தனது காணாமல் போன மாமாவைக் கண்டுபிடிக்க உயிரைப் பணயம் வைக்கும் புலனாய்வாளர் ரீயூனியன் - சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ்
ரீயூனியன்
– தி சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ்
சீன டிவி
தொடர் 2020 -july to august
32 எபிசோடுகள்
எம்எக்ஸ்
பிளேயர்
வூ குடும்பம்
கலைப்பொருட்களை சீன தொல்பொருள் துறையுடன் அகழ்ந்து எடுத்து அதை வியாபாரம் செய்து வருகிறது.
இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் வூசி இவன் தொல்பொருட்களை கண்டறிந்து புலனாய்வு செய்து
மர்மத்தை கண்டறிபவன். இவன் எதிரிகளே இவனை சொல்லுவது போல கடவுளை நம்பாத நாத்திகன். கண்ணால்
பார்ப்பது, அதிலிருந்து கற்றுக்கொள்வதை மட்டுமே நம்புவன். இவனது நண்பர்கள் குண்டு வாங்,
அதிரடி கைலன். இதில் வாங், பேசிக்கொண்டே இருப்பான். வூசி பேசுவது காரண காரியமாகத்தான்.
கைலன் பெரும்பாலும் பேசாத ஆள். தொடரில் அவனுக்கு வசனம் குறைவு. ஆனால் தன் இரு நண்பர்களுக்கு
ஆபத்து வரும்போது யோசிக்கவே மாட்டான். எதிரிகளை மண்டை உடைத்து மாவிலக்கு ஏற்றிவிடும்
தீரன்.
வூசியின்
தாய்மாமாக்கள் மூவர். இதில் இரண்டாவது மாமா சொல்படி தான் வூசி கேட்டு நடக்கிறான். இவர்களுடையது
பணக்கார குடும்பம். பெற்றோர் சிறுவயதில் இறந்துவிட்டதால் வூசியை இரண்டாவது, மூன்றாவது
மாமா ஆகிய இருவரும்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.
இரண்டாவது
மாமா, கலைப்பொருட்களை சிறப்பாக வியாபாரம் செய்யும் திறமை கொண்டவர். கூடவே போட்டிகளை
சமாளிக்க தற்காப்பு கலை தெரிந்த ஆட்களையும் கூடவே வைத்துக்கொண்டு வாழ்கிறார். இவரிடம்
தொழில் கற்று பிறகு விரோதியானவர் மாஸ்டர் சூ. இவர்தான் தொடரில் முக்கியமான எதிரி.
வூசிக்கு
நுரையீரலில் புற்றுநோய் உருவாகிவிடுகிறது. அவன் இருப்பது மூன்று மாதம்தான் என காலண்டரில்
மருதுத்துவர்கள் நாள்கணக்கு குறிக்கின்றனர். இந்த நிலையில் அவனது ஆதர்ச வழிகாட்டியான
மூன்றாவது மாமா எங்கே என தேடிக் கிளம்புகிறான். தொடரில் மிக தாமதமாகவே வூசிக்கு காதல்
கிடைக்கிறது. கொரிய தொடர் போல இத்தொடரில் காதல் மி க குறைவுதான். அப்படி கிடைக்கும்
காதலும் கூட நிலைக்குமா என்று தெரியாத நிலை. தினசரி எவனாவது கத்தியால் குத்த வருகிறான்.
அல்லது விஷத்தை தோலில் ஊற்றுகிறான். இதில்
காதல் செய்ய எங்கே நேரம்? வூசி காதலிக்காவிட்டால் என்ன ஜியோ பாய் என்ற டீனேஜ் பாப்பா
அவரை காதலிக்கிறது. இவர்கள் டேட் செல்லும்போதுதான் ஜியோபாய்க்கு இன்னும் மூன்று மாதம்
ஆனால் இருபது வயதாகும் என தெரிந்து புரையேறுகிறது.
தொடரில் வூசியைப்
பொறுத்தவரை ஒரே லட்சியம், நான் இறப்பது உறுதி. அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால்
மூன்றாவது மாமாவுக்கு என்ன ஆனது என கண்டுபிடித்துவிட்டு இறக்கவேண்டும் என நினைக்கிறான்.
அதற்காகவே அவன் இருமிக்கொண்டே புலனாய்வு செய்கிறான். அடிவாங்குகிறான். கோக்குமாக்கு
ஆட்களை அடித்து உதைக்கிறான். மிரட்டுகிறான்.
தொடரில் சற்று
ஆசுவாசம் அளிப்பது குண்டு வாங்தான். இவர்தான் தொடரில் இயக்குநர் எழுதிய அத்தனை வசனங்களையும்
பேசி குட்மார்க் வாங்குகிறார். வூசியைப் பொறுத்தவரை நக்கலாக புன்னகைப்பது, தீர்க்கமாக
யோசிப்பது, தனக்கு உதவுபவர்களே சந்தேகிப்பது என நடித்திருக்கிறார். இதற்கடுத்து ஈர்ப்பது
கைலன் பாத்திரத்தில் நடித்த நடிகர். இவருக்கு
வசனமே குறைவு. சண்டை மாஸ்டர் என்றுதான் இவரைச் சொல்லவேண்டும். பீட்டர் ஹெய்ன் போல பறந்து
பறந்து அடித்து உதைத்து எதிரிகளின் தாடையை பெயர்க்கிறார். குளத்தில் உள்ள கொலைச்சுறாக்களை
கொல்கிறார். காகித வீர ர்களை தீ வைத்து எரிக்கிறார். அவர் சற்று பயப்படும் ஒரே இடம்,
குகை ஒன்றில் வேலை செய்யும்போது சுவர் ஓவியங்களால் கண் பார்வை தெரியாமல் போகும்போதுதான்.
சீன டிவி
தொடர்தான். ஆனால் தொடரை எடுக்க நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அதுவும் நிலத்தடி நதியில் உள்ள இடி நகரை கண்டுபிடிக்க
செல்லும் கிராம அமைப்பு, அங்கு நடைபெறும் சடங்கு,
அங்கு உருவாகும் இரு தரப்பு சண்டைகள் எல்லாம் சீன தற்காப்புக் கலை திரைப்படத்தின் தரத்திற்கு
எடுத்திருக்கிறார்கள். சும்மா இல்லை. அதுவும் சுவாரசியமாக இருக்கிறது.
நாயகனுக்கு
காதல் இல்லையென்பதால், அவரது குழுவில் உள்ள கண்பார்வையற்ற கருப்பு கூலர் அணிந்து வரும்
பாத்திரத்திற்கு நிறைய காதலை சேர்த்து வைத்துள்ளனர். இவர்தான் தொடரில் செம ஜாலியான
தோற்றத்தில் தில்லாக நடித்துள்ளனர். இவருக்கு ஜோடியாக வரும் பெண்ணுக்கு காது கேட்கும்
ஆனால் வாய் பேச முடியாது. இவள் பேரழகி என்றுதான் சொல்லவேண்டும். அதையும் இயக்குநர்
ராணுவ தலைவர் பாத்திரம் மூலம் சொல்லிவிடுகிறார். ஆனால் கருப்பு கூலர் மனிதர், காதலாவது
புண்ணாக்காவது ஊர் போய் சேர் என அனுப்பி வைத்துவிடுகிறார். இவர்களின் அறிமுக காட்சியே
அடல்ஸ் ஒன்லி ரேஞ்சில் இருக்கும். ஊமைப் பெண்
கருப்பு கூலர் மனிதர் மீது காதலில் விழுந்த பிறகு, அவர் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு
சென்று அறையின் கதவை பூட்டுவார். பிறகு சட்டையை
கழற்றுவார். அந்தப் பெண் அதைப் பார்த்து ஒகே
இன்னைக்கு மஜாதான் என தனது உடையையும் கழற்றுவார். அதைத் தடுத்து கருப்பு கூலர் மனிதர்
சொல்லும் காரணம்தான் அல்டிமேட். தொடரைப் பார்த்து ரசியுங்கள். இவர்களது உரையாடல் வரும்
காட்சிகள் அனைத்துமே இதே ரகத்தில் இருக்கும்.
தொடரில் பெண்
பாத்திரங்களுக்கான இடம் குறைவு. பெரும்பாலும் குகை, அகழாய்வு என உருவாக்கியதில் பெண்
பாத்திரங்களுக்கான இடம் குறைந்துவிட்டது. இதில் சற்று வறட்சியைக் குறைப்பது கிராமத்தில் வரும் ஊமைப்பெண்ணும்
, லெவன்த் வேர்ஹவுசில் மேனேஜராக இருக்கும் டீனேஜ் பாப்பா ஜியோ பாயும்தான். ஜியோ பாய்
கண்ணை உருட்டிப் பேசி சிரிப்பதே அழகு…
பெண்களைப்
பார்த்து முக்கியமான கதையை விட்டுவிட்டோமே..
வூசியின்
மாமா, இடிகடவுள் பற்றி ஆராய்கிறார். இந்த இடிக்கடவுள், முட்டாள் அரசன் என கூறப்படுபவனின்
குலதெய்வம் போல. இவர் இடி கடவுளின் ஒலியைக் கேட்டு புரிந்துகொள்ளவென தனி எந்திரங்களை
உருவாக்கி வைத்துள்ளார். இவரது இடி நகரத்தின் அருகிலுள்ள கிராம மக்களும் இடியின் சத்தத்தை
புரிந்துகொள்ள அதன் பாதிப்பில் இருந்து தப்ப வினோத அறுவை சிகிச்சையை செய்கிறார்கள்.
இதன் பாதிப்பாக, கிராம மக்களுக்கு கேட்கும், பேசும் திறன் போய்விடுகிறது. இதை கடவுள்
பக்தியின் விளைவாக மக்கள் விரும்பியே செய்கிறார்கள். திறமையானவர்கள்தான். ஆனால் சைகை
மொழியில்தான் பிறருடன் பேசுகிறார்கள். இவர்களது கோவிலுக்கு அந்நியர் வர அனுமதி கிடையாது.
ஒவ்வொரு குடும்பமும் குறிப்பிட்ட வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு கோவிலுக்குள் போகமுடியும். ஏன், எதற்கு, எப்படி என பல்வேறு கேள்விகள் உங்களுக்குத்
தோன்றுகிறதா, அத்தனைக்கும் தொடரில் பதில் இருக்கிறது. இன்னும் தொடர் முடியவில்லை.
32 எபிசோடுகளில் வூசி தனது மாமா இறுதிக்காலத்தை எங்கு கழித்தார் என்பது வரையில் கண்டுபிடித்துவிட்டார்.
இன்னும் இறுதிக்காட்சி சில எபிசோடுகள்தான் என நினைக்கிறேன். அதையும் எம்எக்ஸ் பிளேயரின்
டஜன் விளம்பரங்களோடு பார்த்து தொலைப்போம்.
எம்எக்ஸ்
பிளேயரில் நிறைய உருப்படாத தொடர்கள் உள்ளன. அதையெல்லாம் விடுங்கள். சுவாரசியமாக ஏதாவது
தெரிந்துகொள்ள இன்ஃபோடெய்ன்மெண்ட் போல பார்க்க விரும்பினால் ரீயூனியன் – தி சவுண்ட்
புரோவிடன்ஸ் தொடரைப் பாருங்கள்.
இடிமுழக்க
மர்மம்
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக