சுந்தர் லால் பகுணா சூழல் போராளி


இமயத்தின் தூய வெண்பனி படர்ந்தது போல் வெண்தாடியும்,நரை மயிரும் கொண்ட இந்த 84 வயது முதியவர் ,நடுக்கும் குளிரில் ஒற்றை மண் குடிலில் பாகிரதி நதியின் தீரத்திலே அவருடைய மனைவியோடு பல வருடங்கள் வாழ்ந்தவர் .சுந்தர்லால் பஹுகுணா, இன்று நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காந்தியர்களில் மிக முக்கியமானவர் .எழுபதுகளில் தொழில்மயமாக்கல் அதன் உச்சத்தில் இருந்த காலம் சூழலியல் பாதிப்புகளை பற்றி மக்கள் கவலைப்படாத காலம் .அப்பொழுது மலர்ந்த இயக்கம் தான் சிப்கோ இயக்கம் .அந்த இயக்கமே இந்திய அளவில் சூழலியளுக்கான முதல் மற்றும் முக்கிய இயக்கம் என்று உறுதியாக சொல்லலாம் .அந்த இயக்கத்தில் பல பிராந்திய தலைவர்களின் பங்களிப்பு இருந்தாலும் ,அதில் மிக முக்கியமான ஒருவர் பஹுகுணா . இமாலயத்தில் தெஹ்ரி அணைக்கு எதிராக இரு தசாப்தங்களாக அணையை ஒட்டி ஒரு சிறு குடிலை அமைத்து கணவனும் மனைவியுமாக வாழ்ந்து தொடர்ந்து போராடி வந்தனர் .2004 ஆம் ஆண்டு அவரை அங்கிருந்து அப்புறபடுத்தியது அரசு,அங்கிருந்து கோட்டியில் பாகிரதி நதியை ஒட்டி ஒரு இரண்டுமாடி வீட்டில் அவருடைய மனைவியோடு வாழ்ந்து வருகிறார் .நிலமிழந்து ,உடல் தளர்ந்து ,போராட வலுவிழந்து நிற்கும் சமயத்தில் அவர் உள்ளமெல்லாம் கசந்து விரக்தியில் உதிர்த்த வார்த்தைகள் இதுதான் "எதிர் நீச்சல் போடுபவர்கள் எப்பொழுதும் தனித்தே இருப்பர்,என்னை போன்ற சமூக ஆர்வலர்களுக்கு இவை நான்கும் தான் இறுதியில் மிஞ்சும் கேலி ,உதாசீனம் ,தனிமை மற்றும் அவமானம் ,இதுவே ஒவ்வொரு சமூக போராளியும் பெறும் உயர்ந்த விருதும் கூட "  
 ஜனவரி 9,1927 இமாலயத்தில் உள்ள கார்வால் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார் .காந்திய கோட்பாடுகளான அஹிம்சை ,சத்யாக்ரகம் போன்றவைகளில் இளம் வயதிலேயே நாட்டம் ஏற்பட்டது.அவரது அரசியல் செயல்பாடு அவரது 13 ஆவது வயதிலேயே தொடங்கியது .அவரை காட்டிலும் மூத்தவரான ஸ்ரீதேவ் சுமன், தேசிய சுதந்திர போராட்டத்தில் அப்பொழுது அந்த பகுதியில் முன்னிலை வகித்தார் ,அவரே பஹுகுனாவின் உற்ற தோழர்  மற்றும் ஆசிரியரானார் .அஹிம்சை மற்றும் சத்யாக்ரக போராட்டம் எப்படி செயல்படும்,அது எத்தகைய மாற்றங்களை கொண்டுவரக்கூடும் என்று அவருடைய வழிகாட்டுதலினால் புரிந்துகொண்டார் . ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் கூட,அவரது தாயார் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் கடுமையாக உழைத்தார் ,அது அவரை மிகவும் பாதித்தது,பெண்களின் குடும்ப மற்றும் வேலை பளுவை குறைக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்று உறுதிபூண்டார் .காந்தியால் கவர்ந்திழுக்கப்பட்டு அரசியலுக்கு வந்தார் ,1956  ல் அவருக்கு திருமணம் ஆகும்வரை அவர் பொதுவாழ்வில் இருந்தார் .அவரது மனைவி விமலாவுடன் மீண்டும் கிராமத்திற்கே வந்தார் .1960 ல் அவரது சுற்றுவட்டத்தில் குடி பழக்கத்தால் குடும்பங்கள் குறிப்பாக பெண்கள் சீரழிவதை கண்டு வெதும்பினார் .மதுபானம் அவர்களது இயல்பான பானம் இல்லை , இந்திய சீன எல்லையில் இருந்ததால் ,எல்லையை கடந்து மதுவகைகளை கடத்தி செல்லுகையில் அது கிராமத்தில் நுழைந்தது .மேலும் சட்ட விரோதமாக மரங்களை வெட்டி கடத்தி செல்லும் ஒப்பந்ததாரர்கள் கிராமத்தின் எதிர்ப்பை நீர்த்துப்போக வைக்க கிராமத்து ஆண்களை குடிக்கு பழக்கினர் .இதை எதிர்த்து கிராமம் கிராமமாக அங்குள்ள பெண்களை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் ,தொடர்ந்து குடிக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார் .மேலும் தீண்டாமைக்கு எதிராகவும் அவரது மனைவியோடு இனைந்து தீவிரமாக செயல்பட்டார் .மலைவாழ் பெண்களை கொண்டு குடிபழக்கத்திற்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்கி தொடர்ந்து போராடினார் . இமாலய மலை தொடர் உலக அளவில் மிக முக்கியமான காட்டுபகுதியாகும் ,பல மருத்துவ குணநலன்கள் கொண்ட அறிய தாவர இனங்கள் அங்கு இப்பொழுதும் இருக்கின்றன .அங்கு காட்டில் வசிக்கும் மக்கள், அந்த மரங்களையும் இயற்கை வளங்களையுமே ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர் .ஆங்கிலேய காலனியாதிக்க சமயங்களில் இமாலயத்தின் இயற்கை எழில் சூறையாடப்பட்டது .அதே மனப்பாங்கு சுதந்திரத்தின் பின்பும் தொடர்ந்தது .மரங்களை வெட்ட அரசிடம் சிலர் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு என்று ஒப்பந்தம் செய்து கொண்டு சட்டவிரோதமாக மரங்களை வெட்டி வீழ்த்தினர் .வெளியிலிருந்து வேலையாட்களை வரவழைத்தனர் ,மலைவாழ் மக்களுக்கோ சரியாக கூலியை கூட வழங்கவில்லை .அதிக மக்கள் புழங்காத பகுதியாக கார்வால்,தெஹ்ரி போன்றவை இருந்தது. 1962 ல் சீன போரில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு இந்திய அரசு சுதாரித்துக்கொண்டு மலை  பகுதிகளில் ராணுவ தளவாடங்களை இறக்கியது,சாலைகள் அமைப்பது ,ராணுவ தளம் அமைப்பது என்று மெதுவாக காட்டின் சுற்றளவு குறைந்துகொண்டே வந்தது .மேலும் அங்கு பல கனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சட்ட விரோதமாக சுரங்க தொழிலும் நடந்தது . மரங்கள் வெட்டப்பட்டதால் மண்ணரிப்பு ஏற்பட்டது .மழைநீர் அனைத்தும் வழிந்தோடி மலைபகுதியில் தண்ணீர் பஞ்சம் வந்தது .மேலும் விறகு சுள்ளி பொருக்கி வாழ்ந்து வந்த அம்மக்களின் வாழ்வாதார சிக்கலாக உருவெடுத்தது .தண்ணீர் பிரச்சனை எங்கும் பரவியதால் அவர்கள் ஆடு மாடுகள் வளர்ப்பது இயலாத காரியமாக ஆனது .குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைந்து நோய்வாய்ப்பட்டனர் ,பொருளாதாரம் பாதிப்படைந்து ,பலரும் தங்கள் மலை கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து சமவெளிக்கு வந்து வேறு பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள தொடங்கினர் . அலக்நந்தா ஆற்றில் 1970 களில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது ,பல கிராமங்கள்,சாலைகள் நீரில் மூழ்கின ,அதை தொடர்ந்து மிக பெரிய நிலசரிவுகளும் ஏற்பட்டது .கார்வால் மக்கள் சூழியல் பிரச்சனையை பற்றி விழிப்படைந்தனர் .அதுவரையான சூழியல் குரல்கள் மெத்தபடித்த மேதாவிகளின் தேநீர் சமய பேச்சுக்களாக மட்டுமே இருந்தன .சூழலியல் பிரச்சனை அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக அப்பொழுது தான் உருவெடுத்தது .மற்றொரு காந்தியரான சன்டி பிரசாத் பட் இதற்காக ஒரு இயக்கத்தை தொடங்கினார் ,இவரும் சிப்கோ இயக்கத்தின் முக்கிய முன்னோடியாவார் . சிப்கோ என்றால் ஒட்டிக்கொள்ளுதல் என்று ஹிந்தியில் பொருள் .1974 ல் முதல் போராட்டம் தொடங்கியது .ரெனி எனும் கிராமத்தில் உள்ள பெண்கள் தன்னிச்சையாக அனைவரும் திரண்டனர் .மரங்களை வெட்ட உரிய ஆயுதங்களோடு ஆட்கள் வந்திறங்கினர் ,கூடி நின்ற கிராமத்து பெண்கள் அனைவரும் மரத்தை சுற்றி சூழ்ந்து கட்டிபிடித்து அவர்களை மரங்களை வெட்டவிடாமல் தடுத்தனர் வெட்டவந்த ஆட்கள் தயங்கினர் .இது மிக வேகமாக மற்றபகுதிகளில் பரவியது .பெறும் உத்வேகத்தோடு ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக இந்த அஹிம்சை அறப்போராட்டத்தில் பங்கெடுத்தனர் . கூட்டத்தின் தலைமை ஆண்களாக இருந்தாலும் ,இது பெண்களின் போராட்டமாகியது ,பெண்கள் அமைதியாக நிதானமாக தீர்க்கமாக அஹிம்சை வழியில் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் .உலகம் முழுவதும் கவனம் பெற்றது .போராட்டம் இமயத்தின் மற்ற பகுதிகளுக்கு பரவியது அத்தோடு நில்லாமல்,விதர்பாவிலும் ,மேற்கு தொடர்ச்சி மலையிலும் கூட தொற்றிகொண்டது .பிற்காலங்களில் உலகெங்கும் இப்படி மரங்களை கட்டிக்கொண்டு சூழலியல் ஆர்வலர்கள் காட்டழிப்புக்கு எதிராக போராடினர் ,இது ஒரு முன்னோடி இயக்கம் என்று நிச்சயம் சொல்லலாம் .மலைவாழ் மக்களின் போராட்டம் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தது , மேலும் பல குரல்கள் நாடெங்கிலும் ஒலித்தன .காடழித்தலுக்கு எதிரான காட்டின் சத்யாக்ரகம் என்று புகழப்பட்டது .காடு வளர்ப்பின் முக்கியத்துவத்தை பற்றிய செய்தியை உலகெங்கிலும் கொண்டு சென்றது .இந்த போராட்டத்தில் பல பிராந்திய தலைவர்கள் பங்கெடுத்தனர் ,அதன் உச்சகட்டத்தில் தீர்வை நோக்கி அழைத்து சென்ற முக்கிய ஆளுமைகளில் பஹுகுணா ஒருவர் .1981-1983 காலங்களில் இமாலயம் முழுவதும் ,காஷ்மீரத்தில் தொடங்கி கோஹிமா வரை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ,சுமார் ஐந்தாயிரம் கி.மீக்கள் கால்நடையாக பயணம் செய்து ,சிப்கோ இயக்கத்திற்காக ஆதரவை திரட்டினார் . அன்றைய பிரதமர் திருமதி.இந்திரா காந்தியை சந்தித்து பேச்சு நடத்தினார் ,அதன் விளைவாக அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு உத்திர பிரதேசத்தின் 40,000 சதுர கி.மீ அளவுக்கு பரந்துள்ள இமாலய காட்டு பிரதேசங்களில் பச்சை மரங்களை வெட்டதடை பிறப்பித்தார் .இது ஒரு முக்கிய சாதனையாகும் . சிப்கோ இயக்கத்திற்கு அவரின் பங்களிப்புக்காக 1987 ஆம் ஆண்டு அவருக்கு வாழ்வுரிமை விருது வழங்கப்பட்டது .அண்மையில் 2009 ல் இந்திய குடிமகனுக்கான இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் இந்திய அரசால் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டார் .சிப்கோ இயக்கத்தில் தொடங்கிய சூழலியல் ஆர்வம் அப்படியே ஒட்டுமொத்த இமயத்தை காக்கும் இயக்கமாக மலர்ந்தது .அவரது அடுத்த போராட்டம் அதை சார்ந்தே இருந்தது . அதன்பின்பு பஹுகுணா தெஹ்ரி அணைக்கு எதிராக தீவிரமாக போராட்டங்களை தொடங்கினார் .1995 ல் சுமார் 45 நாட்கள் பாகிரதி நதிக்கரையில் தொடர் உண்ணாவிரதம் இருந்தார், பின்னர் அப்பொழுதைய பிரதமர் நரசிம்ம ராவ் வந்து அணை கட்டுவதால் ஏற்படும் சூழலியல்  பிரச்சனைகளை பற்றி ஆராய ஒரு நிபுணர் குழு அமைப்பதாக உத்திரவாதம் அளித்ததன் பேரில் உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார் .அதன்பின்பு மீண்டும் தேவகௌடா காலத்தில் தொடர்ந்து 74 நாட்கள் ராஜ்காட் காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார்.தேவகௌடா தனிப்பட்ட முறையில் மறுஆய்வு செய்வதாக உத்திரவாதம் அளித்தார்.அத்தனை கடந்த பின்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும் கங்கையின் மூல நதியான பாகிரதி நதியின் ஓட்டத்தை தடுத்து தெஹ்ரியில் 2001 ஆம் ஆண்டு அணை எழுப்பபட்டுவிட்டது .அத்தனை போராட்டங்களை தாண்டி 2004 ஆம் ஆண்டு முதல் நீர்நிலையில் மின்சார உற்பத்தி தொடங்கியது .அவர் இந்த வயதிலும் தனது போராட்டத்தை கைவிடவில்லை ,அண்மையில் கூட ,ஏப்ரல் மாதத்தில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து டெஹ்ராடூனில் தர்ணாவில் ஈடுபட்டார் .உண்மையான ஜனநாயகம் என்பது செல்வந்தர்களை மேலும் செல்வசெழிப்போடு ஆக்குவதர்க்கல்ல,மாறாக ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர்த்திட வேண்டும்,மக்களின் கரங்களில் அதிகாரம் இல்லாத பொழுது அது எப்படி மக்களாட்சியாகும் ? என்று ஜனாயகம் குறித்து தனது விமரிசனத்தை பதிவு செய்துள்ளார் .மரம் பயன்படுத்துவதற்கு மாற்றுகளை பற்றி யோசிக்க அறிவுறுத்தினார் .வாழ்வுரிமை விருது பெரும்பொழுது அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது . அவரது மெய்யியல் கோட்பாடு மூன்று அம்சங்களை முன்வைத்தது , அதை ஆங்கிலத்தில் 3 A'S என்றழைத்தனர் (austerity ,alternative,afforestation ) அதாவது சிக்கனம் - நம் பயன்பாடுகளை குறைத்துக்கொள்வது,அதன் மூலம் வளங்களை தக்கவைத்து கொள்வது, மாற்று வழிகளை பயன்படுத்துவது -முக்கியமாக மர பொருட்களுக்கு உரிய மாற்றுகளை பயன்படுத்துவது ,காடு வளர்ப்பு -  பிராந்தியத்தில் நன்றாக வளரக்கூடிய எளிதில் கிடைக்ககூடிய பயனுள்ள மரங்களை வளர்த்தல்,அதன் மூலம் காட்டை நம்பி இருக்கும் மக்களுக்கு உணவு,தீனி, விறகு ,வருமானம் ஆகியவை கிடைத்து தன்னிறைவு பெறுவார்கள். அத்தோடு அனைவரின் அத்யாவசிய தேவைகளான மாசற்ற காற்று,நீர்,வளமான மண் ஆகியவைகள்  அனைத்துமே காடு வளர்ப்பினால் சாத்தியமாகும் என்று அவர் கருதுகிறார் . காடு நம் கலாச்சாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது , பெறும் முனிவர்களும் துறவிகளும் காட்டிற்கு வந்து தவமிருந்து ,இவ்வுலகிற்கு ஒளி வழங்கினர் ,உலகத்தின் சிக்கலுக்கு தீர்வுகளை வழங்கினர் ,மக்களை வழிநடத்தினர் .இது அத்தனையும் காடு கற்றுகொடுத்த பாடமும் ஆகும் .அவர்களுக்கு புதிய புரிதல்கள் சாத்தியமானது .இயற்கையின் படைப்பில் மனிதன்,மிருகம்,பூச்சி,மரம்,செடி,பறவை,நதி,மலை என அனைத்திலும் ஜீவனுள்ளது,ஒவ்வொரு ஜீவனையும் மதிக்க வேண்டும்,அதற்குரிய மரியாதையோடு வணங்க வேண்டும்,இதுவே அந்த ஆகப்பெரிய பாடம் .
 மாசுபடுதலையும் காடழித்தலையும் தனித்தனியாக பார்க்க முடியாது,இரண்டும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தவை , போரும் அதன் தொடர்ச்சியாக வரும் வறுமையும் போல .இவ்விரு பிரச்சனைகளையும் நாம் ஒன்றாகவே எதிர்கொள்ள வேண்டும் ,இதன் பின்னனியில் இருப்பது நவீன நாகரீகம் நமக்கு கற்றுகொடுத்த நுகர்வு கலாச்சாரமே ,பொருள் சேர்க்கையே வளர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது .அது நமக்குள் பேராசையை பெருந்தீயாக வளர்த்துவிட்டது ,அந்த தீ வளர்ந்து நம்மையும் அழித்து நமது சுற்றத்தையும் அழிக்கிறது .நமது உலகியல் இன்பங்களுக்காக நமது உள் அமைதியையும்,ஆன்ம மகிழ்ச்சியையும் அடகுவைத்துவிட்டோம் .புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டுகொண்டார் ,ஆசையே அனைத்து துக்கங்களுக்கும் ஆணிவேர் .ஆசையையும் தேவையையும் பிரித்தறிய வேண்டும் . காந்தியின் வார்த்தைகள் நமக்கு மிகப்பெரிய சத்தியத்தை உணர்த்துகிறது " இந்த பூமி ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்யும்,ஒருபொழுதும் அவனின் பேராசையை அதனால் திருப்தி செய்யமுடியாது ".மானுடன் ஒட்டுமொத்தமாக நெறி பிறழ்ந்து வாழ்கிறான் ,அது ஒரு கொடிய நோய் ,அதன் குறிகளே போர்,பஞ்சம்,தீவிரவாதம்,ஏழ்மை போன்றவை எல்லாம் .இயற்கையுடன் இயந்து வாழ்வதன் மூலமே அவன் அந்த நோயிலிருந்து விடுபட முடியும் .இத்தகைய போராட்டங்கள்  எப்பொழுதும் சிறுபான்மை குரலாகவே ஒலிக்கும்,ஆனால் இந்த சிறு குழுக்களின் போராட்டங்களே மானுட குலத்தின் வரலாற்றை எழுதியுள்ளன என்பதை மறக்க வேண்டாம் .என்று உணர்ச்சிமிகுந்த தனது உரையை முடித்தார் . "இம்மாதிரியான போராளிகளுக்கு அவர்களது எதிரிகளிடமிருந்து கிட்டும் ஒரே பாதுகாப்பு எதுவென்றால் ,அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அது அந்த அரசுக்கு மிகப்பெரிய அவமானமாக முடியும் என்பதே ஆகும்" என்று பிரேசிலின் தனிமனித உரிமை இயக்கத்தின் ,மார்சியோ சாண்டினி கூறுகிறார் .பஹுகுணா அணைக்கு எதிரான போராட்டம் தோல்வி அடைந்ததில் வருத்தமடைந்தாலும் ,"ஒரு போராளி எப்பொழுதுமே நேர்மறையாகவே எண்ணுவான் ,நான் இதில் தோல்வி அடைந்ததாக கருதவில்லை ,ஆனால் ஒட்டுமொத்த தேசமும் தற்காலிக வளர்ச்சி எனும் போதையில் ஆழ்ந்து துயில் கொண்டுள்ளது " என்று எச்சரிக்கிறார் .அணையிலிருந்து டெல்லிவரை தண்ணீர் எடுத்து செல்ல கால்வாய் அமைக்கப்பட்டதற்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தார் "டெல்லியில் உள்ள அரசியல் தலைவர்கள் பல பாவங்களை செய்துள்ளனர் அதை கழுவ அவர்களுக்கு கங்கை தேவைப்படுகிறது ,ஏற்கனவே யமுனை இப்படித்தான் பாழக்கபட்டது ".தண்ணீரே வருங்காலத்தில் நாடுகளுக்கு இடையேயான மிகப்பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கும் என்று முன்வைக்கிறார் ,அடுத்த உலகப்போர் அதற்காகத்தான் இருக்கும் ,தேசங்கள் நதிகளின் பாதைகளை தடுத்து வழிமாற்ற முயல்வார்கள் ,சீனா பிரம்மபுத்திரத்தில் அப்படி செய்ய வாய்ப்புண்டு என்று எச்சரிக்கிறார் . தெஹ்ரி அணை பற்றி பல முக்கிய சந்தேகங்களை எழுப்புகிறார் .இமயமலை அதிகமும் சுண்ணாம்பு பாறைகளால் ஆனது ,இத்தகைய வலுவான அமைப்பை அது தாங்குமா என்பது சந்தேகமே,ஒருவேளை அணை உடைந்தால் ரிஷிகேஷ்,ஹரித்வார், மீரட் வரை மொத்தமாக நீரில் முழ்கிவிட வாய்ப்புண்டு,அடுத்ததாக உருகிவரும் கௌரிமுக் பனிக்கட்டி ,அதிலிருந்தே பாகிரதி உருவாகிறது,இத்தனை பொருட் செலவு செய்தபின்னர் இந்த அணை நிரம்பாமல் போக வாய்ப்புண்டு என்று அவர் கருதினார் . இமயமலையையும்,கங்கையையும் புனிதத்துவத்தின் ,தூய்மையின் சின்னமாக கருதினார், அதனால் அவர் மேல் மத சாயமும் பூசப்பட்டது .தன்னுடைய இயக்கமும் முயற்சியும் நிச்சயம் வீணாகவில்லை அது வருங்காலத்தில் மக்களுக்கு வழிகாட்டும் என்று நம்புகிறார் .வாய்மை என்றும் வீழாது,என்றேனும் அது வெற்றி பெறும் ,இதுவே அவரை இன்றும் இயக்கும் நம்பிக்கை."இந்த இமயமலை வெறும் பாறைகளினாலும் ,கற்களினாலும் ஆன மலையல்ல,இது உணர்வுகளால் எழுப்பப்பட்ட மலை,நமது தேசத்தின் ஆன்மாவை ,கலாசாரத்தை நாம் பேணவேண்டும் என்றால் , இதை காக்க வேண்டும்" என்று பனிமலைகளில் தனிமரமாக இமயமலை சரிவுகளில் வலிகளை புதைத்துக்கொண்டு குழந்தை சிரிப்ப்புடன்   நம்பிக்கையோடு நம்மை கடந்து செல்கிறார்அந்த 84 வயது காந்தியர்.  .  
                                                                                                                                                   --                                                                                                           - நன்றி  சுகி           

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்