புதிய எலக்ட்ரானிக் பொருள்களின் வருகை - சிஇஎஸ் 2020
அமெரிக்காவின் லாஸ்வேகாசில் தொடங்கவிருக்கும் சிஇஎஸ் விழாவில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம். புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட சாதனங்களை நிறுவனங்கள் இந்த விழாவில் அறிமுகப்படுத்தவிருக்கின்றன. அவற்றில் புதிய தொழில்நுட்பங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
5ஜி
இந்தியாவில் 3ஜிக்கும் 2 ஜிக்கும் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறோம். டெல் நிறுவனம் தனது மடிக்கணினியில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. மீடியாடெக், க்வால்காம் ஆகிய நிறுவனங்கள் 5ஜிக்கான சாக்கெட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளன.
செயற்கை நுண்ணறிவு
ஸ்மார்ட்போன்கள் முதல் காலையில் முதல்வேலையாக செல்லும் டாய்லெட்டுகள் வரை செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் உள்ளது. இந்த முறையும் பல்வேறு பொருட்களை ஏஐ என்று சொல்லி அறிமுகப்படுத்த டெக் நிறுவனங்கள் தயாராக உள்ளன. எனவே, உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் பார்த்து வாங்குங்கள்.
மைக்ரோ எல்இடி
டிவிகளில் பிளாஸ்மா, ஓஎல்இடி எல்லாம் பழசு. அதனால்தான் புதிய தொழில்நுட்பமாக மைக்ரோ எல்இடி தயாராகி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை காப்புரிமை பெற்று அறிமுகப்படுத்தும் நிறுவனங்களே 2020ஆம் ஆண்டு டிவி சந்தையை ஆளப்போகின்றன.
செக்ஸ் பொருட்கள்
அனைத்து முன்னேற்றங்களுக்கும் பாலுறவுதானே மூலம். எனவே, சென்ற ஆண்டு வெளியான ஓசே வைப்ரேட்டர் போல இந்த ஆண்டும் புதிய மிரட்டும் கேட்ஜெட்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
புதிய சேவைகள்
ஆப்பிள், கூகுள், டிஸ்னி போன்றவை திரைப்படங்கள், சீரியல்கள் உள்ளிட்ட புதிய சேவைகளை வழங்க உள்ளன. இவற்றைப் பற்றிய அறிவிப்புகள் உருவாகலாம். இந்த ஆண்டு ஹெச்பிஓ தனது ஒளிபரப்பை இணைய சந்தையில் தொடங்க உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் முன்னோடியான நெட்பிலிக்ஸ், சந்தையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள புதிய படங்களை எடுத்து வருகிறது.
பாதுகாப்பு
நாம் பயன்படுத்தும் பொருட்களின் மூலம் நமது தகவல்கள் பிறருக்கு செல்கிறது என்பது உண்மை. கூகுளின் பாதுகாப்பு செட்டிங்குகளையும் மீறி தகவல்களை, அந்நிறுவனம் சேமிக்கிறது என்பது ஊரறிந்த உண்மை. இந்த விழாவில் இதற்கான பல கிஸ்மோக்களை நிறுவனங்கள் கடை பரப்பி விற்கலாம். அதற்கான சந்தை தற்போது உருவாகி உள்ளது.
நன்றி - டெக்கன் கிரானிக்கல்