நவாஸூதின் சித்திக் நேர்காணல்
வாழ்வின் கடினமான தருணங்களே என்னை பக்குவப்பட்ட மனிதனாக மாற்றியது
- நவாஸூதீன் சித்திக்மான்ஞ்சி திரைப்படம் நவாஸூதின் சித்திக்கை பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகராக ஏன் அவர் இருக்கிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. அவர் நம்மோடு தன் வாழ்வின் போராட்ட காலங்களில் நான்கு ஐந்து நண்பர்களோடு தங்கி வாய்ப்புக்காக போராடி வந்த காலங்களில் வறுமையின் விளைவாக தான் கற்றதும் பெற்றதுமான அனுபவங்களே தான் யார் என்பதை உணர்த்தியதாக கூறுகிறார்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கும் உங்களை காண்பதற்காக மக்கள் திரையரங்கிற்கு ஆவலாக வருவது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?
மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பது நல்ல விஷயம். ஏனெனில் அதுதான் என்னை வாழ வைக்கிறது. ஒவ்வொரு படமும் சிறு கீறல் போல தொடங்கியவைதான். பாராட்டு என்பது அவற்றினை எளிதில் திசைதிருப்பி விட முடியும். எனவே நான் இந்த பாராட்டுக்களை பெரிதாக நினைக்காமல் தவிர்த்துவிட்டு வேலையில் கவனமாக இருக்க முயல்கிறேன்.
எப்படி அதனை செயல்படுத்துகிறீர்கள்?
நான் என்னுடைய பழைய நண்பர்களை சந்தித்து உரையாடுவேன். அவர்கள்தான் நான் பூமியில் கால்பதித்து நடக்க காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் என்னுடன் இயல்பாக உரையாடி கடுமையாக கேலி செய்வார்கள். இது போன்ற நிகழ்வுகள்தான் என்னை எதார்த்தத்தை உணர்ந்துகொள்ள வைக்கிறது.
நான்கு அல்லது ஐந்து நண்பர்களுடன் ஒரே அறையில் தங்கி பல விதமான போராட்டங்களை சந்தித்துள்ளீர்கள் அதாவது சினிமாவில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரையில்...
ஆமாம். கன்சாம், சோனு, ராஜ்பால், அஷ்ரப் மற்றும் இன்னும் பலர் என ஒன்றாக தங்கியிருந்தோம். அது அவ்வளவு எளிதான வாழ்க்கையாக அமையவில்லை. யாருமே வளமையாக இல்லை என்றாலும் எங்களுக்குள் ஒரு விதி இருந்தது. அதாவது , யாருக்கு வேலை கிடைக்கிறதோ அவர்கள் மற்றவர்களுக்கு பணம் தரவேண்டும். யாருக்கு வேலை கிடைக்கிறதோ அவர்களுடைய அறையில் அந்த பணம் தீரும் வரையில் தங்கியிருப்போம்.
ஒரு காலத்தில் நீங்கள் பல கதவுகளைத் தட்டி வேலை கேட்டிருப்பீர்கள். இன்று பலர் உங்களது கதவுகளைத் தட்டுகிறார்கள். அன்று வேலை கிடைக்காதது குறித்து எப்போதாவது கோபம் கொண்டிருக்கிறீர்களா?
பாருங்கள், முதலில் நான் அவர்களிடம் வேலைக்காக சென்றேன். இன்று அந்த வேலைக்காக என்னைத் தேடிவருகிறார்கள். அதற்காக நான் அவர்களை பழிதீர்க்கவேண்டும், பழி வாங்குகிறேன் என்று அர்த்தமாகாது. "அன்று எனக்கு நீ வேலை தரவில்லை, இன்று உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று நான் ஏதாவது செய்யவேண்டுமா? இல்லவே இல்லை. எனக்கு அவர்கள் ஏன் வேலை தரவேண்டும்? அப்படி செய்ய அவர்களுக்கு என்ன அவசியம் இருக்கிறது? நான் ஒரு நடிகன் அவ்வளவே.
இன்று பார்வையாளர்கள் திரைப்படத்தில் நீங்கள் பேசும் ஒரு வரியைக் கேட்டாலும் விசிலடித்தும், கைதட்டியும் ரசிக்கிறார்கள்.
(புன்னகைக்கிறார்). அனுபவம் உங்களை நல்ல பக்குவப்பட்ட மனிதராக வளர்த்தெடுக்கும். அதோடு இணையும் காலம் உங்களை உழைக்கும் தளத்தில் மேலாக உயர்த்தும். எனது கடினமான வாழ்க்கை நிகழ்வுகளே என்னை இந்த பக்குவப்பட்ட நிலைமைக்கு நல்ல மனிதனாக மாற்றி வந்திருக்கிறது என்று நம்புகிறேன்.
தேசிய நாடகப்பள்ளியில் படித்தது உங்களது திறமையில் பெரும் ஆதிக்கம் செலுத்துவதாக நம்புகிறீர்களா?
அங்கு எனக்களித்த பயிற்சி என்பது அப்படிப்பட்டது. மக்கள் முன்னாடி எப்படி ஒரு கதாபாத்திரமாக முழுமையாக மாறி நிற்பது என்பது குறித்து அங்குதான் நான் கற்றேன். அங்கு வேலன்டைன் கபில்கோ என்றொரு ரஷ்ய இயக்குநரோடு இணைந்து என் படிப்பின் இறுதி ஆண்டில ஒரு நாடகத்தில் பணிபுரிந்தேன். மாஸ்கோ நாடகத்துறையிலிருந்து வந்திருந்த அவரையே நான் எனது குருவாக நினைக்கிறேன். நாடக ஒத்திகையின் போது அவர் பழைய நிகழ்வு ஒன்றை என்னிடம் பகிர்ந்துகொண்டார். ஒரு நாடகம் ஒன்றில் அவர் ராணுவ வீரனாக வேடம் முழுமைக்கும் நடித்திருக்கிறார். மேடையின் பின்னணியில் தன்னை ராணுவ வீரனாக கருதிக்கொண்டு நின்றிருக்கிறார். ஆனால் உண்மையில் நாடகம் பார்த்தவர்களின் ஒருவர் கூட அவரைக் கவனிக்கவில்லை. ஒருநாள் முழுமைக்கும் ராணுவ வீரனாக நடித்தும் கூட யாரும் அவரைக் கவனிக்காதது ஏதோ ஒன்று சரியில்லை என்று அவருக்குள் உணர்த்தியது. அன்றே அவர் தன் நடிப்பை கைவிட்டு இயக்குநர் பயிற்சிக்கு மாறிவிட்டார். ஏனென்றால் அவரால் தன் கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி அதுவாகவே மாற முடியவில்லை.
இந்த நிகழ்வு உங்களை எப்படி பாதித்தது?
ஒரு நடிகராக இருக்கும் போது என் முன்னே இருக்கும் பெரும் நட்சத்திர நடிகர் குறித்து நினைத்தேன் என்றால் அவருக்கும் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் நான் எந்த மரியாதையும் தரவில்லை என்றே அர்த்தமாகிறது. ஷாரூக்கான் (ரயீஸ்), அமீர்(தலாஷ்), சல்மான்(கிக், பஜ்ரங்கி பாய்ஜான்) ஆகியோர் என் முன்னால் இருக்கும் போது அவர்களை நான் நட்சத்திர நடிகர்களாக பார்த்தேன் என்றால் நான் எனது நடிப்பிற்கு நேர்மையாக இல்லாமல் அதில் பிறழ்ந்துவிட்டேன் என்றே அர்த்தம். ஒவ்வொரு காட்சிக்கும் நடிப்பில் உண்மையாக இருக்கவேண்டும். அப்படி உங்களால் நடிக்க முடியவில்லை என்றால் நடிப்பை கைவிடுவதே சிறந்தது.
நீங்கள் எப்போதாவது உங்களை நட்சத்திர நடிகராக உணர்ந்திருக்கிறீர்களா?
இல்லவே இல்லை.
நன்றி : டெக்கன் கிரானிக்கல்
ஆங்கிலத்தில் மெஹூல் எஸ். தாக்கர்
தமிழில்: லாய்ட்டர் லூன்