நூல்முகம் - வின்சென்ட் காபோ ரிச்சர்ட் மஹாதேவ்(1)
1
கிரேட் டிக்டேட்டர்
சர்வாதிகாரி திரைக்கதை
தமிழில்: விஸ்வாமித்திரன்
கருத்துப்பட்டறை வெளியீடு
சர்வாதிகாரி திரைக்கதையை படிக்கும் முன் சார்லி சாப்ளினின் சுய சரிதத்தை ஒருமுறை படித்துவிடுவது அவரது படங்களை, அவரை புரிந்துகொள்ள உதவியாய் இருக்கக்கூடும். சர்வாதிகாரி திரைப்படம் எங்கே முக்கியத்துவம் பெறுகிறது என்றால் அது எடுக்கப்பட்ட காலத்தைப் பொறுத்துத்தான்.
ஹிட்லர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலே அவரை கடுமையாக பகடி செய்த இப்படைப்பு லாப, நஷ்ட கணக்குகளைத் தாண்டி கவனம் ஈர்க்க காரணம் சாப்ளினின் நேர்மைதான் காரணம் என்பேன். நிஜம் இதைவிட கோரமாக இருந்தது.
முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் யூதன் ஒருவரின் வாழ்க்கையோடு அரசு அதிகாரிகள் அந்நாட்டின் சர்வாதிகாரி அடினாய்டு ஹிங்கல் கட்டளைகளை செயல்படுத்தக் காட்டும் மூர்க்கத்தனம் என காட்சிகள் விரிகின்றன. முதலில் போர்களை பகடி செய்யும் காட்சிகளில் யூதராக ஒரு சாப்ளின் நடித்திருப்பார். பின் பிரதமரான ஹிங்கல் பற்றி. மக்களைப் பற்றி என மாறும் காட்சிகள். கடைகள் கொள்ளையடிக்கப்படுதல், சக சர்வாதிகாரியான நெப்பலோனியுடனான யார் பெரியவர் என போட்டியிடும் காட்சிகள் என சர்வாதிகாரிகளை தொடர்ந்து இண்டு இடுக்கு விடாமல் பகடி செய்யும் காட்சிகள் வாசிக்கும் போதே சிரிக்க வைக்கின்றன. முதல்தடவை இக்காட்சிகள் சிரிப்பூட்டுவதாக இருந்தாலும் அடுத்த முறை பார்க்கும்போது அல்லது படிக்கும்போது எவ்வளவு கடுமையான விமர்சனமாக இந்த திரைப்படம் சிந்தித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரமுடியும். படிக்கும்போதே கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை பார்க்க மனம் தவிப்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். காட்சி மொழி குறித்து கவலையுறும் படைப்பாளிகள் வாசிக்கவேண்டிய அவசியமான பிரதிதான் இது.
2
அகிரா - இளையபாரதி நடராஜன்
புதுமைப்பித்தன் பதிப்பகம்
ரூ.150
அகிரா குரோசாவா பற்றிய சுயசரிதை பலருக்கும் வழிகாட்டுமா என்று தெரியவில்லை. அவரது வாழ்வும் சினிமாவை வருமானம் சார்ந்து பார்க்காத தன்மை கலை பற்றிய தெளிவை அதை அவரின் பின்னால் தேரந்தவர்களுக்கு வழங்கக் கூடும். இது சுயசரிதை என்றும் கூறலாம். நாட்குறிப்புகளின் வடிவம் என்றும் கூறலாம். ஆனால் குரோசாவாவின் நினைவாற்றல்தான் இங்கு முக்கியம். தான் பார்த்த படங்கள் நூறையும் பட்டியலிட்டு குறிப்புகள் எழுதி வைத்துள்ளார். யாரையும் கடவுளாக தொழ முயலும் தன்மையை இப்புத்தகத்தின் அட்டையிலே நீங்கள் காணலாம். சினிமா என்பது கேமராவின் இயக்கம். நகர்வுதான்.
கடவுளாக்கி ஒருவரை வணங்குவது என்பது அவரது கொள்கைகளை பின்பற்ற முடியாத குற்றவுணர்வோ என்று நினைக்கிறேன். அங்கீகாரம் குறித்த கவலை, வருமானம் குறித்த கவலையுறாத குரோசாவாவுக்குப் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் அதனை எளிதாக கடந்து செல்லவும் முடிந்திருக்கிறது. இயக்குநராக என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று செம்மையாக விளக்குகிற நூல் இது. தன் வாழ்பனுபவம் வாயிலாக பால்ய காலம் நிகழ்காலம் என விரிகிறது. அகிராவின் படங்களைப் பார்க்கும் முன் இந்த நூலை வாசித்துவிடுவது அவரை உள்வாங்க உதவியாக இருக்கும்.
3
கு. அழகிரிசாமி கடிதங்கள் - கி.ராவுக்கு எழுதியவை
உயிர்மை பதிப்பகம்
ரூ.110
சென்னையை வசிப்பிடமாக கொண்டு பணத்திற்கு தவித்து வாழும் கிராமத்தை மனதில் நினைத்து வாழும் ஒருவரின் வாழ்வின் மண்வாசம் பரப்பும் கடிதங்கள் இந்நூல் முழுவதும் நிறைந்துள்ளன. பல நூல்கள், பல இடங்கள் பல புதிய உறவுகள், நண்பர்கள் கிடைத்தாலும் பால்ய கால நட்பைப் போல ஆழமாக இருக்குமா என்றால் இல்லை என்பதுதான் அழகிரிசாமியின் பதிலாக இருக்கும். இசை பற்றிய பல விஷயங்களோடு தனது படைப்பைப் பற்றி தன் மனநிலை பற்றித் தெரிவிக்கும் கருத்துகள் என வெளிப்பட்டுள்ள கடிதங்கள் இதன் பதிலான கி.ராவின் கடிதங்கள் இல்லாமலே சுவைகூடியதாகவே இருக்கின்றன.
ஒரு எளிய கிராமத்து மனிதனின் அன்பு, நேசம், கோபம், வருத்தம், அவலம், நோய்மை, கொண்டாட்டம் நன்கு இலகுவாக அந்த சூழல்களில் எழுதப்பட்ட கடிதங்களே புரிய வைக்கின்றன. இந்த கடிதங்கள் 1944 - 1948 வரை நீண்டிருக்கின்றன. இவற்றின் வழியே பல மனிதர்கள் நம் கண்முன் பல்வேறு உணர்ச்சிகளுடன் ஜீவனுடன் உலாவுகிறார்கள். விளாத்திகுளம் ஐயா, நடராஜன், அண்ணாச்சி, செட்டியார் என முழுமையான எத்தனை பேர் என்று கூறமுடியாத எண்ணிக்கையில் பல கரிசல் நிலத்துக்காரர்கள் நம் கண்முன்னே வாழ்வதை இந்த எழுத்துக்களின் வழியே காண முடிகிறது.
எழுத்து மட்டுமே வாழ்வு என்று தேர்ந்தவனுக்கு தமிழ்நாட்டில் நிகழக்கூடிய அனைத்தும் அழகிரிசாமிக்கு நேர்ந்திருக்கிறது. இதற்கான காரணமாக அரசு தேர்வுக்கான நூல்களைத் தவிர்த்து வேறு நூல்களே வேண்டாம் என்று தவிர்க்கும் மக்களின் கடிவாள மனநிலைதான் காரணம் வேறென்ன? 1944 - 1948 வரையிலான காலகட்டமே கடிதத்தில் சூசகமாக வெளிப்பட்டுள்ளது. கடிதங்களை இன்றைக்கு ஏன் படிக்கவேண்டும் என்பதற்கு பதிலும் அதுவேதான்.
4
பைத்திய ருசி
கணேசகுமாரன்
தக்கை
விலை ரூ. 80
பைத்திய ருசி யாருக்குப் பிடிக்கும்? தன்னை, தன்னைச் சார்ந்த சுற்றியுள்ள சூழல்களை நேசிக்கின்ற ஒருவனை நிர்கதிக்குள்ளாக்கி பிடறியில் அறைந்து மண்ணில் தள்ளி யதார்த்த சூட்டின் கரிப்பை உணர்ந்து கொண்டவர்களுக்கு தன் நினைவுகளை அனுபவங்களை திருப்பி பார்க்கக்கூடிய கதைகள்தான் இவை.
நகரம் தடையறாது இயங்க பலரின் உழைப்பு தேவையாயிருக்கிறது. இங்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. நிதானமான புத்தியின் இயக்கம், கனவுகளின் பித்தமேறியவர்கள் இங்கு நடைமேடையில் உறங்குகிறார்கள். தோசை சுட்டு விற்கிறார்கள். பல்பொருள் அங்காடியில் சருகாகிறார்கள். இரைச்சல் கேட்டறியாதா வனத்து மிருகம் நகரத்து வாகனத்தின் நெருக்கடியில் சிக்கினால் எப்படி வெளியேறும்? தன்னிடமுள்ள ஏதோவொன்றை இழந்து முழுக்க தன்னை சடலமாக கிடத்தித்தானே!
இசை கதை பீத்தோவனின் கவித்துவமொழி கொண்டு அவர் வாழ்வின் நிராசைகளின் வழியே வாசிக்கப்படும் இசைக்கோர்வைகள் நம் மனதை மையம் இழந்த ஒன்றில் நிலைக்க வைப்பது போல இருக்கிறது.
அக்காள்களின் கதை எளிய கதை சொல்லலாய் எழுந்து மனதை கட்டியிருந்தது. மறுபடியும் முதலிலிருந்து தொடங்குவதுதான் இதில் பெரும் துயரமளிப்பதாக உள்ளது. ஆசைகள், தேவைகள் என அனைத்திற்கும் உள்ள வேறுபாடுகளை விவரித்துச்செல்கிற கதை இது.
பாதரசப்பூனைகள் சூழலின் அகத்திற்கு மனிதர்கள் செய்யும் கைம்மாறுகளை நேரடியாக எழுதிப்போகிறது. பூனைகளின் தற்கொலை முதலில் புனைவெழுத்தின் தொடக்கமோ என்று நினைத்தால் பின் அவிழும் புதிர்தான் கதை. நேர்த்தியான மொழியில் மனதை வசீகரிக்கிறது.
தந்தூரி கசானா 400 ரூபாய் - உள்ளிருந்து உடனிருந்து எரிக்கும் பசி பற்றிய பதிவு. எளிய மனிதன் பிழைப்பு குறித்த கவலை, சாப்பிட்டாயா என்று கேட்க ஆளில்லாதது போன்றவை நகரத்தின் எந்த சந்திலும் எதிர்ப்படும் ஒன்றே. மண்ணில் நிகழும் உன்னதங்கள் எவ்வளவு வேதனையான பிரசவமாக இருக்கிறது என உணர்த்துவது பசிதானே.
தேவதைக்கு வாழ்க்கைப்பட்டவன், ஏவல், பைத்திய ருசி என இக்கதைகளை குறிப்பிட்ட வகைமைக்குள் கொண்டு வர முடியும் என்று கூற இயலாவிட்டாலும் அதன் அடிநாதமாய் இருப்பது நகரம் கொடூரமாய் வதைக்கிற நிதானமான கவித்துவ உள்ளத்தைத்தான் கூற விழைகிறது இச்சிறுகதையில் ஒவ்வொரு எழுத்தும். தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள தடுமாறும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பைத்திய ருசிக்க பழக்கமாகவும் அதனை ருசிக்கவும் வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறதுதான்.
இச்சிறுகதைத் தொகுப்பில் புனைவு, நிஜம் என இரண்டின் சேர்மானங்களை இரண்டற கலப்பதில் கணேசகுமாரன் நிச்சயமான வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக நூலின் அட்டையில் ஆடும் சிவன் இருக்கிறாரே, அதுதான் அனைத்து கதைகளின் மையமாகவும் உள்ளது.
5
ஜாக்லண்டன் சிறுகதைகள்
வ.உ.சி. பதிப்பகம்
ரூ. 100
இத்தொகுப்பில் உள்ள கிழவர் கூட்டம், ஒரு துண்டு இறைச்சி என்ற இரு சிறுகதைகளைப் பற்றித்தான் பேசப்போகிறேன். ஒரு எழுத்தாளனை தனிப்பட்ட வாழ்வு தவிர்த்து படைப்புகளின் வழி எதிர்கொள்ளவேண்டும் என்பதே விமர்சனம் என்பதில் எனது நிலையாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இவரது கதைகள் என்ற கூற வருகிறது என்று என்னால் தீர்ப்பு எழுத முடியாது.
ஒரு துண்டு இறைச்சி என்கிற கதை இளமை நீர்த்துப்போய் முதுமையின் வாசலில் உள்ளே நுழைகிற முன்னாள் வீரன் ஒருவனின் ஒருநாள்தான்(பசியும் வலியுமாக) இக்கதை பேசுகிறது. இளமைத்துடிப்பில் கண்ணுக்குப் படாத விஷயங்களெல்லாம் மெல்ல வயதாகும்போது மெல்ல நன்றாக புத்தியில் உறைக்கிறது. குத்துச்சண்டை நடக்கும் இடத்திற்கு அவர் வெகு தொலைவு சாப்பிடாமலே நடந்து வந்திருப்பார். ஒரு துண்டு இறைச்சி கிடைத்திருந்தால் டாம் கிங் ஜெயித்திருக்கக்கூடும். ஆனால் அது அவருக்கு கிடைப்பதில்லை. குத்துச்சண்டை வீரர்களை வெற்றி பெறுபவர்களை மட்டுமே நாம் கவனிக்கிறோம். கருத்தில் கொள்கிறோம். ஆனால் தோற்றுப்போனவர்கள் குறித்து...? குத்துச்சண்டை வளையத்தில் கூறப்படும் விவரணைகள், டாம்கிங் தனது மனதில் பேசும் உரையாடல்கள் மிக கச்சிதமான அமைப்பை கொண்டுள்ளன. தற்போதைய போட்டியில் தோற்று வெளியேறும் டாம்கிங் தன்னிடம் தோற்றுப்போன மூத்த வீரரின் அழுகையை நினைவுகூர்கிறார். கதை நிறைவு பெறும்போது அந்நிகழ்வு தொடரத்தான் போகிறது என்று நமக்கும் தெரிகிறது விரல் கணுக்கள் முறிந்து வீடு நோக்கித் தள்ளாடிச்செல்லும் டாம் கிங் போலவே.
கிழவர் கூட்டம் கதையில் கிழவன் இம்பர் மீதான ஆச்சர்யம் அதிர்ச்சி மக்களுக்கு ஏற்படுவதைப் போல வாசிக்கும் நமக்கும் ஏற்படுகிறது. பின் உருவாகிற கதைத்தடம் சிதைவுகள் எனதும் சினுவா அச்சிபி எழுதிய நாவலை நினைவுக்கு கொண்டுவந்தாலும் விரைவிலே இரண்டின் தன்மைகள் வேறு என்பதை புரிந்துகொண்டுவிட்டேன்.
ஒரு இனத்தை மக்களை சிறைபிடிக்க அவர்களது கலாச்சாரத்தை சிதைப்பதில் தொடங்குவது பின் வேதாகமம் படிக்க வைத்து தேவாலயத்தை தொழவைத்து அவர்களை உழைக்க வைத்து சுரண்டல் செய்ய மதத்தைப் பயன்படுத்திக் கொள்ள இயேசு அனுமதிக்கிறாரோ இல்லையோ தேவாலய பூசாரிகள் அதைச் செய்கிறார்கள். இன்றுவரையிலும் உலகின் பகுதியிலும் இருப்பவை இரண்டே இரண்டு அரசுகள் மட்டுமே ஒன்று அமெரிக்கா மற்றது ஊடகங்கள். இவர்களை சமாளித்து உயிர் வாழ்வதே பெரும் சாதனைதான். இம்பர் நீதிமன்றத்தில் கூறும் விஷயங்கள் கூட குற்றவுணர்வு உறுத்தியதால் அல்ல. சம்பந்தப்பட்ட சமூகத்தை பகடி செய்வதற்காகத்தான் அதனை திட்டமிட்டு நிகழ்த்துகிறார். மக்களிடம் ஆக்கிரமிப்புகளைப் பற்றிக்கூற ஒரு வாய்ப்பினை உருவாக்கி அதனை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார். அவ்வளவுதான். ஓர் இனத்தின் தனியொரு பிரதிநிதியாக நிற்கும் இவரை உலகமய உலகில் அழிந்துகொண்டிருக்கும் பல இனங்களின் வார்ப்பாகவே கருதலாம். வணிகத்திற்காக உலகம் முழுவதும் ஒரே உணவாக ஒழுங்கு செய்யும் வணிக முயற்சி, குறிப்பிட்டு நாடுகளை திட்டமிட்டு வணிக சந்தையாக்கி காலனி ஆதிக்கத்தை இன்றைய காலம் வரை செலுத்துவது என பல விஷயங்களின் ஒரு மாதிரி வடிவம்தான் இந்த சிறுகதை என்று கூறலாம்.