சூழல் போராளிகள் அறிமுகம்! பசுமை முதல் கழிவுகள் வரை
கல்பனா மணிவண்ணன் |
சூழலின் மீது நமக்கு நம்பிக்கை குறையும் போதெல்லாம் இந்த நாயகர்கள்தான் நம் வாழ்க்கை மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். அதற்காக இவர்கள் ஏமாற்றங்களையும் ஏளனங்களையும் எதிர்கொள்ளாதவர்களல்ல. அதிலிருந்து மீண்டு தன் லட்சியத்தை இமயமாக்கி அதையும் சாதித்து இருப்பவர்கள். இப்போது சூழல் போராளிகளில் சிலரைச் சந்திக்கலாம் வாங்க.
கல்பனா மணிவண்ணன் 44
கல்பனா சென்னையைச் சேர்ந்தவர். பரபரப்பான சாலையில் வசிப்பவர். இவர் உயிரியல் வகுப்பு எடுக்கும் ஆசிரியையும் கூடத்தான். வேதிப்பொருட்கள் கலந்த பொருட்களை சாப்பிட்டு வெறுத்துப்போனவர், அவற்றைத் தவிர்க்க இன்று கல்பவிரிக்ஷா என்ற பண்ணையில் தன் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை விளைவித்து வருகிறார். நாம் பயன்படுத்தும் தரை துடைப்பான்கள், கழிப்பறை துடைப்பான்கள் ஆகியவற்றில் கடுமையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவை நம் குடலிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இதனால் நம் உடல் நலம் கெடுகிறது என்று பேசுகிறார் கல்பனா.
இவர் காய்கறிகளோடு ஆர்கானிக் முறையில் வீட்டின் தரை துடைப்பான்களையும் தயாரித்து வருகிறார்.
சமீரா சதீஜா 46
சமீரா, குர்கானைச் சேர்ந்தவர். பல்வேறு நிலப்பகுதிகளை அடைத்து நிற்கும் இரும்பு, பிளாஸ்டிக் குப்பைகளை வங்கி போல பெறுகிறார். அவற்றை மறுசுழற்சி செய்து சூழல் காத்து வருகிறார். நாடு முழுக்க இதுபோல பிளாஸ்டிக், இரும்பு கழிவுகளைப் பெற்று சேகரித்து சேமித்தால் நாம் எளிதில் அவற்றை மறுசுழற்சி செய்து சூழலைக் காக்கலாம் என்கிறார். 3 லட்சத்து 25 ஆயிரம் பொருட்களை சமீரா வெற்றிகரமாக கையாண்டுள்ளார்.
அக்சய் அகர்வால் 27
கோலாபூரின் இச்சால்காரன்ஜியைச் சேர்ந்தவர் அக்சய். சிறுவயதிலேயிருந்து இயற்கை மீது பெரும் ஆர்வம் கொண்டவர். இன்று கணக்கு தணிக்கையாளர் பணியை கைவிட்டு 14 மாநிலங்களில் உள்ள 8 ஆயிரம் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உழைத்து வருகிறார். இவரும் நண்பரும் புனேவில் ஆட்ரிஸ் என்ற ஜீரோவேஸ்ட் கடையைத் தொடங்கி உள்ளனர். இங்குள்ள அனைத்து பொருட்களையும் சூழலுக்கு நேசமாக உருவாக்கி விற்று வருகின்றனர். என்னுடைய திருமணத்தின்போது கூட என்னிடம் மிகச்சில சட்டைகளும் பேன்ட்டுகளும்தான் இருந்தன. நாங்கள் எங்கள் வீட்டில் சூழலுக்கு செய்த முதல் மாற்றம், பிளாஸ்டிகள் பொருட்களை ஒழித்துவிட்டு கண்ணாடி பாட்டில்களுக்கு மாறியதுதான். நாங்கள் வெண்கல, பித்தளைப் பாத்திரங்களை கடைகளில் விற்கிறோம். அலுமினியப்பொருட்களில் 87 சதவீத சத்துகள் வீணாகின்றன என்கிறார் இந்த மனிதர்.
வாணி மூர்த்தி 58
பெங்களூருவைச் சேர்ந்தவர் வாணி. இவர் பல்வேறு விழாக்களை ஜீரோ வேஸ்ட் விழாக்களாக நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். பத்தாண்டுகளுக்கு மேலாக இவர் காற்று, நீர், மண் மூன்றையும் காப்பதற்கான பணிகளைச் செய்து வருகிறார். உங்கள் வீட்டில் உருவாகும் சமையலறைக் கழிவுகளை சரியாக மேலாண்மை செய்தாலே போதும். பிற கழிவுகளை எளிமையாக மேலாண்மை செய்து மாசுபாடுகளைக் குறைத்து விடலாம் என்கிறார் வாணி. இவர் மூங்கிலில் செய்த பிரஷ்கள், பல்பொடி, மூங்கில் பாட்டில்களை பயன்படுத்துகிறார். பிறருக்கும் பரிந்துரை செய்கிறார். நான் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை எங்கும் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக விமானத்தில் கூட என வியக்க வைக்கிறார்.
சஹர் மன்சூன் 28
பெங்களூருவைச் சேர்ந்த பெண்மணி. பிளாஸ்டிக் பிரஷ்களால் ஏற்படும் சூழல் மாசுபாடுவை எண்ணி அவை இல்லாத சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரித்து அளிக்கிறார். இதற்கென பேர நெசசிட்டிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். ஏன் மேம் இந்த நிறுவனத்தை தொடங்கினீர்கள் என்றால், இந்தியாவில் குப்பைகளாக இருப்பதில் பிளாஸ்டிக் பிரஷ்களின் பங்கு 4.7 பில்லியன்கள் என்கிறார். கூடவே இதில் 60 சதவீத த்தை எளிதாக நாம் மக்க வைக்க முடியும் எனவும் நம்பிக்கை கொடுக்கிறார். சூழலியல் மேலாண்மை, பொருளாதாரம் படித்திருக்கிறார். இதனால் பிரச்னையோடு அதுசார்ந்த வணிகம் பற்றியும் ஐடியாக்களைச் சொல்லி அசத்துகிறார். என்னைப் பாருங்கள். நான் பல்வேறு சோப்பு, ஷாம்பூ பொருட்களை விற்றாலும் கூட அவற்றை நான் சூழலுக்கு உகந்ததாக தயாரித்து வருகிறேன். மேலும் உணவுக்கான காய்கறிகளை உள்ளூர் ஆட்களிடமும், விவசாயிகளிடமும் கேட்டு வாங்குகிறேன். அவர்களிடமும் கூட பொருட்களை நான் துணிப்பை கொண்டுபோய் வாங்குகிறேன். இதனால் குப்பைகள் என்னளவில் குறைகின்றன. இதை ஏன் அனைவரும் பின்பற்றக்கூடாது? என்கிறார் இந்த சூழல் அழகி.
திவ்யா ரவிச்சந்திரன், 33
மும்பையில் நடைபெற்ற மகிந்திரா ப்ளூஸ் விழா, ராஜஸ்தானில் நடைபெற்ற மேக்னடிக் பீல்ட்ஸ் விழா ஆகியவற்றிலும் அனைவரும் பாராட்டிய விஷயம், அங்குள்ள கழிவு மேலாண்மை. முடிந்தளவு 94 சதவீதம் பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்த்து இருந்தனர். இதற்கு ஸ்க்ராப் எனும் நிறுவனத்தைச் சேர்ந்த திவ்யா காரணம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குப்பைகளை கொட்டி வைக்கும் நிலையத்தில் தீ பிடித்து கடுமையான நாற்றம் கொண்ட புகை அப்பகுதியை சூழ்ந்தது. ஒரு வாரமாக நீடித்த அந்நிலைமை பலரை நோயாளிகளாக்கியது. நாற்றமும் தாளவில்லை. இதைப்பார்த்த திவ்யா இனி இப்படி ஒரு நிலைமை உருவாகக்கூடாது என தன் வீட்டு பால்கனியில் குப்பையை மக்க வைக்கும் முயற்சியை தொடங்கி வெற்றி கண்டார். பல்வேறு கடைக்காரர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் பேசி பிரச்னையை நன்றாக புரிந்துகொண்டு நிறுவனத்தை தொடங்கி இயற்கையை கைபிடித்து நம் வாசலுக்கும் கொண்டு வந்திருக்கிறார் திவ்யா.
நன்றி - டெக்கன் கிரானிக்கல்