மூதாதையர்களின் கனவில் வாழும் ஓநாய்கள்! - ஓநாய் குலச்சின்னம்






Image result for ஓநாய் குலச்சின்னம்


ஓநாய் குலச்சின்னம் (Wolf Totem)

ஜியாங் ரோங் (Lü Jiamin)

தமிழில் - சி.மோகன்

அதிர்வு பதிப்பகம்

பக்கம் 707



மாவோவின் சீர்த்திருத்த கொள்கைகள் எப்படி மங்கோலிய நாடோடி மக்களின் வாழ்க்கை அழித்தன, அவர்களின் இயற்கை சார்ந்த வாழ்க்கை எப்படி வளர்ச்சி என்ற ஒற்றை சொல்லுக்கு பலியானது என்பதை இந்நாவல் விவரிக்கிறது.

இதில் வரும் ஜென் சென் என்ற இளைஞர், நகரிலிருந்து கால்நடை வளர்ப்புக்காக கிராமப் பகுதிக்கு அனுப்பப்படுகிறார். அவர் மட்டுமல்ல, ஏராளமான நகரப்புற மாணவர்கள் அங்கு பல்வேறு பயிற்சிகளுக்காக வந்திருக்கின்றனர். ஆனாலும் பலரும் அந்த சூழ்நிலையை சகித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். விரும்பி அல்ல. இதில் வேறுபடுவது ஜென் மட்டுமே. அவன் மட்டுமே அந்த மேய்ச்சல் நிலம் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ள முயல்கிறான். அதன் வழியாக ஓநாய்கள் அவன் வாழ்வில் நுழைகின்றன.

மொழிபெயர்ப்பாளர் சி.மோகன்


அவற்றின் வாழ்வு வழியே மங்கோலியர்கள் டெஞ்ஞர் எனும் கடவுளை எப்படி காண்கிறார்கள் என்பதை அவன் அறிந்து வியக்கிறான். ஏறத்தாழ பில்ஜி தன் முதிய வயதில் தான் கற்ற அனைத்தையும் வேட்டை நுணுக்கங்களையும் கூட ஜென்னுக்கு கற்றுத்தருகிறார். ஆனாலும் அவருக்குள் இருந்த எச்சரிக்கை உணர்வு கடைசி வரையில் குறையாது இருக்கிறது. காரணம், நகர மனிதர்களின் பேராசையான நுகர்வு அவரை அச்சுறுத்துகிறது.

பல்வேறு பருவகாலங்களில் அங்குள்ள மான், முயல், எலி, மர்மோட் ஆகியவை வளர்கின்றன, செழுமையாகின்றன. ஓநாய்களுக்கு உணவாகின்றன. ஓநாய்களும் இயற்கையின் கட்டுப்பாட்டை மீற முடிவதில்லை. அவையும் கொசுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பனிக்கால வாழ்க்கைக்காக இறைச்சியை பனிக்கட்டிகளில் அப்படியே விட்டு வைக்கின்றன.

நகர மாணவர்களின் வருகை கூடும்போது, மான்களின் இறைச்சி, மற்றும் அதன் தோல் அதிக விலைக்கு விற்கிறது. இதனால் பனியில் உறையும் இறைச்சியையும் கூட வெளி மனிதர்கள் எடுத்துச்செல்லும் துயரம் நடப்பதுதான் மங்கோலிய மனிதர்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைவதற்கான முதல்படி. நமக்குத் தேவையான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் எனும் பில்ஜி,  உல்ஜி ஆகிய கிழவர்களின் வாதங்கள் பொருளற்று போகின்றன. ஒருகட்டத்தில் குதிரைகளை ஓநாய்கள் முற்றிலும் வேட்டையாடி கொன்று போடுகின்றன. இதன் விளைவாக கோபமுறும் ராணுவப்பிரிவு அவற்றை வேட்டையாட அங்குள்ள மக்களை கட்டாயப்படுத்துகின்றன. இதன்விளைவாக மங்கோலியர்களின் வாழ்க்கை அடையாளமான ஓநாய்கள் எப்படி அழிகின்றன, மேய்ச்சல் நிலம் எப்படி பாலையாகிறது என்பதை விவரிக்கிறது இந்த நாவல்.


Related image
ஜியோங் ரோங்


மிகச்சிறந்த வேட்டை இலக்கிய நூல். சாதாரணமாக நாம் புலி, சிங்கம், யானை ஆகியவறை வேட்டையாடுவது பற்றி படித்திருப்போம். இதில் மங்கோலியர்களின் ஓநாய் வேட்டை, அதற்கான பொறி பற்றி படிப்பது பரவசம் தருகிறது. ஏறத்தாழ ஜல்லிக்கட்டு படத்தில் எருமையை வேட்டையாட ஊரே கிளம்பும் இல்லையா? அதேபோன்ற சூழல் நாவலிலும் வருகிறது.

மங்கோலியர்கள் இறந்துபோனால் அவர்கள் தங்களின் உடல்களை ஓநாய்கள் தின்ன அனுமதிக்கின்றனர். இதற்காக இறந்தவர்களின் உடல்களை ஓநாய்கள் நடமாடும் இடங்களில் போடுகிறார்கள். இவற்றை வான்புதை இடங்கள் என்கிறார்கள். இறுதியில் பில்ஜி இறந்தபோனபிறகு வான்புதை இடங்களைத் தேடிச்செல்லும் காட்சி நீங்காத துயரத்தை மனதில் ஏற்படுத்துகிறது.

பேராசையான விவசாயிகளின் நுகர்வு பற்றி பில்ஜி கூறியது ஜென்னுக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் காலம் கடந்துவிட்டிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு பழைய மங்கோலிய மேய்ச்சல் இடங்களுக்கு செல்லும்போது அவர்கள் பார்த்த புல்வெளிகளை எங்குமே பார்க்க முடிவதில்லை. அனைத்தும் பாலையாகி கிடக்கிறது. அங்குள்ள மங்கோலிய மக்கள் பொருளாதார அழுத்தத்தில் இருப்பதைச் சொல்லி நாவல் நிறைவாகிறது. நமது மனம் ஓநாய்களின் வேதனையான  ஊளைகளைக் கேட்கத் தொடங்குகிறது.

சி.மோகனின் செழுமையான மொழிபெயர்ப்பு நூலுக்கு பெரும் பலம். எந்த இடத்திலும் உரையாடலிலும் தடுமாற்றமே இல்லாமல் கதை நகர்கிறது. அதிலும் வேட்டைத் தயாரிப்பு பற்றிய விஷயங்கள் பிரமாதமாக எழுதப்பட்டுள்ளன.

மேற்குலகின் வேட்டை இலக்கியங்கள் பொதுவாக கத்தி, துப்பாக்கி, வேட்டை, மகிழ்ச்சி என்று நேர்கோட்டில் முடிந்துவிடும். இந்த நாவல் வேறுபடுவது அதன் இயற்கையை நேசிக்கின்ற குணத்தால்தான். சதையைத் தின்றால் தன் சதையைத் தின்ன கொடுக்கவேண்டும் என்கிற மனோபாவம் அங்குள்ளமங்கோலியர்களுக்கு வழிவழியாக சொல்லப்பட்டு வருகிறது.

இயற்கையில் அனைவரும் வாழவேண்டும் என்று தங்களின் குதிரைக்குட்டிகள், கால்நடைகளை கூட பலிகொடுக்க மங்கோலிய நாடோடிகள் தயாராக இருக்கின்றனர். காரணம், அவர்களின் வாழ்க்கை அழியாமல் இருப்பதே ஓநாய்களால்தான் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

கோமாளிமேடை டீம்






பிரபலமான இடுகைகள்