பத்ம விருது சாதனையாளர்கள்!
யானை டாக்டர்
குஷால் கொன்வர் சர்மா - அசாம்
அசாமைச் சேர்ந்த குஷால் கொன்வர் சர்மா,யானைகளுக்கு அளித்த சிறப்பான சிகிச்சையால் பத்ம விருதை வென்றிருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக 5 லட்சம் கி.மீ வனப்பரப்பிற்குள் பயணித்து 10 ஆயிரம் யானைகளுக்கு சிகிச்சை அளித்த சாதனையாளர் இவர். தனக்கு கிடைத்த வார இறுதி விடுமுறையைக் கூட இவர் பொருட்படுத்தாமல் தன் பணியை அப்படியே தொடர்ந்திருக்கிறார்.
ஆண்டுக்கு 800 யானைகளுக்கு சிகிச்சை அளிப்பவர், குவகாத்தி கால்நடை கல்லூரிப் பேராசிரியர். நான் மாணவர்களுக்கு ஆர்வமாக பாடம் நடத்தும்போது, யானைகளுக்கான சிகிச்சை அழைப்பு வரும். என்ன செயவது, உடனே ஓடவேண்டியதுதான். என்னால் நேர நிர்வாகத்தை சரியாக கடைபிடிக்க முடியவில்லை என்று வருந்துகிறார். பத்ம விருதைப் பெறுவதை விட மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருவதுதான் மகிழ்ச்சி.
நீதிக்கான குரல்
அப்துல் ஜப்பார், மத்தியப்பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் 1984ஆம் ஆண்டு போபாலில் நடந்த அணுஉலை விபத்து காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். ஆனால் அரசுகள் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டதால், இழப்பீடு பெறுவது கூட கடினமான காரியமானது. அப்துல் ஜப்பார் மூன்று ஆண்டுகள் இடைவிடாது போராடி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தந்தார. இவரும் போபால் நச்சுக்கசிவால் தன் பெற்றோரை இழந்திருக்கிறார். தனது கண்பார்வையைக் கூட 50 சதவீதம் இழந்துவிட்டார். ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல் சார்ந்த நோயும் போபால் கதிர்வீச்சு மூலம் கிடைத்தது. 1987ஆம் ஆண்டு கேஸ் பீடிட் மகிளா உத்யோக் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி நீதிக்கான போராட்டத்தை நடத்தி வந்தார் அப்துல் ஜப்பார். மெத்தில் ஐசோசயனைட் கசிவால் 5 லட்சம் பேர் போபாலில் பாதிக்கப்பட்டனர்.
அன்னதாதா
ஜக்தீஸ் லால் அகுஜா - சண்டிகர்
சண்டிகர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளின் பசி தீர்த்து பத்ம விருது பெற்றிருக்கிறார் ஜக்தீஸ் லால் அகுஜா. ஏறத்தாழ 2500 பேர்களுக்கு உணவளித்து அவர்களின் பசித்தீயைப் போக்கியிருக்கிறார். பாகிஸ்தானின் பெஷாவரில் இருந்து அகதியாக இந்தியாவுக்கு வந்தவர், கடந்த 38 ஆண்டுகளாக ஏழைகளுக்கு உணவிடுதலைச்செய்து வருகிறார். மான்சா எனுமிடத்தில் மெழுகுவர்த்திகள் விற்றவருக்கு அன்று ஒருவேளை உணவுதான் கிடைத்தது. பின்னர் சண்டிகருக்கு நகர்ந்து வாழைப்பழங்களை விற்கத்தொடங்கினார். அதில் கமிஷன் ஏஜெண்டானார். அதில் நிறைய சம்பாதித்தார். இதனால் அங்கு வாழைப்பழ ராஜா என்று பெயர் சம்பாதித்து கோடீஸ்வர்ரானார். இன்றும் தனது பண்ணை வீடுகளை விற்ற காசில் ஏழைகளுக்கு சோறிட்டு வருகிறார். தற்போது எனக்கு வயதாகிவிட்டது. மேலும் சர்க்கரை வியாதியும் வாட்டுகிறது. ஏழைகளுக்கு உணவிடுதலை என்னால் முடிந்தவரை செய்வேன் என்பவரின் வயது 84தான்.
உடல் உறுப்பு தானத்தில் சாதனை
பிமல்குமார் ஜெயின், உடல் உறுப்பு தானத்தில் சாதனை செய்து பத்ம ஸ்ரீ விருது பெற்றிருக்கிறார். இருபது ஆண்டுகளாக பீகாரில் உறுப்பு தானத்திற்காக பிரசாரம் செய்து உழைத்திருக்கிறார் இந்த மனிதர். 1974ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அழைப்பை ஏற்று குழந்தைகளின் உரிமைக்காக பாடுபடத் தொடங்கினார் பிமல்குமார் ஜெயின். அரசின் கீழ் உள்ள அமைப்பு என்றாலும் தன்னம்பிக்கையோடு உழைத்து 400 பேர்களுக்கு மேல் பார்வை பெற உழைத்துள்ளார். அடுத்தும் கூட இரு சிறுமிகளுக்கு கண் பார்வை பெற உழைத்து வருகிறார். அரசுடன் இணைந்து பீகாரிலுள்ள மாவட்டந்தோறும் கண் வங்கி அமைக்கும் செயற்பாட்டில் உள்ளார் பிமல்குமார்.