எமர்ஜென்சி -இஎம் மருத்துவத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன?

 










அவசரநிலை மருத்துவம்

அடிப்படை அறிவோம்

அனைத்து நாடுகளிலும் அவசரநிலை மருத்துவம் உண்டு. இதற்கென தனி தொலைபேசி எண்ணைக் கூட கொடுத்திருப்பார்கள். அமெரிக்காவில் 911 என்றால் சீனாவில் 119, தமிழ்நாட்டில் 108, பிற மாநிலங்களிலும் இப்படி ஏதோ ஒரு எண் வரிசை இருக்கும்.  

எமர்ஜென்சி என்பது அவசரமாக நோயாளியைப் பார்த்து அவரது உயிரைப் பாதுகாக்கும் நிலை என புரிந்துகொண்டால் போதும். பிற நாடுகள் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தொடக்க சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வேலை அதிகம். ஆனால் ஆட்கள் குறைவு. எமர்ஜென்சி என்று வரும் நோயாளிகளை முதலுதவி செய்துவிட்டு உடனே அருகில் உள்ள  அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிவிடுவதே வழக்கம்.  இதனால் நோயாளி பிழைப்பாரா என்றால் ஆம்புலன்ஸை ஓட்டுபவரின் திறனைப் பொறுத்தது. நோயாளியும் பிரச்னையை சமாளிக்கத்தான் வேண்டும்.

எமர்ஜென்சி துறை என்றே தனியார் மருத்துவமனைகள் இப்போது திறக்கத் தொடங்கிவிட்டன. அரசு மருத்துவமனைகளிலும் இத்தகைய பிரிவுகள் உண்டு. எப்படி வேலை செய்கிறார்கள் என நீங்களே சென்று பார்ப்பது உடலுக்கும் மனதுக்கும் கேடு. அவசரநிலை என எமர்ஜென்சியை கூறுவோம். இந்த நிலையைப் பொறுத்தவரை நோயாளிகள், அவர்களின் குடும்பம், மருத்துவர், செவிலியர் என அனைவருக்குமே  சற்று சிக்கலான இடம்தான்.

இங்கு ஒரே விதிதான். நோயாளி எப்போது பிரச்னையோடு வந்தாலும் சிகிச்சை தர தயாராக இருக்கவேண்டும்.

நோயாளி, அவரது குடும்பத்தினர் வேதனையோடு மருத்துவமனைக்குள் வருவார்கள். அவசரநிலை மருத்துவப் பிரிவினர், அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து உடனே சிகிச்சையைத் தொடர வேண்டும்.  நீங்கள் உங்கள் ட்யூட்டி முடித்துவிட்டு கூட வீடு வந்திருக்கலாம். ஆனால் ஆலோசனைக்காக உங்களை மருத்துவமனை செவிலியர்கள் தொடர்புகொள்ளும் சூழலிலும் ஆலோசனை கொடுக்கும் நிலைமை இருக்கும். நள்ளிரவில் கூட மருந்துகளை பரிந்துரைக்க வேண்டியதிருக்கும். சில சமயங்களில் என்னநோய் என்று பார்த்துவிட்டு தொடர்புடைய துறைகளுக்கு பரிந்துரைப்பதும் அவசரநிலை பிரிவு மருத்துவர்கள்தான்.

தகுதிகள் என்ன?

 புத்திசாலித்தனம், கருணை, உணர்வுகளை புரிந்துகொள்ளும் தன்மை, முடிவுகளை வேகமாக எடுக்கும் திறன், குறைந்த தகவல்களை வைத்துக்கொண்டு நோயைக் கணிக்கும் திறன் ஆகியவை தேவை. டிவியைப் பார்த்துக்கொண்டே அழைப்பு வரும் போனை எடுத்து பேசியபடி, குழந்தை என்ன செய்கிறான் என பெண்கள் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் இல்லையா அந்த மல்டி டாஸ்கிங் திறன் வேண்டும்.

நோயாளியை கூட்டிக்கொண்டு வருபவர் பயத்தில் திகைப்பில் இருப்பார். அவரிடம் தேர்வு போல விரிவாக விடையளிக்கவும் என கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. அழுகைக்கும் பதற்றத்தும்  இடையில் அவர் சொல்லும் விஷயங்களை கேட்டுக்கொண்டே முதலுதவி செய்து உயிரைத் தக்கவைப்பது முதல் படி. அடுத்துதான் அவரது நோயை குணமாக்கி தீர்வு காண்பது எல்லாம்….

பெரும்பாலும் தீ விபத்துகள், பேருந்து விபத்துகள் ஆகியவை அவசரநிலை பிரிவுக்குத்தான் வரும். எனவே அலறல், பீதி, வேதனை, சாபம், வசை என அனைத்தையும் இங்கு வேலை செய்யும் மருத்துவர்கள் கேட்டே ஆகவேண்டும். சிலசமயம் நோயின் வேதனை தாங்காமல் கணவன், தனது ஆசை மனைவியை அறைவது போல உறவினர்கள் கூட மருத்துவர்களை செவுளில் இரண்டு வைப்பதுண்டு.  இதற்கு எந்த பிரிவில் வழக்கு போடலாம் என மருத்துவர்கள்  யோசிப்பதை விட நோயாளிக்கு மருத்துவம் செய்வதே சரியானது. அங்கு அந்த சூழ்நிலையில் மருத்துவரின் பணி அதுவே. அதை அவர் மறுக்காமல் செய்யவேண்டும்.

அரசு மருத்துவமனையில் கூட அவர் எனக்கு தெரிந்தவர் என்று சொல்ல மருத்துவம் பார்க்கும் நிலை. இங்கு அப்படி சிபாரிசு பிடிக்கலாமா என்றால் அது எல்லாம் உயிரைக் காப்பாற்றும் அவசரநிலை பிரிவுக்கு ஒத்துவராது ஒருவர் உயிரைக் காப்பாற்ற முயன்றும் டீபிரிவிலேட்டர் வைத்தும் கூட செத்துவிட்டாரா, உடனே உயிருக்கு போராடும் இன்னொருவரை காப்பாற்றிவிட மருத்துவர் முயல்வார். அவ்வளவுதான். காப்பாற்ற முடிந்த உயிரை காப்பாற்றுவதே மருத்துவ நீதி.  விதுர நீதி வாடை அடிக்கிறதா அது அப்படித்தான்.

 

அவசரநிலை மருத்துவத்தில் மருத்துவருக்கு நோயாளியின் நோய் வரலாறு, அவரது பெற்றோரின் உறவு, அவர் உடலின் தன்மை என ஏதும் தெரியாது. நோயாளியை அடையாளம் கண்டவுடன் மருத்துவருக்கு 15 நிமிடங்கள்தான் நேர வரம்பு. அதற்குள் நோயை, பிரச்னையை அடையாளம் கண்டு சிகிச்சையை தொடங்கிவிட வேண்டும்.

அவசர நிலையில் ஆம்புலன்சில் ஒருவர் அழைத்து வரப்படுகிறார் என்றால் சில சமயங்களில் நோயாளியின் அருகே யாரும் இருக்க மாட்டார்கள். ஆம்புலன்சில் வரும் உதவியாளர்தான் தகவல்களை சொல்லுவார். நினைவிழப்பு ஏற்படாத நிலையில் அவசரநிலை மருத்துவப் பிரிவு செவிலியர், பெயர், பிரச்னையை கேட்க வாய்ப்புள்ளது. இந்த நிலையிலும் மருத்துவர் அட்மிஷன் போடுவது, பணம் யார் கட்டுவது என யோசித்துக் கொண்டிருக்க கூடாது. உடனடியாக உயிரைக் காக்கும் மருத்துவ சிகிச்சையை தொடங்கவேண்டும்.

நோயாளியைப் பார்த்து அறிகுறிகளைப் பார்த்ததும் மருத்துவருக்கு அவருக்கு என்ன சிகிச்சை என்ன மாதிரியான மருந்துகள் தேவை என்று தெரிய வேண்டும். இதில் அவர் எவ்வளவு வேகம் காட்டுகிறாரோ அந்தளவுக்கு நோயாளியின் உயிர் தப்பும். இல்லையென்றால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்து கொண்டே வரும். ஒருவருக்கு என்ன பிரச்னை என உடனே ஆராய்ந்து தொடர்புடைய துறைக்கு தகவல் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் நோயாளி பிழைப்பார்.

அவசரநிலை மருத்துவர் எப்போதும் முன்முடிவுகளை கொண்டிருக்க கூடாது. அப்படி இருந்தால் நோயாளிகளின் உயிருக்கு அது ஆபத்தையே கொண்டுவரும்.

எங்கே நடந்தது தவறுகள்?

மருத்துவர் தனக்கு தெரிந்த நோயாளி பற்றிய தகவல்களை பிறருக்கு தெரிவிக்க கூடாது என்பதுதான் விதி. இதை இதயத்தை திருடாதே படத்தில் நாகர்ஜூனா விஜயகுமாரிடம் கேட்பார். நினைவிருக்கிறதா?

அந்தளவு போகவேண்டாம். வெளிப்புற நோயாளிகள் பிரிவில் மருத்துவம் பார்த்திருக்கிறீர்களா? அங்கு நோயாளியை மருத்துவர் எப்படி பார்க்கிறார்? ஒருவர் பார்க்கும்போது இன்னொருவர் அருகில் நிற்பார். இந்த நிலையில் ஒருவர் எங்கு போய் தனது நோயை, பிரச்னையை மறைத்து வைப்பது?  

அவசரநிலை மருத்துவப் பிரிவில் வெறும் திரைச்சீலைதான் இருக்கும். ஓசைகள் கேட்குமே? மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்களோடு விவாதிப்பது, செலுத்தும் மருந்துகளை குறிப்பு எடுத்துக்கொள்வது, வேறு சிகிச்சைகளுக்கு பரிந்துரைப்பது என அனைத்துமே திறந்த வெளியில்தான் நடக்கும். கூடவே அடுத்தடுத்த சிகிச்சைகளுக்கான அனுமதியையும் கூட உறவினர்களிடம் மருத்துவர்கள் பேசி புரிய வைத்து செய்யவேண்டும். இதையெல்லாம் அயராமல் தொடங்கி இறுதிவரை செய்யவேண்டும். இதில் நிறைய வாக்குவாதங்கள், நோயை கண்டறிவதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவர் தன்னை பெரிதாக காத்துக்கொள்ள வழிகள் கிடையாது. அவருக்கு பார்க்க வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை, பணி நேரம், தனிப்பட்ட உறவு சார்ந்த அழுத்தம் என அனைத்தையும் அவர்  சமாளித்துத்தான் மருத்துவச்சேவையை செய்ய வேண்டும். எனவே இதில் மருத்துவ தவறுகளை அடிக்கடி ஏற்படும். ஏற்படும் என்பதை சகஜமாக நோயாளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. பணி அழுத்தம் காரணமாக அப்படி நேருகிறது என ஆய்வுத்தகவல்கள் சொல்லுகின்றன.  

நாட்பட்ட நோய்களைப் போல அவசர சிகிச்சைக்கு நோயை ஆராய நேரம் கிடையாது. அவசர சிகிச்சை என்பதில் மருத்துவர்கள் வேலை செய்வது சற்று கடினம்தான். பலரும் பதறி ஓடுவார்கள். காரணம், இதில் மருத்துவர் எடுக்கும் முடிவு தவறு என்றால் விளைவு நோயாளி இறந்துபோய் விடுவார். இறப்பு ஏற்பட்டால் கடவுளாக அதுவரை தெரிந்த மருத்துவர் உறவினர்களுக்கு, காவல்துறையினருக்கு, சமூக வலைத்தளத்தினருக்கு உடனே சாத்தானாகிவிடுவார். எனவே சமையல் செய்யும்போது தவறு செய்துவிட்டால் ஒரு கவளத்தையாவது வாயில் வைக்க முடியுமா? அதுபோலத்தான் அவசரசிகிச்சையில் தவறு என்றால் இறப்புதான் நேரும். இந்நிலை மருத்துவருக்கு பெரிய அவமானம். அறுவை சிகிச்சை மருத்துவருக்கு மேசையில் நோயாளி இறப்பு எப்படி ஒரு மாறாத கரும்புள்ளியோ, அப்படித்தான் இஎம் – அவசர சிகிச்சை மருத்துவருக்கும் நோயாளியின் விபத்து மரணமும் கருத்தில் கொள்ளப்படும்.  

கணிப்பு, சிகிச்சை, நிர்வாகம், எதிர்பாராமல் வரும் நோயை முன்கூட்டியே தடுத்தல் ஆகியவை அவசர சிகிச்சையில் முக்கியமானவை. எந்தெந்த பிரச்னைகளுக்காக மக்கள் அவசர சிகிச்சையை நாடுகிறார்கள்.

வயிற்றுவலி, நெஞ்சு வலி, காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், முதுகுவலி பிரச்னைகள், இருமல், வலி, வெட்டுக்காயம், தொண்டை தொடர்பான பிரச்னைகள்

இனி இவற்றை விரிவாக பார்க்க முயல்வோம்.


   


கருத்துகள்