எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள முயலும் தீயசக்தி இனக்குழுவின் இளவரசன்!
அன்ரிவல்டு வில்லன்
மங்கா காமிக்ஸ்
பேடோ.ஐஓ
கொரியாவில் வாழ்பவர் தான் எழுதிய காமிக்ஸில் நுழைந்து துணை பாத்திரமாக மாறுகிறார். அந்த நிலையில் தனக்கு வரும் ஆபத்துகளை முன்னே உணர்கிறார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முனைகிறார். அது சாத்தியமானதா என்பதே கதையின் மையம்.
நாயகன், ஃபர்ஸ்ட் மூன் கல்ட் என்ற இனக்குழுவின் நான்காவது இளவரசன். அதாவது தீயசக்தி இனக்குழு. குடித்துவிட்டு பெண்களை புணர்ந்துகொண்டு வாழ்வதே வாழ்க்கை லட்சியமாக வாழ்கிறான். திடீரென அவனது உடலுக்குள் புதிய ஆன்மா புகுந்தவுடன் அனைத்தும் மாறுகிறது. எதிர்காலத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பின் வீரன் தாய் என்பவனால் வாளால் வெட்டி கொல்லப்படுவதை அறிகிறான். அந்த சம்பவம் நடக்க பத்து ஆண்டுகளே உள்ளது. அதற்குள் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். நாயகன் உடல் பலவீனமானது. எனவே, அதை வலு செய்ய முயல்கிறான். எதிர்காலம் ஒருவனுக்கு தெரிவது புனைவு கதைக்கு சிறந்த திருப்புமுனை. பிறரை விட புத்திசாலியாக நிறைய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆதரவு அணிகளை அமைக்கலாம். எதிரிகளை முன்னமே ஒடுக்கலாம். நட்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
அந்த வகையில் நாயகன் தனக்கென உடற்பயிற்சி ஆலோசகராக கணக்குத் துறையில் உள்ளவரை அடையாளம் கண்டறிகிறான். அவர்தான் எதிர்காலத்தில் போர் திட்டங்களை வகுக்கும் வல்லமை கொண்டவர். அடுத்து வில் வித்தகனான பள்ளிகால நண்பனை சந்திக்கிறான். அவனை கடந்த காலத்தில் கேலி சித்திரவதை செய்திருக்கிறான். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு நட்பை புதுப்பித்துக்கொண்டு வில் பயிற்சியை அடிப்படையாக கொண்டு தனிபடையை உருவாக்குகிறான். நாயகன் யுன், துணைப்பாத்திரம்தான். ஆனால், நடைபெறும் நிகழ்ச்சிகள் அவனை மெல்ல மையப் பாத்திரமாக மாற்றுகிறது. அடிப்படையில் அவன் எழுதிய கதையில்தான் அவனே பாத்திரமாக இருக்கிறான். ஆனால் ஒருகட்டத்தில் அவனே அக்கதையின் போக்கை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறான்.
கதையில் முக்கியமான பகுதி. அவனைக் கொல்வதாக கருதிய நாயகன் டாய், சிறுவனாக இருக்கும்போது எப்படி பெற்றோரை எதிரிகளால் இழந்து அனாதையாக உயிருக்கு பயந்து வாழ்வது. அதை யுன் குகை ஒன்றில் பொக்கிஷம் தேடப்போகும்போது கண்டுபிடிக்கிறான். டாய், யுன் ஆகியோருக்கு இடையில் மெல்ல நட்பு வலுவாகிறது. உண்மையில் அந்த குகையில் யுன், டாயைக் கொல்ல நினைக்கிறான். ஆனால், டாயின் நல்ல குணம் அவனை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இவனை கொல்லாமல் நம்மைக் காத்துக்கொள்ள முடியாதா என யோசிக்கத் தொடங்குகிறான். அடுத்து, டாயின் காதலியாக வரும் இளவரசியுடனான உரையாடல் ஒன்று வரும். அது கூட இருவரும் காதல் மொழி பேசுவதாக இருக்காது. டாங் இனக்குழு மக்களுக்கு, ஊட்டச்சத்துகளை தேநீர் வடிவத்தில் வழங்குவதை பற்றி யுன் பேசுவான். அதில் அவனுக்கு மறைமுகமாக வணிக நோக்கம் உண்டு. ஆனால், இளவரசிக்கு நீதி, பிறருக்கு உதவுவது ஆகியவற்றில் கவனம் இருப்பதால் வெளிப்புறமாக தெரியும் நன்மையை மட்டுமே கூறுவான். அதுவே அவளை ஈர்த்துவிடும்.
இக்கதையில் நாயகனுக்கு உடல் வலிமையோ, தற்காப்புக்கலைகள் மீதோ பெரிய பிடிப்பு இருக்காது. யுன்னின் நோக்கம், தனது உயிரை டாயிடம் இருந்து காத்துக்கொள்வதாக இருக்கும். தனது நோக்கத்தின் இடையில் தீயசக்தி ரத்தம் என்ற மூடநம்பிக்கை குழுவை சந்திப்பான். அவர்கள், ஃபர்ஸ்ட் மூன் குழுவுக்கும், தற்காப்பு அணிகள் கூட்டமைக்கும் இடையில் போரை வலிந்து உருவாக்க முனைந்துகொண்டிருப்பார்கள். ஏறத்தாழ அந்த வீரர்கள் பலரும் தற்கொலைப்படை வீரர்கள். இவர்களின் உடலில் உள்ள ரத்தமே விஷத்தன்மை கொண்டது. கடவுளின் விதியை மீறக்கூடாது என்பதே இவர்களது லட்சியம். யுன் அதை மீறுவான், அவனைக் கொல்ல அந்த தீயசக்தி ரத்தம் என்ற குழு முயலும்.
கதை அறுபத்து மூன்று அத்தியாயங்களோடு நின்றுவிட்டது. அடுத்த சீசன் தொடங்கும் என நினைக்கிறேன். இதுவரை தற்காப்புக்கலை, அரியாசன போட்டி, தற்காப்பு அணியின் அசிங்கமான அரசியல் ஆகியவற்றை பேசியது. இதில் யுன், டாய் ஆகியோரின் நட்பு முக்கியமானது. துணைப் பாத்திரம் என்றாலும் யுன் தீயசக்தி இனக்குழுவில் உருவாக்கும் மாற்றங்கள் காலத்தை கடந்தவை. தொலைநோக்கானவை. அதோடு அவன் முழுமையாக கதையை மாற்ற மாட்டான். கதையில் யுன் வெட்டிக் கொல்லப்படுவான். அந்த சூழலை மட்டும் தடுக்க முற்படுவான். அவ்வளவுதான்.
அவனுக்கு நன்மை, தீமை பற்றிய பிறரது கருத்துகளின் மீது பெரிய ஆர்வம் இருக்காது. தனது உயிரைக் காத்துக்கொள்ளவே ஓடுவான். அதேநேரம் ஊழல் செய்பவ்ர்களை, மக்களை துன்புறுத்துபவர்களை வெறுப்பான். யுன்னின் கடந்தகாலத்தின் மகிழ்ச்சி தாய் இறந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும். குடி, பெண்கள், பலவீனமானவர்களை சித்திரவதை செய்வது என வாழ்வான். பிறகுதான் அவனது உடலில் எழுத்தாளரின் ஆன்மா உள்ளே புகும்.
ஒரு உடலில் இரு ஆன்மாக்கள் இருந்தால் அடையாளச் சிக்கல் வராதா, அதையும் எழுத்தாளர் கதையில் கொண்டு வந்திருக்கிறார். கடைத்தெரு ஒன்றில் கண்ணாடியில் முகத்தை பார்க்கும்போது யுன் துணுக்குறுவான். தனது முகம் போலவே யுன்னின் முகமும் உள்ளது என அதிர்ச்சியடைவான். இதுதான் எழுத்தாளரின் டச். கதையின் போக்கில் யுன் தன்னை சோதித்து பார்ப்பது வித்தியாசமாக இருந்தது.
கதை இன்னும் நிறைவு பெறவில்லை. டேங் இனக்குழுவின் இளம் தலைவரோடு தற்காப்பு அணி கூட்டமைப்பிற்கு செல்லும்போது, கொள்ளைக்கூட்டத் தலைவனோடு சண்டை போடுவதோடு கதை முடிகிறது. உண்மையில் யுன் அந்த இடத்தில் சண்டை போட மாட்டான்.ஆனால், இன்னொருவரின் உயிரைக் காக்க சண்டை போடும் சூழ்நிலை உருவாகும். யுன் அந்த உயிரைக் காப்பாற்றாவிட்டால் அவனுடைய ஃபர்ஸ்ட் மூன் இனக்குழுவுக்கு ஆபத்து வரும். எனவே, தலையிடுகிறான்.
உண்மையில் கதையில் அதில லாஜிக் மீறல்கள் கிடையாது இதே கதையை சீனத்தில் மினி தொடராக எடுத்தால் கூட நிறைய காரண காரிய மீறல்கள் உருவாகியிருக்கும். எதிர்காலம் தெரிந்தாலும் யுன் எல்லாவற்றையும் மாற்ற நினைக்கமாட்டான். தனது உயிரைக் காத்துக்கொள்ள முயல்வான். அடுத்து இனக்குழுவை காக்க முயற்சி செய்வான். அதில் நேரும் நெருக்கடிகளை இரண்டாவது சீசனில் எழுத்தாளர் எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக