வானகம் இதழில் வெளிவரும் திரு. முருகானந்தம் ராமசாமியின் விவசாயக்கட்டுரை இங்கு முன்னதாகவே அவரிடம் அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது.

யார் இந்த முருகானந்தம்
முருகானந்தம் தாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்று நீரின் மாசுபடுதலுக்காக சபர்மதி அறக்கட்டளை நிறுவி பாடுபட்டு வருகிறார். தேசிய கட்சி ஒன்றின் தாராபுரப் பகுதி செயலாளராக இருக்கும் அவர் தன் கட்சியின் அடையாளம் தாண்டி மானுடத்தை நேசிக்கிறவர். பல்வேறு சூழல் சார்ந்த முயற்சிகளையும், செயல்பாடுகளையும் தன்னால் முடிகின்ற அனைத்து தளத்திலும் செயல்படுத்தி வருபவர். பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளிலும், இசை குறித்தும் நுணுக்கமான ரசனை கொண்டவர்.


       ஜூலை ஐந்தாம் தேதி உழவர் தினமாக கடைபிடிக்கப்படுவதை ஒட்டி உழவர் தினம் தோன்றியது எப்படி, அதற்கு தன்னை அர்ப்பணித்த நாராயணசாமி நாயுடு என்னும் மனிதரைப் பற்றியும் கூறுகிற இந்தக் கட்டுரை, இன்றைய பல்வேறு விவசாய சங்க நிலைமைகளின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கிற அதே வேளையில் அதற்கான தீர்வுகளைப் பற்றிப் பேசவேண்டிய நெருக்கடிகளையும், அர்ப்பணிப்பும், சமரசமற்ற நேர்மையும் கொண்ட தலைமைத்துவம் இன்றுவரையும் இல்லாது போன அவலத்தையும் இயல்பாக கூறுகிறது.                            
                                                          நிரப்பப்படாத வெற்றிடம் ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என்கிறது குறள். நெஞ்சை நிமிர்த்தி விவசாயம் செய்வதாகக் கூறியவர்களின் பிள்ளைகள் மெல்ல விளைநிலங்களை விட்டு அகன்று வேறுதொழில்களை நாடுவதுடன் விவசாயி என சொல்லிக் கொள்ளவும் கூட வெட்கம் கொண்டு தங்கள் அடையாளத்தை மறைக்கும் அவலம் இன்றைய சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் ஜூலை ஐந்தாம் தேதி தமிழகத்தில் உழவர்தினம் விவசாய சங்கங்களால் சடங்குபோல் கடைபிடிக்கப்படுகிறது. வெவ்வேறு பெயரிலான விவசாய சங்கங்கள் வெவ்வேறு ஊர்களில் சிறிய அளவில் பேரணிகளையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தி சில கோரிக்கைகளை வலியுறுத்திக் கலைவது இந்த ஆண்டும் நடைபெறக்கூடும். அற்ப விஷயங்களுக்குக் கூட ஆயிரம் பக்கங்களில் புத்தகங்கள் வெளியாகும். ஆனால் சுமார் இருபது ஆண்டுகள் தமிழகத்தில் நடைபெற்ற விவசாயிகள் இயக்கம் குறித்த முழுமையான பதிவுகள் ஏதுமில்லை. கடந்த நாற்பது ஆண்டு கால திரைப்புலப் பின்னணி ஏதேனும் ஒருவகையில் பெற்றவர்கள் மட்டுமே கொண்ட இம்மண்ணில் சமூகத்தின் ஆதாரமான பிரச்சனைகள் முக்கியத்துவம் பெறாமல் போனதில் வியப்பேதுமில்லை. 1966 ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி நடந்த வடகோவை தாலுக்கா விவசாயிகள் போராட்டத்தின் விதை ஊன்றப்பட்டது. பயிர் வாரியான நிலவரி விதிப்பை எதிர்த்தும், வறட்சி மற்றும் வறுமை காரணமாக பட்ட கடனை அடைக்க வழியற்றிருந்த விவசாயிகளின் வீடுகளில் கொள்ளைக்காரர் போலப் புகுந்து தட்டுமுட்டு சாமான்களைத் தூக்கிச்செல்லும் அவமானகரமான ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடும் நெருக்கடிக்கிடையே விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் நிலை குறித்த புரிதலின்றி ‘ஜப்தி’ நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட அரசை வீதியில் இறங்கி எதிர்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒன்று திரண்ட உணர்வுகளை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உருவாகி அதன் தலைவராக திரு. நாராயணசாமி நாயுடு பொறுப்பேற்றார். 11.3.1970 அன்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மின்கட்டணத்தைக் கட்ட மறுப்பது என்றும், அரசு அலுவலகங்களின் முன் மறியலில் ஈடுபடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.   19.7.1970 ல் கோவை மாவட்ட பெருமாநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பதினெட்டு விவசாயிகள் பலியாயினர். ஆங்காங்கு நடந்துவந்த போராட்டங்களை இச்சம்பவம் தீவிரப்படுத்தியது. 1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழு, எட்டு தினங்களில் கோவையில் மாபெரும் கட்டைவண்டிப் போராட்டம் நடந்தது. ஜூலை ஐந்தாம் தேதி கருப்பு தினத்தில் சேலம் மாவட்டம் பெத்தநாய்கன்பாளையம், கோவை மாவட்டம் பல்லடம் அய்யம்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம் சாத்தூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பதினைந்து விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை நினைவு கூர்ந்தே ஆண்டுதோறும் ஜூலை ஐந்தாம் தேதி உழவர்தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஜூலை எட்டாம் தேதி இச்சம்பவத்தைக் கண்டித்து பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தப்பட்டு கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் இருபது, இருபத்தொன்று ஆகிய நாட்களில் கோவையின் கடன் நிவாரண கோரிக்கை மாநாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மின்கட்டணக் குறைப்பு, வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை, ஜப்தி நடவடிக்கை நிறுத்தம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களைத் தொடர்ந்தனர். ஆட்சி மாறியபோதும் விவசாயிகள் போராட்டத்தின் மீதான அடக்குமுறை குறையவில்லை. தொடர்ச்சியான போராட்டங்களினால் தமிழக விவசாய சங்கத்தினை பொருட்படுத்தவேண்டிய நிர்பந்ததை அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படுத்தின. 1980 ஆம் ஆண்டு மார்ச் ஒன்பதாம் தேதி பாரதப்பிரதமர் திருமதி. இந்திராகாந்தியின் சார்பில் அன்றைய மத்திய அமைச்சர் திரு. ஆர்.வி சுவாமிநாதன், திரு. நாராயணசாமி நாயுடுவை அவரது சொந்த ஊரான கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் சந்தித்தார். அதே மாதம் பத்தொன்பது, இருபத்தேழு ஆகிய நாட்களில் இருமுறை தமிழக முதல்வர் திரு. எம்.ஜி ராமச்சந்திரன், திரு. நாராயணசாமி நாயுடுவைச் சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு கோரினார். அடுத்துவந்த சட்டமன்றத்தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பதென தீர்மானிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க அரசு விவசாயிகளின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத நிலையில் மீண்டும் போராட்டம் தீவிரப்பட்டது. 1980 டிசம்பர் பதினான்காம் தேதி ஹைதராபாத்தில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவராக திரு. நாராயணசாமி நாயுடு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து டிசம்பர் பத்தொன்பதாம் தேதி மாநில அளவில் விவசாய விளைபொருட்கள் மற்றும் பால் விற்பனை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்துவந்த நிலையில் டிசம்பர் இருபத்திரெண்டாம் தேதி திரு. நாராயணசாமி நாயுடு தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
 டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டம் குஞ்சாங்குளத்தில் ஐந்துபேரும், செங்கல்பட்டு மாவட்டம் டி.சி கண்டிகையில் மூன்று பேரும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டனர். இதன் பிறகும் போராட்டம் தீவிரமாக தொடர்ந்த நிலையில் திரு. நாராயணசாமி நாயுடு விடுதலை செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் மாநாட்டை குலைக்கும் நோக்கத்துடன் தமிழகம் முழுவதும் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அனைத்தையும் தாண்டி திருச்சி நோக்கி திரண்டு வந்தவர்களை அனைத்து சாலைகளிலும் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கடுமையாகத் தாக்கினர். பச்சைத்துண்டு வைத்திருந்தவர்கள் திருடர்கள் போல நடத்தப்பட்டனர். சிறைவைக்கப்பட்ட விவசாயிகள் கடும் தாக்குதலுக்கும், அவமானத்திற்கும் ஆளாக்கப்பட்டனர். அரசியல் கைதிகளாக இல்லாமல் கிரிமினல் குற்றவாளிகளாக கருதப்பட்டு காவல்துறையினரால் கடும் வன்முறைக்கும், அடக்குமுறைக்கும் ஆளாகினர்.
 இதன் விளைவாக 1981 ஜூலை ஐந்தாம் தேதி உழவர் தினத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் , இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியாக உருவெடுத்தது. 1984 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரக்கூட்டத்தில் பேசிவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஓய்வெடுத்தபோது டிசம்பர் மாதம் இருபத்தொன்றாம் தேதி திரு. நாராயணசாமி நாயுடு காலமானார். உழவர்களின் ஒளிவிளக்காக விளங்கிய அவரின் மறைவு தமிழக விவசாயிகளிடையே நிரப்ப இயலாத வெற்றிடத்தை ஏற்படுத்தியது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு  மேலாக கடும் நெருக்கடிகளுக்கு ஈடு கொடுத்து உருவான உழவர் இயக்கத்தின் உயிர்நாடியாக விளங்கியது அவரின் தலைமைத்துவமே. எண்ணற்ற விவசாயிகளை போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது அவரின் அர்ப்பணிப்பும், நேர்மையுமே. எளிமையும், சமரசமற்ற நேர்மையும் கொண்டிருந்த அவர் உழவர் பெருந்தலைவர் எனப் போற்றப்பட்டது வெறும் புகழ்ச்சிக்காக அல்ல.
 அதிகார வர்க்கத்தின் ஆசை காட்டல்களுக்காக பலியாகாமல் அவர் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவே ஜப்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதும், இலவச மின்சாரம் வழங்கப்பட்டதுமாகும். என்.ஜி ரங்கா, சௌத்ரி சரண்சிங், பல்ராம் ஜாக்கர், தேவிலால், மகேந்திர எஸ் தியாகத் போன்ற அகில இந்திய அளவில் குறிப்பிடத்தக்க விவசாயிகள் தலைவர்களில் திரு.நாராயணசாமி நாயுடு முன்னோடியானவர். தமிழக விவசாயிகளின் போராட்டம் பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் எழுச்சிபெற்று போராட தூண்டுதலாக அமைந்தது. அவ்வகையில் இந்திய விவசாயிகள் இயக்கத்தின் திசைகாட்டி திரு. நாராயணசாமி நாயுடு என்றால் அது மிகையல்ல.
 இன்றும் விவசாயிகள் சந்திக்கும்  பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. அதற்கு இணையான எண்ணிக்கையில் விவசாய சங்கங்களும் உள்ளன. திரு. நாராயணசாமி நாயுடு விட்டுச் சென்ற வெற்றிடமும் கூடி நிரப்பப்படாமல் அப்படியேதான் உள்ளது.                                            இரா.முருகானந்தம்,
                                        130 – தொப்பம்பட்டி(அ)                                        தாராபுரம்,                                        திருப்பூர் – 638657                                        பேச: 9943535114      

கருத்துகள்