மனைவியை கொன்று பீப்பாயில் ஊற வைத்த பாசக்கார கணவர் - பெலாகிஸ்
மென்டல் ஃபிளாஸ் |
அசுரகுலம் - இன்டர்நேஷனல்
பெலா கிஸ்
ஹங்கேரியின் சின்கோட்டா என்ற நகரில் டின்களை தயாரித்து விற்று வந்தார் பெலா கிஸ். வயது 37. திருமணமாகாத வாலிபர். ஆளும் பார்க்க உயரமாக திடகாத்திரமாக இருந்தார். அதனால் அடிக்கடி அவர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் பெண்கள் அவரோடு நடனமாட போட்டியிட்டனர். இதனால் ஒரு பார்ட்டியில் அவரோடு நடனமாடிய பெண் மறுமுறை நடனமாட மாட்டார். அந்தளவு பெண்களின் ஈர்ப்பு இருந்த்து.
அவர் தன் தொழில் மூலம் கிடைத்த பணத்தில் பெரிய வீட்டை வாங்கி வசித்து வந்தார். அவருக்கு வீடு தொடர்பான பணிகளை திருமதி ஜாகுபீ செய்துகொடுத்து வந்தார். நேர்மையான பணியாள் என்றால் இவரைத்தான் சொல்லவேண்டும். கிஸ் என்ன சொன்னாரோ அதை அப்படி சாலையில் வெள்ளைக்கோடு மீது மாறாமல் வண்டி ஓட்டுவது போல கடைப்பிடித்தார். கிஸ் வெளியூருகளுக்கு செல்லும்போது வீட்டைப் பராமரிப்பதும் அவள்தான்.
1914ஆம் ஆண்டில் உலகப்போர் காலகட்டம். ஹங்கேரி ராணுத்திற்கான அழைப்பு வர அதனை ஏற்றார். வீட்டைப் பார்த்துக்கொள்ள திருமதி. ஜாகுபீயிடம் கேட்டுக் கொண்டார். போர் முடிந்தபிறகும் கிஸ் வரவில்லை. உடனே ஊருக்குள் செர்பியாவிலேயே கிஸ் கொல்லப்பட்டு விட்டார் என வதந்தி பரவியது. இதனால் திருமதி ஜாகுபீ வீட்டை நன்கு கூட்டி பெருக்கிவிட்டு, அதனை வேறொருவருக்கு விற்றுவிட்டார். பழைய சாமான்களை தூக்கி எறிந்து காலி செய்து தரவேண்டுமே . அதற்காக அங்குள்ள இரும்பு பீப்பாய்களை நகர்த்த முயன்றார். கனமாக இருந்தது. சரி என்ன பொருள் என மூடியைத் திறந்து பார்த்தவருக்கு விஷயம் புரிய நேரம் கண்டது. பழுப்பு நிற பெண்ணின் முடி முன்னால் வந்தது. பெண்ணின் உடல் நிர்வாணமாக மெத்தனால் கலவையில் பதப்படுத்தப்பட்டிருந்தது. ஐயையோ என அலறிய திருமதி ஜாகுபீயினு அலறல் நின்றபோது போலீஸ் அங்கு வந்திருந்தது. மொத்தம் 23 உடல்களை இதுபோல எடுத்தனர்.
கிஸ் சில இடங்களை நுழையக்கூடாது என்று ஜாகுபீயுக்கு சொல்லியிருந்தார் அல்லவா? அங்குதான் அனைத்து விதமான வேதிப்பொருட்களையும் சேமித்து வைத்திருந்தார். அதையும் போலீஸ் பின்னர் கைப்பற்றியது. இந்த விஷயம் அங்குள்ள உள்ளூர் தினகரனை ஒத்த நாளிதழ்களில் தீயாய் பரவியது. அப்போது போர் பிரச்னைகளால் பெரிதும் கவனம் இல்லாமல் போனது. ஆனால் இந்த விஷயத்தை எப்படியோ செர்பியாவில் இருந்த பெலா கிஸ் மோப்பம் பிடித்து தப்பி விட்டார். காயமுற்ற மருத்துவமனையில் இருந்தவர், அந்த இடத்தில் மற்றொரு வீரரை படுக்கச் செய்துவிட்டு காணாமல் போனார். அமெரிக்காவில் இருந்தார், ரோமானியாவில் இருந்தார் என்று சொன்னாலும் ஆளை அதற்குப் பிறகு யாரும் பார்க்கவில்லை. போலீஸ் அவர் மீது பட்ட காற்றைக் கூட பிடிக்க முடியவில்லை.
பெண்களை பிடித்தது எப்படி?
1900 கால ஆள் இல்லையா? சிம்பிளாக த்தான் யோசித்தார். தந்தி மாதிரியான சூப்பர் விற்பனை கொண்ட பத்திரிகையில் மறுமண அறிவிப்பை கொடுப்பார். தான் இந்த வேலை செய்கிறேன், கையில் உள்ள பணம் என்று சொல்லி பெண்களை பிடிப்பார். இப்படித்தான் மரியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் அந்த பெண் வந்த உடனே மற்றொரு ஆளை பார்த்து மயங்கிவிட்டார். அதை பெலா கிஸ் கண்டுகொள்ளாதது போல இருந்தார். பின்னொரு நாளில் இருவரும் காணாமல் போனார்கள். பெலா கிஸ், தன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டு காதலனோடு அமெரிக்கா சென்று விட்டார் என கதையை தந்தியின் கள்ளக்காதல் செய்திபோல வசீகரமாக புனைந்தார். மக்கள் அப்புறம் சொல்லுங்க என்று கேட்கும் நிலைக்கு வந்த பிறகு அவரை யாராவது சந்தேகப்படுவார்களா? பெலா கிஸ் இருவரையும் கழுத்தை நெரித்து கொன்று இரும்பு பீப்பாய்களில் இருவரையும் ஊறப்போட்டிருந்தார். இந்த விஷயம் 1914க்குப் பிறகுதான் உலகிற்கு தெரிய வந்தது.
தொகுப்பு - வின்சென்ட் காபோ
நன்றி - மென்டல் ஃபிளாஸ், ஆல்தட் இன்ட்ரஸ்டிங் வலைத்தளங்கள்