நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள் எவை?




நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள்!



நெற்பயிரின் நோய்த்தாக்குதலை இயற்கையாக கட்டுப்படுத்துபவை பூச்சி இனங்கள். ஆனால் இவை வயலுக்கு வரத் தடையாக இருப்பது, பல்வேறு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் ஆகும். நன்மை செய்யும் பூச்சிகளை நாம் வயலுக்கு வரவைத்தால், பூச்சிக்கொல்லி செலவுகள் பெருமளவு குறையும். சில நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி இனங்களைப் பார்ப்போம். 

முட்டை ஒட்டுண்ணிகள்,  கிரைசோபா,   குளவி இனங்கள், தட்டான் இனங்கள், பொறி வண்டு, நீளக்கொம்பு வெட்டுக்கிளி ஆகியவை வயலில் உள்ள பூச்சிகளை தின்று பயிர்களைக் காப்பாற்றுகின்றன. 

முட்டை ஒட்டுண்ணிகள்
கைகோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் ஒட்டுண்ணிகள் காய்ப்புழுக்களின் மீது முட்டையிட்டு, அவற்றின் இனத்தை அழிக்கின்றன. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை. தன் வாழ்நாளில் இருபது முதல் நாற்பது தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கின்றன. 

கிரைசோபா

இப்பூச்சி, குஞ்சுப் பருவத்திலிருந்தே அசுவினி, இலைப்பேன் ஆகியவற்றைத் தாக்குகிறது. ஆண்பூச்சிகள் 12 நாட்களும், பெண் பூச்சிகள் 35 நாட்களும் உயிர்வாழும். தன் வாழ்நாளில் கிரைசோபா பூச்சிகள் 400க்கும் மேற்பட்ட தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கின்றன. 

குளவி வகைகள்

இதில் செலான்ஸ் குளவி, கோடீசியா குளவி, பிகோனிட் குளவி, இக்மானிட் குளவி, பிராகிமீரியா குளவி , பெதிலிட்ஸ் குளவி ஆகியவை காய்ப்புழுக்களையும், கூட்டுப்புழுக்களையும் தாக்கி அழிக்கின்றன. இவை இருபது முதல் முப்பது பூச்சிகளை அழிக்கின்றன. 

தட்டான் இனங்கள்
சாதாரண தட்டான், ஊசித்தட்டான் ஆகியவை வயல்வெளியில் பறந்து பயிரின் சாறு உறிஞ்சும் புழுக்கள், கொசு போன்றவற்றை வேட்டையாடி உண்ணுகின்றன. 

பொறிவண்டு
இப்பூச்சியின் வாழ்நாள் 42 முதல் 72 நாட்கள் வரை. தாய்ப்பூச்சி மஞ்சள் அல்லது சிவப்பில் கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும். இதன் குஞ்சு கருப்பாக அல்லது கருநீலமாகவோ இருக்கும். 400 முதல் 500 வரையிலான பூச்சிகளைத் தேடி அழிக்கும்.  

நீளக்கொம்பு வெட்டுக்கிளி

தன் உடலை விட 2 மடங்கு பெரிய உணர்கொம்புகளை கொண்ட பூச்சி. 110 நாட்கள் உயிர்வாழும் வாழும். இந்த பச்சைநிற வெட்டுக்கிளி, பூச்சிகளின் முட்டைகள், தத்துப்பூச்சிகளை அழிக்கிறது. இவை தவிர அனைத்து வகை சிலந்திகளும் 600க்கும் மேற்பட்ட தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கிறது. 


 நன்றி - தினமணி