சுதந்திரமான மனதை பெறுவது எப்படி? ஜே கிருஷ்ணமூர்த்தி

 











அகம் புறம்

ஜே கிருஷ்ணமூர்த்தி

கேள்வி பதில்கள்

 

கலாசாரங்களைப் பின்பற்றும் சமூகத்தில் இருந்துகொண்டு நாம் எப்படி சுதந்திரமான மனதைக் கொண்டிருப்பது?

முதலில் சுதந்திரமாக சிந்திப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். வானில் பறவை பறப்பது போல, ஆற்றில் நீர் நுரையுடன் பெருகி பாய்வது போல உங்களுக்கு ஆர்வம் இருக்கவேண்டும். சுதந்திரமடைவதற்கு உங்களிடம் இப்படி ஒரு வேட்கை உண்டா? அப்படி இருந்தால் எது உங்களை தடுத்துவிடும்? சமூகம், பெற்றோர்  உங்களை மாற்றுவதற்கு முயல்வார்கள். அவர்களை எதிர்க்க முடியுமா? அதை செய்ய உங்கள் மனதில் உள்ள பயம் உங்களைத் தடுக்கிறது. எனவே, உங்கள் வெளியிலிருந்து வரும் அழுத்தங்களை எதிர்க்க முடியவில்லை. உங்களைச்சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் என்ன சொல்லுவார்கள் என்று பயம் உங்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் உங்களை சுதந்திரமடைவதிலிருந்து தடுக்கிறது. இதனால்தான் பெற்றோர், சமூகத்தின் அழுத்தங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வது நடக்கிறது.

நான் பட்டினியாக கிடந்தாலும் அழுகி கிடக்கும் சமூகத்திற்கு எதிராக போராடுவேன் என்று உங்களால் கூறமுடியுமா, எது நடந்தாலும் எத்தனை சவால்கள் வந்தாலும் நான் தடைகளை எதிர்த்து போரிடுவேன் என உறுதியாக நிற்க முடியுமா?

மேற்சொன்னபடி நீங்கள் இருந்தால்தான் உங்களுடைய பிள்ளைக்கு பயமின்றி சிந்திக்க கற்றுக்கொடுக்க முடியும். நீங்கள் எப்போது ஒன்றை நினைத்து பயப்படுகிறீர்களோ அப்போதே சுதந்திரமான சிந்தனை என்பது முடிவுக்கு வந்துவிடுகிறது.

நமது சமூகம் முழுக்க பயத்தின் அடிப்படையில்தான் நம்மை உருவாக்கி இருக்கிறது. நாம் மட்டும் எப்படி பயமின்றி சுதந்திரமாக இருக்க முடியும்?


நீங்கள் பயந்திருப்பதை உணர்கிறீர்களா? இந்த சூழலில் நீங்கள் எப்படி பயத்தை ஒழித்து சுதந்திரமாக இருக்க முடியும்? நீங்கள் மனதளவில் பயம் கொண்டிருப்பதை உணர்கிறீர்கள், இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் உங்கள் பயத்திடமிருந்து தப்பி ஓடுகிறீர்கள். உங்களுக்கு சமூகம், பெற்றோர் ஆகியோரின் மீது பயம். இதனால் அவர்களிடமிருந்து விலகி ஓடுகிறீர்கள். உங்கள் மனதில் இருக்கும் பயத்தை உணர்ந்தாலும் கூட அதை எப்படி தீர்ப்பது என தெரியவில்லை. நீங்கள் உங்கள் மனதின் மூலையிலுள்ள பயத்தைப் பார்த்து திகில் அடைகிறீர்கள். உடனே அதைப் பார்க்க பயப்பட்டு பல்வேறு திசைகளுக்குச் செல்கிறீர்கள். இதனால்தான் நீங்கள் கடைசி நொடி வரை தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.  உங்களால் உண்மையை எதிர்கொள்ள முடியாமல் போவதன் நிலை இது.

நீங்கள் தொடர்ச்சியாக உங்களின் பிரச்னைகளிலிருந்து விலகி ஓடிக் கொண்டிருந்தால், பிரச்னைகளை தீர்க்க முடியாது. அவையும் தீராது. நீங்கள் அதை எதிர்கொள்ள வேண்டும். இப்போது  நீங்கள் உங்களது பயத்தை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும். பறவையை நீங்கள் ஆராய வேண்டுமென்றால் அதன் இறக்கை, கால்கள், அலகு என அனைத்தையும் அருகே வைத்துத்தான் பார்க்க வேண்டும். நீங்கள் பிரச்னையை நேரடியாக எதிர்கொள்ள முடியாதபோது பயம் குறையாது. மேலும் அதிகரிக்கும்.

நீங்கள் விரும்புகிற விஷயத்திற்காக உங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். ஆனால் உங்களது பெற்றோர் அப்படி செய்யக்கூடாது என்று உங்கள் மனதை அச்சுறுத்துகிறார்கள். அவர்கள் உங்களது விருப்பமான செயலைச் செய்தால் அதற்கு நான் பணம் தரமாட்டேன் என்று சொல்லுகிறார்கள். இதனால் நீங்கள் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை பார்க்க முடியாதபடி பயம் கொள்ளுகிறீர்கள். நீங்கள் விட்டுக்கொடுத்துவிட்டால் பயம் என்பது அப்படியே தொடர்ந்துவிடும்.




 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்