தலித் எழுத்து என்று ஒன்று இல்லை - சோ. தர்மன் நேர்காணல்
தலித் எழுத்து என்று ஒன்று இல்லை
அபர்ணா கார்த்திகேயன்
தமிழில்: அன்பரசு சண்முகம்
புதிய, வழக்கமானது அல்லாமலுமான கதைகளைக் கூற தொடர்ந்து முயற்சிக்கிறேன் என்று கூறும் சோ. தர்மனின் கூகை நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் தன் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
சுதந்திரத்திற்கு பிறகான தலித் மக்களின் வாழ்க்கையினை திடமாகப் பேசும் சோ.தர்மனின் கூகை நாவல் ஆங்கிலத்தில் The Owl (OUP) வெளியாகியுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளரான சோ.தர்மன் மொத்தம் 9 நூல்களை எழுதியுள்ளார். புனைவு கட்டுரை சிறுகதை என்று எழுதியுள்ள இவரது எழுத்துக்களின் மீது அதிகளவிலான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.
கூகை நாவல் புனைவுதான் என்றாலும் தலித் மக்களின் சமூக வரலாற்றினை தெளிவாகக் கூறும் ஆவணம் போல இருக்கிறது. இப்போது அம்மக்களின் நிலை என்னவாக இருக்கிறது?
இன்று நடைபெறும் அந்த செயல்பாட்டினை நவீனத்தீண்டாமை என்றே கூறமுடியும். தீண்டாமை ஒழிப்புச்சட்டம் தலித் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மேலும் தலித் சமுதாய மக்கள் அரசியல் இயக்கங்களிலும் இருக்கிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் மீதான தீண்டாமை என்பது வேறுபட்ட முறையில் அவ்வளவு எளிதில் பார்வையில் படாதவாறு வலுவாக நிலைபெற்றுள்ளது.
உதாரணத்திற்கு என்னுடைய மகனையே எடுத்துக்கொள்ளுங்களேன். உயிரித் தொழில்நுட்பவியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றுவிட்டு முனைவர் பட்டத்திற்கான முயற்சியில் ஈடுபட்டான். ஆனால் அவன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் யாரும் அவனுக்கு வழிகாட்டியாக இருக்க சம்மதிக்கவேவில்லை. இது குறித்து கேட்டால், நீ முனைவர் பட்டம் வாங்கி என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்கிறார்கள். என்னுடைய கதைகளை முனைவர் பட்டத்திற்காக தேர்வு செய்ய முயன்ற மாணவர்களிடம் ''நீ அவருடைய கதைகளைத் தேர்ந்தெடுத்தால் நான் உனக்கு வழிகாட்டியாக இருக்கமாட்டேன்'' என்று அவர்களின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
50 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தம் நிலங்களை விட்டு வெளியேறிச் செல்வதாக உங்கள் எழுத்தில் எழுதியிருந்தீர்கள். இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?
இன்று எந்த ஒரு கிராமத்திலும் வயதானவர்களே காணக்கிடைக்கிறார்கள். இளைஞர்கள் இன்று அங்கே வாழவில்லை. இப்பகுதியைப் பொறுத்தவரை எங்களது வாழ்க்கை மழையினை நம்பியே உள்ளது. முன்பு குடிமராமத்து எனும் முறையில் எங்களது கிராமத்தின் ஏரி, குளங்கள் ஆகியவற்றை நாங்களே தூர்வாரி பராமரித்து வைத்து பெய்யும் மழைநீரை சேமிக்கும் வண்ணம் தயார் செய்துவைத்திருப்போம். எனது சொந்த ஊரான உருளைக்குடியில் மரங்களை வெட்டினால் அபராதமே விதிப்பார்கள்.
மழை தவறாமல் பெய்துகொண்டிருந்த காலம் அது. இன்று மழை பெய்யாததால் விவசாயம் லாபமானதாக இல்லை என்பதோடு விவசாயத்திற்கு உதவும்படியான நீர்நிலைகளின் பராமரிப்பும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது.
தண்ணீரைத் தேக்கி வைக்கும் இடங்களின் மூலமாகவே விவசாயம் நடைபெற்று வந்தது. அரசு இதுபோன்ற இயற்கையான கண்ணிகளை அதிகாரத்தின் மூலம் வெட்டியெறிந்தபோது விவசாயம் தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. எனவே இளைஞர்கள் விவசாயத்திலிருந்து வெளியேறி வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டனர். வெளிநாட்டில் ஒட்டகங்களின் கொட்டில்களையும், கழிவறைகளையும் சுத்தம் செய்து பிழைக்கின்றனர். அங்கு சாதி குறித்த பேச்சு கிடையாது. கடினமான உழைப்பு மட்டும்தான் உள்ளது. ஆனால் இங்கே?
ஆவணங்களாக இந்தியா ஒரு மாதிரியாகவும், நடைமுறை இந்தியா என்பது ஒரு மாதிரியாகவும் உள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் என் தந்தையும் ஒரு நாள் வேலை செய்யப்போனார். பழமையான மனிதரான அவர் அந்த வேலை செய்யும் மக்களிடம், தினக்கூலிக்கு வேலை செய்ய வந்திருக்கிறோம். மரத்தடியில் உறங்கிவிட்டு சம்பளத்தை பெற்றுச் செல்வது நியாயமில்லை என்று கூறினார். அடுத்த நாள் அந்த வேலைக்கு நான் செல்லமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர்தான் சாதி குறித்து பேசவும் அதன் வாழ்க்கை குறித்து வெளிப்படுத்தவும் முடியுமா?
என் கதைகளின் கதை என்ற நூலைப்பற்றிப் பேச சாகித்திய அகாதெமி என்னை அழைத்திருந்தது. நான்கு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களின் முன்னிலையில் ஆங்கிலத்தில் பேசினேன். தலித் எழுத்து என்று இங்கே இல்லை. நான் பிறப்பால் தலித்தாக இருக்கலாம். ஆனால் அதனைக்கொண்டு என் எழுத்தை தனிமைப்படுத்திவிட முடியாது. எழுத்திற்கு எதற்கு இட ஒதுக்கீடு?
சிங்கம் தன் வாழ்வை எழுதுகிறது, அப்படி எழுதவில்லை என்றால் வேட்டைக்காரரின் வாழ்வை எழுதும். ஆனால் தன்னைப்பற்றியது என்பது நிறைவு பெறாததாக உள்ளது. எனவே நான் என்னைப் பற்றியே எப்படி எழுதுவது? ஒரு ஐயர் குறித்து எனது நூலில் (கூகை நாவலில் வரும் நடராஜ ஐயர்) எழுதியதற்கு கடுமையான வன்மம் பெருகிய வசைகளை நான் சந்தித்தேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆனால் அவரைப்போன்று தன் நிலங்களை நிலமற்றவர்களுக்கும் குடிபெயர்ந்து வந்த ஆதரவில்லாதவர்களுக்கும் அளித்த மனிதர்களை நான் கண்டிருக்கிறேன்.
உங்களது படைப்புகளுக்கு புதிய வாசகர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏதேனும் உள்ளதா?
இளைஞர்கள் என்னிடம் ஒவ்வொருமுறையும் கேட்கும் கேள்விகள் இவைதான்: நான் ஏன் உங்களது படைப்புகளை வாசிக்கவேண்டும்? அதில் புதிதாக என்ன விஷயம் இருக்கிறது? இப்படி அவர்கள் கேட்க அவர்களுக்கு உரிமையுள்ளது. ஏனெனில் அவர்கள் எனது நூலினை காசு கொடுத்து வாங்குகிறார்கள்.
சரி அவர்களிடம் என்ன நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?
என்னுடைய நூலை வாங்கி வாசிக்கக் கூறுவேன். அந்நூலில் வழக்கத்திற்கு மாறான ஒன்றை வாசிக்கையில் உணர்வார்கள் என்பதை நான் அறிவேன். ஒரே விஷயங்களை ஒரே மாதிரி எழுதினால் அது செய்திக்கட்டுரை போல மாறிவிடும். ஒரு செய்தியை மிகவும் கடினமாக உழைத்தே அதனை ஓர் கலைப்படைப்பாக நான் மாற்றுகிறேன். அம்முறையில்தான் எழுத்து செவ்வியல் தன்மையை அடைகிறது. வேறு வழியில் இருந்தால் என் எழுத்துகளை யார் வாசிப்பார்கள்?
நீங்கள் எழுதும் கருத்துகளை வாசிக்க வாசகர்கள் அதிகளவில் உள்ளனரா?
அதிக அளவிலான விஷயங்களையும் பொழுதுபோக்கினையும் இன்று மக்கள் ஊடகங்கள் வழியாக எளிதில் பெற்றுவிட முடிகிறது.
தலித்துகள் குறித்து எழுதினாலும், புதிய இதுவரை கூறாத முறையில் கதைகளை கூறவேண்டிய தேவை உள்ளது. பழைய வரலாறுகளை, இரு குவளை முறை, சாதி கலப்புத் திருமணங்கள் என்றெல்லாம் இனி என்னால் எழுத முடியாது.
கதை கூறுவது என்பதே நடைமுறையில் வழக்கற்று போய்விட்டது என்று கூறலாம் அல்லவா?
நிச்சயமாக. இன்று திரளமான மக்கள் எங்கே இருக்கிறார்கள்? தங்களது வீடுகளில் உள்ள தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருக்கிறார்கள். இந்திய
டுடேவில் மருந்து என்னும் பெயரில் நான் ஓர் சிறுகதை எழுதியிருந்தேன். அதில் என்னுடைய வாழ்க்கையை நான் எழுதியிருந்தேன். கதைசொல்லியின் வாழ்க்கைக் கதை. என் இரு பிள்ளைகளுக்கும் தினமும் ஐந்து புதிய கதைகளையாவது கூறித்தான் உறங்க வைப்பேன். நான் இல்லாத போது என் மனைவி கதைகளை கூறுவாள்.
ஒரு சமயம் என் இளைய மகன் விபத்தில் சிக்கி, சுயநினைவற்று மூன்று நாட்களாக மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தான். மூன்றாவது நாள் என்னுடைய பாட்டி மருத்துவமனைக்கு எங்களை பார்க்க வந்தாள். '' கவலைப்படாதே, 50 - 60 ஆண்டுகளுக்கு முன்பு நானும் உன் தாத்தாவும் நிலத்தில் விதைகளை ஊன்றிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென உருவான புயல் மின்னலில் தங்கள் உருகிச் சொட்டுவது போல மின்னல் வானில் தோன்றியது. நாங்கள் எருதுகளுடன் வேகமாக வீட்டுக்கு ஓடினோம். இரு எருதுகளுக்கு இடையில் விழுந்த இடியொன்றினால் நாங்கள் இருவரும் மூர்ச்சையாகி விழுந்து விட்டோம்'' என்று அவர் பேசிக்கொண்டிருக்க, எனது மகன் மெல்ல எழத்தொடங்கினான். நான் பாட்டியிடம் தொடர்ந்து பேசக்கூறினேன். அவள் பேச பேச மகன் எழுந்து உட்கார்ந்ததோடு மேலும் கதைகளை கூறச் சொன்னான். சுற்றியிருந்த அனைவருக்குமே ஆச்சர்யமாகிவிட்டது. அதுதான் கதையின் சக்தி என்று கூறுவேன்.
நன்றி: தி இந்து ஆங்கிலம், 6.9.2015