நன்மையோ, தீமையோ தன் வாழ்க்கையை முழுமையாக வாழ முயலும் நாம்கூங் குடும்பத்தின் நோயுற்ற இரண்டாவது மகன்!

 ஹெவன்லி மார்சியல் காட்
மங்கா காமிக்ஸ்
பாடோ.ஐஓ

நன்மை, தீமை பற்றியெல்லாம் கவலைப்படாத ஆள். தன்னை நலமாக வைத்துக்கொள்ள நிறைய அடிதடி, கொலை, சதித்திட்டங்களை செய்கிறார். இறுதியாக ஒரு கட்டத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பு ஆட்களைக் கூட கொன்றுவிட்டு தற்காப்புக்கலையில் உச்சம் அடைய முயல்கிறார். ஆனால், அவரது ரத்தக்களறியான கடந்தகாலம் தடையாகிறது. அவரை அந்நிலைக்கு அனுமதிக்க உயரிய சக்திகள் மறுக்கின்றன. இதனால் அவரின் ஆன்மா, நாம்கூங் இனக்குழுவின் நோயுற்ற பிள்ளை உடலில் புகுகிறது. அந்த பிள்ளைக்கு உடலில் 9 யின் யாங் தடை உள்ளது. இந்த நோய் அரிதானது. இப்படி உள்ளவர்கள் இருபது வயதில் இறந்துபோய்விடுவார்கள். 
உடல் பலவீனம், எலும்புகள் முறிவது, குளிரைத் தாங்க முடியாதது ஆகியவை நோயின் அறிகுறிகள். 
முந்தைய காலத்தில் மிகச்சிறந்த வீரனாக இருந்தவர், நிகழ்காலத்தில் பலவீனமான உடல்கொண்ட ஆண் பிள்ளையின் உடலில் இருந்துகொண்டு இயங்க முடியாமல் தவிப்பதை கதையில் சிறப்பாக காட்டியுள்ளனர். ஓவியங்கள் நன்றாக உள்ளன. 

கதையில் நாயகன், முந்தைய காலத்தில் இருந்ததைப் போல கொடூரமாக தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவனாக இருப்பதில்லை. அதேசமயம், தனக்கு தேவையானவர்களை காப்பாற்ற முனைகிறான். அதற்கு அவன் சுயநலம், பயன்படுத்துதல் என்று கூறினாலும் கூட சம்பவம், நெருக்கடி ஆகியவற்றைப் பொறுத்து நாயகனின் ஆளுமையை வெளிப்படுத்தும் இடங்கள் என கூறலாம். 

அறுபது அத்தியாயங்களில் நாயகன் முழுமையாக உடலில் உள்ள ஒன்பது அடைப்புகளையும் நீக்க முடிவதில்லை. ஆனால், வலிமையானவனாகவே இருக்கிறான். முகமூடி வில்லன்களோடு போடும் சண்டை, அதற்கான ஓவியங்கள் எல்லாம் அருமை. தண்டர் டிராகன் குழுவை அடித்து உதைத்து தண்ணீரில் முக்கி சித்திரவதை செய்வது, அவர்களுக்கான பயிற்சிமுறை எல்லாமே வேடிக்கையானவை. 

நாயகனுக்கு விபச்சாரம், அடிமை முறை, கந்துவட்டி சித்திரவதை ஆகியவை அக்காலத்தில் இருந்தாலும் அவற்றை அவன் ஏற்பதில்லை. கருப்பு குழுக்கள் என அழைக்கப்படும் அக்குழுவினரை அடித்து துவைத்து தன்னுடைய வழிக்கு கொண்டு வருகிறான். கந்துவட்டி, நடன விடுதி, சூதாட்ட விடுதி ஆகியவற்றை தனது பிடியில் கொண்டு வருகிறான். இதை வைத்தே நாம்கூங் குடும்பத்திற்கான வருமான வாய்ப்பை உருவாக்குகிறான். 

நாயகன் மீது அன்பை பொழியும் அப்பா, அண்ணன், உடனிருக்கும் பாதுகாவலர் என நிறைய பாத்திரங்கள் உண்டு. முந்தைய வாழ்க்கையில் அவன் தனியாகவே இருப்பான். அவனுக்கென தண்டர் டிராகன் குழு ஒன்றுண்டு. அதை ஒழுங்குபடுத்தி தனக்கான விசுவாசம் கொண்ட படையாக மாற்றுவான். நாயகன் பெயர் கூறவில்லையே, ஹியூக். 

நாம்கூங் குடும்பத்தில் ஹியூக்கின் தந்தையே குடும்பத் தலைவர். அவரை அப்பதவியில் இருந்து நீக்க சில வெளிப்புற சக்திகள் முயலும். அதற்கு ஹியூக்கின் பெரியப்பா மறைமுகமாக உதவிசெய்து, வெளியே நல்லவனாக காட்டிக்கொள்ள முயன்று கொண்டிருப்பார். ஹியூக் பெரியப்பாவின் இரு மகன்களை அடித்து உதைத்து எலும்புகளை உடைத்து படுக்க வைப்பான். அதேநேரம், அப்பாவை குடும்பத் தலைவராக தக்க வைக்கவே தற்காப்புக்கலை போட்டிக்கு ஒப்புக்கொள்வான். ஹியூக்கின் மருத்துவச் செலவிற்காக நிறைய செலவானதால், நாம்கூங் நிர்வாகத்தில் பணப்புழக்கமே பெரிதாக இருக்காது. அதை ஹியூக் அடையாளம் கண்டுகொள்வான். 
அதை அவன்தான் சரிசெய்கிறான். இதற்காக தங்களுக்கு கொடுத்த பணியை தண்டர் டிராகன் குழுக்களை வழிநடத்தி செய்கிறான். அப்பணியில் கிடைக்கும் தொகையை தானே வைத்துக்கொள்கிறான். முந்தைய பிறவியில் திருட்டு பொருட்களை விற்கும் அமைப்பை பற்றி தெரிவதால், அங்கு கொண்டுபோய் திருட்டுப்போன பொருட்கள், கிடைத்த செல்வங்களை, அடிமை மனிதர்களைக் கூட விற்கிறான். இதில், அந்த அமைப்பை விட லாபம் சம்பாதிப்பது ஹியூக்தான். திருட்டு பொருட்களை விற்கும் அமைப்பு ஒரு உளவு நிறுவனம். பல்வேறு தகவல்களை பிறருக்கு காசுக்கு விற்பதே வேலை. இந்த நிலையில், உளவு தகவல்களை சேகரிக்க ஆட்கள் தேவை அல்லவா, அதற்கு கூட ஹியூக் தனது ஆட்களை பயன்படுத்திக்கொள். ஆனால், அதற்கான காசை எனக்கு கொடுத்துவிடு என்கிறான். இப்படியாக ஹியூக் அனைத்து விதத்திலும் காசு சம்பாதிக்கிறான். 

இப்படி சம்பாதித்த காசைக் கொண்டுபோய் நிதித்துறை அதிகாரியிடம் கொடுக்க அவருக்கு அதிர்ச்சி. இந்த பணம் எப்படி எங்கே வந்தது என கேட்கிறார். நம் குடும்பத்திற்கு பணம் தேவை. கேள்வி கேட்டால் பணத்தை நான் எடுத்துக்கொண்டு போய்விடுவேன். பணத்தை கேள்வி கேட்காமல் வாங்கிக்கொள்ளுங்கள் என பேசுகிறான். கணக்காளருக்கு காசு இல்லாமல் திண்டாட்டமாக உள்ளது. எனவே பணம் இருந்தால்தான் குடும்பமே நிமிரும் நிலைமை. எனவே, இரண்டாவது மகன் மூலம்தான் குடும்பம் நிமிரும் போல என நினைத்துக்கொண்டு பணத்தை வாங்கி உள்ளே வைக்கிறார். பிறகுதான் நாம்கூங் தலைவருக்கான உணவில் கூட இறைச்சி வருகிறது. அதைப் பார்த்து ஹியூக்கின் வாயில் எச்சிலூறுகிறது. ஆனால், தலைவர் இறைச்சியா, இதற்கு பணம் எங்கே வந்தது என கேட்க, கணக்காளர், இரண்டாவது மகன் கொடுத்தார். என கூறுகிறார். உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் உணவை மாற்றிவிடுகிறேன் என்று சொல்ல தலைவர் இறைச்சியை பார்த்த மகிழ்ச்சியில் அமைதியாகிறார். இப்படியாக நாம்கூங் மெல்ல வருமானம் பெற்று வளருகிறது. இந்த நிலையில் சில சதிகாரர்கள் நகரில் ஊடுருவுகிறார்கள். அதை ஹியூக் எப்படி அடையாளம் கண்டு கலகத்தை அடக்குகிறான் என்பதே கதையின் முக்கியப்பகுதி. 

கோமாளிமேடை குழு



 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!