மையில் இப்படி உலகம் முழுக்க தன்னைப் பற்றி விஷயங்கள் தெரியவேண்டுமென ஜாக் நினைத்திருக்கலாம்.

லண்டன் நகரத்தின் கிழக்கு புறத்தில் உள்ளது ஒயின்சேப்பல் பகுதி. இங்கு வெள்ளிக்கிழமை ஆக.31, 1888 அதிகாலை ஒரு மணி இருக்கலாம். பாலி நிக்கோலஸ் என்ற விலைமாதுப் பெண் ஜாக்கால் கொலை செய்யப்பட்டார். பாலியின் தொண்டை அறுக்கப்பட்டிருந்தது. அணிந்திருந்த ஸ்கர்ட் கலைந்திருக்க, கால்கள் விரிக்கப்பட்டிருந்தன. வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டு இருந்தது. பெண் குறியில் கீறல்கள் இருந்தன. விலைமாது என்பதால் கொலை பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை.

அடுத்த கொலை ஒரு வாரத்திற்கு பிறகு காலையில் நடைபெற்றது. கொலையானவர் பெயர், அன்னி சாப்மேன். இவரது வயிறு கத்தியால் அறுக்கப்பட்டு குடல் இடது தோள் மேல் விழுந்து கிடந்தது. வயிறு, தலை ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. பிறப்புறுப்பில் பாதி, கருப்பை ஆகியவை வெட்டி எடுத்து செல்லப்பட்டிருந்தன.

பிறகு தான் செய்யப்போகும் கொலை பற்றிய குறிப்பை சென்ட்ரல் நியூஸ் என்ற பத்திரிகை அலுவலகத்திற்கே ஜாக் செம தில்லாக அனுப்பிவைத்தார். இந்த குறிப்புகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள், சந்தேகங்கள் எழுந்தாலும் அதை உடனே பதிப்பித்து மக்களை காப்பாற்ற பத்திரிகை முயன்றது.

அந்த மாதத்தின் இறுதியில் செப்டம்பர் 30ஆம் தேதி இருவர் ஜாக்கால் தாக்கப்பட்டனர். எலிசபெத், கேத்தரின் என்ற இருவர்தான் அந்த பாதிக்கப்பட்ட பெண்கள். எலிசபெத்தின் தொண்டை கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. அடுத்து, கேத்தரின் எட்டோஸ் என்பவரின் வயிறு கிழிக்கப்பட்டு குடல் உருவி வலது தோள்பட்டை வரை மாலை போல போடப்பட்டிருந்தது. அவரின் முகம்  கத்தியால் கீறப்பட்டு முக்கோணம் போல சின்னம் வரையப்பட்டிருந்தது.  கேத்தரினின் வயிற்றில் கருப்பை, சிறுநீரகம் திருடப்பட்டிருந்தது.

இந்த கொலைகளுக்கு பிறகு வந்த கடிதத்தில் காவல்துறைக்கு முடிந்தால் என்னை பிடி என நேரடி சவால் விடப்பட்டிருந்தது. காவல்துறை எப்போதும் கமிஷன் வாங்கி நிதானமாக வேலை செய்தாலும் கொலை சவால் என்பதால் அவர்களும் கொலையாளியை தடுக்க முயன்றனர். இதனால் நகரெங்கும் அடிக்கடி ரோந்து சுற்றி டீசலை காற்றில் கரைத்தனர். ஆனால் பலன்தான் இல்லை.

நவம்பர் எட்டாம் தேதி மேரி கெல்லி என்ற 24 வயதுப் பெண் கொலை செய்யப்பட்டடாள். அவளே அறைக்கு ஒரு நபரைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். பிறகுதான் நடந்தது வந்தவன், அவளது ஆவியை உடல் கூட்டிலிருந்து நிரந்தரமாக பிரித்துவிட்டடான். முதலில் கத்தியால் அவளது தொண்டையை அறுத்து, பிறகு வயிற்றை கிழித்து குடல்களை எடுத்து சுவற்றில் வீசி தொடைசதையை தோண்டி எடுத்து, இதயத்தை வெட்டி எடுத்து.. என மருத்துவர்கள் சொன்ன கதையைக் கேட்டால் இரவு நீங்கள் இக்காட்சியை நேரடியாகவே காண்பீர்கள். கொடுங்கனவுதான். நடந்த  நிஜத்தைப் பார்த்தால் உப்புநாற்றம் கொண்ட ரத்த தடங்கள் குமட்ட வைத்துவிடும்.

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஹோல்ம்ஸ் என்ற மனிதர் இருந்தார். இவர் இளம்பெண்களுக்கான வாடகை அறைகளை கொடுத்து வாழ்ந்து வந்தார். இங்கு வரும் இளம்பெண்கள் எவரும் திரும்ப வெளியுலகிற்கு சென்றதில்லை. அறையில் சித்திரவதைக் கருவிகளை அமைத்து, பெண்களை அதில் சிக்கவைத்து ரசித்து பார்த்து கொன்றுவிட்டு உடலை அமிலம் ஊற்றி கரைத்து எலும்புகளை மட்டும் பொறுக்கி மருத்துவக் கல்லூரிகளுக்கு விற்றுவந்தார். பின்னாளில் இந்த உண்மை தெரிய வந்த போது, கட்டிடம் முழுக்க நெருப்பு வைத்து எரிக்கப்பட்டது. ஹோல்ம்ஸூக்கு என்ன பத்ம விருதுகளையா கொடுக்க முடியும். தூக்கில் இடப்பட்டார்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்