நிழலின் அருகாமையில்
நிழலின் அருகாமையில்
·
எழுத்தாளர்களின்
கடிதங்கள்
திரு. ஜெயமோகன்
அவர்களின் ‘நிழல்வெளிக்கதைகள்’ எனும் சிறுகதைகளைப் படித்துவிட்டு, நான் ஒரு
குழந்தை முதலில் பேசிப்பழகும் அர்த்தமற்ற வார்த்தைகளை ஒத்து அரைகுறையான அவரது
நூலைப்பற்றிக் குறைவாகவும், என்னைப்பற்றி அதிகமாக விவரித்து நான்கு பக்க கடிதம்
ஒன்றை எழுதினேன். அதற்கு பதிலாக வந்த கடிதம்தான் இது. பொக்கிஷமாகப் பாதுகாத்து
வரும் இந்தக் கடிதம்தான் என் பிற்கால வாசிப்பிற்கு வாயிலாக அமைந்தது என்று
பெருமையுடன் கூறுவேன்.
14.2.2008
அன்புள்ள அன்பரசு அவர்களுக்கு,
தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. நன்றாக
இருக்கிறீர்கள் அல்லவா?
தொடர்ந்து
நீங்கள் நாவல்களைப் படிப்பது உற்சாகம் அளிக்கிறது.
பல வருடங்களுக்கு முன்பு சுந்தர ராமசாமி
எனக்கு ஓர் அறிவுரை கூறினார். நாம் ஒவ்வொரு முறை தேர்வு செய்யும் புத்தகமும்
நமக்கு படிப்பதற்கு ஒரு சவாலை அளிக்க வேண்டும். நம்மை ஓரளவாவது அடுத்த கட்டம்
நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். நமக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்லி நம்மை
எளிதாக படிக்கவைக்கும் புத்தகங்களைத் தேடிப்போகவே நமக்குத் தோன்றும். அவ்வெண்ணத்தை
தவிர்த்துவிடுதல் வேண்டும்.
கதைகளைப் படிப்பதன் வழியாக என்ன
கிடைக்கிறது? நமக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை நாம் வாழ்வதற்குச் சாத்தியமான
வாழ்க்கை மிகவும் சிறியது. அதை வாழ்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவ ஞானமும்
குறைவானது. இலக்கியப் படைப்புகளைப் படிக்கும் போது நாம் கற்பனையில் பல வாழ்க்கைகளை
வாழ்கிறோம். பல அனுபவ அறிதல்களை அடைகிறோம். இது நம்மை பண்படுத்துகிறது -
விரிவுபடுத்துகிறது.
நீங்கள் தொடர்ந்து படிக்கும் புத்தகங்கள்
இப்படி விதவிதமான வாழ்க்கைகளை நீங்களே வாழ்வது போன்ற அனுபவத்தையும், அனுபவ
அறிவையும் அளிக்கின்றனவா என்று பாருங்கள். அந்த அனுபவம் மூலம் உங்கள்
சிந்தனைப்போக்கில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்று பாருங்கள். அது உங்களை மேலும்
மேலும் நல்ல நூல்களிடம் கொண்டு சென்று சேர்க்கும்.
வரும் 22,23, 24 தேதிகளில் நான்
ஈரோட்டிற்கு வருவேன். கலைமகள் பள்ளியில் நடக்கும் நாட்டார் கூத்து கலைவிழாவுக்காக.
அலைபேசி 9443314600
முடிந்தால்
சந்திப்போம்.
அன்புடன்
ஜெயமோகன்
இணையத்தில்
www.jeyamohan.in
எனும் இணையதளத்தில் என் எழுத்துக்களை பார்க்கலாம்.
வங்காளத்திலுள்ள பல முக்கியமான ஏன் பெரும்பாலான
எழுத்துக்களை மொழிபெயர்த்து தமிழ்மொழி செழுமை பெற உதவியவர்களில் மொழிபெயர்ப்பாளர்
சு. கிருஷ்ணமூர்த்தி
அவர்கள் மிக முக்கியமானவர். வங்காளத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
போராளி பற்றிய நூலை மொழிபெயர்த்திருந்தார். அந்நூலை படிக்க எழுத்தாளர் ஸ்ரீராம்
தன் புத்தக சேகரிப்பில் இருந்து தந்துதவினார். இதுமட்டுமல்ல வேறு பல எண்ணற்ற
நூல்களையும் வாசிக்க கொடுத்த அவரில்லாமல் நான் சு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின்
எழுத்துக்களை தொடர்ந்திருக்க முடியாது. வங்கப்போராளி ஒருவரின் நூலை படித்துவிட்டு
சு. கிருஷ்ணமூர்த்தி
அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு அவர் எழுதிய கடிதம்தான் இது. வேலை தேடி
அலைந்த காலத்தில் நம்பிக்கை தந்த நூல் அது.
சு.கிருஷ்ணமூர்த்தி
போன் –
033 – 22891823
கொல்கத்தா – 700019
12.6.13
திரு.
அன்பரசு அவர்களுக்கு,
தங்கள் கடிதம் நான் எதிர்பாராத மகிழ்ச்சி
அளித்தது. தாங்கள் போன்ற வாசகர்களின் பாராட்டுதான் என் போன்ற
எழுத்தாளர்களுக்கு உற்சாகமளித்து மேலும்
எழுதத் தூண்டுகின்றன.
நீங்கள் என்னுடைய எத்தனை மொழிபெயர்ப்புகளை
படித்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. கீழ்க்கண்ட நூல்களைப் படித்துப்
பாருங்கள்.
1. நான் கடந்து வந்த பாதை (என் சுயசரிதை) - பாரதி
புத்தகாலயம்.
2. நஜ்ருல் என்றொரு மானிடன் ‘’
3. கதைச்சிற்பி சரத் சந்திரர் - ஆழி பதிப்பகம்
4. சரத்சந்திரரின் தேவதாஸ் - ‘’
5. விடுதலை வேள்வியில் வங்காள வீரர்கள் - திருக்குறள்
பதிப்பகம்
6. ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன்வரலாறு - அலைகள் பதிப்பகம்
7. கொல்லப்படுகிறது - ‘’
8. நீலகண்டப்பறவையைத் தேடி - என்பிடி
9. சிப்பியின் வயிற்றில் முத்து - ‘’
10. கொல்லப்படுவதில்லை - சாகித்திய அகாதமி
11. சாம்பன் - ‘’
12. 1084 ன் அம்மா - ‘’
தங்களுக்கு கிடைக்கும் நூல்களைப் படித்துவிட்டு உங்கள்
கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி!
சு.
கிருஷ்ணமூர்த்தி
வண்ணதாசனின்
சிறுகதைத் தொகுப்புகளை முன் பெரிய ஆர்வம் கொண்டு வாசித்ததில்லை என்றாலும்
சென்னையில் கேணி இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த வண்ணதாசனுக்கு சகோதரர்
வீட்டினை வழி காட்டி உதவ, அந்நிகழ்ச்சியின் இறுதியில் அவரது அண்மையில் வெளியான
நூலான ஒளியிலே தெரிவது எனும் சிறுகதைத் தொகுப்பினை பரிசளித்தார். ஒரு எழுத்தாளனை
ஒன்றுமேயில்லை என்று கூறும் வண்ணம் கொடூரமாக கேள்வி கேட்டு விமர்சனம் செய்யும்
நிகழ்ச்சியான அதில் முதலிலிருந்து இறுதிவரை சிரிப்பு கலையாது நின்ற அவரது மனது
என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டது. பின் அவரது சிறுகதைத்தொகுப்பு, இதழில் வரும்
சிறுகதைகள் என தேடி வாசிக்கத் தொடங்கினேன். கிருஷ்ணன் வைத்த வீடு மற்றும் ஒளியிலே
தெரிவது என்ற இரு சிறுகதைத் தொகுப்புகளையும், பூனை எழுதிய அறை என்ற கவிதைத்தொகுதி
ஒன்றையைம் படித்துவிட்டு பின் அது குறித்த கடிதம் எழுத நினைத்தேன். அதோடு கல்யாணி
தன் நூலினை நுட்பமாக ஒதுக்கும் அரசியல் குறித்தும் காயம்பட்டிருந்தது அவரது
முன்னுரையில் தெளிவாக தெரிந்தது. நமக்கு ஒரு வாழ்வை வாழ வாய்ப்பளிக்கும் ஒரு
எழுத்தாளனுக்கு இப்படி ஒரு மனத்தாங்கலா என்று நான் அவரது எழுத்தைப் படிக்க வாழ்வு
முழுவதும் இருக்கும் காரணங்களைச் சுட்டி கடிதம் ஒன்றை எழுதினேன். நான் விரும்பும்
முக்கிய அன்பான உறவு ஒன்றின் உள்ளங்கை வெம்மையை இந்த கடிதத்தில் கண்டேன்.
627007
29.04.2014
அன்பு மிக்க அன்பரசு,
வணக்கம்,
குமார் போல யாராவது எனக்கு இன்னும் வழிகாட்டிக்கொண்டேதான்
இருக்கிறார்கள். சற்றுத் திகைத்தாற் போல இருந்த ஒரு தினத்தில் வந்த உங்கள் கடிதம்
கூட எனக்கு ஏதோ ஒரு வழியைத் திறந்து விட்டிருப்பதாகவே நினைக்கிறேன்.
என்னுடைய சிறுகதைத் தொகுப்புகளை நீங்கள் வாசிப்பதும், தற்சமயம்
‘பூனை எழுதிய அறை’ யில் வசிப்பதும் அறிய மகிழ்ச்சி. நீங்கள் ‘மனிதர்கள் மீதான
நம்பிக்கை அறுந்துவிடும் சமயத்தில், எப்படியோ கைக்கு உங்களது நூல்
கிடைத்துவிடுகிறது பிடிமானமாக’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நானும் கூட
அப்படியேதான் சொல்கிறேன். உங்களுடைய அஞ்சலட்டை எனக்கு எவ்வளவு பெரிய பிடிமானம்
தெரியுமா?
‘உயிர் எழுத்து’ இதழில் தொடர்ந்து எழுதிவந்த கதைகள் உட்பட, என்னுடைய
சமீபத்திய பதினைந்து சிறுகதைகளை ‘ஒரு சிறு இசை’ என்ற தொகுப்பாக சந்தியா பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது. கிடைக்கிறபோது படித்துப்பாருங்கள்.
முகநூலில் இந்த ஆண்டு துவக்கத்திலும் நிறையக் கவிதைகள் எழுதினேன்.
அடுத்த கவிதைத்தொகுப்பில் அக்கவிதைகள் இருக்கும். ஒரு சிறிய, எழுதாத இடைவெளிக்கு
பிந்திய காலம் இது. விரைவில் சிறுகதைகள் மீண்டும் எழுதவேண்டும்.
உங்கள் கடிதத்திற்கும் இயல்பான பகிர்வுக்கும் என் மகிழ்ச்சியும்
நன்றியும்.
அன்புடன்
கல்யாணி.
கருத்துகள்
கருத்துரையிடுக