மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கும் இந்திய அரசு!
pixabay |
இந்திய அரசு, உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்க முயற்சித்து வருகிறது.
இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சகம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர் கல்வித்துறைக்கு ரூ.30,383 கோடிகளைச் செலவிட இருக்கிறது. இத்தொகை மூலம், நாட்டின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பு உள்ளது.
இந்திய மாநிலங்களில் சில மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியே உள்ளன. உயர்கல்வியை எட்டும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு ,மாணவர்களின் எண்ணிக்கையை 40 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது அரசு.
தற்போது உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்களின் மொத்த அளவு 25.8 சதவீதம். அதில் ஆதி திராவிடர்கள் எண்ணிக்கை தோராயமாக 21.8%, பட்டியல் இனத்தவர் 15.9% க்கும் குறைவு. உயர்கல்வியில் இந்தியாவை பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில், தென் ஆப்பிரிக்காவைவிட(20.5%) மேலே உள்ளது. ஆனால் ரஷ்யா(81.8%), பிரேசில்(50.5%), சீனா(25.8%) ஆகிய நாடுகளை விட கீழே உள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பின்தங்கிய பகுதிகளில் மாதிரி கல்லூரிகளைத் தொடங்குவது, உயர்கல்வி நிறுவனங்களில் 5 இலட்சம் மாணவர்களைச் சேர்ப்பது முதல்கட்டப்பணி. பின்னர், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அவர்களுக்கான விடுதிகளைக் கட்டித் தங்க வைப்பது ஆகிய திட்டங்களை மனிதவளத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க திறந்த, தொலைதூரக்கல்வி(ODL) திட்டத்தையும் அரசு பயன்படுத்தவிருக்கிறது.
இம்முறையில் தேர்ச்சி பெறும் பட்டியலினத்தவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம். இத்திட்டத்தில் இணையும் பட்டியலினத்தவர்களுக்கு சேர்க்கையின்போது ஐம்பது சதவீத கல்விக்கட்டணம் குறைக்கப்படும். மேலும், ஆண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர்க்கு ஷ்யூர்(SURE) திட்டப்படி, கல்விக்கட்டணம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படவிருக்கிறது. பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கப்படும் கல்லூரிகளில் தலா இருநூறு மாணவர்கள் என்பது சேர்க்கை இலக்கு. இம்முறையில் 500 கல்லூரிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கை என்பது, இந்திய அரசின் கல்வி லட்சியம். படிக்க கல்லூரிகளே இல்லாத பகுதிகளில் மாணவர்களுக்கு உதவி செய்யும் கல்வி மையங்களையும் அமைப்பது அரசின் மற்றொரு திட்டம். இத்திட்டத்தை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்வி வல்லுநர்கள் பத்துபேர் இணைந்து தயாரித்து அரசுக்கு அளித்துள்ளனர்.
நன்றி தினமலர் பட்டம்