இதழாளர்களின் பைபிள் : நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

இதழாளர் கையேடு
சிவந்தி ஆதித்தனார்
ராணிமுத்து பதிப்பகம்
விலை ரூ. 20















நூலின் பெயரிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது எது மாதிரியான நூல் என்று. அதேதான். ஆனால் மிக எளிமையான கையேடாக எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தினத்தந்தி நாளிதழை வாங்கி நீங்கள் வாசித்து பார்க்கலாம். ஆமாம். தினந்தந்தியை நிறுவி அந்நிய மாநிலத்தவர்கள் பலருக்கும் தினமும் ஐந்து ரூபாயில் தமிழ் பழக வாய்ப்பளிக்கும் பத்திரிகையை தொடங்கியவர் ஆதித்தனார்தான் புத்தகத்தின் ஆசிரியர். 

நூலில் கூறப்படும் விதிகளை அனைத்தையும் தன் வாழ்நாளில் அவர் பெற்ற அனுபவங்களின் வழியேதான் கூறுகிறார் என்பதை நூலின் பின்புறம் இருக்கும் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்பை வாசிப்பவர்களுக்கு எளிதாக புரிந்துவிடும். 

இன்றும் தினத்தந்தி பல இணையதளங்கள், தொலைக்காட்சிகள் வந்தாலும் தினமும் ஒருகோடி வாசகர்களை பெற்று எளிய மக்களின் செய்தி பத்திரிகையாக முன்னணியில் நிற்க காரணம் ஆதித்தனார் சொன்ன விதிகளை அந்நிறுவனத்தார் தொடர்ந்து பின்பற்றி வருவதுதான் காரணம் என்று நிகழ்கால உதாரணமே காட்டமுடியும்.  காலத்திற்கு ஏற்ப தற்போது பத்திரிகை தாண்டி காட்சி ஊடகத்திலும் காலடி எடுத்துவைத்துவிட்டனர். துபாயிலும் பதிப்பு தொடங்கும் அளவு தினத்தந்தி வெற்றிபெற்ற காரணம் என்ன? வேறு வழியே இல்லை. நூலை நிச்சயம் நீங்கள் வாசித்தேதான் ஆகவேண்டும்.


விதிகள் மிக எளியவைதான். மக்களுக்கு புரியும்படி எழுதவேண்டும் என்பது தலையாய விதி. மற்றொன்று எந்த செய்தியையும் இலக்கணப் பிழை இல்லாமல் சுவையாக நறுக்கென்று அதே சமயம் கதை கூறுதலைப் போல பத்தி பிரித்து பத்திக்கு தலைப்பு வைத்து மெல்ல மெல்ல விஷயங்களை கூறிக்கொண்டு வரவேண்டும். அரசு விதிகளை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது.


இவையெல்லாம் கடந்து எப்படி தலைப்புச் செய்தி தேர்ந்தெடுப்பது, விபத்து புகைப்படத்தை எப்படி எடுக்கவேண்டும், விட்டுப்போன செய்திகளை எப்படி அடுத்தநாள் எழுதுவது, செய்திகள் குறைந்தாலும் தாமதமில்லாமல் நாளிதழை கொண்டுவருவது, அறிக்கைகளை வெளியிடும் போது நடுநிலைமை தவறாது வெளியிடுவது எப்படி? நமக்கு போட்டியாளர்களாக இருப்பவர்களின் செய்திகளை எப்படி எந்த வடிவத்தில் வெளியிடுவது, முக்கியமாக ஒரு செய்தியில் எதை கவனிக்கவேண்டும்? எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், மற்ற மாவட்டச்செய்திகளை எந்தப் பக்கத்தில் எழுதுவது?  என்பது போன்ற செய்திகளை முழுக்க நேர்மையாக பகிர்ந்துகொண்டிருக்கிறார் ஆதித்தனார். 

அச்சு எழுத்து இரண்டிலும் தேர்ச்சி பெற்றவராக ஆதித்தனார் இருந்தார் என்பதுதான். தமிழக சட்டசபை விதிகளை தமிழில் ஆதித்தனார் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார். கல்லூரியிலிருந்து தன் செலவுகளை தானே பார்த்துக்கொள்ளும் விதமாக புத்தகங்களைஅச்சிட்டு விற்றிருக்கிறார். தனது வேலையினூடே தொடர்ந்து பதிப்பு பணி என்பதை செய்துகொண்டே இருந்திருக்கிறார் என்பது ஆச்சர்யத்தை தருகிறது. 

நூல் பற்றி ஒன்றே ஒன்றுதான் கூற முடியும். இந்த நூலை நீங்கள் வாசித்தால் பத்திரிகையில் பணிபுரிய தெம்பு வரும் என்பதுதான். அச்சிலிருந்து ஆசிரியப்பணி, வடிவமைப்பு பணி , செய்தி சேகரிப்பு, மொழிபெயர்ப்பு என தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் இந்த நூலில் விளக்கமாக கூறியிருக்கிறார் ஆதித்தனார். 

 பத்திரிகையாளராக வேலை  செய்ய விரும்புபவர்களும்  பத்திரிகையாளர்களும் எந்நாளும் தன் வீட்டில் வைத்து படிக்கவேண்டிய நூல்  இந்த இதழாளர் கையேடு.