டிராகுலா கொலைகாரர் - பீட்டர் கர்டன் வாழ்க்கையின் இறுதிப்பகுதி



Peter Kurten Vampire Of Düsseldorf



அசுரகுலம் - இன்டர்நேஷனல்

பீட்டர் கர்டன்

சிறுமியை துடிதுடிக்க கழுத்தை அறுத்து கொன்றது அடுத்த நாளே நகரில் முக்கியமான விவகாரமானது. மக்கள் அவரை நிழல் ராட்சசனாக பாவிக்கத் தொடங்கினர். அவர்கள் அப்படி பேசுவது, பயப்படுவது பீட்டருக்கு மிகவும் பிடித்திருந்தது. பிறரின் பேச்சின் மையப்பொருளாக இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது!

அடுத்து இருமாதங்கள் கழித்து, பதினேழு வயதுப் பெண்ணை கொலை செய்து இன்பம் அனுபவித்தார். இம்முறை கொலையோடு, கொள்ளையையும் செய்ததில் பீட்டருக்கு கூடுதல் லாபம் கிடைத்தது. முன்னர் செய்த கொள்ளை ஒன்றுக்காக, பீட்டருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1921ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது.

வெளிவந்தவருக்கு அகஸ்டே ஸ்கார்ப் என்ற பெண்ணுடன் நட்பு கிடைத்தது. இவர் காரியக்கார விலைமாது. அப்போது தனியாக சிறு கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். இருவரும் கைகோர்த்தாலும் தன் பாலியல் வேட்கைக்கு பீட்டரை, அகஸ்டே பயன்படுத்தி வந்தார். இறுதியில் ஒருநாள் தன் கணவரா, காதலனா என்று சிக்கல் வந்தபோது, கணவரைத் தேர்ந்தெடுத்தார். தொல்லையாக இருந்த பீட்டரை வலுக்கட்டாயப்படுத்தி வல்லுறவு செய்தார் என போலீசுக்கு புகார் அனுப்பினார். போலீஸ் அவருக்கு ஆறுமாத சிறையை உறுதிசெய்தனர்.அமைதியாக சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வெளியே வந்தார்.


அடுத்து சில மாதங்களிலேயே ஆறு பேரை கொலை செய்தார். அத்தனை பேர்களையும் தாக்க கத்திரிக்கோலை கத்தியாகப் பயன்படுத்தினார். இதன் காரணமாக, நிறையப் பேர் பீட்டரின் தாக்குதலில் இருந்து தப்பித்துவிட்டனர். இவர்கள் போலீசிடம் சொன்ன விவரங்கள் மாறுபட்டு இருந்த தால் குற்றவாளி இவர்தான் என போலீசினால் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை.

அப்போது இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் தாக்கினார் பீட்டர். ஒருவளின் கழுத்தை அறுத்தவர், மற்றொரு கையால் மற்றவளின் பின்புற கழுத்தை கத்தியால் வெட்டினார். இதில் பீய்ச்சியடித்த ரத்தத்தை பெருமாள் கோவில் தீர்த்தமாக பருகினார். பின் இன்னொரு பெண்ணை இதுபோல தாக்க முயன்றார். அவர் தப்பி விட்டார். போலீசிலும் கூட சொல்லவில்லை.ஆனால் தன் தோழிக்கு நடந்த விஷயங்களை விவரமாக கடிதம் எழுதினார்.அ தில் எழுதியவை அனைத்தும் சரிதான். ஆனால் முகவரி தவறு. அது தபால் ஊழியர் கையில் கிடைக்க, விஷயத்தை உள்வாங்கி மனம் பதறியவர் அதை அப்படியே போலீசிடம் கொடுத்துவிட்டார்.

போலீஸ் கைது செய்ய வந்தபோது பீட்டர் அனைத்து குற்றங்களையும் ஏற்றுக்கொண்டார். ஐந்து உளவியலாளர்கள் அவரை சோதனை செய்து தண்டனை தர தகுதியான ஆள் என சான்று அளித்தனர். விசாரணையின்போது, ”நான் என் குற்றங்களுக்கு பலியானவர்களால் குற்றவுணர்வு கொள்ளவில்லை. இளம் வயதில் எனக்கு கிடைத்த தண்டனைகள் என் உணர்வுகளை பலிகொண்டு விட்டன. எனக்கு மரணதண்டனை கொடுத்தபிறகு தலையை வெட்டிவிடுவீர்கள். அந்த ஒரு நொடியில் என் உடலில் இருந்து ரத்தம் வெளியேறும் இல்லையா? அது பேரானந்தம் தரும் நொடி” என்று நீதிமன்றத்தில் சொல்ல நீதிமன்றமே உறைந்து போனது. அவரின் ஆசையை நீதிமன்றம் நிறைவேற்றியது.பீட்டரின் தலை விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.

தொகுப்பு - வின்சென்ட் காபோ

நன்றி - ஆல்தட் இன்ட்ரஸ்டிங் வலைத்தளம்