இரண்டாவது வாய்ப்பில் அரசியல்வாதியை திட்டம்போட்டு பழிவாங்கும் அரசு வழக்குரைஞர்! அகெய்ன் மை லைஃப்

 அகெய்ன் லைஃப்
தென்கொரிய டிவி டிராமா எஸ்பிஎஸ் 
லீ ஜூன் ஜி, கிம் ஜி யூன், கையாங் இயாங்
இயக்குநர் ஹன் சுல் ஹூ
வெப் நாவல் எழுத்தாளர் லீ ஹா நால்
ராகுட்டன் விக்கி ஆப்

சியோயில் உள்ள அரசு வழக்குரைஞர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்பவர், கிம் ஹியூ வூ. இவர் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினரான அதிகாரம் பொருந்திய ஜே டே சியோப் என்பவரை  விசாரணைக்கு அழைக்கிறார். அவருக்கு எதிரான சாட்சியத்தை வழக்குரைஞர் தக்க வைத்த தைரியத்தில் இதை செய்கிறார். ஆனால், சாட்சியத்தை கொன்றதோடு, தன்னை வழக்குரைஞர் நிறுவனத்திற்கு வரவைத்த கிம் ஹியூ வூவையும் இரக்கமே இல்லாத அடியாள் மூலம் அடித்து  போதை ஊசி போட்டு கொன்று கட்டிடத்தில் இருந்து தூக்கி வீச செய்கிறார் ஜே டே சியோப். இது முதல் எபிசோடில் நடந்துவிடுகிறது. கதை அம்புட்டுத்தானா என தோன்றுகிறதா அங்க தான் முக்கியமான ட்விஸ்ட்.  

இறந்துபோன வழக்குரைஞர் கிம்மின் உடலில் இருந்து ஆத்மா தனியாக பிரிந்து இறந்துபோன கட்டிட மொட்டை மாடியில் நிற்கிறது. தனக்கு என்ன நேர்ந்தது என தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறது. அப்போது, அவரது அருகில் சிவப்பு உடை அணிந்த பெண் ஒருவர் நிற்கிறார். நீ செய்த முட்டாள்தனத்தால் தான் நான் இறந்தது போலவே நீயும் இறந்துவிட்டாய், உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கிறேன். சரியாக திட்டமிட்டு ஜேடிஎஸ்சைப் பிடி. நீ எப்போது எல்லாம் அந்த அரசியல்வாதியை நெருக்கமாக சந்திக்கிறாயோ அப்போதெல்லாம் என்னை நீ பார்க்கலாம் என அந்தப் பெண் கூறுகிறார். சில நொடிகளிலேயே  காலம் பின்னோக்கி நகர்கிறது.

 சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது பகல் கனவு ஒன்றைக் கண்டுகொண்டிருக்கிறார் ஒருவர். அவர்தான் பள்ளியில் படித்துவிட்டு வழக்குரைஞர் வேலைக்காக முயலும் கிம் ஹியூ வூ. ஆம் தனது வழக்குரைஞர் வாழ்வை வாழ கிம்முக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு அது.  இந்த   வாய்ப்பில் அவர் முந்தைய வாழ்வில் செய்த தவறுகளை செய்யாமல், எப்படி அரசியல்வாதி ஜேடிஎஸ்ஸை கட்டம் கட்டி காலி  செய்கிறார் என்பதே கதை.

லீ ஜூன் ஜி என்ற தற்காப்புக்கலை தெரிந்த நடிகர்தான் கிம் ஹியூ வூவாக நடித்திருக்கிறார். காதல், கோபம், வஞ்சகம், பழிக்குப்பழி வாங்கும் வெறி, நட்பு என தொடர் முழுக்க இவரின் ஆளுமைதான் கொடி கட்டுகிறது. இவரை பயன்படுத்தி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பவர்தான் ஜேடிஎஸ். இவர்கள் இருவரும் ஒன்றாக  சந்திக்கும் காட்சிகளில் உரையாடல்கள் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. தொடரில்  கிம்முக்கு (லீ ஜூன் ஜிக்கு) ஹான்மி, ஜியு ரி, ஹூயா என பெண் நண்பர்கள் உண்டு. ஆனால் யாருக்கும் இடையேயும் கூட காதல் காட்சிகள் கிடையாது என்பதே தொடரைப் பார்ப்பவர்கள் கவனிக்க வேண்டியது. காதல் மழை பொழியும் தொடர் தேவை என்றால் நீங்கள் அகெய்ன் லைஃப் தொடரை நிறுத்திவிட்டு வேறு தொடரைப் பார்ப்பது நல்லது.   

 

 

அரசியல்வாதிகள் நீதித்துறையை எப்படி பாழ்படுத்தி நாட்டை புற்றுநோய் செல்களாக மாற்றுகிறார்கள் என்பதை தொடர் நெடுக வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இயக்குநர் வசனமாக பேசுகிறார். நாடு, நாட்டின் வலிமை, தியாகம் என்பதை பேராசைக்காரர்கள் தனக்கு ஏற்றபடி எப்படி பேசி காரியம் சாதித்துக் கொள்கிறார்கள், அரசியல்வாதிகளின காரணமாக அப்பாவிகளை எப்படி நீதித்துறை மிரட்டி குற்றவாளிகள் ஆக்குகிறு என்பதைச் சொன்னது பிரமாதம்.

முதல் வாழ்க்கையில் கிம் ஹியூ வூக்கு பெரிய நட்பு வட்டம் இருக்காது. ஆனால் இம்முறை அவர் திட்டமிட்டு பல்வேறு உதவிகளை செய்து நண்பர்களை அன்பால் தன்னுடன் இருத்தி வைக்கிறார். அப்படித்தான் தவறான கொலை வழக்கு குற்றவாளியாக்கப்பட்டவரை விடுவித்து அவரின் மகன் சங்மனை தனது உதவியாளராக மாற்றுகிறான் கிம். பிறகு, வழக்குரைஞர் நிறுவன தலைவராக உள்ளவரின் மகள் ஹான் மிக்கு சட்டம் படிக்க உதவி செய் அவளையும் தனது தோழியாக மாற்றுகிறான். அடுத்து, ஜியு ரி என்ற முதல் ரேங்க் வாங்கும் மாணவிக்கு உதவி அவளையும் தனது பல்கலைக்கழகத்திற்கு படிக்க வரும்படி சூழலை உருவாக்குகிறான்.

இதற்கு இடையில் அவன் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்தபடியே இருக்கிறான். வருமானம் தேவையாக இருக்கும்போது நிலங்களை ஏலத்தில்  விற்கும் இடத்திற்கு செல்கிறான். அங்கு திட்டமிட்டபடி நிலங்களை ஏலத்தில் எடுப்பவர் ஒரு முதியவர் என அடையாளம் கண்டு, அவரை சந்தித்து பேசுகிறான். தனக்கு அவரின் தொழில் ரகசியங்களைக் கற்றுக்கொடுக்க கோருகிறான். நிலங்களை வாங்கி விற்கும் முதியவர், வியாபாரம் பற்றி சொல்லும் விஷயங்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளன.

டிவி தொடரில் மிகவும் மர்மமான தன்னை யார் என்றே வெளிப்படுத்தாத ஒரு பாத்திரம் என்றால் அது லீ மின் சு தான். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இவருக்கும் மனதில் ஒரு பெரும் வலி இருக்கிறது. இதை அவர் தொடரின் இறுதியில்தான் கூறுகிறார். நாயகன் கிம் ஹியூ வூக்கு எதிரியாக மாறி செயல்படுகிறார்.

தொடரில் ஒரு கட்டத்தில் அதிகாரம், பணம் ஆகியவற்றை ஆசை காட்டி ஜேடிஎஸ் வழக்குரைஞர்களை வாங்க நினைக்கிறார். அவர்களை அடிமையாக்கி வேலை செய்ய வைப்பதுதான் திட்டம். இப்படி எதையும் செய்யாமல் இருப்பவன் கிம் ஹியூ வூ மட்டும்தான். செய்யும் உதவிக்கு பிறர் நிறைய உதவிகளை ஜேடிஎஸ்சிடம் எதிர்பார்க்கும்போது, கிம் மட்டும்தான் எதுவும் வேண்டாம் என்று சொல்லும் ஒரே ஆள். இதுதான் ஜேடிஎஸ்சுக்கு அவன் மீது ஆர்வத்தை உருவாக்குகிறது.  

 தொடரில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், ஏற்கெனவே அடித்துக் கொல்லப்பட்ட வாழ்க்கையில் கிம் நிறைய மனிதர்களை சந்தித்திருப்பான். அந்த அனுபவங்களை வைத்து இரண்டாவது வாழ்க்கையில் மிக சாமர்த்தியமாக தனது வாழ்க்கையை அவன் நகர்த்துவான்.

அவன் தனது வாழ்க்கையின் உண்மைகளை யாரிடமும் கூறுவதில்லை. ஆனால் முதல் வாழ்க்கையை விட இரண்டாவது வாழ்க்கையில் நிதானமாக தன்னை பலப்படுத்திக்கொண்டு அரசியல்வாதி ஜேடிஎஸ்சை எதிர்கொண்டு வெல்கிறான்.

தொடரில் வரும் பாடல்களை நீங்கள் தனியாகவே இணையத்தில் தரவிறக்கி கேட்கலாம். அந்த தரத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். லீ ஜூன் ஜியின் சண்டைக் காட்சிகள் பிரமாதமாக நல்ல வேகத்தில் படமாக்கியிருக்கிறார்கள். தொடரின் தொடக்கமே துறைமுகப்பகுதியில் நடைபெறும் சண்டைதான். தொடர் முழுக்க வரும் சண்டைகள் ரசிக்க வைக்கின்றன. கிம்சனில் சூதாட்ட கிளப் ஒன்றில் வரும் சண்டையில் லீ ஜூன் ஜியின் தீவிரத்தைப் பார்க்க முடியும். 

ஒருநாடு பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கலாம், வறுமையாக இருக்கலாம். ஆனால் நீதி வழங்குவதில் சரியாக இருக்கவேண்டும் என சொல்லி தொடரை முடிக்கிறார்கள்.

எஸ்பிஎஸ் டிவியில் வெளியான தொடர் மொத்தம் 16 எபிசோடுகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் தலா 1 மணிநேரம் ஓடுகிறது.

தொடரை ராக்குடன் விக்கி ஆப்பில் தரத்துடன் பார்க்கலாம். ஆங்கில சப்டைட்டில் வசதி உண்டு.

கோமாளிமேடை டீம்


song video

https://www.youtube.com/watch?v=yzXalyifvew

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை