பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா?
பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா?
பணம் அல்டிமேட்டான் விஷயம். அதை வைத்துத்தான் பொன், பெண், நிலம் ஆகியவற்றை சொந்தமாக்கிக்கொள்ள முடியும். நல்ல உணவை உண்ண முடியும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். பணமில்லாத நிலையில் காதலைக் காப்பாற்ற முடியாது. திருமணம் நடக்காது. அனைத்திற்கும் பெரும் போராட்டமாக இருக்கும். இந்தியா போன்ற மதவாத நாட்டில், சிறுபான்மையினர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சம்பாதிக்கவிட்டால் எளிதாக அவர்களை பெரும்பான்மையினர் அழித்துவிடுவார்கள். உங்களிடமுள்ள பணம் உடலில் தெரியவேண்டும். அப்போதுதான் ஊர், உலகம் சற்று விலகி தள்ளி நிற்கும். கதவைத் திறந்துவிடும். அனைத்து கதவுகளும் காசு என்றால் திறக்கும். திறக்காத கதவுகளும் கூட. இப்போது அமெரிக்கா பிற நாடுகளை நீ அதை செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது என மிரட்டுகிறது என்றால் அதற்கு என்ன காரணம். அதன் நாணயம்தான் பல்வேறு வியாபாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. வருமானம் ஏகத்துக்கும் வருகிறது. அதை வைத்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த நாடு சொல்வதை மூன்றாம் உலக நாடான, அடிமை புத்தி கொண்ட இந்தியா கேட்காவிட்டால் பொருளாதாரம் திட்டமிட்டு வீழ்த்தப்படும். சீனா, கனடா போல தைரியமாக எதிர்த்து நிற்க இந்தியாவுக்கு மனவலிமையோ, துணிச்சலோ, திறனோ கிடையாது.
செல்வச் செழிப்பாக வாழ்ந்தவர்களின் பழக்க வழக்கமும், வறுமையான சூழலில் வளர்ந்தவர்களின் பழக்கவழக்கமும் பார்த்தாலே தெரிந்துவிடும். அடிப்படையாக ஒரு சமூகம் செல்வச் செழிப்பாக உள்ளவர்களிடம் குழையும். காசு இல்லாதவர்களை பிச்சைக்காரப்பயலே என எட்டி உதைக்கும்.
பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்புண்டா?
இதை எப்படி தீர்மானிப்பது, செலவு செய்பவர்தான் பணத்தை தனது மகிழ்ச்சி தரும் விஷயங்களில் முதலீடு செய்யவேண்டும். அதாவது பயணம், உணவு, நூல், திரைப்படம் என இப்படியாக சொல்லலாம். பரிசு வழங்குவது, அறக்கட்டளை செயல்பாடுகள் கூட ஒருவருக்கு கிக் தரலாம்.
இணையத்தில் கேலி வதை செய்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பள்ளி, அலுவலகம், இணையம் ஆகிய இடங்களில் கேலி வதை பரவலாக நடைபெறுகிறது. இது அனைவரும் அறிந்ததுதான். தமிழ்நாட்டில் ஆற்றுப்பாசனம் உள்ள இடங்களில் பார்ப்பனர்கள் வாழ்ந்தனர். இவர்கள் அங்கு சாதி படிநிலையை உருவாக்கி மக்களை சுரண்டி வயிறு வளர்த்தனர். இன்று அவர்கள் அயல்நாடுகளுக்கு சென்று பிழைத்துக்கொண்டாலு்ம சாதி படிநிலை இடைநிலை சாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை வேட்டையாடி வருகிறது. இணையத்தில் நடைபெறும் கேலிவதை, முகம் தெரியாமல் என்ன வேண்டுமானாலும் வசை பாடலாம் என்ற தைரியத்தில் வருவது. குறிப்பாக எக்ஸ் தளத்தில் இப்படியான கேலிவதைகள் அதிகம். அங்கு வருபவர்கள் பலரும் அடக்கி வைக்கப்பட்ட கோபத்தை வெளிப்படுத்தவே முயல்கிறார்கள். எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் கூட இப்படியான கேலி வதை செய்யக்கூடிய வலதுசாரிகாரர்தான். அவர் வந்தபிறகு சுதந்திர பேச்சு என்ற வகையில், வெறுப்பு பேச்சை வளர்க்கும் விதமாக அல்காரிதை மாற்றியமைத்துவிட்டார்.
இணைய கேலி வதை காரணமாக ஒருவர் மன அழுத்தம், தற்கொலை எண்ணம் கொள்ளலாம். பதற்றம் ஏற்படலாம்.
இணையத்தில் மதவாத அரசுகளே வெறுப்பு பேச்சை வளர்ப்பதால், ஒருவர் கத்தி கபடாக்களுடன் புகைப்படங்களை பதிவிட்டாலும் பெரிதாக நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்களுக்கு சாதி, மதம், கலவரம் மூலம் நன்மை கிடைக்கிறதே, பிறகு என்ன?
மன அழுத்தத்தை குறைப்பதில் கார்டிசோலின் பங்கு என்ன?
அது ஒரு ஹார்மோன். குறுகிய கால அளவில் மன அழுத்தம் குறைக்க உதவுகிறது. அதிகம் உற்பத்தியானாலும் ஆபத்து. குறைந்தாலும் ஆபத்து. சரியான அளவில் இருக்க, நீங்கள் மன அழுத்தம் இல்லாத சூழலில் வேலை செய்யவேண்டும். சாடிச, குரூர மனநிலை கொண்ட பிறவிகளை தவிர்க்க வேண்டும். கார்டிசோல் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும். தூக்கம் வராது. நீரிழிவு நோய் தோன்றும். இந்த ஹார்மோன் உடல், மனம் என இரண்டையும் பாதிக்கக்கூடியது. இதன் விளைவாக அதிக மன அழுத்தத்தில் உழல்வோருக்கு ஞாபக மறதி ஏற்படும்.
சமூக வலைத்தளம் ஒருவரின் தனிமையை போக்குகிறதா?
சமூக வலைதளங்கள் பள்ளி, கல்லூரி நண்பர்களோடு அரட்டை அடிக்க உருவானவை. அவ்வளவுதான். அங்கு சமூக விஷயங்களை பகிர்வது பின்னரே தொடங்கியது. வெட்டி அரட்டை, கேலிவதை, மிரட்டல் ஆகியவைதான் இன்று இணையத்தில் நடைபெற்றுவருகிறது. எவ்வளவு நேரம் சமூக வலைதளத்தில் உலாவுகிறீர்களோ, அந்தளவுக்கு நிஜ உலகில் தொடர்புகள் குறைகிறது. செலவழிக்க நேரம் இல்லாமல் போகிறது. இணையத்தில் பிறருடனான ஒப்பீடு அதிகம் நடைபெறுகிறது. நேரடியாக ஒருவரை சந்தித்து பேசுவதும், இணையத்தில் அரட்டை அடிப்பதும் ஒன்றாகாது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை விட குப்பைகளை சமூக வலைதளங்களில் அதிகம். தனிமையை போக்குவதாக மாயம் செய்கிறது. அவ்வளவுதான்.
ஒருவருக்கு பிடித்ததை மட்டுமே சமூக வலைத்தளம் காட்டுகிறதா?
அப்படித்தான் அதன் அல்காரிதம் வடிவமைக்கப்படுகிறது. உங்களுக்கு பிடிக்காத செய்திகளே இருந்தால், அந்த வலைதளத்தை விட்டு உடனே வெளியே வந்துவிடுவீர்களே? உங்களை அப்படியே பார்க்க வைக்க ஸ்க்ரோல் செய்து பார்க்கும் வகையில் சமூக வலைதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதை பயன்படுத்திய சில நாட்களில் உங்களைப் பற்றிய ஆய்வு செய்து விரும்பும் பின்தொடரும் ஆளுமைகளையொட்டிய பதிவுகளை மட்டுமே காட்டுவார்கள். பன்மைத்தன்மையான பதிவுகள் குறைவதால், பிரச்னை பற்றிய இன்னொரு கோணம், பக்கம் தெரியாமல் போய்விடுகிறது. மனதை தாராளமாக திறந்து வைத்து பிரச்னைகளை அணுகினால் மட்டுமே தீர்வை எளிதாக அடைய முடியும்.
சமூக வலைதளத்தில் இயங்கியபடியே மனநலனை காத்துக்கொள்ள முடியாதா?
முடியாது கண்ணு. சமூக வலைதளம் முழுக்க நச்சுத்தன்மை பரவிவிட்டது. அதீத தேசியவாதம், இஸ்லாம் வெறுப்பு, இந்துத்துவ வெறி, சாதி கலவரம், தாக்குதல்கள் மட்டுமே பதிவுகளாக இருக்கிறது. இதில் எங்கே போய் உறவுகளை பராமரிக்க? கல்வி, ஊக்கம், நல்ல செயல்களை வெளியிடும் கூறும் கணக்குகளை பின்தொடரலாம். பிற கணக்குகளில் இருந்து விலகிவிடலாம். சமூக வலைதளத்தில் செலவிடும் நேரத்தைக் கூட மெல்ல குறைத்துக்கொள்ளலாம். முழுக்க கணக்குகளை அழித்துவிட்டால் மிக சிறப்பு.
புதுமைத்திறன் சிலருக்கு மட்டும்தான் சொந்தமா?
அப்படி ஊடகங்கள் எழுதுவார்கள். பாரம்பரியம், ரத்தம் என்றெல்லாம் ரொமான்டிசைஸ் செய்து எழுதுவது கட்டுரையை படிக்க வைக்க, நூலை விற்க வைக்கத்தான். அதில் எந்த அறிவியல் உண்மையும் கிடையாது. சாதி, மதம், இனம் வேறுபாடு இன்று ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம், வாசிக்கும் நூல்கள், சந்திக்கும் மனிதர்கள் என அனைத்துமே புதுமைத்திறனை மேம்படுத்த உதவுகிறது. பயிற்சி மூலம் அனைத்துமே சாத்தியம்தான். இந்தியாவில் பார்ப்பனர்கள் அரசு பதவிகளை கைப்பற்றியதற்கு காரணம் மனப்பாடம் செய்யும் பயிற்சிதான். அன்றைய ஆங்கிலேயர்கள் அப்படியான கல்விமுறையை உருவாக்கி வைத்திருந்தனர். அதில் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலினத்தவர்கள் வெல்ல முடியவில்லை. இன்று நிலைமை அப்படியில்லை. இருந்தாலும் இந்து மதவாத அரசு தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலினத்தவர்களை இழிவான வேலைகளை செய்யவைக்க நுழைவுத்தேர்வுகளை உருவாக்கி கழித்துக் கட்டி வருகிறது. உண்மையில் வாய்ப்புகள் கிடைத்தால், கல்வி பயின்றால் அனைவருமே சாதிக்க முடியும். புதுமைத்திறனை நிரூபிக்க முடியும்.
சமூகம் நம்மை எப்படி கட்டமைக்கிறது?
உலகம் ஆண்களுக்கானது. ஆண்கள் அழுக கூடாது. உறுதியாக நிற்கவேண்டும். ஆண்களுக்கு நீலநிற உடைகள், பெண்களுக்கு ரோஸ் நிற உடைகள் என பெற்றோர்கள் நம்புகிறார்கள். ஆண்கள் என்றால் செல்வம் வலிமை கொண்டவர்கள். பெண்கள் என்றால் கருணை, அழகான தோற்றம் இருக்கவேண்டும். பெண்களை ஆண்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறுவது, அவர்களை சொத்தாக கருதுவது, பெண்களின் திருமணத்தை அவர்களின் குடும்பமே சாதியை வைத்து தீர்மானிப்பது எல்லாம் இன்றும் நடக்கிறது. முகத்தில் மிளகாய் பொடியை வீசி முதுகில் குத்திக்கொன்ற குரூரத்தை திருநெல்வேலி கொலையில் அறிந்திருப்போம். அக்கா தனக்கான இணையை தானே தேர்ந்தெடுக்கிறாள். ஆனால், அதை பொறுத்துக்கொள்ள முடியாத சகோதரன், இணையை தானே வெட்டிக்கொல்கிறான். இதற்கு அவனது பெற்றோரும் உடந்தை. பைத்தியக்காரத்தனமான சாதி பெருமிதம்.... கணவன் அல்லது பிள்ளை தாயை பராமரிக்கவேண்டும் என்ற சிந்தனையில் இருந்துதான் குற்றங்கள் வருகின்றன. வயது வந்த இளையோர் தனது வாழ்க்கையை தானே தீர்மானித்துக்கொள்ளலாம் அல்லவா? அதில் கூட பெற்றோர் ஆதிக்கம் செலுத்தி பெண்ணுடலின் புனிதம் காக்க முயல்கிறார்கள்.
மூடநம்பிக்கைகளை நம்புவது ஏன்?
குறிப்பிட்ட பேனாவில் தேர்வு எழுதுவது, ஏணியின் கீழே போகாதது, குடும்ப நன்மைக்கு எலுமிச்சம் பழத்தில் குங்குமம் தடவி தெருமுனையில் எறிவது, திருஷ்டிக்கு நீர்ப்பூசணியை சாலையில் உடைப்பது, வாகனங்களுக்கு எலுமிச்சையை கட்டுவது என இந்தியாவில் இல்லாத மூடநம்பிக்கைகளே கிடையாது. மாட்டு மூத்திரத்தை குடித்தால் காய்ச்சல் தீரும் என சொன்ன ஐஐடி இயக்குநர், தமிழ்நாட்டில் இருக்கிறார். நிலையில்லாத உலகில் மூடநம்பிக்கைகள் வாழ்க்கை மீது கட்டுப்பாட்டை தருகிறது. அதாவது அப்படியே மக்கள் நம்புகிறார்கள். மூடநம்பிக்கைகள் ஒருவித நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால் நடைமுறை உண்மைகள் ஒருவரை அச்சுறுத்துகின்றன.
கோமாளிமேடை - மிஸ்டர் ரோனி
கருத்துகள்
கருத்துரையிடுக