சங்க கால பாடல்களை மாற்றி எழுதிய தமிழ் உரையாசிரியர்கள் - கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன்

 











கெட்ட வார்த்தை பேசுவோம்
பெருமாள் முருகன்
காலச்சுவடு பதிப்பகம்
பக்கம் 166

எழுத்தாளர் பெருமாள் முருகன் பா.மணி என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதனை முதலில் ஒரு சிற்றிதழில் எழுதி பிறகு காலச்சுவடு மூலம் நூலாகியிருக்கிறது. அதனால்தான் இந்த நூலை நாம் எளிதாக படிக்க முடிந்திருக்கிறது என்றும் கூறலாம்.

கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூல், தமிழில் உள்ள கெட்டவார்த்தைகள் என கூறப்படும் பிறப்பு உறுப்புகள் பற்றிய சொற்களை எப்படி சங்க்காலம் முதல் இன்றுவரை மறைத்திருக்கிறார்கள் என்பதை ஆராய்கிறது.

அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்கள் அதன் பாடல் வடிவில் சரியாகவே இருக்கின்றன. ஆனால் அதற்கு உரை எழுதியவர்கள் வரலாற்று நினைவோடு பிற்கால மாணவர்கள் சமூகத்தினர் தம்மை எப்படி நினைவில் வைத்திருக்கவேண்டும் என யோசித்து அதை மாற்றினார்கள் என்பதை பெருமாள் முருகன் விவாதிக்கிறார். அத்தியாயத்தின் முடிவில் மேற்கோளாக காட்டப்பட்ட நூல்களையும் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் இந்தவகையில் ஒருவர் ஆய்வு செய்ய விரும்பினால் பணி எளிதாக இருக்கும்.

நூலில் அதிகம் பேசப்படுவது பெண்குறியாக அல்குல் சொல்லைப் பற்றித்தான். இதை பொருள் சொல்லும்போது அல்லது பாடலில் கூட மாற்றிப் பயன்படுத்த நச்சினார்க்கினியர், சி.வை. தாமோதரம் பிள்ளை, சௌரி அரங்கப் பிள்ளை ஆகியோர் தயங்கவில்லை. இதற்கு காரணம், பிறப்புறுப்புகளை பொருள் சொல்லி விவரித்தால் நமது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று நினைப்பதுதான் என பெருமாள் முருகன் ஆதாரங்களோடு பேசுகிறார். இந்த நூலின் இறுதியில் ஆய்வாளர் வேங்கடசலபதி பெருமாள் முருகன் எதை பேசினார், எதை பேசியிருக்கலாம், விடுபட்டது எது எனவும் அடையாளம் காட்டியிருக்கிறார். எதிர்காலத்தில் ஆசிரியர் இன்னொரு நூலை ஆராய்ச்சி செய்து எழுதவும் வாய்ப்பு அதில் தெரிகிறது.

தமிழில் உள்ள நிறைய நுட்பங்களை ஆசிரியர் பெருமாள் முருகன் கட்டுரையில் கூறியிருக்கிறார். இரட்டுற மொழிதல், நிந்தா துதி, அவையல் கிளவி, வசை என பட்டியல் நீள்கிறது. உவமை சொல்லுதல், குறிப்பால் உணர்த்துதல் என நிறைய விஷயங்களை சங்க காலத்தில் பாடல்களில் பயன்படுத்தியுள்ளனர். இதில் கம்பர் பற்றி சி.என்.அண்ணாதுரை எழுதிய நூல், கம்ப ராமாயணத்தை படிக்கத் தூண்டும் என்பது முக்கியமான கருத்து.

பெண்களின் பெண்குறி பற்றிய சொல்லான அல்குல், தோண்டி, சக்கரம் என நிறைய விஷயங்களைக் கூறி சங்க காலத்தில் எப்படி பாடல்களை கவியழகுடன் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை ஆசிரியர் கூறியிருக்கிறார். அல்குல் ஆராய்ச்சியில் நூல் சற்று தீவிரமாக இருந்தாலும். அதற்குப் பிறகு வரும் ஆசுகவி சற்று நகைச்சுவையான வழியில் நூலை வாசிப்பதை சுவாரசியமாக்குகிறார். ஏறத்தாழ கவி காளமேகம் அந்த காலத்தில் புரட்சிகவிஞராக இருந்திருக்கிறார்.  இவர் பாடல்களை இங்கு நாம் உதாரணம் காட்டினால் நூலின் வாசிப்பு இன்பம் கெட்டுவிடும்.

சுண்ணாம்பு போட்டு வைக்கும் டப்பா, பெண்குறி ஆகியவற்றை இணைத்து பாடும் பாடல், படகு மற்றும் பெண் குறி என இரண்டையும் இணைத்து பாடும் பாடல் அற்புதமானவை. இதெல்லாம் ஒருவர் கேட்கும் இடத்திலேயே உடனே யோசித்து பாடுவது என்பதுதான் சவால். கவிஞர் அதை எப்படி நயமாக பாடியுள்ளார் என்பதை நீங்கள் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சங்க கால பாடல்கள் குறிப்பிட்ட மையப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை பாடநூல் என வரும்போது மட்டும் எதற்கு இத்தனை தணிக்கை என நூலை படிக்கும்போது மனதிற்குள் கேள்விகள் எழுகின்றன. அதற்கான மாற்றுச்சொற்களை சீர் குறையாமல் சேர்ப்பது சரி. ஆனால் ஒட்டுமொத்த பொருள் என்னவாகும்? இந்த பிரச்னைக்கு உ.வே.சாவும் கூட விதிவிலக்கில்லை என்பது வேதனைதான்.

நூலை மறுபதிப்பு செய்வதில் கூட நுட்பம் இல்லாத பதிப்பாளர்கள் எப்படி பாடலை நீக்குகின்றனர், பொருளை மாற்றுகின்றனர் என்பதை வாசிக்கும்போதே வேதனையாக இருக்கிறது.

கெட்ட வார்த்தை பேசுவோம் நூலை நீங்கள் படித்தால் சங்க கால பாடல்கள் மீது பெரும் வேட்கை கொள்வீர்கள். பிறப்புறுப்பு பற்றிய சொற்களுக்காக அல்ல. அதன் கவித்துவமான அழகுக்காக. குறிப்பாக உவமை அழகு. அது வாசிக்கும்போது என்றுமே திகட்டாது.

கோமாளிமேடை டீம்

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்