நூல்வெளி 2: புகழ்பெற்ற சிறுகதைகள்

உலகம் உங்கள் கையில்
உலகப்புகழ் சிறுகதைகள்
பேரா.கி.நடராஜன்
பாவை பப்ளிகேஷன்ஸ்
விலை ரூ. 70



இந்நூலில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. அதனை டால்ஸ்டாய் செகாவ், மாப்பசாந், டாஸ்டாவ்ஸ்கி, சோமர்செட்மாம், ஓ ஹென்றி, ஆஸ்கார் வைல்ட், ஜேம்ஸ் தர்பர்,ஆர்.கே. நாராயணன் உள்ளிட்டோர் எழுதியுள்ளனர். 

முதல் கதையான மூன்று துறவிகள் கதை அனைவருமே வாசித்திருக்கக்கூடிய கதைதான். சடங்குகளை ஒழித்து தூய மனதோடு இறைவனை நினைத்திருந்தால் போதும் என்னும் டால்ஸ்டாய் எழுதிய கதை.

தன்னலமிக்க அரசன், மேகிக்களின் அன்பளிப்பு போன்றவற்றை நீங்கள் நிச்சயம் உங்களது ஆங்கில துணைப்பாடத்திலேயே வாசித்திருக்கலாம். அதைப்பற்றி மாங்கு மாங்கு என்று பரீட்சையிலே விளக்கு விளக்கு என்று விளக்கிவிட்டதால் அக்கதைகள் குறித்து புதிதாக சொல்ல ஏதும் இல்லை.

புள்ளிபோட்ட வளையம் - ஆர்தர் கானன்டாயில், நகைகள் - கைடி மாப்பசாந், தாயார் - சோமர்செட் மாம், ஜோஸியக்காரனின் வாழ்க்கையில் ஒரு நாள் - ஆர்.கே. நாராயணன்  என இக்கதைகள் புதிதான வாசிப்பனுபவத்தை அளித்தன என்று கூறமுடியும்.

புள்ளி போட்ட வளையம் கதையில் சுவாரசியம் என்னவென்றால் ஷெர்லாக் ஹோம்ஸ் அக்கதையில் துப்பறிய வந்து நம்மை உற்சாகப்படுத்துகிறார் என்பதுதான். பரபரவென வரும் திடுக் திடுக் த்ரில்லர் இக்கதை கிடையாது. சண்டைக்காட்சிகளே கிடையாது. ஒரு மூளை இன்னொரு மூளையின் குற்றத்தடத்தை அடையாளம் கண்டு அதனை மடக்குவது என்பதுதான் இக்கதை குறித்து கூறமுடியும். மற்றபடி கதை என்றால் ஒரு பெண் வந்து ஹோம்ஸை சந்தித்து தன் சகோதரி மர்மமான முறையில் இறந்துவிட்டாள். நானும் அப்படி இறந்துவிடுவேன் என்று பயமாயிருக்கிறது என்று கூற, ஹோம்ஸ் அந்தப்பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு என்ன செய்கிறார் என்பதுதான் மிச்சமீதி விஷயங்கள். 

ஜோஸியக்காரனின் வாழ்க்கையில் ஒரு நாள் அதன் தலைப்பை போலவே கதை முடிந்தபின்பும் நீள்கிற கதையினை வாசகனை சிந்திக்க வைக்கிற தன்மை கொண்டது.  எப்போதும் இலக்கில்லாமல் முகம்பார்த்து வாடிக்கையாளர் கூறுவதை வைத்தை அடித்தோட்டி நேர்மையாக பிழைக்கும் (ஆசிரியரே கூறுகிறார்!) ஜோதிடர் அன்றைய நாளின் முடிவில் சந்திக்கும் ஒருவரைக் குறித்து கூறுவதெல்லாம் கேட்பவனே அசரும்படி 112% உண்மையாக இருக்கிறது. எப்படி என்றால் அதுதான் கதையின் திருப்புமுனையே. எப்படி அவர் சரியானபடி கூறினார்? அவருக்கும் முன்பு அமர்ந்திருப்பவருக்கும் என்ன தொடர்பு என கதை முடிந்தபின்னும் நாம் கதை இழையை பின்னிக்கொண்டிருப்போம் அப்படி ஒரு கதை இது. 

தாயார் எனும் சோமர்செட் மாம் எழுதிய கதை தாய் ஒருவளுக்கும் மகன் ஒருவனுக்குமான உறவைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் நீங்கள் எப்புறமும் நிற்கவே முடியாது என்பதுதான். லா காசிரா ஒரு அடுக்ககம் ஒன்றில் வந்து தங்குகிறாள்.  அவள் தனியாக இருக்கிறாள். யாரிடமும் தொடர்பு கொள்வதில்லை. மிக கண்டிப்பான சிடுமூஞ்சி. அவளைப்பற்றி பலரும் அறிய முயற்சி செய்கிறார்கள். அதன் வழியாகவே அவள் குறித்த விஷயங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. தாயின் விடாப்பிடியான பாசத்திற்கும் மகனின் தடை பறக்கும் இருபது வயதின் வீரியத்திற்கும் நடக்கும் சண்டைதான் கதை. யாருக்காக ஒரு விஷயத்தை செய்கிறோமோ அதை ஒருவர் உணராதபோது என்ன நிகழ்கிறது என்பதுதான் கதை. அப்பா தன் மகளை ஒருவருக்கு மணம் செய்து கொடுக்கும் போது மனதில் நிறையும் பதட்டமும், தாய் தன் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கும்போது அடையும் அதிருப்தியையும் நினைவுபடுத்தி அதை நாலால் பெருக்கிக்கொண்டால் இந்தக் கதையைப் புரிந்துகொள்ள முடியும். 

நகைகள் கதை கணவனுக்கும் மனைவிக்குமான உறவைப் பற்றி பேசுகிறது. இதில் நான் புரிந்துகொண்டதாக ஏதும் கூறமாட்டேன். மனைவி கணவனின் கொண்டுவரும் பணத்தில் செலவு செய்து குடும்பம் நடத்துகிறாள். நிகழ்ச்சிகளுக்கு செல்வதில் பெரும் பிரியத்தினை பின்னாளில் பெறும் அவளின் ஈர்ப்பை கணவனால் புரிந்துகொள்ளமுடிவதில்லை. பின் அவன் மெல்ல அலுவலக வேலையில் மூழ்கியபடி அவளை மறக்கிறான். அவள் விதவிதமான நகைகளை அணிகிறாள். அவை அனைத்தும் போலி நகைகள் என்று கணவனிடம் கூறுகிறாள். ஆனால் சில நாட்களில் அவள் இறந்துவிட அவனுக்கு தான் பெற்ற சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது மிக சிரமமாக இருக்க, எப்படி மனைவி மட்டும் சமாளித்தாள் என்று யோசித்தபடி நகைப்பெட்டியை பார்க்கிறான். பின் என்னவானது என்பதை கதையினைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். 

புத்தகத்தினை தலைப்பை வேறு ஏதாவது வைத்திருக்கலாம். பொது அறிவுப்புத்தகம் போல தலைப்பிட்டிருக்கிறார்கள்.  மொத்த பத்தில் மூன்று கதைகள் படிக்கத்தேறும் என்று கூறலாம்.