ஏ டூ இசட் இந்தியா எப்படி இருக்கும்?





Image result for modi in CAA cartoon




அரசியலமைப்புச் சட்டத்தில் ஏ முதல் இசட் வரையில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாம் இப்போது பார்ப்போம். இவை மிகச்சரியானவையா என்பதைவிட சரியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதே முக்கியம்.

ஏ –அம்பேத்கர்

காந்தியின் மென்மையான இந்துத்துவத்திற்கு எதிராக போராடி சேகுவேரா. இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த குழுவின் தலைவர். அவர் ஏற்ற அரசியல் பணிகளிலும் தன் கருத்தை உள்ளே நுழைத்து சமூகத்தில் அனைவருக்குமான இடத்தை உறுதி செய்தார். தன் அரசியல் பணிகளுக்கு இடையில் ஏராளமாக எழுதியவர்.

பி – பட்ஜெட்

பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். ஆனால் இதுபற்றிய எந்த ஆர்வமும் மக்களுக்கு கிடையாது. ஏனெனில் வெங்காயம் விலை ஏறியதிலிருந்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் வரை அம்மணி பேசிய அரிய கருத்துக்களை அவரது கட்சியினரே சகித்துக் கொள்ள முடியவில்லை. சட்டப்பிரிவு 112, இதனை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை என்கிறது. இதனால் என்ன பயன்? பட்ஜெட் தயாரிப்பு அறிக்கை முடிந்தபின் அல்வா கிண்டி சாப்பிடுவார்கள். அதே அல்வாவில் மிஞ்சியதை மக்களுக்கு கொடுப்பது மாறாமல் நடக்கிறது.

சி- குடியுரிமை

நாடு முழுக்க பற்றி எரியச்செய்த மசோதா இப்போது சட்டமாகி உள்ளது. முஸ்லீம்களை மட்டும் தனியாக பிரித்து நாட்டை விட்டு துரத்துவது அல்லது அகதிகள் முகாமில் அடைத்து கொடுமை செய்வது திட்ட நோக்கம். இதை எப்படி ஜனநாயகப்பூர்வ வழியில் செய்வது என தீர யோசித்து பாஜகவினர் கண்டுபிடித்த வழி, என்பிஆர் எனும் தேசிய குடிமக்கள் பதிவேடு. இதனையும் கோல்கட்டா, கேரளம் ஆகிய மாநிலங்கள் எதிர்த்துள்ளன. இப்போராட்டத்தை எதிர்த்து பல்வேறு இளம்பெண்கள் போராடி வருவது காவி இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளது.

டி – மரண தண்டனை

கொலை, வல்லுறவு, கொள்ளை என தினந்தோறும் கிளம்பும் பிரச்னைகளுக்கான சமூக பொருளாதார காரணங்களை பாஜக அரசு தேடவில்லை. உடனடி நியாயம், 2.30மணி நேர சினிமாவில் கிடைப்பது போல தேவை. இதற்காகவே என்கவுண்டர்களை செய்ய உத்தரவிட்டது. அஃப்சல் குருவை தேவையின்றி பொய் குற்றச்சாட்டு சொல்லி தூக்கிலிட்டது. அது முதற்கொண்டு தெலங்கானாவில் மருத்துவர் வல்லுறவில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்காமல் போலீஸ் சுட்டுக்கொன்றது வரை மரணதண்டனை என்பது தொடர்கிறது. நீதித்துறை மீதான நம்பிக்கை மக்கள் மனதில் குறைந்து வருவது ஆபத்தான ஒன்று.

இ – சமநிலை, சமவாய்ப்பு

அனைத்து கலாசாரம் கொண்ட நாட்டில் இந்துக்களை மட்டும் முதல்தர குடிமக்கள் என சட்டங்கள் மூலம் மதச்சார்பற்ற, சமநிலை என்ற அரசியலமைப்பு சட்டத்தை பாஜக அரசு குலைத்து வருகிறது. இட ஒதுக்கீடு என்பதை இந்துக்களில் மேல்ஜாதியினருக்கும் ஒதுக்கி அதனையும் கூறுபோட்டு நாசம் செய்தது மத்திய அரசு. முஸ்லீம்களை வந்தேறிகள், தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தி அவர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்துவதை குறிப்பிட்ட இடைவெளியில் அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. இந்த நிலையில் சமநிலை எங்கே சகோதரத்துவம் எங்கே? அம்புட்டும் சேதம்.

எஃப் – அடிப்படை உரிமைகள்

தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றை வார்த்தையில் சுதந்திரமாக பேசும் உரிமை, கல்வி உரிமை, சமநிலை உரிமை என அரசியலமைப்பு அனுமதித்த அனைத்து விஷயங்களும் பலியாகி விட்டன. இதனை சிதைப்பதில் ஃபேஸ்புக் நிறுவனமும் பாஜக அரசும் 2004ஆம் ஆண்டு முதல் கைகோத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நட்புறவில் நாசமாக போனது வேறு யாருமில்லை? மக்கள்தான். மக்களுக்கான நலன்களுக்கு பேசினால் கூட அவர்களை கட்டம் கட்டி விசாரணையின்றி சிறையில் அடைக்கும் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி விட்டது. இனி பேசுவ? பேசினால் ஆன்டி இந்தியன் என்று சொல்லி குமுறு கஞ்சி காய்ச்சி சிறையில் அடைத்து விடுவார்கள்.

ஜி – கவர்னர்

ரப்பர் ஸ்டாம்புகள் என்றால் குடியரசுத்தலைவர், கவர்னர் ஆகிய பதவிகளைச் சொல்லுவார்கள். ஆட்டுக்கு தாடி எதற்கு, மாநிலத்திற்கு கவர்னர் எதற்கு என சி.என்.அண்ணாதுரை சொன்ன வாசகம் தமிழகத்தில் பிரபலம். பாஜக அரசில் கவர்னர்கள் முக்கியமான கங்காணிகள் ஆனார்கள். ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்படும் எதிர்க்கட்சிகளை ஆட்சி அமைக்கவிடாமல் தடுப்பது, குதிரை பேரங்களை ஊக்குவிப்பது, மக்கள் நிம்மதியாக வாழவிடாமல் முதலமைச்சரின் பணிகளை ஆளுநர்களை செய்ய ஊக்குவித்தது மத்திய அரசு. இதனால் பாஜக அரசு அல்லாத மாநிலங்கள் இதென்னடா புதுசா இருக்கு? குழப்பத்தில் சிக்கி தவித்தன.

ஹெச் – ஆட்கொணர்வு மனு

இதற்கு இந்த பத்தாண்டுகளில் எந்த மதிப்பும் இல்லை. போலீஸ் பிடித்துச்சென்ற ஆட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நாம் இதுபோன்ற ஆட்கொணர்வு மனுக்களை தயாரித்து அளிக்கலாம். ஆனால் அவர்கள்தான் இன்ஸ்டன்டாக நீதி வழங்கி குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கூட வைகுந்தம் அனுப்பி வைத்துவிடுகிறார்களே? அப்புறம் மனுபோட்டு வக்கீல் வைத்து வாதாடி ஆவிகளையா நீதிமன்றத்திற்கு வரவழைக்க முடியும்? எனவே சட்டம் நமக்களித்த இந்த அம்சம் இந்த பத்தாண்டுகளில் செயலற்று போய்விட்டது.

ஐ – சுதந்திர ஊடகம்

குடியுரிமை சட்டம் பற்றிய எதிர்ப்பு போராட்டங்களை வெளியிடக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக ஊடகங்கள் ஐம்புலன்களையும் அடக்கி சினிமா செய்திகள், உலகச்செய்திகளுக்கு தாவிய அசிங்கங்கள் இந்தியாவில் நடந்தேறின. பின்னே டிவியை உள்துறை அமைச்சகம் நினைத்தால் ஊறவைத்த உளுந்தாக மாற்றிவிட முடியுமே? இதனால் ஊடகங்கள் சாக்கடை அடைப்பு, கழிவுநீர் தேக்கம், குப்பைத்தொட்டிகள் அகற்றப்படாமை என்று பேசி சமூக அக்கறையை பறைசாற்றி சமாளித்தன.

ஜே- நீதித்துறை

இந்த ஆண்டு நீதித்துறை மீது பலருக்கும் நம்பிக்கையின்மை தோன்றியது. எப்படி வானிலைத்துறை மழை வரும் என்று சொன்னால் நாம் யாரும் நம்புவதில்லையோ அதேபோல நீதித்துறை சொன்ன தீர்ப்புகள் அனைத்தும் மத்திய அரசின் குரலாக ஒலித்தன. அதனை யாரும் தீர்ப்பாகவே நினைக்கவில்லை. அயோத்தி தீர்ப்பில் நேரடியாகவே இந்துகள் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று சொன்னதோடு, இதனை யாரும் விவாதிக்கக்கூடாது என்று கூறி தன் குடுமியை மறைக்க முடியாமல் மாட்டிக்கொண்டது. அதுபோல ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 370 வது சட்டத்திருத்தத்திலும் தடுமாற்றங்கள் தொடர்ந்தன. உச்சமாக தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கொடுத்து அவரையும் ஒடுக்கியது மத்திய அரசு. அப்புறமென்ன நீதியாவது மண்ணாங்கட்டியாவது?

கே – காஷ்மீர்

சிறப்பு அந்தஸ்து சட்டத்தை நீக்கிய பாஜக அரசு அதோடு விடவில்லை. இதன்மூலம் அழகான காஷ்மீர் பெண்களை நீங்கள் கல்யாணம் செய்துகொண்டு அங்கு நிலம் கூட வாங்கலாம் என்று மத்திய அமைச்சர் பேசி வம்பை வளர்த்தார். இதற்கு இப்பேச்சு தவறு என்று கூட ஏழைத்தாயின் தேநீர் விற்ற மகன் கூறவில்லை. அதுவே அவர்களின் சபை மாண்பு. இதைச்சொல்லி உலகமே சிரித்தாலும் இது எங்களது அரசின் பெருமை என மார் தட்டிக்கொண்டது பாஜக அரசு. இன்று கண்காணிப்புடன் உள்ள திறந்தவெளி சிறையாக காஷ்மீர் மாறிவிட்டது. அதிக நாட்கள் இணையத்தை தடை செய்து அந்த மாநிலத்தின் தொழில்களை முடக்கி அரிய பணிகளை செய்தது மத்திய அரசு.

எல் – சுதந்திரம்

பாஜகவின் டிஜிட்டல் ஆர்மி இந்தியா முழுக்க பல்வேறு விதமாக போலிச்செய்திகள், வீடியோக்கள், ட்வீட்கள் ஆகியவற்றை உருவாக்கி இந்தியாவை கலவர பூமியாக்கின. இதனால் முஸ்லீம்கள் மீதான கோபத்தை வன்மத்தை உருவாக்க முயன்றது. ஏறத்தாழ இத்திட்டத்தில் பாஜக வென்றுவிட்டது. சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே இந்துகள் வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றது. ஆர்எஸ்எஸ் வலுபெற்று காக்கி ட்ராயர்களை கழற்றி வீசி பேண்டுக்கு மாறியது. பல்வேறு ஊர்களில் பேரணி நடத்தி உண்மையான காவலர்கள் யார் என்று மக்களுக்கு உணர்த்திய அநீதிகள் நடந்தன. மாநில அரசுகள் தம் ஆட்சியைக் காக்க மத்திய அரசின் தாள்பணிந்து விழுந்த தலையை இன்றுவரை எடுக்கவில்லை.
அரசுக்கு எதிராக யார் பேசினாலும் உடனே கைது செய்து கும்மி எடுப்பது புதிய வழக்கமாக மாறியது. இதில் சமூக வலைத்தளங்களும் தப்பவில்லை.

எம் – சிறுபான்மையினர்

இந்த வார்த்தைக்கு முஸ்லீம்கள் என்று புது இலக்கணத்தை பாஜக அரசு தன் அதிகாரத்தின் மூலம் எழுதியது. ஊடகங்கள் கூட ஆதிதிராவிடர்கள், பட்டியலினத்தவர்கள் ஆகியோரை விலக்கி முஸ்லீம்களை இந்த லிஸ்டில் நிரந்தரமாக இணைத்தனர். இதனால் சமூகத்தில் ஒதுங்கியிருந்த முஸ்லீம்கள் இன்னும் தள்ளிப்போய் நின்றனர். அரசியல் கட்சிகள் தாம் நினைத்த லட்சியத்தை வார்த்தை அரசியல் மூலம் சாதித்தனர். ஒட்டுமொத்த சமூகமும் இந்த அநியாயத்தைப் பார்த்தபடி மௌனமும் பயமும் மனதில் கவிழ திகைத்து நின்றது இந்த ஆண்டின் வேதனையாக காட்சி.

என்- தேசிய கீதம்

ஜெர்மனி, இத்தாலி பாசிச வாதத்தை இறக்குமதி செய்து இந்தியில் மொழிபெயர்த்து பின்பற்றும் மத்திய அரசின் முயற்சி இது. தியேட்டர்களில் உலகம் மறந்து பாப்கார்ன் தின்று சோகம் மறக்கும் மக்களை ஜனகணமன பாடவைத்து பள்ளியில் பிரார்த்தனை கூட்ட காலத்திற்கு அழைத்துச் சென்றது பாஜக அரசு. இதற்கு எழுந்திருக்கணுமா என்று நினைத்து உட்கார்ந்திருந்தவர்களை பிடறியில் அடித்து எழ வைத்து எஃப்ஐஆர் பதிவு செய்தது காவல்துறை. நாயை விட விசுவாசமா என வியந்து போனார்கள் மக்கள்.

ஓ – எதிர்கட்சிகள்

பாஜகவின் பிரித்தாளும் இந்துத்துவா அரசியலில் மக்களுக்கு அடுத்தபடியாக சிதைந்து போனது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான். ராகுல் தான் இந்து என்றும், கோவில்களுக்கு சென்று காமெடி செய்தார். மென்மையான இந்துத்துவா பக்கம் சென்று புராணக்கதைகளை சொல்லி காங்கிரஸ் தன் முந்தைய கொள்கைகளை பறிகொடுத்து பாதி பாஜக ஆன பரிதாப காலம் இது.

பி – நாடாளுமன்றம்

பாஜக எம்.பிகள் இந்தியில் பேசினர். தமிழக எம்.பிகள் தமிழில் பேசினர். இதனால் பல்வேறு மொழிகளை தெரிந்தோருக்கு மட்டுமே அங்கு என்ன நடந்தது என புரிந்துகொள்ள முடிந்தது. மற்றவர்களுக்கு ஆந்தைகள் வாழும் இடம் போலவே நாடாளுமன்றம் தெரிந்தது. எம்.பிகள் வந்தாலும் பிரதமர் வெளியிலேயே ரோமிங்கில் இருந்தார். இதனால் பல்வேறு விஷயங்களுக்கு பிரச்னைகளுக்கு அமைச்சர்கள் சமாளிப்பு பதில்களை அளித்தனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பு பிரதமராக செயல்படத் தொடங்கினார்.

ஏ முதல் இசட் வரை எழுத நினைத்தோம். நெஞ்சு பொறுக்கவில்லை. நிறுத்திக்கொண்டு விட்டோம்.

நன்றி - டெக்கன் கிரானிக்கல்