payonin pakkaM



எனக்கு பிடித்த எழுத்தாளர் 


நல்லவனாக இருப்பதன் சோகங்கள்


Woodcutter/cut my shadow./Deliver me from the torture/of beholding myself fruitless.
இப்போதெல்லாம் வாழ்க்கையின் பெரும்பகுதி முழுவதும் ரகசியமாக மனம் புழுங்கிக் கிடப்பதிலேயே கழிகிறது. குற்றவுணர்வைவிடக் கொடிய நரகம் ஒன்று உண்டென்றால் அது இன்னும் அதிக குற்றவுணர்வுதான். எப்படி நான் மட்டும் இவ்வளவு நல்லவனாக இருக்கிறேன்? எத்தனையோ பேர் இருக்கையில் நான் மட்டும் ஏன்? கசாப்ளாங்கா கதையாக இருக்கிறதே. என்னிடம் அப்படி என்ன விசேசம்? நான் அடைந்திருக்கும் உயரம்கூட என்னைக் கீழிறக்கவில்லையே? தடுக்கி விழும் இடமெல்லாம் கைகொடுத்துத் தூக்கிவிடுபவர் அயோக்கியராக இருக்கிறார்.
பவுடர் பூசிக்கொள்ளக் கண்ணாடியைப் பார்க்க முடியவில்லை. என் தெய்வாம்சம் என் கண்களையே குருடாக்கிவிடும் நிலைமை. நான் இவ்வளவு நல்லவனாக இருப்பதால்தான் மற்றவர்கள் எல்லோருமே அயோக்கியர்களாக இருக்கிறார்களா, அல்லது அது தனியா? எனக்கென்னவோ தவறு என் மீதுதான் என்று தோன்றுகிறது. நான் அடைந்திருக்கும் உயரம் – அது எனக்கே பெரும் பாரம். இங்கிருந்து பார்த்தால் மற்றவர்கள் எறும்புகளாகத் தெரிகிறார்கள். இது வரமா, சாபமா, அல்லது முடிவில்லாத பாவமா?
நிறைய பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நிறைய பேரை மன்னித்திருக்கிறேன். சில்லறைச் சில்லறையாக இருநூறு ரூபாய் வரை பிச்சையிட்டிருப்பேன். முதியோர், குழந்தைகள் சாலையைக் கடக்க உதவியிருக்கிறேன். நண்பர்களுக்குக் கடன் கொடுத்து ஏமாந்திருக்கிறேன். வீட்டு வாடகையை ஒழுங்காகக் கொடுத்துவிடுகிறேன். நான் இவ்வளவுதான் நல்லவன். இது எல்லோரும் செய்வதுதானே? எனக்கு மட்டும் ஏன் இந்தச் சுமை? மூடர்களும் கயவர்களும் போரிட்டுக்கொண்டு அழிவதை மௌனமாகப் பார்க்க சபிக்கப்பட்டிருக்கிறேன். நான் கோரிய அன்னியமாதல் இது அல்ல. என்னை ஏமாற்றிவிட்டார்கள்.
நான் ஒருவன் ஊர்ப்பட்ட நல்லவனாக இருந்து மற்ற எல்லோரும் அயோக்கியர்களாக இருப்பதைக் காட்டிலும் எல்லோரும் தலா சிறிதளவு நல்லவராக இருப்பது மேல் எனத் தோன்றுகிறது. எனக்குக் கீழே இருக்கிறார்கள் என்பதனாலேயே இந்தப் பாவப்பட்ட ஜென்மங்கள் அயோக்கியர்களாக இருப்பது என்ன நியாயம்? அவர்களும் என்னைப் போல் மனிதர்கள்தானே, தோற்றத்திலாவது? என் நல்லதன்மையில் கொஞ்சத்தை உலகின் எஞ்சிய மனிதர்களுக்குக் கொஞ்சம் விண்டு கொடுத்தால் நான் தார்மிகத் தனிமையில் வாடத் தேவையில்லை. எனக்கு மட்டும் அந்த விநியோக சக்தி இருந்தால் உலகம் இந்நேரம் மாறியிருக்கும்.
நான் தனிப்பெரும் நல்லவனாக இருப்பதன் ஆகமோசமிக்க அராஜகம் அதனுடைய ஜனநாயக விரோதப் போக்கே. யோக்கியத்தன்மை என்பது மனிதகுலம் போன்ற ஒரு முக்கியமான உயிரினம் பிழைத்திருக்க இன்றியமையாததாகும். அறங்கள் தோன்றியது உயிர்பிழைத்தலுக்காகவே. யோக்கிய குணம் அந்த உயிரினத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படாமல் ஒருவனிடமே அளவுக்கு மீறிக் குவிந்திருப்பது – அந்த ஒருவன் நானாகவே இருந்தாலும் – வருந்தத்தக்கது. ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்ற ஆயிரம் கோடி கண்களில் சுண்ணாம்பையும் வைக்கும் போக்கிற்கு யார் கண்டனத்திற்குரியவர்? அது மட்டுமல்ல, தார்மிக மதிப்பீடுகள் இன்றி நாசகாரத் திட்டங்களை மட்டுமே கொண்டிருந்தால் மனித இனம் விரைவில் அழிவது திண்ணம்.
ஆனால் ஒரு நிமிடம் – உலகில் மற்ற எல்லோரும் அயோக்கியர்களாக இருந்தால் அந்த ஒற்றை நல்லவன் எத்தனைக் காலம் பத்திரமாக இருந்துவிட முடியும்? உலக மகா புத்திசாலியாக இருந்து பயனில்லை. ஏனென்றால் முட்டாள்கள் ஆபத்தானவர்கள். என்னை அவதூறு செய்வதற்கும் என் சாம்ராஜ்யங்களைச் சரிப்பதற்கும் அறிவு தேவையில்லை. வெறும் கெட்ட எண்ணமும் வன்மமும் சமூகவிரோத குணமும் இருந்தாலே போதும்.
ஆகவே, பிறர் நலனை மட்டும் என் அன்பு உள்ளத்தில் சுமப்பதைக் கொஞ்சம் நிறுத்திக்கொண்டு உலகை எச்சரிக்கிறேன். ஆதாரமற்ற அவதூறுகளை நிறுத்திக்கொள்ளுங்கள். என் சரிவிற்கு அடிபோடும் ஒவ்வொருவரைப் பற்றியும் கட்டுரை எழுதுவேன். நீண்ட உருவகக் கவிதைகள் எழுதுவேன். பத்திரிகைகளில் பரப்புவேன். தொலைக்காட்சிகளில் தொலைத்துவிடுவேன். கூட்டங்களில் குமுறுவேன். எனது பீடமே இடிந்து விழுந்தாலும் அதன் ஒவ்வொரு செங்கலையும் உங்கள் மீது எறிவேன். என் பீடத்தை மீண்டும் கட்டித்தர எனக்கும் அல்லக்கைகளும் அடிப்பொடிகளும் இருக்கிறார்கள். ஜாக்கிரதை.

கருத்துகள்