நோயாளிகளுக்கு தசை தளர்வு மருந்து கொடுத்து கொன்ற கொலையாளி - நெசட்
அசுரகுலம் - இன்டர்நேஷனல்
ஆர்ன்ஃபின் நெசட்
நார்வே
சீரியல் கொலைகாரர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் நெசட் மருத்துவத்துறை சார்ந்த கொலைகாரர். 1936ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். ஓர் மருத்துவமனையில் செவிலியராக இருந்தார். அப்பணியில் அங்கிருந்த 22க்கும் மேற்பட்ட நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றார்.
எத்தனை பேரை கொன்றீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, எனக்கு சரியாக நினைவில்லை என்று தில்லாக பேசினார். அதே தில்லுடன்தான் அனைத்து கொலைகளை சிம்பிளாக செய்தார்.
ஆர்க்டலிலுள்ள ஜெரியாரிக் இன்ஸ்டிடியூட் எனும் நிறுவனத்தில் நெசட் இயக்குநராக இருந்தார். அங்குதான் கியூராசிட் எனும் தசை தளர்வு மருந்தைப் பயன்படுத்தி பலரையும் வைகுந்தம் அனுப்பி மகிழ்ந்தார்.
22 பேர்களை கொன்றதற்காக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் பின் ஐந்து மாதங்கள் விசாரணை நடந்தது. நார்வே நாட்டு சட்டப்படி உச்ச தண்டனையாக 21 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. விடுதலையானவர் 2004ஆம் ஆண்டு முதல் தன் பெயரை மாற்றிக்கொண்டு நார்வேயில் வேறிடத்தில் வசித்து வருவதாக கூறுகிறார்கள்.
கொலையும் அதன் தடமும்
இருபது ஆண்டுகள் செவிலியராக பணியாற்றி, மருத்துவமனை இயக்குநராக உயர்ந்தார். இக்காலகட்டங்களில் 138க்கும் மேற்பட்ட நோயாளிகளை கொன்று குவித்தார் என்கின்றனர். இயக்குநரை எப்படி சந்தேகப்படுவது 1981ஆம் ஆண்டு வரை அவர் மீது எந்த சந்தேகமும வரவில்லை. இவர் இயக்குநராக இருந்த காலகட்டங்களில் நிறைய நோயாளிகள் இறந்துகொண்டே இருந்தனர். அபாயகர அளவில் இந்த எண்ணிக்கை கூடியபடியே இருந்தது.
கியூராசிட் எனும் தசை தளர்வு மருந்தை அதிகமான அளவில் இவர் வாங்குவதை மருத்துவமனை ஊழியர் பார்த்து அங்கும் இங்கும் புறணி பேச பத்திரிகைகளுக்கு சூப்பரான செய்தி கிடைத்துவிட்டது. இதன் விளைவாக போலீஸ் அங்கு விசாரணைக்கு வந்தது. அப்பகுதியில் நிறைய நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றைக் கொல்லத்தான் இந்த மருந்து என்றார். போலீசார் இன்னும் கொஞ்சம் அழுத்திக் கேட்டதும் 22 பேர்களை மட்டுமே கொன்றேன் என்றார் நெசட்.
1962 முதல் 1981ஆம் ஆண்டு வரை பல்வேறு நோயாளிகளை தான் வேலை செய்த மூன்று நிறுவனங்களின் வழியே கொலை செய்து திகைக்க வைத்திருந்தார் நெசட். ஆனால் அவர்களின் உடல்களை திரும்ப தோண்டி எதையும் நிரூபிக்க முடியாது. காரணம், கியூராசிட்டின் எச்சம் எதுவும் இனி உடலில் இருக்காது. என்ன செய்வது கிடைத்த ஆதாரங்களை வைத்தே நெசட்டை நீதிமன்றத்திற்கு இழுத்தனர். ஆனால் நெசட்டின் வழக்குரைஞர்கள் அவருக்கு மனநிலை சரியில்லை. விசாரணை கூடாது என்றனர். ஆனால் அரசு மருத்துவர்கள் அவரின் உடல்நிலை, மனநிலை சரியாக இருக்கிறது. அவர் மீதான விசாரணையை செய்யலாம் என்று சொல்லிவிட்டனர். பின் என்ன விசாரணை நடந்து தண்டனை அறிவிக்கப்பட்டது.
தொகுப்பு வின்சென்ட் காபோ
நன்றி - க்ரைம்பீடியா வலைத்தளம் , கில்லர் புக் ஆஃப் சீரியல் கில்லர்ஸ்