அதிகாரத்திற்கு பணிதல் இயல்பானதுதானா?

 




அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

குற்றவாளிகளை ஆவணப்படுத்துதல் என்றால் என்ன?

ஒரு கொலைக்குற்றம் நடைபெறுகிறது. அதை செய்தவர் குறிப்பிட்ட பாணியைக் கையாள்கிறார். அதிலுள்ள உளவியல், நிலப்பரப்பு, குண இயல்பு ஆகியவற்றை சேகரித்து ஊகித்து எழுதி வைப்பதே ஆவணப்படுத்துதல் ஆகும். அதாவது புரோபைலர். என்பிசி என்ற தொலைக்காட்சியில் புரொபைலர் என்ற தொடர் வெளியானது. குற்றவாளிகளின் அடையாளங்களை ஆவணப்படுத்துதல் பற்றி ஏராளமான தகவல்களை செயல்பாடுகளை இத்தொடர் கொண்டிருந்தது. அதன் வழியாக புகழ்பெற்றது. இது அறிவியல் பூர்வமான முறையா என விவாதம் இன்றுமே நடைபெறுகிறதுதான். பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்க குற்றவாளிகளை ஆவணப்படுத்தும் முறை பெரிதும் உதவுகிறது. 

குற்றவாளியின் மனம் என்பது இருக்கிறதா?

குற்றங்களை ஒருவரது முன்னோர் செய்திருக்கலாம். சில தலைமுறைகள் அப்படியே செய்து வந்திருக்கலாம்.அதற்காக இப்போதுள்ள அத்தலைமுறையினரை சிறையில் அடைத்தால் எப்படி இருக்கும்? குற்றமனம் என்பதை அந்த வகையில் ஆவணப்படுத்தி கூற முடியாது. மனநிலை குறைபாடுகளை ஆவணப்படுத்தும் நூல்கள் உள்ளன. அவற்றை வாங்கிப்படித்து தெளிவு பெறலாம். எப்போதுமே சமூக விதிகளை, அடிப்படை அறங்களை மீறுபவர்களை குற்ற மனம் கொண்டவர்கள் என கூறலாம். சேரியில் கருப்பாக இருப்பவன் நேர்மையாக இருக்கலாம். அக்கிரகாரத்தில் வெள்ளையாக இருப்பவன், தினசரி இருவேளை குளித்து ஜவ்வாது தடவிக்கொண்டு  பிறர் மனைவிகளை திருடுபவனாக இருக்கலாம். மக்கள் சொத்தை கொள்ளையடிக்கலாம். படுகொலை செய்து மகிழலாம். குற்றமனம் எங்கும் இருக்கலாம் அனைத்திற்கும் வாய்ப்புள்ளது. 

ஆன்டி சோசியல் டிஸ்ஆர்டர் என்றால் என்ன?

பிறரின் பொருட்களை திருடுவது, எப்போதும் பிறரை சுரண்டி தன்னை மட்டுமே காத்துக்கொள்வது, எதிர்காலம் பற்றி எந்தவித திட்டமும் இல்லாமல் இருப்பது, அடுத்தவர்களை துன்புறுத்தி மகிழ்வது, குற்றவுணர்ச்சியே இல்லாமல் வாழ்வது, கிடைத்த வாய்ப்பில் பிறரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது, பொய்களை கிலோ கணக்கில் பேசுவது, சட்டென எரிச்சல் அடைவது, ஆக்ரோஷம் கொள்வது ஆகியவை ஆன்டி சோசியல் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டரின் அறிகுறிகள். 

டெட் பண்டி யார்?

தொடர் கொலைகாரர் டெட் பண்டி என்றால் ஊர் உலகிற்கு தெரியும். அழகானவர், கல்வி கற்றவர், புத்திசாலி. அரசியலில் செல்வாக்கு கொண்ட ஆளுநர் ஒருவருக்கு நெருக்கமானவர். இவர் முப்பது பெண்களை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டார். உண்மையில் கொலை செய்த பெண்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என ஊடகங்கள் புலனாய்வு செய்து எழுதின. பெண்களை காரில் ஓசி பயணம் செய்ய அனுமதிப்பதாக கூறி வல்லுறவு செய்து, அடித்து உதைத்து சித்திரவதை செய்து பின் கொல்வது வழக்கம். செவ்வியல் தன்மை கொண்ட சைக்கோபாத் மனிதர், டெட்பண்டி. அனைத்து கொலைகளும் முன்னமே திட்டமிட்டு சிறப்பாக அரங்கேற்றப்பட்டவை. 

குற்றம் செய்வதில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறதா?

நாற்பது வயதுக்கு கீழுள்ளவர்கள் வன்முறை, வல்லுறவு, படுகொலையில் ஈடுபடுகிறார்கள். ஏன் என்கிறீர்களா, அந்த வயதில் ரத்தம் சூடாக இருக்கிறது. செய்ய முடிகிறது செய்கிறார்கள். அவ்வளவுதான். வயதானபோது உடல் வலிமை குறைந்துவிடும். அப்போது மனம் நினைத்தாலும் தடவத்தானே முடியும்? அதற்கு மேல் ம் ஹூம்...பேட்டரி சார்ஜ் போய்விடும். வயதானாலும் குற்றங்களை செய்பவர்கள் குழுக்களாக இயங்குவார்கள். திட்டமிடுபவர் ஒருவர், செயல்படுத்துபவர்கள் அவருடைய குழுவினர் என இயங்குவார்கள். இந்த வகையில் வயது எண்பதே ஆனாலும் குற்றங்களை செய்யும் மாபியா குழுக்கள், தலைவர்கள் உண்டு. 

சமூகத்திற்கு எதிராக ஒருவர் மாறுவதற்கு என்ன அம்சங்கள் காரணம்?

வறுமை, கல்வியின்மை, இனக்குழு ரீதியான ஆதரவின்மை, அரசின் சமூக நல திட்டங்களின் பற்றாக்குறை, வன்முறையான குடியிருப்பு பகுதியினர், சமூகத்திற்கு எதிரான மன உந்துதல்கள்  என பல அம்சங்களைக் கூறலாம். இவை அனைத்துமே சேர்ந்து ஒருவரை சமூகத்திற்கு எதிரானவராக மாற்றுகிறது. 

ஒருவர் தனித்தன்மையை இழப்பது எப்படி?

கூட்டமாக இருக்கும்போது ஒருவர் தன்னுடைய பொறுப்பு, சுய விழிப்புணர்வு ஆகியவற்றை கைவிடுகிறார். இதனால் கூட்டத்தில் ஒருவர் வன்முறையை கையில் எடுத்தால், முழுக்கூட்டமுமே அதை தீவிரமாக செய்கிறது. மசூதியை உடைக்கிறார்கள், ரயிலை எரிக்கிறார்கள், சிறுபான்மையின பெண்களை வல்லுறவு செய்கிறார்கள், சொத்துக்களை அழிக்கிறார்கள். தனிப்பட்ட நபராக ஒருவர் வன்முறையை கையில் எடுக்காதவராக இருக்கலாம். கூட்டமாக இருக்கும்போது அவருக்கு எந்த பொறுப்பும், சுமையும் இல்லை. சுதந்திரமாக மனம்போன போக்கில் இயங்கலாம் என யோசிக்கிறார். மதக்கலவரம், போராட்டம், இசை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளில் கும்பல் மனநிலையை நீங்கள் பார்க்கலாம். 

குழுவாக யோசித்து முடிவெடுப்பது நன்மையா, தீமையா?
தனிநபர் சிந்தனையை ஒரு குழு வழிநடத்தி சென்றால் நன்மை அடையலாம், ஆனால், குழுவாக விவாதம் நடக்கும் இடத்தில் தனிநபர் தனது கருத்துகளை முடிவுகளை தணிக்கை செய்துகொண்டே இருப்பார். இதனால் தவறான முடிவுகளுக்கு எதிரான குரல்கள் வெளியே வராது. தனிநபர் ஒருவர் குழுவின் முடிவை விமர்சித்தாலோ, அல்லது தவறு என்று அடையாளம் கண்டாலோ அவரை சமூக விரோதி, விசுவாசமில்லாதவர் என்று கூறுவார்கள். இதற்கு உதாரணத்தைப் பார்ப்போம். 

இந்தியா, பல நாடுகளின் கூட்டமைப்பு. அது ஒற்றை தேசமாக இன்று வரை இல்லை. இனிமேலும் இருக்காது. ஆனால், சாதி இந்துகள் அது ஒற்றை நாடு என்று கூறி பல புனைகதைகளை, புராணங்களை கூறினர், கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் தங்களுக்கான தனி நாடாக பாகிஸ்தானை கேட்டதும் ஒற்றை நாடு என்ற கற்பனை காணாமல் போய்விட்டது. அன்றிலிருந்து முஸ்லீம்கள் தேச விரோதிகளாக மாற்றப்பட்டனர். அவர்கள் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க ஆதாரங்கள் காட்ட வேண்டியுள்ளது. ஒரு நாடாக உருவாக அங்கு வாழும் மக்களுக்கு இடையில் பொதுவான அம்சங்கள் தேவை. இந்துகள், முஸ்லீம்கள் இடையே அப்படியான பொது அம்சங்கள் ஏதும் இல்லை. பாகிஸ்தான் பிரிந்தது கூட சற்று தாமதமான நிகழ்ச்சிதான். அந்த நாடு முஸ்லீம்கள், விழிப்புணர்வு கொண்டிருந்தால் முன்னமே பிரிந்திருக்கும். அந்த இனக்குழுவினர் தேசிய உணர்வை அடைய தாமதித்துவிட்டனர். இதை நான் கூறுவதாக நினைப்பீர்கள். சட்ட மாமேதை அம்பேத்கர் கூறியது. அவர் குழுக்களில் இருந்து பிரிந்து தனித்துவமான குரலை எழுப்பியவர். 

சமூக அடையாளம் என்றால் என்ன?

சில நாடுகளில் குழந்தை பிறந்து சில ஆண்டுகளிலேயே குறிப்பிட்ட கால்பந்து அணியின் ரசிகராக மாறும். அதற்கு காரணம், அந்த குடும்பம் வழிவழியாக அப்படியான ஆதரவைக் கொண்டிருப்பார்கள். நீங்கள் பிறந்த ஊர், வாழும் ஊர், செய்யும் தொழில், பிடித்த திரைப்படம். இயக்குநர், நடிகர், உணவு என பலவகையில் ஒரு குழுவோடு ஒட்டிக்கொள்ள முடியும். இதை சமூக அடையாளம் என்று கூறலாம். உங்களுக்கு எதிராக இன்னொரு கால்பந்து அணி, நடிகர், உணவு இருக்கக்கூடும். அரசியல் கருத்து, அலுவலக அரசியல் பிரிவுகள், நட்புக்குழுக்கள், உறவுக்குழுக்கள் இப்படி அனைத்திலும் சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் போல கோஷ்டிகள் ஏராளம் உண்டு. இதையொட்டி முன்முடிவுகள், சிந்தனைகள், முடிவுகள் உருவாகின்றன. இதைபற்றிய கருத்தை சமூக உளவியலாளர் ஹென்றி தாஜ்ஃபெல் என்பவர் உருவாக்கினார். 
சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் இந்துத்து கும்பல்களுக்கு ஆதரவானவர். இவர் முஸ்லீம்களை அரசு பதவியில் இருந்து களையெடுக்க முயன்றார். ஆனால், பிரதமர் நேரு, சிறுபான்மையினரை பாதுகாக்கவேண்டும். அவர்களை மரியாதையாக நடத்தவேண்டும் என மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். வல்லபாய் படேல், நேரு என இருவரின் நோக்கமும் நாட்டைக் காப்பாற்றுவதுதான். ஆனால், அதை எப்படி செய்கிறோம் என்பதில் அவர்கள் சார்ந்திருந்த குழுக்களை அடிப்படையாக கொண்டு மாறுபட்டனர். வல்லபாய் படேலுக்கு முஸ்லீம்கள் மீது முன்முடிவுகள், பாகுபாடுகள் இருந்தன. நேருவுக்கு அப்படியான கருத்துகள் கிடையாது. சாதி,மதம், நிறம், இனம் பாகுபாடின்றி மக்கள் ஒற்றுமையாக இருந்தால் நாடு வளரும். ஒற்றை நாடாக இந்தியா என்பது இருக்கும் என நம்பினார். அதற்காக உழைத்தார். ஆனால் இன்று இந்தியா நொறுங்கிப்போன உடைந்த குடியரசு நாடாக உள்ளது.
 
அதிகாரத்திற்கு பணிதல் இயல்பானதுதானா?
மனிதர்களின் இயல்பே கீழ்த்தரமானதுதான். பிறவியிலேயே இழிவானவர்கள்தான். சட்டம் இல்லாவிட்டால் மனிதர்கள் நேர்மையாக நடந்துகொள்ள மாட்டார்கள் என சிந்தனையாளர் மாக்கியவெல்லி கூறுகிறார். அந்த வகையில் கேள்விக்கு தவறான பதில் சொல்பவர்களுக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கும் சோதனை ஒன்றை உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் செய்துபார்த்தார். ஆராய்ச்சியாளர், நடிகர் ஒருவரை ஏற்பாடு செய்து தவறான பதில் அளித்ததற்காக அவருக்கு மின் அதிர்ச்சி கொடுத்தார். அதாவது அப்படி நடித்தார். அதை சோதனையில் பங்கேற்றவர்களை பார்க்க வைத்தார். பிறகு, அதே சோதனையை பங்கேற்பாளர்களுக்கு நடத்தி தவறான பதில் சொன்னவர்களுக்கு மின் அதிர்ச்சி கொடுக்க செய்தார். பலரும் உடனே அதிகாரத்திற்கு பணிந்து, சக மனிதர்களுக்கு மின் அதிர்ச்சியை கொடுக்க தொடங்கினார். அதில் அவர்களுக்கு எந்த தயக்கம்,  அறத்தை மீறுகிறோம் என்ற குற்ற உணர்ச்சி கூட இல்லை. 
இன்று இத்தகைய மனநிலையை காவல்துறையிடம் பார்க்கலாம். காவல்துறையில் பல சாதியினர் இருக்கலாம். ஆனால், அவர்கள் அதிகாரத்திற்கு பணியும் வேட்டைநாய்கள். அதிகாரத்திற்கு பொருளாதார பலன்களுக்காக மக்களை சுட்டுத்தள்ளுவது, லாக்கப்பில் அடித்துக்கொள்வது, சமூக விரோத செயல்களை செய்வது ஆகியவற்றை செய்கிறார்கள். 

அரசு எடுத்த முடிவு தவறு என்றாலும் அதற்கு மக்கள் பணிவது எதற்காக?

சமூக அமைப்பே வலியவனுக்கு பணிவது என அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் அதிகாரம், பொருளாதார பலம்தான் உங்களை பாதுகாக்கிறது. எதிரிகளை ஒடுக்கி பயன்களை உறிஞ்ச உதவுகிறது. அதிகார சக்திகளுக்கு அடிபணிய பள்ளி, கோவில், குடும்பம் உங்களுக்கு கற்பிக்கிறது. இந்த அமைப்புகள் எடுக்கும் முட்டாள்தனங்கள் எதிர்த்தால் உங்களுக்கு சமூக விரோதி, கலகக்காரன் என்ற பட்டம் சுமத்தப்படுகிறது.இதனால் வேலை இழப்பு, தண்டனை, உளவியல், உடல் ரீதியான நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகிறது. இத்தனை விஷயங்களையும் சமாளிக்க முடியாமல் ஒருவர் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பணிகிறார். அரசு ஆணைக்கு கட்டுப்படுகிறேன் என்பது முட்டாள்தனமாக பணிதல். அதன் வழியாக ஆபத்துகளே அதிகம் நேரும். 

மீடு என்ற செயல்பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். சினிமா, ஆண்களின் மேலாதிக்கம் கொண்ட துறை. இங்கு நாயகிகளாக வரும் பெண்களை படுக்கைக்கு அழைத்து சுரண்டித்தான் பலரும் பிழைக்கிறார்கள். இதைப்பற்றி புகார் சொன்ன நடிகைகள் எவருக்கும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. நடிகை, பாடகி, துணைஇயக்குநர் என யாராக என்ன சாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விபச்சாரி என குற்றம்சாட்டி ஒதுக்கி வைக்கிறார்கள். மறைமுகமாக அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி கொடுத்து பணிய வைக்க முயல்கிறார்கள். கேரளத்தில் அரசு அமைத்த கமிட்டி அறிக்கையைக் கூட அரசு ஓரமாக எடுத்து வைத்துவிட்டது. இத்தனைக்கும் அது இடதுசாரி அரசு. ஆக, இங்கு ஒட்டுமொத்த சமூகமே களங்கமாக கறைபடிந்த ஒன்றாக உள்ளது. 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!