மது அருந்தினால் உடலில் என்ன நடக்கிறது?
ஆல்கஹால் ஊக்கமூட்டியா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதனைக் குடித்தவுடன் உடலில் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டது போன்ற இலகுவான தன்மை ஏற்படும். காற்றில் பறப்பது போல. இதனால்தான் இலகுவான இந்நேரத்தில் பல்வேறு ரகசிய விஷயங்களை நண்பர்களிடம் கொட்டி விடுகின்றனர். ஆனால் அதேசமயம் இதனை குடித்தான் பேசினான் என்று ஒதுக்கிவிட முடியாது. குடித்தாலும் அம்மாவுக்கும், மனைவிக்கும் வேறுபாடு தெரியாமல் போவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஊக்கமூட்டியா அல்லது மூளைத்திறன் குறைப்பு மருந்தா
காபி, டீ ஆகியவற்றை குடிக்கிறீர்கள். இவற்றின் அளவு அதிகமானால் என்னாகும்? சிம்பிள். தூக்கம் வராது. இரவில் டீ, காபி குடிப்பதை தொடர்ந்தால் இன்சோம்னியா எனும் தூக்க குறைவு பிரச்னை எழும்.
அதுவே ஆறுமணிக்கு ஆபீஸ் விட்டதும் மது அருந்துவதை வழக்கமாக்கினால் என்னாகும்? உங்களின் இதயத்துடிப்பு குறையும். மூளை ரிலாக்ஸ் ஆனது போல தோன்றும். ஆனால் உங்கள் உடலில் ஒட்டுமொத்த பணிகளையும் மது தடுத்து மாய உலகை உருவாக்குகிறது. டீ, காபி ஆகியவற்றிலுள்ள காஃபீன் உடலை ஊக்கமூட்டி, தூங்கி வழிந்துகொண்டிருந்தால் கூட உங்களுக்கு கூடுதலாக அரைமணிநேரம் பணியாற்றும் ஆற்றலை வழங்குகிறது. இதன் பொருள் தூக்கம் வந்தால் டீ, காபி குடிக்கவேண்டும் என்பதல்ல. உண்மையில் உடல் சோர்ந்து, மூளை களைத்தால்தான் தூக்கம் வரும். அப்போது தூங்குவதே நல்லது. காபி, டீ என்பது ஊக்கமூட்டி. மது என்பது மூளைத்திறன்களை குறைக்கும் வேதிப்பொருட்களை கொண்டது.
சிகரெட் சிலருக்கு மிகவும் பிடிக்கும். இடது கை, வலது கை என இரண்டிலும் வைத்துக்கொண்டு குடிக்கும் நண்பர்கள் எனக்கு உண்டு. இது மூளைத்திறன் குறைக்கும் நிகோட்டினை கொண்டிருந்தாலும் ஊக்கமூட்டிக்கான சில அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த வேதிப்பொருட்களை மதுவோடு கலந்து குடித்தால் உங்களுக்கு வைகுந்த பிராப்தி விரைவில் கிடைத்து விடும். ஆனால் இதனை குடிக்கும் நேரம் சொர்க்கவாசல் திறந்துவிட்டது போன்ற சொகுசான அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். அதை மறுக்க முடியாது.
வண்டி ஓட்டத் தடை
உங்கள் உடலின் ரத்த த்தில் மதுவின் அளவு - பிஏசி பிளட் ஆல்கஹால் கான்சென்ட்ரேஷன் 0.08 மி.கி என கூடினால் அமெரிக்காவில் வாகனங்களை ஓட்டக்கூடாது என்கிறார்கள். பொதுவாக மது குடிக்கும்போது மகிழ்ச்சியான ஹார்மோன் டோபமைன் அபரிமிதமாக சுரக்கிறது. ஆனால் நீங்கள் அடிக்கும் பெக்கின் அளவு கூடும்போது இந்த ஹார்மோன் சுரப்பு கூட தடுக்கப்படுகிறது. இதனால் கடும் சோகமான மனநிலை ஏற்படுகிறது.
0.02மி.கி அளவுக்கு மேல் ஒருவர் மது குடித்திருந்தால் அது அவரின் உடல்நலனுக்கு ஆபத்தானது என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
நன்றி - ஹெல்த் லைன்