நூல்முகம் - வின்சென்ட் காபோ, ரிச்சர்ட் மஹாதேவ்(2)
6
நான் தமிழ் சினிமா பார்ப்பதில்லை
சுதேசமித்திரன்
பாதரசம் வெளியீடு
இந்நூல் திரைப்படம் குறித்த ஜெ.பிஸ்மியின் களவுத்தொழிற்சாலை நூலை ஒத்ததே. சுதேசமித்திரன் திரைப்படத்தின் தன்மை, அதன் தட்டையான வடிவம், திரைக்கதை, திரைப்பட அரசியல், திரைப்படத்தின் நீளம் என பல்வேறு விஷயங்களை பார்வையாளர் புறமிருந்து ஆதங்கத்தோடு பேசுகிறார்.
படங்களை பெரிதும் விரும்புகின்ற எளிய சராசரி சினிமா விரும்பியின் மனப்புழுக்கங்கள்தான் இவை இதை வாசிக்கும் எவரும் உணர முடியும். படங்கள் தம் மண்சார்ந்த தன்மையை இழந்தது காலத்தின் கட்டாயம்தான். உலகமயமாக்கலின் கால கட்டத்தில் மொழி, கலாச்சாரம், உணவு எல்லாவற்றையும் வணிகமாக்கும் நிறுவனங்கள் கலை குறித்த சிந்தனையில்லாமல் அனைத்தையும் உறிஞ்சி செரித்து செழுமையாகின்றன. பிற மொழி நாட்டு திரைப்படங்களைப் பார்த்து படமெடுத்து தமிழ்ப்படம் என்று கூறுபவர்கள் உண்மை வெளிப்படும்போது ரசிகர்கள் அவர்களிடமிருந்து தள்ளிப் போகின்றனர். திரும்ப அவர்களுக்கு நம்பிக்கை அளித்து கூட்டி வருவது சாதாரண காரணமல்ல
7
லீலை
தமிழில்: சுகுமாரன்
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்(மலையாளம்)
உயிர்மை பதிப்பகம்
விலை ரூ.100
லீலை என்னும் தலைப்பு கொண்ட கதை உண்ணி. ஆர் எழுதியது. மற்ற சிறுகதைகள் எப்படியோ லீலை எனும் இக்கதை ஒரு மனிதனை அதன் கதாபாத்திரத்தினை மெல்ல விவரிக்கும் போக்கு என்னை பெரிதும் கவர்ந்திழுத்தது. குட்டியப்பன் எனும் பாத்திரத்திற்கு உள்ளே என்ன நிகழ்கிறதென பலருக்கு பெருங்குழப்பமே ஏற்பட்டுவிடும். ஆனால் அவை எனக்கு இயல்பான நிகழில் வாழும் ஒரு மனிதனாகவே அந்த கதாபாத்திரம் படுகிறது. படைப்பின் மொழி நன்கு மெருகேறிய ஒரு சிறுகதை என்று இக்கதையை நிச்சயமாக கூறமுடியும்.
தூது - சேது எழுதிய சிறுகதை அதன் இயல்பிலேயே நம்மை அதனுடன் எளிதில் ஒன்ற வைத்து விடுகிறது. இதன் சிறப்பே அதன் ஒழுங்கு குறையாத உரையாடல்கள்தான். தந்தை, மகன் இருவருக்குமிடையேயான உறவின் சிதைவு, அதனால் அடையும் மனக்கசப்பு கொச்சுண்ணி உரையாடல்களில் விரக்தி, கோபம், தடையில்லாது நொதித்தெழுகிறது. கச்சிதமாய் அமைந்த உரையாடல்கள் சுவாரசியமாகவும் ரசிக்கும்படியும் அமைந்திருக்கின்றன. வசீகரமான உரையாடல்கள்.
உலகம் முடிவுவரை - தாமஸ் ஜோசப் கதை தனக்கான ஒழுங்கமைக்கப்பட்ட சிறுகதை மொழியைக் கொள்ளாவிட்டாலும் கூரிய ஆழமான உண்மைகளை நம் முன்னே வைக்கும் தன்மையில் முன்னிலை பெறுகிறது. ஸ்பீல் பெர்க்கின் தி டெர்மினல் படம் போல கதையும் கதையின் போக்கும் அமைந்துள்ளது. இந்தக் கதையை நாடிழந்த அகதிகள், வாழ வழி தெரியாது கோயில் நடைபாதை என பலபுறமும் நிர்க்கதியாய் நிற்பவர்களுக்கும் கூட பொருத்திப் பார்க்கமுடியும்.
கடையநல்லூரின் ஒரு பெண் - டி. பத்மநாபன் எழுதிய இச்சிறுகதையானது ஒரு பெண் உடலின் இச்சையைத் தீர்க்க தேடும் வழி குறித்த கதையாகும். சரி, தவறு என்று தீர்க்கமாக எதிலும் கூறிவிடமுடிவதில்லை. இயற்கை தன்னை தக்க வைத்துக்கொள்ள பெரும் போரை நடத்துகிறது. இறுதியில் என்ன நடக்கும் என்பது அனைவருமே அறிவதுதான். இச்சிறுகதையில் தீர்ப்பு என்று ஏதுமில்லாததே பெரும் மகிழ்ச்சி.
சங்க பரிவார் - இந்து மேனோன் சிறுகதை பெரும்பான்மையோரால் அச்சுறுத்தப்பட்ட சிறுபான்மை முஸ்லிம் குடும்பங்களைப் பற்றி பேசுகிறது. மனதில் படிய வைக்கப்படும் சிறிய அச்சுறுத்தல் எப்படி சூழலின் தன்மை பொறுத்து எளியோர்களின் வாழ்வினை பேரவலமாக மாற்றுகிறது என்பதே கதை. அரசியல் நலன்களுக்காக காருண்யமே இல்லாமல் பலி கொடுக்கப்படும் ஏழை மக்களின் வாழ்வு பற்றிய வலி குருதி கவச்சியோடு நம் மனத்தில் பதியவைக்கப்படுகிறது.
தேர்ந்தெடுத்த கதைகளின் தரம், அதில் மொழிபெயர்ப்பின் தரம் என இரண்டிலுமே வாசகனுக்கு நிறைவு தர தவறவில்லை சுகுமாரன்.
8
யானை காணாமலாகிறது
ஹாருகி முரகாமி
தொகுப்பாசிரியர்: சிபி செல்வன்
மலைகள் வெளியீடு
இதில் உள்ள நான்கு கதைகளையும் வாசிக்க சுஜாதா நிச்சயம் உதவமாட்டார். மிக நிதானமான எழுத்துகள் இவை. மெல்ல நதிநீரில் விழுந்து பயணிக்கும் இலை போல கதையின் எந்த எழுத்தையும் விட்டு விடாமல் படித்தால் மட்டுமே குறைந்தபட்சம் கதை எதைக் குறித்தது என்று அறிய முடியும்.
ஹாருகி முரகாமி பழைய விஷயங்களை எழுதுகிறாரோ என்று தோன்றக்கூடும். முழுக்க உளவியல் பார்வையில் நகருகின்ற கதைகள் இவை. பல இடங்களுக்கு சென்றாலும் நாமும் மனதும் நம்முடன்தானே. அதை கழற்றி எறிந்து நடக்க முடியாது அதுவேதான் இவரது கதைகளிலும் நிகழ்வது.
எந்தவொரு கதையிலும் உங்களை ஆற்றுப்படுத்தக்கூடிய ஒன்று இருக்கிறது. அது என்ன என்று வாசிக்கிற மனம்தான் கண்டடையவேண்டும். ஒரு படைப்பின் உச்ச வியப்பே அதை வாசிக்கிற மனம் என்னவிதமாக புரிந்து அர்த்தப்படுத்திக்கொள்கிறது என்பதுதானே. ஜப்பானின் மாறி வரும் சமூகம் குறித்த இக்கதைகள் பேசுகின்றதாகவும் கொள்ளலாம். அகமனதிற்கு நெருக்கமாக அமைந்த கதைகள் என்று குறிப்பிட முடியும். கதையில் வரும் கதாபாத்திரங்கள் திடீரென மறைந்து மாயமாகி விடுவார்கள். அவர்கள் குறித்த குறிப்பு, அவர்களின் உரையாடல் வெகு கச்சிதமாக அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பு நான்கு பேர் செய்திருந்தாலும் அதிக சேதாரமில்லாமல் நேர்த்தியாக வாசிக்க முடிகிறது. நகரத்தில் இருக்கும் எந்த மனமும் இவரின் கதையுலகில் தன்னை வெகு எளிதாக இணைத்துக்கொள்ளமுடியும் என்று நம்புகிறேன். அப்படி ஒரு பனிமூட்டம் கொண்ட சூரியன் மெல்ல வரும் உலகம் அது. ஹனிபை கதையினை நான் திரும்ப திரும்ப படித்த அற்புதமான கதை என்பேன். மனம் காணாமலாகிறது ஹாருகி முரகாமியின் கதையுலக வார்ப்பினில் என்று கூறலாம்.
9
வணக்கம் துயரமே
பிரான்சுவாஸ் சகன்
தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ. 115
அழகான ராட்சஷி என்று விமர்சகர்களால் அழைக்கப்பட்ட பிரான்சுவாஸ் சகன் 1954இல் தனது பதினெட்டு வயதில் எழுதிய 188 பக்க நாவலான லீமீறீறீஷீ sணீபீஸீமீss ன் தமிழ்மொழிபெயர்ப்பு இது. மரபான கலாசார பண்பாட்டு வாழ்வியல்வாதிகள் நிச்சயம் படித்து மன உளைச்சல் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று முதலிலேயே எச்சரித்து விடுகிறேன். கதை அப்படி!
பள்ளித் தேர்வு முடிந்து, கோடை விடுமுறைக்காக பாரீசிலிருந்து மத்திய தரை கடற்பிரதேசத்திலிருக்கும் வில்லா ஒன்றினை, ரொமோன் என்பவரும் அவரது மகளான பதினெட்டு வயதான செசிலும் வாடகைக்கு எடுத்து ஓய்வுக்காலத்தை கழிக்க நினைக்கின்றனர். விளம்பரத்துறையில் இருக்கும் ரெமோன் ஒரு கேசனோவா. அதாவது எது குறித்தும் கவலைப்படாத கொண்டாட்டமான மனிதர். சாப்பிடு, குடி, கொண்டாடு என்பதுதான் தந்தை மகளுக்கு தன் செயல்பாட்டின் வழியே கூறும் மந்திரம். அந்த விடுமுறையிலும் கூட அந்த வில்லாவில் 28 வயது எல்சா மக்கென்பூரோடுதான் சரசம் செய்து கொண்டிருக்கிறார். மகளுக்கும் அது பழகிப்போன ஒன்று. இந்த நேரத்தில் ரொமோனின் இறந்துபோன மனைவின் தோழி ஆனி லார்சன் வருவதாக ரெமோன் கூற, அச்செய்தியே செசிலுக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஏனென்றால் அவள் மிகவும் கண்டிப்பான மரபான தன்மை கொண்டவள் என்பதால் தன் தந்தையின் செயல் பெரும் சிக்கலைக் கொண்டுவரப்போகிறது என்று முன்னமே செசில் உணர்ந்துகொள்கிறாள். அதே நேரத்தில் கடற்கரையில் சூரியக்குளியல் எடுக்கும் பொழுதில் சிரில் எனும் சட்டம் படிக்கும் இளைஞனுடன் செசிலுக்கு பழக்கம் ஏற்படுகிறது.
ஆனி லார்சன் வரவால் ரெமோன், செசில், சிரில், எல்சா என இந்நால்வரின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள்தான் கதை. இதில் செசில் கதாபாத்திரத்தை அவ்வளவு துணிச்சலாக படைத்திருக்கிறார் பி.சகன். இதோ ஓகே கண்மணியில் ப்ரீ மேரிடல் செக்ஸ் என்று இப்போதுதான் தமிழில் வந்திருக்கிறது. இதை மிக எளிதாக இயல்பானதாக ஒரு பெண் எடுத்துக்கொண்டு செல்வதாக காட்டினால் அங்கிருக்கும் கலாசார காவலர்களுக்கு கோபம் வராதா என்ன? செசில் எனும் தன்னை மட்டுமே சார்ந்திருக்கும் படு சுதந்திரமான பெண்ணாக வரும் கதாபாத்திரம் உண்மையிலே ஆச்சரியமூட்டுகிற ஒன்று. ஏனெனில் அவள் தனது இச்சையைத் தீர்க்க தனக்கான இணையான சிரிலை அவள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். தனது எதிர்காலம் குறித்தும் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளாமல் வாழ்வினை அதன் இயல்பான போக்கில் சூழலுக்கேற்ப அணுகுகிறாள். எந்த ஒரு நிலையான உறவுக்கும் பதினெட்டு வயதில் அவள் தயாராக இல்லை. தனது உடலின் இன்பத்தை வெளிக்கொண்டுவர ஒரு கருவி தேவை எனும்போது பரஸ்பர ஒப்புதலோடு செசிலும், சிரிலும் உறவு கொள்கிறார்கள். அது குறித்த பெரும் திருப்தி செசிலுக்கு இருந்தபோதும் எந்த ஒரு தருணத்திலும் திருமண உறவு என்பதை நிராகரிக்கும் காத்திரமான சுதந்திரமான பெண்ணாகவே இருக்கிறாள். இதில் அவளது தந்தையும் ஆதரவாகவே இருக்கிறார்.
ஆன்னி லார்சன் வரவு தந்தையோடும் தனது உறவினை பலவீனப்படுத்துவதாக நினைக்கும் செசில் ஒரு திட்டத்தை எல்சா, சிரில் ஆகியோருடன் திட்டமிடுகிறாள். இதனை தொடக்கத்திலே ஆன்னி லார்சன் அறிந்தாலும் அதை சாதாரணமாக சிறுபிள்ளை விளையாட்டு என எடுத்துக்கொள்கிறாள். ஆனால் அது இறுதியில் நிகழ்த்தும் விளைவுகளை செசிலே நினைத்தாலும் தடுக்க முடியாமல் போய்விடுகிறது. அதனைக் குறிப்பிடுவதுதான் இந்த நாவலின் தலைப்பும் கூட.
10
திரிவேணி
தூரன் குணா
திரிவேணி மூன்று தலைமுறை பெண்களின் வாழ்வு குறித்து பேசுகிறது. குயிலாத்தாள் வாழ்வு எளியதாக உழைப்பு என்ற நுகத்தில் கணவன் மனைவி என இருவரும் இழுபட்டு வாழ்ந்த கதையைப் பேசுகிறது. இதன் பின்தொடரும் சரசுவிற்கு வாழ்வு சமநிலை கொள்ளவில்லை. கொந்தளிப்பு முற்ற கணவனை விட்டுவிலகி, தாய் குயிலாத்தாளிடம் வந்து சேர்கிறாள். இதன் பிறகு தொடரும் சம்பவங்கள் சரசுவின் மகளான மைதிலியின் வாழ்வை சிக்கலாக்குகிறது. தாயின் கட்டற்ற சொல்வேகமே மகளை எப்படி சிதைக்கிறது என்பதை உணர்வும் உருக்கமுமாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.
திரிவேணி தொகுப்பின் தலைப்பாக இருக்க அதன் கவித்துவம் இடம் கொடுத்திருக்க க்கூடும். திரிவேணி, கார்ப்பரேட் என இரு சிறுகதைகளை அம்ருதா அல்லது உயிர் எழுத்து இதழ்களில் முன்னமே படித்திருப்பதாக நினைவு.
நகரத்தில் பிழைப்புகாரணமாக வசிக்க நேர்ந்துவிட்ட தன் மண்ணில் வாழ முடியாத எளிய ஒருவனின் நினைவுகள்தான் இக்கதைகள் என்று கூறலாம். கவித்துவ வார்த்தைகள் பலவாயினும் அதன் ஒலிகளின் சாராம்சம் அதுவாகத்தான் இருக்கிறது. சிறிய விஷயங்கள் அதைக் கூறுவதற்கான எளிய மொழி என இவையே போதுமானதாக இருக்கிறது தூரன் குணாவுக்கு. தொகுப்பினை எளிதாக வாசிக்கவும் உதவி செய்வது அதுவேதான்.
11
பாம்பு என்றால்?
ச.முகமது அலி
தடாகம் வெளியீடு
விலை ரூ. -
தலைப்பில் உள்ளபடியே ஊரிலுள்ள பாம்புகள், இந்தியாவில் உள்ள பாம்புகள், நச்சுள்ள பாம்புகள் நச்சற்ற பாம்புகள் என விரிவாக விளக்குகிறார் கூடவே பாம்புகளின் சிறப்பான முறையில் இடம் பெற்றிருக்கின்றன.
பாம்புகள் பற்றிய முழுமையான நூல் என்று தோன்றும்போதே திடீரென தி.க நூல் போல நூலின்போக்கே மாறுகிறது. கார்ட்டூன்களின் வரும் பாம்பு, அய்யனார் தலையில் இருக்கும் பாம்பு என கடும் வெறுப்பு மிதக்கும்படியான சொற்கள் நாம் எதிர்பார்க்க முடியாதபடி பல பக்கங்களில் தொடர்கிறது.
மனிதர்களின் மனதில் உள்ள விலங்கினங்களின் மீதான ஒவ்வாமையை மெல்லத்தான் மாற்றமுடியும். அதற்கான மனிதர்களை முழுக்க வெறுக்கவா முடியும்? காடு அழிதல், அவற்றின் உணவான எலிகள் அழிவது என சூழல் மாறிக்கொண்டே வருகிறது.
பாம்புகளிடம் எச்சரிக்கையாக இருப்பதற்கான யோசனைகளும் இதில் மூன்று வரிகளில் இடம்பெற்றுள்ளது. படித்து பலம் பெற்று பாம்பினை விட்டுவிடுங்கள் என்று ஆசிரியர் கூற வருகிறார். பாம்பு குறித்த முக்கியமான ஆவண நூலாக இருந்தாலும் மனிதர்களின் மீதான ஆசிரியரின் கடும் விரோதப்போக்கு நூலினை வாசிக்க பெரும் தடையாக மாறி விடுகிறது. பல பிளவுகளால் சிக்கித்தவிக்கும் சமூகத்தினுள் உயிரினங்களை காக்க நாம் போதிக்க வேண்டுவது அன்பும் இணக்கமும் மட்டுமே. விட்டேத்தியான விரக்தியான ஆவேசம் என்ன ஏற்படுத்தும் என்பதை ஆசிரியர்தான் கூறவேண்டும். தடாகத்தின் வெளியீடான இந்நூல் அவர்களின் காடு இதழ் போலவே முக்கிய சூழலியலுக்கான முயற்சியாக வெற்றிகரமாகவே அமைந்துள்ளது என்பதை நிச்சயம் குறிப்பிட வேண்டும்.
12
வனம் எழுதும் வரலாறு: கெரிலாக்களுடன் ஒரு பயணம்
சத்நாம்
தமிழில்: பிரசன்னா
பஸ்தர் காடுகளில் உள்ள பழங்குடி மக்களின் அவல வாழ்வை கண்ணீர் சொரிய பேசுகிறது இந்நூல். பாசன வசதி, கணிதம் என வெளியுலகம் அறியாது கல்வியறிவு இல்லாமல் வேட்டையாடுதல் என்பதை மட்டும் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும். அம்மக்களின் வாழ்வு மெல்ல உலகமயமாதல், தாராளமயமாதல் என வணிகப் போட்டியினால் ஆக்கிரமிக்கப்பட அவர்கள் தம்மையும் சூழலையும் காத்துக்கொள்ள கெரில்லாவாகிறார்கள். தமது வீட்டையும் தமது வாழ்விற்கான காட்டையும் பாதுகாக்க தமது உயிரையும் பணயம் வைக்கிறார்கள்.
பழங்குடி மக்களின் வாழ்வு உணவு தேடி மட்டுமே என்றாலும் பருவ சூழல்களில் அவர்கள் உணவுக்கு என்ன செய்கிறார்கள்? என்ற உண்மை, வேலை செய்யும்போது பாடல் எப்படி அவர்களது வாழ்வில் பிரிக்க முடியாதபடி இருக்கிறது, 50 வயதுக்குள் ஊட்டச்சத்துக் குறைவினால் இறந்து போகும் மக்கள் குறித்து கெரிலாக்கள் பகிர்ந்து கொள்ளும் இடம் கண்ணீர் பெருகி வழிய வாசித்த பகுதி. ரயில், பேருந்து, பெட்ரோல் போன்றவற்றையும் வெளியுலகின் இயற்கை வள பேராசைக்கான விஷயங்களை கெரிலாக்களில் யாரும் அறியாது இருப்பது அவர்களது உரையாடல்கள் மூலம் அறிய முடிகிறது. இடது சாரி பயங்கரவாதம் என்று அரசு ஏவும் அடக்குமுறைகளை எதிர்த்து நிற்கவேண்டிய நெருக்கடி பழங்குடிகளுக்கு ஏற்படுவதை தெளிவாக அவர்களின் வாழ்க்கை முறையோடு விளக்குகிறார் சத்நாம்.
புனைவு போன்ற அனுபவத்தை தரும் புனைவிலில்லாத நூல் இது என்று கூறலாம். டாக்டர் பவன், விவசாயி நரங் உள்ளிட்ட வெளிமனிதர்களின் அறிவு பழங்குடி மக்களை பெருமளவு நோய்க்கு ஆட்படாமலும் அவர்களின் உணவுக்கான பொருட்களை பயிரிடுவது குறித்தும் அறிய உதவுகிறது என்பதை அறியும் பகுதி மிக நெகிழ்ச்சியான ஒன்று.
பலரும் நக்ஸல்பாரி, அபாயமானவர்கள் அரசு, ஊடகங்கள் தொடர்ந்து கூறினாலும் கிராம மக்கள் அவர்களிடம் இயல்பாக சென்று பல உதவிகள் செய்து கொடுத்து அவர்களோடே இணைவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அரசு நக்ஸல்பாரிகளைக் குறித்து கூறும் பல கற்பிதங்களை உடைக்கும் நிகழ்ச்சிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. எ.கா. நக்ஸல் இயக்கத்தில் சேர வந்த இளைஞன் ஒருவனை திருப்பி இயக்கத்தினர் அவன் பெற்றோரிடமே அனுப்பும் பகுதியைக் குறிப்பிடலாம்.
வனம் எழுதும் வரலாறு எதுவாக இருக்கமுடியும்? அது அவளின் பிள்ளைகளின் வரலாறாகத்தானே இருக்க முடியும். கெரிலாக்கள் குறித்து புரிந்துகொள்ள இது ஒரு முக்கியான நேர்த்தியான கையேடு கூட.
13
சூரியனைத் தொடரும் காற்று
லியோனர்ட் பெல்டியர்
தமிழில்: எஸ். பாலச்சந்திரன்
விடியல் பதிப்பகம்
இந்த நூல் அமெரிக்கர்கள் செவ்விந்தியர்களை எப்படி அணுகுகிறார்கள், அவர்களை தமது பூர்வீக நிலத்திலிருந்து அகற்ற சட்டத்தின் மூலம் என்ன மாதிரியான முயற்சிகளை செய்கிறார்கள், அவர்களது தொன்மையான கலாசாரத்தை சிறுக சிறுக திட்டமிட்டு எப்படி அழிக்கிறார்கள் என்பதை லியனோர்ட் பெல்டியர் என்பவரின் வாழ்வு வழியாக மனிதம் பெருக பேசுகிற படைப்பாகும்.
அமெரிக்க அரசினால் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் நிலங்கள் ஒப்பந்தம் என்ற போர்வையின் கீழ் பிடுங்கப்பட்டு அம்மக்கள் வேற்றிடங்களுக்கு துரத்தப்படுகின்றனர். அப்படி துரத்தப்படும் இந்தியர்களில் ஒருவரேதான் டோட்டோ கூகிவிவா என்பவர் தம் மக்களுக்காக போராட வாழ்வின் ஒரு கட்டத்தில் முடிவெடுக்கிறார். ஆனால் அதற்காக அவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழிக்கும்படி நேர்கிறது. அதுவும் கூட செய்யாத குற்றம் ஒன்றுக்காக. அப்படி அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன? அவரது தெரிந்த மக்கள் என்ன மாதிரியாக அனுபவித்த துயரங்கள் அவரை போராடத் தூண்டின? மனிதரை இணக்கமாக காண மனதில் தடையாக இருப்பது என்ன? மக்கள் எப்படி உலகில் இருக்க வேண்டும்? சிறையில் உள்ள உடல் உள்ளரீதியான சித்திரவதைகள், இனவெறியின் பின் சட்டம் எப்படி ஒடுங்கிப்போகிறது என்பதையெல்லாம் தன் இயல்பான மொழியில் வாசிக்கும் அனைவரும் மனம் கலங்குமாறு விவரிக்கிறார் லியோனார்ட் பெல்டியர்.
மனித உரிமை, மனிதநேயம் உள்ளிட்ட தன்மைகளை தீர்க்கமாக முன்வைத்து பேசும் ஒரு ஜனநாயகப் போராளியின் சுயசரிதையான இந்நூல் நம் அனைவரின் வாசிப்பிற்கும் மிக முக்கியமானதும் கூட.
14
தலித் போராளி அய்யன்காளி
நிர்மால்யா
தமிழினி
விலை ரூ. 65
கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றினை கூறும் நூல் இது. அய்யன்காளி சாணார் எழுச்சிக்கு பின்னேதான் வருகிறார். அதாவது மார்சீலைப் போராட்டத்தின் விளைவாக கலவரங்கள் நடந்து முடிந்தபின் 1965 இல்தான் பிறக்கிறார் அய்யன்காளி புலையர் சாதியில்.
துணிச்சலும் நீதியுணர்வும் கொண்டிருந்த அய்யன் காளி இளமையிலிருந்தே தன் சமூகம் குறித்தும் அதன் முன்னேற்றம் கல்வி குறித்து பல்வேறு விஷயங்களை எப்படி செயல்படுத்த முனைந்தார் என்பதை வாசிக்கும் ஆச்சர்யம் உருவாகிறது. இது எந்த சூழ்நிலையில் நிகழ்கிறது என்றால் நிலக்கிழார்களை சார்ந்து புலையர்கள் பணி செய்யும் சூழலில் அவர்களை போராட்டத்திற்கு தயார் படுத்துவதற்கு எப்படிப்பட்ட அசாத்திய தைரியம் தேவை. அதை துணிச்சலாக செய்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக தன் இறுதிவரையில் குரல் கொடுக்கிறார் அய்யன் காளி.
நாராயணகுருவின் சந்திப்பு இவரின் வாழ்வில் முக்கிய இடம் பெறுகிறது. ஈழவர்கள் போராடி தனக்கான உரிமைகளைப் பெற்றபின் தமக்கு கீழுள்ள புலையர்கள் அவற்றைப் பெற முடியாது தடுக்கிறார்கள் என்பதை எப்படி புரிந்துகொள்வது? இதற்காக பல்வேறு சந்திப்புகளை கூட்டங்களை நடத்துகிறார் அய்யன்காளி. மேலும் சாது பரிபாலன சங்கம் என்ற ஒன்றை தொடங்குகிறார்.
அரசு அதிகாரிகள், அரசு, இவரை எதிர்ப்பவர்கள் என எவரையும் தமது எதிரியாக கருதாது போராடிய இவரது போராட்டங்கள் அக்காலத்தில்ல் மிகவும் அசாதாரணமானவையே. முக்கியமான புலையர் சமூகத்து தலைவர் குறித்த சுயசரிதை இது.
15
மிளிர்கல்
இரா.முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்
விலை ரூ. 200
மிளிர்கல் நாவல் ஒரு மர்மநாவல் போல அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ள பயண நூல் என்று கூறலாம். பழமையான தொல்லியல் ஆய்வாளர், செங்கொடி முதிரா இளைஞன், கண்ணகி குறித்த ஆவணப்படம் எடுக்க ஆய்வு செய்யும் பெண் ஒருவள் என பல்வேறு தேடுதல் கொண்டவர்களை மிளிர்கல் எனும் மாணிக்க கற்கள் ஒன்றாக எப்படி இணைக்கின்றன என்பதுதான் கதை.
கதையின் போக்கு கண்ணகியின் கதை குறித்த பல்வேறு உண்மைகளையும், அக்கதையில் வரும் மாணிக்க கற்கள் தொடர்பாக இன்றுவரை தொடரும் பல தொழிலாளர்களை குரூரமாக கொல்லும் தொழிலாக நடைபெறும் பல்வேறு வணிக நிகழ்வுகளையும் தீர்க்கமாக பேசிச்செல்கிறது நாவல்.
கதையினை தொடர்ந்து சுவாரசியமாக வாசிக்க ஆர்வம் தரும் விஷயங்களை ஆழ அமுக்கி கனமான உரையாடல்கள் மேலெழுகின்றன. ஆய்வு நோக்கில் தொல்லியல் ஆய்வாளர் பேசுது சில சமயம் கடும் தடையாக நாவலை வாசிப்பதற்கு எழுகிறது. சிலப்பதிகாரம் நிகழ்ந்த இடங்களுக்கு பயணித்து அவை பற்றிய பல விஷயங்களை அறிவது புதிதான அனுபவமாக இருப்பதை மறுக்க முடியாது. நிகழ்கால வாணிப சூழ்ச்சிகள் அன்று கோவலனுக்கு ஏற்பட்ட நிலைமையை இன்று நாட்டுமக்களுக்கு ஏற்படுத்த முனைவது குறித்த கவனத்தை ஏற்படுத்திய தன்மையில் முக்கிய நூலாக தனித்து ஒளிர்கிறது மிளிர்கல்.
16
கவிதாலயம்
ஜீலானிபானு
தமிழில்: முக்தார்
நேஷ்னல் புக் ட்ரஸ்ட்
விலை ரூ. 90
கவிதாலயம் எனும் உருதுமொழி நாவல் ஹைதராபாத்தில் வாழும் கவிதை பாடுவது, பிள்ளைகள் பெறுவது, பிரியாணி சமைப்பது என வாழும் நிலபிரபுத்துவ குடும்பங்களின் தலைமுறைக் கதையாகும். கதையில் காலத்தின் போக்குக்கேற்ப மாறும் சமூக நிலைப்பாடுகளினால் சிதறுண்டுப் போகும் குடும்பங்கள், நில ஆசையினால் சிதறுண்டு போகும் குடும்பங்கள், நில ஆசையினால் விளையும் ஆபத்துகள், பிள்ளைகளையே சுரண்டி வாழும் தந்தை, மாமாக்கள், பெண்களை சொத்தாசையில் முடமாக்கி அவளை நிர்மூலமாக்கும் குரூரம், குரூரத்திலும் கவிதை பாடுவது பல்வேறு உணர்ச்சிகளை கவிதாலயம் நேர்மையாக பேசுகிறது.
சாந்த் எனும் பாத்திரம் நேர்த்தியானதாக உருவாக்கப்பட்டுள்ளது. நொண்டி அத்தைக்கு அடுத்தபடியாக குடும்பத்து ஆண்களால் நிர்மூலமாக்கப்பட்டு மீட்கமுடியாமல் போவது இவளது வாழ்க்கைதான். அடுத்தடுத்தது கஜல் எனும் பெண். சாந்திற்கு அடுத்த கடும் உணர்ச்சிகரமான வாழ்விற்கு ஆளாகி இறுதியில் இறந்துபோவது இவள்தான். நிலப்பிரபுத்துவ சமூகத்தின் விட்டேத்தியான போக்கினால் ஏழைகளின் கோபம் அதிகரிக்க அம்மக்கள் புரட்சி வெடிக்க அப்பகுதி முழுக்க பெரும் நிலக்கிழார்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.குடும்பத்தில் அண்ணன் சொத்தை தம்பி கைப்பற்ற பல தந்திரங்களை செய்வது, தம் வீட்டு சொத்து பிறருக்கு போகாமலிருக்க விதவையான பெண்ணை ஊனப்படுத்துவது என பணக்கார குடும்பத்திற்குள் நிகழும் பல விஷயங்களை பகிரங்கமாக பேசுகிறது இந்நாவல். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது இக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான். கவிதாலயம் முழுக்க மெல்ல வீழ்ச்சிக்கு உள்ளாகும் நிலபிரபுத்துவ சமூகத்தினைக் குறித்து விரிவாகப் பேசுகிறது இந்த நாவல்.
17
தமிழர் உணவு
தொகுப்பு: பக்தவத்சல பாரதி
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ. 325
இந்த நூல் ஒரு முக்கியமான படைப்பு என்பதன் ஆதாரமாக நூல் தலைப்பையே கூறலாம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆய்வு, பண்பாடு சார்ந்த எழுத்தாளர்கள், இந்நூலின் தமது உணவு சார்ந்த அனுபவங்களை கட்டுரைகளாக்கியிருக்கிறார்கள். மொத்தம் 35 கட்டுரைகள் உள்ளன.
இவற்றுள் குறிப்பிடத்தகுந்தவையாக நான் கருதுவது அ. முத்துலிங்கத்தின் மொரமொரவென புளித்த மோர், ஜோடி.டி.குரூசின் சுட்ட கருவாடு, சுண்ட வைத்த மீனு, புதுமைப்பித்தனின் இலைக்குணம், ரெங்கையான முருகனின் முனியாண்டி விலாஸ், நெய்தல் கிருஷ்ணனின் பரோட்டா அமைப்பியல், பெருமாள் முருகனின் உள்ளது கொண்டு உண்ணுதல், குமார செல்வாவின் சொர்கத்தில் கட்டெறும்பு ஆகிய கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.
வாசிப்பவனை பண்டைய உணவு முறை குறித்து யோசிக்க வைக்கும்விதமான கட்டுரைகள் இவை. ஓர் உணவு சாப்பிடுவது என்பதை தாண்டி அவற்றினை எப்படி செய்வது என்பது வரை சில எழுத்தாளர்கள் விளக்கமளித்துள்ளனர். உணவு பயணித்து நாட்டின் பல பகுதிகளிலும் எப்படி பரவி பயணித்து வருகிறது என்பதை அறிய அற்புதமான உணவு வரலாற்று நூல் இது என்று கூறலாம்.
18
ஊடகங்களை நம்பலாமா?
புதிய கலாச்சாரம் வெளியீடு
விலை ரூ. 20
புதிய கலாச்சாரம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் இன்றைய காலகட்டத்தில் உள்ள ஊடகங்களின் நிலைப்பாடுகள் குறித்த கட்டுரைகள் இதில் உள்ளன. இதில் அதிகம் விவாதிக்கப்படுவது டைம்ஸ்நவ், உள்ளிட்ட ஊடகங்களின் முக்கியமான நேரத்தில் அன்றைய பிரச்சனைகளை எந்த தீர்வும் கிடைக்காதவாறு விவாதிப்பது பின் அதனை கைவிட்டுவிட்டு அடுத்த பிரச்சனை நோக்கி செல்வது குறித்து விளக்கமாக விவாதிக்கப்படுகிறது.
நாளிதழ்களில் செய்தியா, விளம்பரமா என்று தெரியாதபடி அரசியல்வாதிகள் குறித்த செய்திகளை பணம் வாங்கிக்கொண்டு வெளியிடுவது , மக்களின் பிரச்சனைகள் குறித்து எந்தவித ஆழமான புரிதலும் இல்லாமல் அதனை பதிவு செய்வது என பல்வேறு விஷயங்களில் ஊடகங்களின் அறம் வழுவுவதை தீர்க்கமாக கடுமையாக விமர்சிக்கின்றன இந்நூலின் கட்டுரைகள்.
தொழிலதிபர்கள் தங்களைக் குறித்த செய்திகளை வரவிடாமல் தடுத்து குறிப்பிட்ட நிறுவனத்தை எப்படி பங்குதாரர்களாக மாறி சிறிது சிறிதாக கட்டுப்படுத்துகிறார்கள் என ஊடகத்தில் நிகழும் பல்வேறு நடுநிலை செய்திகள் எனும் அநீதி குறித்தும் எப்படி அதிகாரத்திற்கு வணக்கம் செலுத்தி ஊடகங்கள் வழிவிட்டு நகர்கின்றன என்பதையும் பதிவு செய்யும் முக்கியமான நூல் இது.
19
குடும்பத்தலைமை பற்றிய மெய்யறிவு
ராபின் ஷர்மா
தமிழில்: கௌரி சிவராமன்
ஜெய்கோ புக்ஸ்
விலை ரூ. 175
சுயமுன்னேற்ற நூல்தான் இது. எழுதியவர் புகழ்பெற்ற சுயமுன்னேற்ற எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். ஆனால் மொ.பெ இது குறித்து ஏதும் கவலைப்படவில்லை. ஆங்கில இலக்கணம் தமிழ் இலக்கணம் குறித்தும் கூட. அவசரமாக கூட மொழிபெயர்த்திருக்கலாம். வாக்கியங்கள் முன் பின்னாக மாறி அமைந்து வாசிப்பவர்களை கடுமையாக சோதிக்கிறது. அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்த்ததில் சுவாரசியம் தப்பிவிடுவதோடு விக்ஸை தேட வேண்டிய தேவையும் ஏற்படுத்திவிடுகிறார்.
மற்றபடி நாவல் போன்ற தன்மையுடன் நூல் சில கதாபாத்திரங்களோடு நேர்த்தியாகவே பயணிக்கிறது. பல்வேறு அறிஞர்களின் மேற்கோள்களோடு இடையறாது ஒவ்வொரு பக்கத்திலும் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்திய ஞானிகள் குறித்தும் அவர்களின் ஞானம் குறித்தும் பல்வேறு வியப்பான விஷயங்கள் பகிரப்படுகின்றன. குடும்பத்திற்கு நேரத்தினை தொழிலுக்கு செலவழித்தது போக மீந்தது என்று எண்ணாமல் அதற்கெனவே நேரத்தை எப்படி திட்டமிடுவது, குழந்தைகளை வழிநடத்த பெற்றோர்கள் தம்மை எப்படி வடிவமைத்துக்கொள்ள வேண்டும், வாசிப்பை குழந்தைகளிடத்தில் எப்படி எடுத்துச்செல்வது என்று விரிவாகவே பேசிச்செல்கிறது இந்நூல்.
நிதானமாக வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று பல்வேறு விளக்கங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. வாசிக்கும்போது நிறைய தடங்கல்கள் ஏற்படுகின்றன. நீங்களே சரிசெய்து படித்துக்கொள்ள முடியும். வேறென்ன தீர்வு நமக்கு இருக்கிறது? 50% தள்ளுபடியில் வாங்கிய புத்தகமாயிற்றே?
20
எனக்கும் ஒரு கனவுண்டு
வர்கீஸ் குரியன்
தமிழில்: மு. சிவலிங்கம்
கண்ணதாசன் பதிப்பகம்
விலை ரூ. 150
கேரள சிரியன் கிறிஸ்தவரான வர்கீஸ் குரியன் எப்படி குஜராத் மாநிலம் கைரா மாவட்டத்தில் உள்ள ஆனந்த் எனும் விவசாயிகளின் நிர்வாகத்தில் செயல்படும் கைரா பால் கூட்டுறவு ஒன்றியத்தை தொடங்கி நாட்டின் பால் பொருட்களின் தேவையை நிறைவு செய்யும் முன்னணி அரசு வணிக நிறுவனமாக அமுலை கட்டமைத்தார் என்பதை அவரின் எழுத்திலேயே பதிவு செய்கிறது இந்த சுயசரிதை நூல்.
வர்கீஸ் குரியன் தன் செயல்பாட்டில் எப்படி என்பதை அவர் அரசியல்வாதிகள் குறித்து தன் கருத்துக்களை வெளிப்படையாக எழுதுவதிலிருந்தே வாசிப்பவர்கள் அறிந்துகொள்ள முடியும். நண்பர்கள் உருவாகும்போது எதிரிகள் இல்லாமலா? அதுவும் எக்கச்சக்கம். அதைக் குறித்து குரியன் பெருமையாக, எதிர்ப்பு வந்தால் விடமாட்டேன்; கடுமையாக போராடுவேன்;போரிட்டேன் என்று கூறுகிறார். வெறும் தனிமனிதராக அல்ல. இவர் புறமும் திரிபுவன்தாஸ், இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல நாட்டின் மேல் பற்றுகொண்ட நன்மனிதர்கள் இருந்ததனால் பல போராட்டங்களில் வெற்றி கண்டுள்ளார். ஆனால் அவை சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் பணப்போரை சமாளித்து உள்ளூர் ஊழல் முதலைகளை வென்றுதான் குறிப்பாக ஆணவம் கொண்ட அரசியல்வாதிகள், தடித்தனம் கொண்ட அதிகாரிகளை சமாளித்துத்தான் அமுலை நம்பர் 1 நிறுவனமாக நிறுத்தியிருக்கிறார் என்பதை அறியும் போது நமக்கே ஆயாசமாகிவிடும்.
தனக்கான நலன்களை நாடி அரசியலுக்கு வரும், பதவிகளுக்கு வருபவர்களின் மத்தியில் தனது பணிக்கு குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு அரசு நிறுவனத்தை மேலே கொண்டு வருகிறேன், ஏழைகளின் வாழ்வை உயர்த்தவேண்டும், அரசிற்கு மாற்றாக விவசாயிகளே தங்களை நிர்வாகம் செய்துகொள்ள வேண்டும் என்று ஒருவர் பிடிவாதமாக உழைத்தால் பெரும் நிறுவனங்களிடம் கூழைக்கும்பிடு போட்டு நாட்டை அடகு வைக்கும் அதிகார வர்க்கத்திற்கு கோபம் வராதா?
ஆனால் இதை விட வர்கீஸ் குரியனுக்கு கோபம் வரும். அது நியாயமானது எனும்போது அதற்கான விளக்கத்தையும் அவரால் தருகிறமுடிகிறபோது செயல்பாட்டில் ஏன் இவ்வளவு சிவப்பு நாடாத்தனம்? அந்த சம்பவங்கள் உங்களுக்கு அரசு ஏன் பல நல்ல திட்டங்களை காகித அளவில் கொண்டு வந்தாலும் செயல்படுத்த முடிவதில்லை என்பதை நமக்கு உணர்த்தும்.
இதில் இவையில்லாமல் வல்லபாய் படேலின் மகளான மணிபென் படேல் வாழ்வு குறித்த பகுதிகள் மனதை நெக்குருகச்செய்வன. இதில் வரும் நேருவைச் சந்திக்க மணிபென் படேல் செல்லும் சம்பவம் உண்மையிலே வல்லபாய் படேல், நேரு இருவரின் தனிப்பட்ட குணாதியங்கள் எப்படி என்று விளக்க ஒரு சோறு பதம்.
வெண்மைப்புரட்சி குறித்த தவறான புரிதல் குறித்த குரியன் அளிக்கும் ஒற்றை வரி பதில் அற்புதம். அதற்கு மேல் பேச ஏதுமேயில்லை.
ஏன் கூட்டுறவு சங்கம் என்பதை உருவாக்க வேண்டும், அதன் விளைவுகள் என்ன? வெண்மைப் புரட்சி குறித்தவை மிக முக்கியமான பகுதிகள் எனலாம்.
நம் நாட்டில் ஒரு மக்களுக்கான நிறுவனத்தை கட்டியது எப்படி? சந்தித்த சவால்கள், எளிய விவசாயிகளின் வாழ்வை உயர்த்த செய்த அந்த உன்னத முயற்சிக்கான வலிகள், வேதனைகள் ஆகியவற்றை முடிந்தளவு நேர்மையாகவே வர்கீஸ் குரியன் பதிவு செய்துள்ளார். நம்நாட்டில் ஒரு தொழிலைத் தொடங்க ஒருவர் சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்து அறியவும், இந்தியா அதிகார வர்க்க செயல்பாடுகளை அறியவும் நிச்சயம் ஒருவர் வாசிக்கவேண்டிய முக்கியமான நூல்தான் இந்த சுயசரிதை. மு. சிவலிங்கத்தின் மொழிபெயர்ப்பு நேர்த்தியாகவும் தரமாகவும் உள்ளது.
21
அற்றது பற்று
ஜைனேந்திரக்குமார்
தமிழில்: என். ஸ்ரீதரன்
சாகித்திய அகாதெமி
விலை ரூ. 65
இந்தி நாவல்.தில்லியில் வசிக்கும் ஸஹாய் என்பவரின் அரசியல் வாழ்வில் குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் ஒரு போதாமைதான் கதைக்களம். அரசியல் எனும் பொதுவாழ்வில் ஈடுபட்டதனால் அவரால் குடும்பத்தில் தனது மகன், மகள் குறித்து எதையும் கவலைப்பட முடியவில்லை. அரசியல் பணியிலும் அவருக்கு தான் அதிக வசதியை அனுபவித்துக்கொண்டிருப்பது போல தோன்றுகிறது. எளிய மக்களின் வாழ்வு அவருக்கு பெரும் மன உறுத்தலைத் தருகிறது. தன்னுடைய பணி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று எண்ணுகிறார் ஸஹாய். பதவி, அரசியல் எனும் இந்த போலியான வாழ்வை விடுத்து எளிய கிராமம் ஒன்றில் நிலம் ஒன்றினை வாங்கி விவசாயம் செய்ய போகலாமா என்ற அளவிற்கு அவரது மனதின் அலைபாய்தல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவருக்கு பதவி கிடைத்தால் அதனைப் பயன்படுத்திக்கொண்டு வளர்ச்சியடையப் பார்க்கும் மருமகன், அதற்கு உதவி செய்யச்சொல்லும் மனைவி உள்ளிட்ட உறவுகளின் தந்திரமான பயமுறுத்தல்கள், பகிரங்கமாகவே இவரது மகனான வீரேஸ்வரர் தன் வாழ்க்கையினை தந்தை ஸஹாய் அழித்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறான் இந்த சூழலில் ஸஹாய் என்ன முடிவெடுத்தார் என்பதுதான் கதை .
இந்நாவல் முடிவெடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதைதான் உணர்த்துகிறது. பெருமளவு வாழ்க்கையினை மக்களுக்காக வாழ்ந்து தனது உறவுகளுக்கு எதையும் செய்யாத தன்னலமற்ற ஒருவர் அவர்களால் குற்றம் சாட்டப்படுவதில் பெரிய ஆச்சரியம் இருக்கமுடியாது. காந்திக்கு ஹரிலால் போல, ஸஹாய்க்கு வீரேஸ்வரர் ஆனால் இங்கு மகனை மதித்து ஏதாவது வேலையை ஒப்படைப்பது என்பது கூட இல்லாததுதான் சிக்கலாகிறது.
பிராமணப் பெண்ணாக வரும் நீலாவின் சுதந்திரமான சிந்தனை மனைவியின் பேச்சுக்களைவிட பெரும் உற்சாகத்தையும் தெளிவையும் ஸஹாய்க்கு அளிக்கிறது. இதை அவரது மனைவியும் ஒப்புக்கொண்டே அவரோடு வாழ்கிறாள் என்பதுதான் இங்கு முக்கியமாகிறது.
இந்த நாவல் பெரும்பாலும் விவாதங்கள், உரையாடல்களின் வழியேதான் நகர்கிறது. ஏறத்தாழ சமூகப்பணி, குடும்பம் என இரண்டிற்குமான மோதல்கள்தான் இதில் வெளிப்படையாக தெரிகிறது. பெரும் தத்துவங்களே மிக எளிமையான உரையாடல்களில் கனமானதாக பேசப்படுகிறது.
மேல்தட்டு வர்க்கத்தில் இருக்கும் பல வித உணர்வுகள், அதை விட்டுக்கொடுப்பதிலுள்ள சிரமங்கள், பதவி அதை நம்பி இருக்கும் பல படியிலான மனிதர்கள் என சில குறிப்பிட்ட கதாபாத்திரங்களென்றாலும் நேர்த்தியான திட்டமிட்ட உரையாடல்களின் அரசியல், சமூகம், குடும்பம் உள்ளிட்டவைகளின் தொடர்பு குறித்து சிந்திக்க வைக்கிற நாவல் இது.