சுயநலம், காசு இவற்றை மட்டுமே பார்க்கும் ஒருவனின் இரவு வாழ்க்கை! - இடம் ஜகத்
இடம் ஜகத் - தெலுங்கு
இயக்கம் அனில் ஸ்ரீகாந்தம்
ஒளிப்பதிவு
இசை ஸ்ரீசரண் பகலா
கதை
முழுக்க நெகட்டிவ்வான கதை. ஆனால் யதார்த்தமாக இருக்கிறது. டிலேய்டு ஸ்லீப் டிஸ் ஆர்டர் எனும் தூக்க குறைபாடு பிரச்னை நிஷித்திற்கு இருக்கிறது. இக்குறைபாட்டால் இரவு முழுக்க விழித்திருப்பவர், பகல் முழுக்க தூங்குகிறார். இதனால் அவருக்கு வேலை பறிபோகிறது. என்ன வேலை செய்யலாம் என்று தேடுபவருக்கு ப்ரீலான்சாக செய்திகளை டிவி சேனலுக்கு தரும் வீடியோகிராபர் வேலையை அமைத்துக்கொள்கிறார். இதில் இரக்கமே அவருக்கு கிடையாது. சேனலுக்கு அவர் தரும் செய்திகளுக்கு முடிந்தளவு அதிக காசு வாங்குகிறார். இதில் அவருக்கு சீனியரான ஒருவருடன் முட்டல் ஆகிறது. அப்போது, போதைப்பொருள் கும்பல் ஒன்றின் போலி விபத்து வீடியோவை பதிவு செய்கிறார். இதனால் அவரின் காதல், நட்பு அனைத்தும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இதனை எப்படி அவர் சமாளித்தார் என்பதுதான் கதை.
ஆஹா
இயக்குநரின் கதை. இறுதிவரை மாறாமல் பயணிக்கும் திரைக்கதைதான். கதைக்கு சரியான நடிகர்களை அவர் தேர்வு செய்யவில்லை. சுமந்தின் நண்பராக வரும் சத்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார். சுயநலமாக பணம் சம்பாதிக்கும் ஒருவனுக்கு நட்பு,காதல், தொழில் எப்படி சாத்தியமாகிறது என்பதுதான் கதை. இந்த கதையோடு பொருந்தினால் மட்டுமே சுமந்தை ரசிக்க முடியும். இல்லையெனில் கஷ்டம், முதல் பகுதியில் வேகம் இல்லை. இரண்டாம் பகுதியில்தான் கதை வேகமெடுக்கிறது.
ஐயையோ
சுமந்த், உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட்டு செரிமானம் ஆகாத மாதிரியே இருக்கிறார். சுயநலமாக இருப்பவன் பற்றிய கதைக்கு சுமந்த் பிரமாதமாக செட் ஆகிறார். ஆனால் அனைத்து காட்சிகளும் இறுக்கமாகவே இருப்பது எதற்கு என்று புரியவில்லை. அஞ்சு குரியனுக்கு வேலை டிசைனர் உடைகளை போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் நடப்பதும், வலிந்து காதலித்து மான்டேஜ் சாங்குகளுக்கு அபிநயம் பிடிக்கிறார். படம் படு சீரியசான மோடில் பயணிக்கிறது. காமெடி கிடையாது. காதல் மட்டுமே உள்ளது. அக்காட்சிகளிலும் ஹீரோ இறுக்கமாகவே உள்ளார்.
பொறுமையோடு பார்த்தால் படம் உங்களுக்கு பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
கோமாளிமேடை டீம்