நமக்குத் தெரியாத
பேக்கர்
(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் மீள்பதிவு)
எலிசபெத் பேக்கர்
எழுதியிருக்கும் ‘பேக்கரின் மறுபக்கம்’ எனும் நினைவு குறிப்பு பேக்கரின்
சுவாரசியமான வாழ்க்கைக்கு நல்ல சாட்சியமாகும். கோட்டயத்தில் ஒரு நடுத்தர
குடும்பத்தில் பிறந்து வளர்ந்து,
வேலூர் கிறித்தவ மிஷன் கல்லூரியில்
டாக்டர். இடா ஸ்கட்லரின் கீழ் மருத்துவம் பயின்றவர் எலிசபெத். டாக்டர். இடாவின்
ஆளுமையால் உந்தப்பட்டு கிராமப்புறங்களில் மருத்துவ சேவையில் ஈடுபட்டார். லாரி
பேக்கரை மணப்பதற்கு முன் கரீம் நகரில் (ஆந்திரம்) மிஷன் மருத்துவமனையில்
பணியாற்றியுள்ளார். திருமணத்திற்கு பின்னரும் கூட இமாலய மலையடிவாரத்தில் இருந்த
ஒரு கிராமத்தில் மருத்துவ சேவையை தொடர்ந்தார், பின்னர் கேரளாவின் மேற்குச் தொடர்ச்சி
மலை கிராமங்களிலும் தொடர்ந்தது அவருடைய மருத்துவ சேவை.
பேக்கர் அவர்
உருவாக்கிய கட்டிடங்களுக்காக என்றும் நினைவுகூரப்படுபவர். பெருந்திரள் மக்களை
மனதில் கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், சூழியல்
பிரக்ஞையுடன், மகத்தான லட்சியத்தை மனதில் சுமந்து, நம் மண்ணுக்கு உகந்த தனித்துவமான
கட்டிடக்கலை பாணியை உருவாக்கியது இந்திய மக்களுக்கு அவருடைய மகத்தான் பங்களிப்பு.
இந்நூல் கட்டிடக்கலை ‘நிபுணர்’ பேக்கரின் நிபுணத்துவத்தை, கட்டிடக்கலை நுட்பங்களைப் பற்றி
அதிகம் தொட்டு காட்டவில்லை (அதனால் தான் இது பேக்கரின் மறுபக்கம்!). மாறாக, அவருடைய நிறை
வாழ்வை அண்மையில் நின்று அவதானித்த அன்பு ததும்பும் கண்கள் விட்டு செல்லும் எளிய
சித்திரமே இந்நூல். இதனூடாக நினைவுகளைப் பதியும் எலிசபெத்தின் சித்திரமும் உயிர்
பெருகிறது.
நூலின் பெரும்பகுதி
பேக்கர் தம்பதியினரின் மருத்துவ வாழ்வைப் பற்றிய விவரணைகளால் நிரம்பியிருக்கிறது.
இதிலுள்ள அனேக குறிப்புகள் ஒரு
மருத்துவனாக எனக்கு நெருக்கமானவையும்கூட. வேறுவகையில் க்வாக்கர் இயக்கம், மற்றும்
இந்தியாவில் இயங்கிய மிஷனரிகள் பற்றிய புரிதலுக்காகவும் இந்நூலை வாசிக்கலாம்
(இந்தியாவில் மிஷனரிகள் அக்காலத்தில் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதைப்
பற்றி எலிசபெத் கூறுவது நம் கவனத்திற்குரியது – ‘’சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில்
மிஷனரிகளின் வாழ்க்கைத்தரம் என்பது பிரித்தானிய ராஜ்ஜிய நிர்வாகத்தில் பங்கு பெற்ற
ஆங்கிலேயர்களை காட்டிலும் ஒரேயொரு படி குறைவு”).
மார்ச் 2, 1917 இங்கிலாந்தின்
பிர்மிங்காமில் பிறந்தார் பேக்கர். அவருடைய தந்தை சார்லஸ் ஃபிரெடெரிக் பேக்கர், தாய் மில்லி
இருவருமே மெதடிஸ்ட் சர்ச்சில் முனைப்புடன் ஆர்வம் காட்டி வந்தனர். பேக்கருக்கும் கிறித்துவின்
போதனைகளின் மீது பெரும் நம்பிக்கை உண்டு. இறுதிவரை கிறித்துவின் அன்பையும், கருணையையும் தனது
விழுமியங்களாக பின்பற்ற முயன்றவர்.
பேக்கர்
மெட்ரிகுலேஷன் தேர்வில் சுமாரான மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்து கட்டிடவியல்
பயிலச் சேரும் கதை சுவாரசியமானது. மதிப்பெண்களைக் காட்டிலும் பேக்கரின்
ஓவியத்திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகதான் பிர்மிங்காம் கல்லூரியில் அவருக்கு
இடம் கிடைத்தது. அதன் பின்னர் தன்னை க்வாக்கர் அமைப்பில் இணைத்துக்கொண்ட பேக்கர்
முறையாக செவிலியர் பயிற்சி பெற்றார்.
லாரி பேக்கர் எலிசபெத் பேக்கர்
இரண்டாம்
உலகப்போரின்போது இளம் பேக்கர் க்வாக்கர் அமைப்பின் ஃப்ரெண்ட்ஸ் ஆம்புலன்ஸ் யூனிட்டின் தற்காலிக மருத்துவ
முகாம்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்ற துவங்குகிறார். அவருடைய
பெற்றோர்களுக்கு அங்கிருந்து எழுதும் கடிதங்கள் போரின் உக்கிரத்தையும், நோய்மையின்
துயரத்தையும் பதிவு செய்வதை தாண்டி வாழ்வின் அன்றாடத்தில் நிரம்பியுள்ள அபத்த
நகைச்சுவைகளால் மிளிர்கிறது. மிகக் கடினமான சூழல்களை விவரிக்கும்போதும்கூட
உற்சாகம் மிகுந்த ஒரு புன்முறுவலை அவரால் அளிக்க முடிகிறது.
உதாரணமாக, அவர்
சீனாவிலிருந்து எழுதும் கடிதத்தில் சுட்டும் நிகழ்வை சொல்லலாம். பேக்கர் கவனித்து
வரும் இல்லத்தில் தங்கியிருக்கும் தொழுநோயாளி ஒருவரின் மனைவி அடிக்கடி அவரைக் காண
அங்கு வருவதுண்டு. அப்பொழுது பேக்கரையும் சந்தித்து சகஜமாக உரையாடிச் செல்வது
வழக்கம். அவருக்கும் எதாவது ஒன்றை கொண்டுவந்து கொடுப்பார். நீண்ட நாட்களாக வராத
அப்பெண்மணி மீண்டும் ஒருநாள் வருகிறார். தங்கள் இல்லத்தில் அவர் ஒரு முறையாவது
விருந்துண்ண வேண்டும் எனக் கோருகிறாள். சிறிய தயக்கத்திற்கு பின்னர் அவரும்
ஒப்புக்கொண்டு விருந்தில் பங்கேற்று திரும்புகிறார். அப்பொழுதுதான் அவருக்கு தெரிகிறது, அவர் விருந்திற்கு
சென்ற இல்லம் அப்பெண்ணின் இரண்டாவது கணவருடையது என்பதும், அவள் கொடுத்தது
அவர்களுடைய திருமண விருந்து என்பதும்! அவளுடைய முதற்கனவணான அந்த தொழுநோயாளி எங்களை
பற்றி என்ன எண்ணியிருப்பான், எனும் கவலையோடு முடிகிறது அக்கடிதம்.
தொடக்கத்தில்
இங்கிலாந்தின் வெவ்வேறு பகுதிகளில் பணிக்கு செல்கிறார், பின்னர் சீனாவிற்கு
செல்கிறார். அன்னிய மொழி, அன்னிய பண்பாடு,
புதிய நிலப்பரப்பு, புதிய உணவு என
எல்லா மாற்றங்களையும் உற்சாகத்துடன் எதிர்கொள்கிறார். எங்குமே சுணங்கவில்லை, புலம்பவில்லை, அத்தனை
தொலைவிலிருந்து தன் அன்னையாருக்குச் செய்தி அனுப்புகையில் அவர்களை பதட்டபட்ட வைக்க
வேண்டாம் என கருதியிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் பேக்கரின் மிக முக்கியமான
இயல்புகளில் ஒன்று அவர் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு புதிய சூழலுக்கு ஏற்ப தன்னை
தகவமைத்துக் கொள்வது என்றே எண்ணுகிறேன். அப்படி இல்லையென்றால் ஒருவார கால தேனிலவு
சென்றவர்கள் அங்கு மருத்துவமனையை தொடங்கி பல ஆண்டுகள் சேவையாற்றியிருக்க முடியாது.
பேக்கர் அவர்
பெற்றோருக்கு இங்கிலாந்திலிருந்தும் சீனாவிலிருந்தும் எழுதும் கடிதங்கள்
முக்கியமான ஆவணங்கள். அதேவேளையில் அபார இலக்கியத்தன்மை கொண்டவையும்கூட.
அக்கடிதங்களில் எப்போதும் ஒரு மெல்லிய பகடி ஒர இழையாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
சீனாவில் அவர் வளர்த்த நாய் போட்ட குட்டிகளுக்கு ‘இருமல் (cough)” என்றும் ‘சளி (split)’ என்றும்
பெயரிடுகிறார். இங்கிலாந்திலிருந்து எழுதும் கடிதங்களில் செவிலிகளை பற்றிய ஒரு
எள்ளல் இருந்துகொண்டேதானிருக்கிறது. ‘ஒருவாரம் எல்லா செவிலிகளுக்கும்
மருத்துவ சேவை செய்தால்தான் அவர்களுக்கு இதெல்லாம் எப்படி இருக்கும் என்று
தெரியும்’ என்று எழுதுகிறார். வாழ்நாளெல்லாம் பிறரின் உபாதைகளை கவனித்து
வரும் செவிலிகள் எப்போதும் சர்வாதிகாரிகளாகவே இருக்கிறார்கள், தன்னால் போர்
வீரர்களை வேண்டுமானால் அகிம்சைக்கு மாற்ற முடியும் என்று எழுதுகிறார்.
நேர்மையாக, அவர் தனக்குள்
இருக்கும் முரண்பாடுகளையும் பதிவு செய்கிறார். ‘எனக்கு இங்கிருக்கும் சிக்கல்
என்னவென்றால், எனக்கு பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ, எல்லாவற்றிற்கும்
நான் முன்மாதிரியாக இருந்தாக வேண்டும். வேறு எவரும் செய்யத் துணியாத பணிகளை நான்
ஏற்றுச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி என்பது போல் நடந்துகொள்ள வேண்டும்’ - மனிதர்களுக்கு
எதிலெல்லாம் சிக்கல் வருகிறது!
வாழ்க்கையின்
நிகழ்வுத துண்டுகள் சிலவற்றிற்கு தானாகவே ஒரு புனைவுத் தன்மை கூடிவிடுகிறது.
பேக்கரின் வாழ்விலும் அப்படிச் சில தருணங்கள் உண்டு. 1945-ல் இங்கிலாந்து
செல்லும்வரை அவருடைய கடிதங்களில் தவறாமல் வின்னியைப் பற்றி எழுதுகிறார்.
வின்னியும் அவரும் திருமணம் செய்துகொள்வதாக ஒரு திட்டம் இருந்தது கடிதங்களின் ஊடாக
தென்படுகிறது. ஆனால் பேக்கர் ஊர் திரும்புவதில் ஏற்படும் காலதாமதம் வின்னியின்
மனதை மாற்றக் கூடும் என்பதையும் உணர்ந்திருக்கிறார். வின்னி தன்னுடைய நிலையறிந்து
ஏற்றுகொண்டால் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதே அவருடைய முடிவாக இருந்திருக்கிறது.
இங்கிலாந்து சென்றுவிட்டு உத்திர பிரதேசத்தில் தனது பணியை துவங்கும் பேக்கர்
எலிசபெத்திடம் தனது காதலையும்,
திருமண விருப்பையும் தெரிவிக்கிறார்.
இது ஒரு புனைவுக்கான தருணம். வின்னி ஏன் நிராகரித்தாள்? அவள்
காத்திருக்கவில்லையோ?
எனக்கு
பேக்கரைத்தான் தெரியும், அவர் எழுதும் கடிதங்களின் வழியாக உருபெறும் வின்னியை மட்டுமே
எனக்கு தெரியும். பேக்கர் சீனா சென்று திரும்பியதிலிருந்து உடல்நலம்
பாதிக்கப்பட்டிருக்கிறார். சீனாவில் ஜெர்மனியைச் சேர்ந்த இரு மிஷனரிப் பெண்கள்
நடத்தி வந்த தொழுநோய் ரோகிகளுக்கான இல்லத்தில் சில ஆண்டுகள் சேவையாற்றியிருக்கிறார்.
அவருக்கு அடிக்கடி காய்ச்சல் வரத் தொடங்குகிறது. பேக்கரின் தந்தையும், எலிசபெத்தின்
சகோதரரும் இவர்களின் திருமணத்தை எதிர்த்தனர். இந்நிலையில் அவர் மீண்டும்
இங்கிலாந்திற்கு சிகிச்சைக்காக செல்கிறார், அங்கு தொழுநோய் பீடித்திருப்பதை
அறிந்துகொள்கிறார். எலிசபெத்திற்கு விரிவாக தனக்கு நோய் கண்டறியபட்டதையும், சிகிச்சையில்
இருப்பதையும் அங்கிருந்தபடியே விளக்கி கடிதம் எழுதுகிறார். எதையும் வலியுறுத்தவும்
இல்லை அறிவுறுத்தவும் இல்லை. வெறும் தன்னிலை விளக்கம் மட்டும்தான், முடிவை
எலிசபெத்திடம விட்டுவிடுகிறார். அப்போதுதான் டாப்சொன் புழக்கத்திற்கு வந்த
காலகட்டம். மருத்துவர் எலிசபெத் இது குறித்து எவரிடமும் விவாதிக்க இயலாத சூழல்.
தங்களுடைய காதல், திருமணம் குறித்து அவருக்கு எந்த ஒரு குழப்பமும் இல்லை என்பதை
மட்டும் எலிசபெத் உணர்த்துகிறார். அதன் பின்னர் அவர்கள் அதைப்பற்றி எதுவும்
பேசிக்கொள்ளவில்லை. சிலகாலம் கழிந்த பின்னர் இனிதே திருமணம் நடந்து முடிகிறது.
ஒட்டுமொத்தமாகவே
எனக்கு இது ஒரு அற்புதமான, முதிர்ச்சியான காதல் கதையாகப் பட்டது. ஏற்கனவே வின்னியால்
நிராகரிக்கப்பட்ட பேக்கர் தான் மீண்டும் நிராகரிக்கப்பட்டுவிடக் கூடாது என அந்த
கடிதம் எழுதி அதற்கு பதில்வரும் வரை ஒவ்வொரு கணமும் எண்ணி எப்படி தவித்திருப்பார்? ஏற்கனவே வீட்டில்
எதிர்ப்பு வலுத்து நிற்கும் வேளையில் எலிசபெத் இந்த தேர்வை செய்வதற்கு எப்படி
துணிந்திருப்பார்? ஒரு மென்மையான மனப் போராட்டம், ஒரு ஊசல் அழகாக பதிவாகியுள்ளது. பரஸ்பர
நம்பிக்கையின் வெளிப்பாட்டில் மலர்ந்த உறவு அவர்களை இன்னும்
நெருக்கமாக்கியிருக்கும்.
பேக்கர் தன்
வாழ்வின் பெரும்பகுதி கட்டிடவியல் நிபுணர் என்பதைக் காட்டிலும் தேர்ந்த மருத்துவ
உதவியாளராகத் திகழ்ந்திருக்கிறார். அறுவை சிகிச்சையில் உதவி புரிவது, பிள்ளைப் பேற்றுக்கு
உதவுவது, தொழுநோயாளிகளை கவனிப்பது என்றே கழிந்திருக்கிறது. இது எந்த
எல்லைக்குச் சென்றது என்றால் எலிசபெத்தை திருமணம் செய்துகொண்ட பின்னர் இமாலயத்தின்
சந்தாக் கிராமத்தில் மருத்துவமனையை நிர்மாணித்தபோது, ஒரு கட்டிடவியல் நிபுணருக்கு
மருத்துவமனையில் என்ன வேலை எனும் கேள்வியை எவரோ எழுப்பினார்களாம். அப்பொழுது
பேக்கர், ‘அவள் இந்த மருத்துவமனையின் மருத்துவர். நான் மீத பணிகள்
அனைத்தையும் செய்யும் பணியாளன்’
என்றாராம்.
தொழுநோயாளிகளுடன்
இணைந்து விவசாயம் செய்வது, இடுப்பெலும்பு முறிந்து குணமானவர்களுடன் உற்சாகமாக மலை ஏறுவது, ஒவ்வொருவரின்
மரணத்தையும் இழப்பாகக் கருதும் அதேவேளையில் இயல்பாகவும் கருதுவது என
மனிதர்களின்மீது பெரும் வாஞ்சையுடன், நம்பிக்கையுடன், நேர்மறை நோக்குடன்
வாழ்ந்து மறைந்தவர். மிகக் குறைந்த பொருட்செலவில் கட்டிடங்களை உருவாக்க
திட்டமிட்டபோதுகூட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் சிலர் பணம் கொடுக்க
மறுத்து அவரை ஏமாற்றியதுண்டு அப்போதும் அது குறித்து அவர் பெரிதாக
அலட்டிக்கொண்டதில்லை. பேக்கர் மனிதர்களை அதிகமாக நம்பினார் என்பதை எலிசபெத்
வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.
‘ஒரு கட்டத்திற்கு மேல் நோய் சென்றுவிட்டால், அவர்களுக்கு
சீக்கிரம் மரணம் வர வேண்டும் என வேண்டுவது ஒன்றும் குரூரமானதோ கொடுமையானதோ அல்ல.
அவர்களுக்கும் இது தெரியும், மோசமான நிலையில் உள்ள ஒவ்வொரு நோயாளிக்கும் நாளை நமக்கும் இதே நிலை
வரக்கூடும் என்பது தெரியும். ஆகவே எவரும் அதற்காக பெரிதாக கவலைப்படுவதில்லை, மிகவும்
தத்துவார்த்தமாகவே அவற்றை அணுகுகிறார்கள்.’ என்று எழுதுகிறார்.
மற்றொரு தருணத்தில்
தான் காண நேர்ந்த போஸ்ட் மார்ட்டத்தை பற்றி எழுதும்போது. ‘நேற்று மறைந்த எனது
பழைய நோயாளி ஒருவரின் போஸ்ட் மார்ட்டத்தை காண நேர்ந்தது மிகவும் சுவாரசியமான
அனுபவம். நாங்கள் அறிந்திராத எத்தனையோ நோய்கள் அவனிடம் உள்ளது என்பதை அப்போதுதான்
அறிந்துகொண்டோம். அவரவர் போஸ்ட் மார்ட்டத்தை அவரவரே காணும் வாய்ப்பு கிடைத்தால்
நன்றாகத்தான் இருக்கும். மரணத்தை அன்றாடம் எதிர்கொள்கிற தொழிலில்
ஈடுபடுபவர்களுக்கு முதல் சில நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை அளிக்கும், நாளடைவில் அவை
வெறும் நிகழ்வுகளாக, சம்பவங்களாக மாறிவிடும். வாழ்க்கையின் பெரும் சுழற்சியை புரிந்து
அங்கீகரித்து தெளியும் அதே வேளையில் உயிர் மீதான தனது நுண்ணுணர்வை தக்க
வைத்துகொள்ளுதல் பெரும் சவால். பேக்கர் சமன் குலையாமல் அந்தப் பாதையில்
பயணித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
1945 ஆம் ஆண்டில் பம்பாயில் காந்திஜியை
சந்திக்கிறார் பேக்கர். பிரித்தானியா சென்று கட்டிடவியல் நிபுணராக தொடர்வதா அல்லது
சீனாவிற்கு திரும்பி தொழுநோய் சேவையை தொடர்வதா எனும் குழப்பம் அப்போது
அவருக்கிருந்தது. காந்திஜியுடனான சந்திப்பு அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்தது.
இங்கிலாந்து சென்று சில மாதங்களிலேயே இங்கிலாந்தின் தொழுநோய் மிஷனரியின்
கட்டிடக்கலை நிபுணராக உத்திர பிரதேசத்திற்கு திரும்புகிறார். அங்கு எலிசபெத்தின்
சகோதரர் டாக்டர் சண்டியுடன் அறிமுகமாகி நெருக்கமாகிறார். அவருக்கு சிகிச்சையளித்து
மருத்துவமனையை நிர்வாகம் செய்வதற்காக கரீம் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்த அவரது சகோதரி
டாக்டர்.எலிசபெத் வருகிறார். அதன் பின்னர் காதல் மலர்ந்து, எதிர்ப்பு பிறந்து, பின்னர் ரகசிய
சந்திப்புகள் தொடர்ந்து, சென்னை பல்லாவரத்தில் 1948 ல் திருமணம் நடைபெற்றது.
அதன் பின்னர்
இமாலயத்திற்கு சுற்றுலா சென்றபோது ஆசனவாய் திறக்காமல் பிறந்த குழந்தைக்கு அறுவை
சிகிச்சை செய்ய நேர்கிறது. அதையொட்டி சுற்றுவட்டார மக்களிடம் பிரபலமடைந்து
அங்கிருக்கும் தேநீர் கடையின் பகுதியில் சிறிய மருத்துவமனையை துவக்குகிறார்கள்.
பின்னர் அடுத்த கிராமத்து பெரியதனக்காரரின் உதவியுடனும், க்வாக்கர்
அமைப்பினர் பேக்கருக்காக திரட்டி தந்த நிதியின் உதவியுடனும் அங்கு கிடைக்கும்
கட்டுமான பொருட்களை கொண்டு எளிய மருத்துவமனையையும் வசிப்பிடத்தையும்
உருவாக்குகிறார்கள். பெரும் புகழ் அடைய துவங்கிய பின்னர் மேற்கு
நேபாளத்திலிருந்துகூட வைத்தியத்திற்கு ஆட்கள் வரத்தொடங்கினர்.
எலிசபெத் நேபாள
பயணம், போட்டியா பழந்குடியினருனான தங்கள் உறவு என அவர்களது இமாலய
வாழ்க்கையைப் பற்றி அழகாக விவரித்து செல்கிறார். சரியான சாலை வசதிகள் இல்லாத
பாதைகளில் பல நாட்கள் அவர்கள் இமாலயத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு நடந்தே சென்று
கடந்திருக்கிறார்கள். இந்தியா –
சீனா எல்லைத்தகராறு வந்தபோது இவர்கள்
வசித்த பித்ரோகார் மாவட்டமாக,
மாவட்ட தலைநகரமாக உருமாறியது. எளிய
மலைவாழ் மக்கள் பிழைக்க வழிதேடி சமவெளிக்கு சென்றார்கள். சமவெளியிலிருந்து
பலவிதமான மனிதர்களும் வணிக நோக்குடன் அப்பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள்.
அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கேரளத்திற்கு இடம் பெயர்கிறார்கள்.
வண்டிப்பெரியார்
பகுதியில் சுவாரசியமான கிறித்தவ சாமியார்களை சந்திக்கிறார் பேக்கர். சுவாமி
அபிஷிக்தானந்தா என்று தன்னை அழைத்துக்கொண்ட ஒரு பெல்ஜிய கிறித்தவ துறவி வழமையான
கிறித்தவ தளமாக இல்லாமல் இந்து மடலாய அமைப்பை ஒத்த ஒரு மடத்தை நிறுவி நடத்தி
வந்தார். அந்த ஆசிரமத்தை குரிசுமலா ஆசிரமம் என்று அழைத்தனர். அவரின்
வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியின் மருத்துவ தேவையை கணக்கில் கொண்டு அங்கு
மருத்துவ சேவை புரிய அவர்கள் முன்வந்தார்கள். தேயிலை தொழிலாளர்களுக்கும்
கூலிகளுக்கும் பயனளிக்கும் வண்ணம் அங்கு ஒரு மருத்துவமனையை உருவாக்கினார் பேக்கர்.
கேரளத்தின் தட்ப
வெப்பமும் சூழலும் இமையத்திலிருந்து வேறானது. கட்டுமான பொருட்களும் வேறு. இயன்றவரை
காந்திய கொள்கைப்படி கட்டிடங்களை எழுப்பினார் பேக்கர். கொஞ்ச காலத்திற்கு பின்னர்
அவர்களது மகன் திலக்கின் கல்விக்காக திருவனந்தபுரத்திற்கு வருகிறார்கள். அதன்
பின்னர் அங்கேயே தங்கி விடுகிறார்கள். திருவனந்தபுரம் வந்த பின்னர்தான் பேக்கர்
முழுநேர கட்டிடவியல் நிபுணராக பணியாற்ற தொடங்கினார்.
பேக்கர் தனக்கென்று
அலுவலகம், செயலர், வேலையாட்கள் என எவரையும் அமர்த்திகொள்ளவில்லை. எண்பதுகளின்
மத்தியில் 2500 ரூபாய்க்கு ஏழைகளுக்கு வீடுகள் கட்ட முடியும் என காட்டினார்.
அப்போது கேரளத்து முதல்வராக இருந்த அச்சுத மேனன் இவருடைய முறைகளின்பால்
ஈர்க்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்காக வீடுகட்டித்தர பேக்கரின் உதவியை நாடினார்.
அப்போது வேறு சில கட்டிடவியல் நிபுணர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேர்ந்தது.
ஒரு அம்பாசடர் கார் வாங்கியபோது பேக்கர் அதில் பயணம் செய்ய மறுத்தார். அது
மிகப்பெரிய சொகுசு என நிராகரித்தார், ஆனால் வயது மூப்படைய மூப்படைய அது
அவருக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது. மேலும் அவருடைய நிரந்தர சொத்து மற்றொன்றும்
உண்டு, அது எலிசபெத் அவருக்காக உருவமைத்த தோள் பை. அந்த பையில் துண்டு
காகிதங்கள், குறிப்புகள், பேனா, அளப்பான் போன்றவைகள் எப்போதும் இருக்கும். அவருடைய மொத்த
அலுவலகமும் அந்த பைக்குள் அடங்கிவிடும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எலிசபெத் அவருடைய
மருத்துவ பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பேக்கருக்கு துணையாக உதவி
புரிகிறார்.
பேக்கர் எந்த
இந்திய மொழிகளையும் கற்கவில்லை என்பதில் எலிசபெத்திற்கு பெரும் குறை. மூன்று
நான்கு முறையாவது அதைப்பற்றி எழுதியிருக்கிறார். பேக்கரின் மிக முக்கியமான பலவீனம்
என்பது அவரால் புதிய மொழிகள் கற்க முடியாததே என கருதுகிறார் எலிசபெத். 1957 ல் தரை வழியாக
இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் வழியில் கிரேக்கத்திற்கு வருகிறார்கள். அங்கு
அவர்கள் உண்ண வெண்ணெய் தேவைப்பட்டது. தெரிந்த அத்தனை மொழிகளிலும் முறைகளிலும் அதை
கூற முயன்றார் பேக்கர் ஆனால் எவருக்கும் பிடிகிடைக்கவில்லை. உடனடியாக ஒரு தாளில்
பசுவை வரைய தொடங்கினார். அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடியது. பின்னர் அதன் மடியை
வரைந்தார், அதன் பின்னர் பால் கறக்கும் பெண்மணியை, பின்னர் அது
கடையப்படுவதை, கடைசியாக அவர் கேட்ட வெண்ணை வந்ததும் சுற்றி இருந்த அனைவரும்
உற்சாகமாக குரல் கொடுத்தார்கள்.
பேக்கரின் ஓவிய
திறமை அபாரமானது, கேலிச்சித்திரங்களும் வரைவார். வாட்டர் கலர் அவருக்கு பிடிக்கும்.
இறுதியில் பேக்கர்
அத்தனை ஆண்டுகாலம் இந்தியாவில் வாழ்ந்து பல இந்தியத்தன்மைகளை பெற்றிருந்தாலும்
அவர் சில விஷயங்களில் ஆங்கிலேயராகவே இருந்தார் என்று எழுதுகிறார் எலிசபெத். கதவை
திறந்து கொண்டு செல்லும்போது இந்தியர்களான நம்மைப்போல் அன்றி இப்போதும் அவர் ‘நீங்கள் முதலில்
செல்லுங்கள்’ என்றும் ‘நன்றி’ என்றும் தவறாமல் கூறுவார். எங்கோ செல்வதற்கு அல்லது வாங்குவதற்கு
வரிசையில் நிற்கும்போது எவரோ முண்டியடித்துக்கொண்டு முன்னே செல்ல முயன்றால்
எரிச்சலடைவார். எத்தனை அவசரமாக இருந்தாலும் எப்போதும் குழந்தைகளைப் பற்றியும்
பெண்களை பற்றியும் யோசித்தே முடிவெடுப்பார். காலையில் பெட் டீ அருந்த அவருக்கு
பிடிக்கும், ஆனால் நம்மூர் சாகிபுகள் போல் அதற்கு பிறர் துணையை நாடமாட்டார்.
அவரே தினமும் சரியாக காலை ஆறுமணிக்கு எழுந்து தேநீர் போட்டு என்னையும்
எழுப்புவார். அவரளவில் இது அவர் தவறாது கடைபிடித்து வரும் சடங்கு, என்று பதிவு
செய்கிறார் எலிசபெத்.
ஒட்டுமொத்தமாக
பேக்கர் எனும் பன்முக ஆளுமையின் பல பக்கங்களை பரிவுடன் காட்டிச் செல்கிறது
இந்நூல்.
நூலின்
தொடக்கத்தில் பேக்கரின் வாழ்க்கை சாராம்சம் பற்றி எழுதுகிறார் எலிசபெத். Man of Tao – எனும் சீனகவிதையை அவர் குறிப்பிடுகிறார். எந்நிலையிலும் சமநிலை
தவறாத மனிதனான பேக்கரை கச்சிதமாக நம்முன் நிறுத்தும் வரிகள் இவைகளாகவே இருக்கும்
என்பதால் இந்த மொழிபெயர்ப்பு..
எவனில் தாவோ
தடையின்றி
இயங்குகிறதோ
அவனது செயல்களால்
எவருக்கும்
துயரில்லை.
எனினும் அவன் அறிய
மாட்டான்,
தன் கருணையை, தன் மென்மையை.
எவனில் தாவோ
தடையின்றி
இயங்குகிறதோ
அவன் தன் தேவைகளில்
அக்கறை கொள்வதில்லை.
எனினும்
சுயநலக்காரர்களை
அவன்
வெறுப்பதில்லை.
.
பணம் சேர்க்க அவன்
போராடுவதில்லை,
ஏழ்மையை ஒரு அறமாய்
போற்றுவதில்லை.
அவன் தன் வழியே
செல்கிறான்,
யாரையும் சாராமல்.
எனினும் தனிப்
பயணம் செல்வதில்
அவனுக்குப்
பெருமைகள் இல்லை.
அவன் கூட்டத்தைத்
தொடர்வதில்லை,
தொடர்பவரைக்
குற்றமும் சொல்வதில்லை.
பதவிகளும்
பரிசுகளும்
அவனை
வசீகரிப்பதில்லை.
அவமதிப்பும்
அவமானமும்
அவனுக்குத்
தடைகளல்ல.
ஆமென்றும்
இல்லையென்றும் தீர்மானிக்க
சரி தவறுகளை அவன்
எப்போதும்
தேடிக்
கொண்டிருப்பதில்லை.
எனவேதான் முன்னோர்
வாக்கு:
தாவோவில் வாழ்பவன்
அறியாமையில்
இருப்பான்.
பூரண அறம்
சூனியத் தோற்றம்.
'அகம் இல்லை'
எனலே 'மெய் அகம்'.
மானுடரில்
உயர்ந்தோன்
'ஊர் பேர் தெரியாதவன்'
சுவாங் சூ xvii.93
(மொழியாக்கம் - நன்றி -நட்பாஸ்)
The Otherside of Baker
Elisabeth Baker
biography
கருத்துகள்
கருத்துரையிடுக