கார் விபத்தில் இறந்த அம்மாவை காப்பாற்ற கடந்தகாலத்திற்கு செல்லும் மகனின் கதை! ஒக்கே ஒக்க ஜீவிதம்

 










ஒகே ஒக்க ஜீவிதம்
தெலுங்கு
சர்வானந்த், ரீது வர்மா, வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி
இயக்கம் - ஶ்ரீகார்த்திக்

 






நிகழ்காலத்தை நாம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு காரணமான இறந்தகாலத்தை நான்கு நாட்களில் மாற்ற முடிந்தால்…. அதுதான் ஒக்கே ஒக்க ஜீவிதம் படத்தின் கதை.

படம் அம்மா, மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டது. படத்தில் டைம் மெஷின் வருகிறது. பார்க்க சரவணபவன் ஹோட்டல் டிபன் கேரியல் போல உள்ளது. நாம் இங்கு பார்க்க வேண்டியது அதை வைத்து காலத்தில் பயணித்து சென்று என்ன செய்கிறார்கள் என்றுதான். நிலவை சுட்டிக்காட்டும்போது எனது விரலைப் பார்க்காதே நிலவைப் பார் என ஓஷோ சொல்லுவார் அல்லவா?

2019ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டிற்கு கால எந்திரத்தில் பயணிக்கிறார்கள் மூன்று நண்பர்கள். அங்கு சென்று இறந்த காலத்தை மாற்ற முயல்கிறார்கள். இதற்கு நிகழ்காலத்தில் உள்ள பிரச்னைகளே காரணம். அவை என்னவென்று பார்க்கலாம்.

ஆதிக்கு இசைமேல் பைத்தியம். பாடல் பாடலாக வீட்டின் ஸ்டூடியோவில் பாடி கேசட்டாக அடுக்கி வைத்திருக்கலாம். அதெல்லாமே அவரது அம்மா காலத்திலிருந்து பாதுகாத்து வரும் சொத்து. அவரது அம்மாதான் இன்ட்ரோவெர்டான ஆதிக்கு ஒரு பாதுகாப்பு, நம்பிக்கை எல்லாமே. அவர் கார் விபத்தில் எதிர்பாராமல் இறந்தவுடன் ஆதிக்கு மனம் உடைந்து போகிறது.  இசை போட்டிகளில் கலந்துகொண்டு வெல்லவும் அவரது கூச்சமும், மேடை பயமும் தடுக்கிறது. டிவி சேனலில் வேலை செய்யும் வைஷ்ணவி ஆதியின் காதலி. ஆதியின் பயத்தைப் போக்க என்ன முயன்றாலும் அவனால்  இசை நிகழ்ச்சி மேடையில் பாடமுடியவில்லை. அவளே ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறாள். அதிலும் தோற்றுப்போகிறான். அதாவது பாட முடியவில்லை.

சீனு, ரியல் எஸ்டேட் தரகர். தங்குவதற்கான வீடு பார்த்துக் கொடுத்து கமிஷன் வாங்குவதுதான் முக்கியமான வேலை. விற்காத வீட்டைக் கூட வாடகைக்கு ஆட்களிடம் தள்ளிவிடும் புத்திசாலி. ஆனால் ஆங்கிலத்தில் பேசினால் மட்டும்தான் தடுமாறிவிடுகிறான். ஆங்கிலம் தெரியாத காரணத்தால் சில இடங்களில் அவமானப்படுகிறான். இதனால் பள்ளியில் ஒழுங்காக படித்திருந்தால் இப்படி ஆகியிருக்காது என விரக்தியாகிறான். காரணம், ஆதி, சைத்து என மற்ற இருவரும் டிகிரி படித்தவர்கள்.

சைத்து வேலையில் இருந்தாலும் கல்யாண விஷயத்தில் சிறுவயது பள்ளித் தோழியை கைவிட்டுவிட்டோமே என ஏங்குகிறான். இந்த நேரத்தில்தான் ரங்கன் குட்டா பால் என்ற இயற்பியல் விஞ்ஞானி கதைக்குள் வருகிறார். இவர் என்னுடைய ஆராய்ச்சிக்கு உதவுவதாக சொன்னால் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பைப் கொடுக்கிறேன் என சொல்லுகிறார். இப்படித்தான் காலப் பயணம் தொடங்குகிறது.

உண்மையில் நம்முடைய துயரங்களுக்கு இறந்தகாலம்தான் காரணமா, நிகழ்காலத்தில் செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றியெல்லாம் படம் காட்சிகளாக விவரிக்கிறது.

படத்தில் முக்கிய காட்சிகள் என்பது ஆதி ரவிந்திரனைப் பற்றியதுதான். அவனது இன்ட்ரோவர்ட் குணத்திற்கு பலமாக அமையும் இசையை அம்மா ஊக்கப்படுத்தி வளர்க்கிறாள். அவள் போனபிறகு ஆதிக்கு அது வே பெரிய மனத்தடையாகிறது. அதை அவன் எப்படி கடந்தான் என்பதே முக்கியமான கதை.

அமலா, தனது மகனைப் பற்றி பிறர் கூறும் கருத்துகளை அவன் காணாமல் போனபோது சொல்லி புலம்புவது, தனது மகன் எதிரில் இருக்கிறான் என்பதை அவர் புரிந்துகொண்டு பாசத்துடன் அவனைப் பார்ப்பது என பிரமாதப்படுத்துகிறார்.

இவருக்கு அடுத்து படத்தில் ரசிக்க வைப்பது வெண்ணிலா கிஷோர்தான். விற்கும் திறமை இருந்தாலும் யாராவது ஆங்கிலம் பேசினால் பயந்து பம்முவது, தன் ஆபீசில் வேலை செய்யும் பையனிடம் என்ன சொல்லுகிறான் என்று கேட்பது, படிப்பால் கல்யாணம் தடைபடுவது என விரக்தியை உடல்மொழியில் காட்டி நடித்து அசத்தியிருக்கிறார். இரு நண்பர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசியபிறகு கமிஷன் தர மழுப்பி பேசும்போது கோபமாக பேசும் வசனங்களும், அக்காட்சியின் உடல்மொழியும் சிறப்பாக உள்ளது.

நிகழ்கணமே உண்மை

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்