தனது உதவியாளரின் உடலுக்குள் புகுந்து நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்யும் டாக்டர்! - கோஸ்ட் டாக்டர் -
கோஸ்ட் டாக்டர்
தென்கொரிய டிவி தொடர் 16 எபிசோடுகள்
ராகுட்டன் விக்கி ஆப்
இயக்குநர் பூ சியாங் சியோல் (Boo Seong-cheol )
டாக்டர் சா இயான் மிங் (Rain), ஆணவம் கொண்ட இதய அறுவை சிகிச்சை
நிபுணர். தான் கைவைத்து அறுவை சிகிச்சை செய்தால் அந்த நோயாளி பிழைக்கவேண்டும் என போராடும்
மருத்துவர். அவரது துறையின் தலைமை மருத்துவர் பான் கூட சாவின் அர்ப்பணிப்பு உணர்வையும்
அறுவை சிகிச்சை திறனையும் பார்த்து பொறாமைப்படுபவர். சா திறமையானவர் என்றாலும், தான்
மட்டுமே அறுவை சிகிச்சைக்கான நோயாளியைத் தேர்ந்தெடுப்பேன் என பிடிவாதமாக இருப்பவர்.
இதனால் எமர்ஜென்சி பிரிவில் அவரது தேவை இருந்தாலும் அதை நான் செய்யமாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார்.
இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையின் தலைவராக உள்ளவரின்
பேரன் கோ தக் (kim bum), அங்கு வேலைக்கு வருகிறான். இதயநோய் துறைக்குத் தான் பயிற்சி பெற வருகிறான்.
சிபாரிசில் வந்தவன், மருத்துவமனை அவனுடையது என்பதால் எளிதாக வந்துவிட்டான் என மருத்துவர்
சா அவனை அவமானப்படுத்தி பேசுகிறார். இழிவாக நடத்துகிறார். நிறைய நோயாளிகளை பார்த்துக்கொள்ள
சொல்லி தள்ளிவிடுகிறார். இத்தனைக்கும் மருத்துவ கல்லூரியில் அவன் முதலாண்டுதான் படித்துக்கொண்டிருப்பவன்.
இந்த நேரத்தில் அங்கு வந்து நோயாளியாக சேர்கிறார்
தொழிலதிபர் ஜாங். இவரது பையன் ஒரு ரௌடி, மகள் மருத்துவர். ஜாங்கிற்கு அவரது சீனியர்களே செய்யத் தயங்கும் அறுவை
சிகிச்சையை மருத்துவர் சார் செய்துவிட்டு நோயாளிக்கு நினைவு திரும்புவதற்கு முன்னமே
ஏதோ ஒரு இடத்திற்கு கிளம்பிச் செல்கிறார். அப்படி செல்ல ஒரு போன் செய்திதான் காரணம்.
பிறகு, அங்கு சந்திக்க அவரது மருத்துவக் காதலி வராததால் கிளம்ப நினைக்கிறார். ஆனால்
வரும் வழியில் மருத்துவமனை நிர்வாக அதிகாரியின்
சதியால் விபத்தில் சிக்கி கோமாவுக்கு செல்கிறார்.
உண்மையில் இவர் அறுவை சிகிச்சை செய்த ஜாங் என்னவானார், உயிர் பிழைத்தாரா, விபத்தில்
சிக்கிய மருத்துவர் சா மீண்டும் உயிர் பிழைத்து வந்தாரா என பதினாறு எபிசோடுகளில் நிதானமாக
கோபம், வருத்தம், மகிழ்ச்சி, வன்மம், காதல், நெகிழ்ச்சி என நிறைய உணர்வுகளை
படையலாக்கி சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு மருத்துவர் எப்படியிருக்கவேண்டும், நோயாளிகளிடம்
எப்படி இங்கிதமாக நடந்துகொள்ள வேண்டும், தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சி என
நிறைய விஷயங்களை தொடரில் கூறியிருக்கிறார்கள். மருத்துவர் கோமா நிலையில் இருக்கும்போது
அவர் ஆவி உருவில் மாறுகிறார். அதாவது அவரது ஆன்மா, உடல் செயல்பாட முடியவில்லை எனும்போது
வெளியே வந்துவிடுகிறது. அப்போதுதான் அவர் அவரைச் சுற்றிய உலகத்தை புரிந்துகொள்ள முயல்கிறார்.
அதுவரை அவரைவிட்டு பிரிந்து வந்த காதலியின் சூழல், அவர் கடுமையாக பேசிய கோமா நிலையிலுள்ள
பிற நோயாளிகள், அவர் மதிக்கவே மதிக்காத சீனியர்களின் மனநிலை, இதயநோய் துறையில் கடுமையான
வேலை பளுவுக்கு இடையில் வேலை செய்யும் சாவின் உதவியாளர்கள், மருத்துவர்களின் குடும்பங்களின்
நிலை, ஒரு உயிர் சரியான சிகிச்சை இல்லாதபோது அநீதியாக பலியாவது, அதனால் நோயாளியின்
குடும்பத்தில் ஏற்படும் துக்கம் என ஏகப்பட்ட விஷயங்களை தொடரில் கூறியிருக்கிறார்கள்.
இதில் சிக்கலான பகுதி என்பது, மருத்துவர் கோவின்
உடலைப் பெற்று மருத்துவர் சா அறுவை சிகிச்சைகளை செய்கிறார். இப்போது கோவை பார்ப்பவர்கள்,
உடல்மொழி தங்களுடைய பேராசிரியரும் மருத்துவருமான சா போல இருந்தாலும் அதை உடனே நம்ப
மாட்டார்கள். ஆனால் சாவைப் பொறுத்தவரை அவர் பிறரைப் பார்க்கும்போது தன்னை சாவாக உணர்ந்தே
பார்ப்பார். இந்த குழப்பத்தை சரியாக தீர்த்து வைக்கும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இது சற்று கடினம். காட்சிகளை நன்கு உள்வாங்கினால்தான் காட்சிபடுத்துதல் என்பது தெரியவரும்.
தொடரின் பெரும்பகுதி ஜாலியாக மருத்துவர் கோ, சீரியசான
சர்வாதிகார மருத்துவர் கோ என்றே செல்கிறது. இது ஃபேன்டசி தொடர். எனவே லாஜிக் பார்க்காதீர்கள்.
வருத்தப்படுவீர்கள்.
நோயாளிகளே தெய்வம்
கோமாளிமேடை டீம்
கொரிய, ஜப்பான், சீன, தைவான் டிவி தொடர்கள் மற்றும் திரைப்படங்களை பார்க்க ஜப்பானிய நிறுவனமான ராகுட்டன் விக்கி ஆப் பயன்படுத்தலாம். இதில் விளம்பரங்களும் குறைவு. இந்த ஆப் மட்டுமல்ல, கூகுள் பிளே ஸ்டோரில் இன்னும் நிறைய ஆப்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக