விவசாயிகளுக்கான தகவல்தளம் உருவாகிறது!





Farmer, Wheat, Crop, Agriculture, Field, Nature
pixabay



விவசாயிகளுக்கான தகவல்தளம்!



இந்திய அரசு, விவசாயத்துறையை நவீனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. தற்போது தமிழகத்திலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தகவல்களை, தமிழக  அரசு சேகரித்து வருகிறது. இத்தகவல்களை பெறும் மத்திய அரசு,  தேசிய  விவசாயிகள் தகவல்தளம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் ஆய்வு, இது பரிசோதனை முயற்சிதான். இந்த ஆய்வுகளை மத்திய அரசு தனது மானிய உதவிகள் சரியானபடி விவசாயிகளுக்கு சென்று சேர்கிறதா என்பதை அறியவே செய்கிறது. 

 இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த பரிசோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்திற்கு ஒரு மாவட்டம் என்று மத்திய அரசு தேர்ந்தெடுத்து தகவல்தளத்திற்கான தகவல்களை திரட்டி வருகிறது. பிஎம் கிசான் திட்டத்தின்படி, இந்திய விவசாயிகளுக்கு, ஆண்டிற்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

 இந்த மானியம் விவசாயக் காப்பீடு,  மண்ணின் தரம், உரங்கள், மின்சாரம் ஆகியவற்றுக்காக வழங்கப்படுகிறது. ஆனால் இவை முறையானபடி விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை என அரசுக்கு புகார்கள் வந்தன. இதற்காக, விவசாயிகள் பற்றிய தகவல் தளத்தை மத்திய அரசு உருவாக்கி பராமரிக்க உள்ளது. இதன்மூலம், பயனாளிகளை எளிதாக அடையாளம் கண்டறிய முடியும். இந்த தகவல்தளத்தை 2020ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய அளவில் நடைபெறும் இத்திட்டத்தை விவசாயத்துறை அமைச்சகத்தோடு, தகவல் தொடர்புத்துறையின் இ-அரசுத்துறை (NEGD) சேர்ந்து செய்யவிருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கான பயன்கள் முறைப்படுத்தப்படும். மேலும் மண் சோதனை,  புயல்,  வெள்ள எச்சரிக்கைகள், வேளாண் தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள், வேளாண் வருவாய் ஆவணங்கள் ஆகியவை இதில் இணைக்கப்படும்.  மாநில அரசின் விவசாயத்துறை இத்தகவல்களை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு வழங்கவிருக்கிறது. இதில் விவசாயிகளின் அடையாளம், நில ஆவணங்கள், பெற்ற கடன்கள், மானியம், காப்பீடு பற்றிய தகவல்கள், விளைவித்த பயிர்கள் ஆகியவையும் இத்தகவல்தளத்தில் இடம்பெறவிருக்கிறது.

தகவல்: TNIE

நன்றி - தினமலர் பட்டம்



பிரபலமான இடுகைகள்