முதுமையிலிருந்து இளமைக்கு திரும்பினால் - தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின்பட்டன்
தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்
இயக்கம் - டேவிட் ஃபின்ச்சர்
திரைக்கதை - எரிக் ரோத்
ஒளிப்பதிவு - கிளாடியோ மிராண்டா
இசை - அலெக்சாண்டர் டெஸ்பிளாட்
எஃப் ஸ்காட் ஃபிட்ஜெரால்டு எனும் சிறுகதை ஆசிரியரின் கதைப்பெயர்தான் படத்தின் தலைப்பு. பட்டன் எனும் பட்டன் தயாரிப்பாளருக்கு மகன் பிறக்கிறான். ஆனால் சிறுவயதில் எண்பது வயது முதிய தோற்றத்துடன் அவன் இருக்கிறான். இதனால் விரக்தியுறும் அவனது தந்தை, அக்குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு சென்று வைத்து விடுகிறான். அங்குள்ள கருப்பினத்தைச் சேர்ந்த பெண், அக்குழந்தையை எடுத்து வளர்க்கிறாள். அக்குழந்தையை தூக்கி எறியச்சொல்லி அவள் கணவன் உட்பட வற்புறுத்தியும் அதை மறுத்து வளர்க்கிறாள். அவளே அக்குழந்தைக்கு பெஞ்சமின் என பெயர் சூட்டுகிறாள். பெஞ்சமினின் ஆயுள் வரை இந்த இல்லம் கூடவே வருகிறது. ஒன்பது வயதில் எண்பது வயது முதுமை முகத்திலும் உடலிலும் தெரிகிறது பெஞ்சமினுக்கு.
அங்கு டெய்சி என்ற பெண்ணைச் சந்திக்கிறான். சிலநாட்கள் சந்திப்பில் இருவருக்குள்ளும் நேசம் பூக்கிறது. பின்னர் அவரவர் வழியில் பயணிக்கிறார்கள். வயது கூட கூட மற்றவர்களுக்கு உடல் தளரும். ஆனால் பெஞ்சமினுக்கு உடல் வலுவாகிறது. சக்கர நாற்காலியில் உட்கார்ந்தவருக்கு நடக்கவும், ஓடவும் முடிந்தது. சிறிய கப்பலில் வேலையும் தேடிக்கொள்கிறார். பல ஊர்களை சுற்றி வந்த பிறகு, அவரை தூக்கி எறிந்த தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார். அவருடைய நிறுவனத்தை பெஞ்சமின் ஏற்று நடத்த விரும்புகிறார்.
டெய்சியின் காதல், பெஞ்சமினின் கப்பல் பயணம், ஜெர்மன் யுத்தம், திருமண உறவு என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது இப்படம்.
நடித்துள்ள அனைத்து நடிகர்களும் சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள். ஃபேன்டசியாக இருந்தாலும் காதல், நம்பிக்கை, திருமணம், அந்நியோன்னியம் ஆகிய விஷயங்களை நெகிழ்ச்சியான முறையில் சொல்லியிருக்கிறார்கள்.
பிராட்பிட்டிற்கு குழந்தை பிறந்தவுடன் அவர் பதற்றத்தை மனதில் உணர்வார். இரு குழந்தைகளை உன்னால் வளர்க்க முடியாது என்று சொல்லிவிட்டு டெய்சியுடனான திருமண வாழ்விலிருந்து விலகும் காட்சி பிரமாதமாக காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசனம் என்றில்லை படம் முழுக்கவே வசனங்கள் குறைவு என்றாலும் நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இசையும் ஒளிப்பதிவும் இப்படத்தை உயர்த்துகின்றன. இதிலுள்ள வாழ்க்கை பற்றிய கேள்விகள் இதனை ஒரு ஆங்கிலப்படம் என்று நினைப்பதை தடுக்கிறது. டேவிட் ஃபின்ச்சர் எடுத்த கிரைம் படங்களை இங்கு எழுதியிருக்கிறோம். ஆனால் அவரின் சிறந்த படமாக இதனையே கொள்ளலாம்.
கோமாளிமேடை டீம்