கரும்புத்தோட்டத்தில் மரணச்சத்தம் - அஹ்மத் சூரத்ஜி
அசுரகுலம் - இன்டர்நேஷனல்
அஹ்மத் சூரத்ஜி
கேரளத்தில் இன்றும் பில்லி, சூனியம், ஏவல் சமாச்சாரங்கள் உண்டு. அதேபோல இந்தோனேஷியாவில் என்னாலும் முடியும் என்று தொடங்கி பல பெண்களை கொன்று சோதித்துப் பார்த்த கருப்பு மந்திரவாதி சூரத்ஜி.
1997ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று கெம்லா தேவி என்ற பதினைந்து வயது சிறுமி, ரிக்சாவில் ஏறி உட்கார்ந்தார். எங்கம்மா போகணும் என்ற ரிக்சாக்காரரிடம் இடம் பற்றிச் சொல்லிவிட்டு, யாரிடம் இங்கு நான் செல்வதை சொல்லிவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார். அந்த இடத்தில் பெரும் மர்மம் புதைந்திருப்பதை ரிக்சாக்காரர் உணரவில்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து நாளிதழில் செய்தியைப் பார்த்தவர் அதிர்ந்துபோனார்.கரும்புக்காட்டில் தன் வண்டியில் பயணித்த அந்த சிறுமி இறந்து கிடப்பதைப் பார்த்தார். அந்த சிறுமிதான் என்பதை உடை மூலம் உறுதி செய்துகொண்டவர், போலீசுக்கு தகவல் சொன்னார்.
தான் ஒரு வாரத்திற்கு முன்பு சூரத்ஜியின் வீடு அருகேதான் சிறுமியை இறக்கிவிட்டதாக ரிக்சாக்காரர் போலீசிடம் சொன்னார். உடனே போலீஸ் சாதாரண விசாரணையாக சூரத்ஜியிடம் சிறுமி பற்றி விசாரிக்க, தான்தான் கொலை செய்து எறிந்தேன் என ஒப்புக்கொண்டார். மேலும் 42 பெண்கள் இப்படி கொன்று அதே கரும்புக்காட்டில் புதைத்துள்ளேன் என்று சொல்லி போலீசுக்கு வேலை வைத்தார். காவல்துறையும் மாங்கு மாங்கென்று தோண்டியது. வேதனை என்னவென்றால் அதில் பல பெண்களை போலீசாரால் அடையாளம் கண்டறிய முடியவில்லை. காரணம் உடல்கள் பெருமளவு அழுகி சிதைந்துவிட்டிருந்தன.
காவல்துறையை இயலாமை சுழன்றடிக்க, ஆக்சன் கிங் அர்ஜூனாய் மாறி ஏண்ட டேய் என சூரத்ஜியின் சட்டையைப் பிடித்து குமட்டில் குத்தி விசாரித்தது. அவர் சிம்பிளாக என் அப்பா கனவில் வந்து பெண்களை இப்படி கொன்று போட்டால் அபூர்வ கறுப்பு மாந்திரீக சக்திகள் கிடைக்கும் என்று ஆரூடம் சொன்னார் என ஒரு கதையைச் சொன்னார்.
பெண்களுக்கு என்ன குறை என்று வந்து சூரத்ஜியின் வலையில் விழுந்தார்கள்? குடும்ப பிரச்னை, தங்களின் அழகு குறையக்கூடாது என்ற ஆயுளிலிலும் தீராத சிக்கல்களுக்காகத்தான். வந்த பெண்களை கரும்புக்காட்டுக்கு கூட்டிச்சென்று, இடுப்பு வரை குழியைத் தோண்டுவார். அதில் பெண்களை நிற்கவைத்து மண்ணை மூடுவார். பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலைக்கு வந்ததும் இதெல்லாம் சின்ன சடங்கு என்று சொல்லி பின்பக்கமாக வந்து அவர்களின் கழுத்தை கயிற்றால் இறுக்குவார். பெண்கள் பீதியில் நாக்கு வெளியே தள்ளி எச்சில் வெளியே வழியும். அதை அவர்களின் உதட்டோடு உதடு வைத்து பருகுவார் சூரத்ஜி. அதுதான் அவருக்கு மாந்திரீக சக்தியை வழங்கும் அமுதம். இதனை அவரது அப்பா 1986ஆம் ஆண்டு கனவில் வந்து சொல்லிவிட்டார். இறுதியாக பெண்கள் இறந்ததும் அவர்களின் உடலிலிருந்து உடைகளை உருவிவிடுவார். பின்னே உடல் சீக்கிரம் மக்கிப் போக வேண்டாமா? அவர்களின் தலையை மட்டுமே தனது வீடு பார்த்து வைத்து புதைப்பார். இப்படி 72 பெண்களை மண் சமாதி செய்து சித்தி அடைந்திருக்கிறார் சூரத்ஜி.
இக்கொலைகளுக்கு அனுசரணை வழங்கிய மூன்று மனைவிகள், சூரத்ஜியின் சகோதரிகள் ஆகியோருக்கும் சிறைதண்டனை வழங்கப்பட்டது. கருப்பு மாந்திரீகவாதி சூரத்ஜி 2008ஆம் ஆண்டு ஜூலை பத்து அன்று காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். என்கவுண்டர் அல்ல. நீதிமன்ற தீர்ப்பே அதுதான்.
நன்றி - ஃபேன்டம் வலைத்தளம்