கிறுகிறுவானம்: தீராத கதைகளின் வானம்

கிறுகிறுவானம்
எஸ்.ராமகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்
விலை ரூ. 25




புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள கிறுகிறுவானம் குழந்தைகளுக்கான கதைப்புத்தகமாக நேர்த்தியாக 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இது முழுக்க கிராமத்து சிறுவனின் தினசரி வாழ்க்கை, ஏக்கங்கள், தவிப்பு, ஆசை, கஷ்ட நஷ்டங்களைப் பேசுகிறது.

 எஸ்.ராமகிருஷ்ணன்தான் அந்த குழந்தையாக மாறி எழுதுவது என்பது சில விவரிக்கும் செயல்பாடுகளில் தெரிகிறது எ.கா: சுடு சோறும், முட்டைப்பொரியலும் சாப்பிட்ட சக மாணவனின் கையை நக்குவது, பக்கத்துவீட்டில் சாப்பிடும்போது இரண்டாவது தோசையைக் கேட்பது என்பதைக் குறிப்பிடலாம். 

குழந்தைகள் பேருந்துகள், ரயில்வே என எங்கும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இதிலும் ஓட்டப்பல்லு என்றழைக்கப்படும் சிறுவன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். தனக்கு பிடித்தவர்களைப் பற்றிக் கூறும் போது தன் வீட்டில் இருக்கிற ஆடு, கோழியையும் எளிமையாக வகைப்படுத்தி தன்னோடு சேர்த்து ஓர் உயிராக  பார்க்கும் பார்வை வசீகரம். 

சாப்பாடும் கூப்பாடும்,  கைநிறைய பொய், அழுவேன் உருள்வேன் எனக்கு மிகப்பிடித்த பகுதிகளாக கூறுவேன். இவற்றில் அவர் எப்போதும் எழுதும் உணவு, பயணம் என இரண்டும் வந்துவிடுகிறது. பயணம் குறித்து எழுதும்போது எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தினை வாசிப்பது அற்புதமானதாக மாறிவிடுகிறது. 

கிராமத்தில் விளையாடும் பல்வேறு விளையாட்டுகளையும் இந்நூலிலேயே வகைபடுத்துகிறார். அதெல்லாம் நிச்சயம் வாசிக்கும் புதிய தலைமுறைக் குழந்தைகளுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். 

சிறுவனின் அனுபவங்களாக விரியும் இக்கதையிலும் நிறைய கதைகள் இடையிடையே வருகின்றன. கதையில் அச்சிறுவனுடன் பேசும் முதியவரே கதைகளின் ருசியைக் காட்டிவிடுகிறார். பிறகு அவனே பின்னாளில் கதை புனைகிறான் என்பதகு அவை அடிப்படையாக அமைகிறது. அனைவரும் ஒருநாள் சிறுவனாக இருந்தவர்கள்தானே?  இக்கதைகளையும் நீங்கள் கண்டிப்பாக மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். இல்லையெனில் உங்களின் உடம்பும் குண்டாகி விடும். இதோ நான் எனக்கு தெரிந்த கதையை உங்களுக்கு சொல்லிவிட்டேன்.  வாசித்து முடித்தபின் உங்களுக்கும் கிறுகிறுவானம் ஒருமுறை சுற்ற ஆசைவரும். அதுதான் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தின் வெற்றியும் கூட. 

குழந்தைகளின் தீராத கதைகளின் வானம் இந்த கிறுகிறு வானம்.