தி கிரேட் லோக்கல் டிவி வழங்கும் ரீல் 23
ஜானி விக் என்றால் விக் வைத்துக்கொண்டெல்லாம் கீனு ரீவ்ஸ் நடிக்கவில்லை. நீளமயிர்சிகையோடு கையில் துப்பாக்கியோடு சுட்டிருக்கிறார். உதைத்திருக்கிறார். குத்தியிருக்கிறார். குதிக்கிறார். மறுபடியும் சொல்கிறேன். இது அத்தனையின் போதும் துப்பாக்கி கையிலேயே இருக்கிறது. இன்னொன்றை சொல்ல வேண்டுமா வண்டி ஓட்டும் போதும் கூட கூடவே வைத்திருக்கிறார்.
நடிக்கவில்லையா என்றெல்லாம் கேட்கவே கூடாது.
கதை என்னன்னா கீனு ரீவ்ஸ்டோட சம்சாரம் நோய் வந்து கணவரை வருத்தப்படற வீடியோ புடிச்சு வச்சுட்டு படக்குனு ஒரு நாளு இறந்தர்றாங்க. அப்ப புடிச்சு நம்ம ஜானி மூஞ்சி செவத்துல அப்புன சாணி மாரியே படம் முடியறவரையும் இருக்குது ஏம்ப்பான்னு கேட்ட முருகேசனோட கேள்விக்கு பதில் கெடச்சிருச்சில்ல. செம லாஜிக் இல்ல.
படம் தொடங்குன கொஞ்ச நேரம் இறந்துபோன ஜானி சம்சாரம் வீடியோவுல என்ன பண்ற ஜானி? ன்னு படம் பார்க்க வந்த நாம கேட்கற கேள்வியையே கேட்கறாங்க. ஜானி உடம்புல எக்கச்சக்க குளுக்கோஸ் பற்றாக்குறை ஆன மாதிரியே படம் முழுக்க வர்றாரு. காரணம் என்னன்னு மறுபடியும் கேட்காதீங்க சென்றாயன்களே!
செத்த சம்சாரம் நம்மை புதைத்த ஈரம் காயறக்குள்ள புருஷன் என்ன பண்ணுவான் னு தெரிஞ்சிக்கிட்டாங்க போல. தான் செத்து ஒரு வாரம் ஆனப்பறம் ஒரு நாய்க்குட்டியை புருஷங்காரன் கைக்கு கிடைக்கிறமாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிடறாங்க. அப்பறம் வேறென்ன, கண்ணு கலங்க நாயகன் நாயை தனது தனிமையைப் போக்க கூடவே வைத்துக்கொண்டு வாழ்கிறார். அப்பத்தான் ஒரு ட்விஸ்ட் நடக்குது. சீஸ் வெச்ச மில்கா பன்னு மாதிரி மூஞ்சி வெச்சுட்டு இருக்கற ரஷ்யக்காரன் ஜானியோட கார பாத்துட்டு (வின்டேஜ் மஸ்டங்கா கார்) என்கிட்டயே வித்துருங்களேன்னு குயிக்கர்ர்ர் விளம்பரம் பண்றான். காரு விக்கிறதில்ல ன்னு சொல்லிட்டு லாரி நிற்கிற எடத்துக்கு போய் வண்டியை என்னென்ன முறையில வளைச்சு ஓட்டமுடியுமோ அப்பிடியெல்லாம் ஓட்டறாப்பல. ஏன் தம்பின்னு கேட்கறீங்களா? அதுக்கு பதில் கடைசில படத்திலயே வருது.
சீஸ் மூஞ்சிக்காரன் ஜானி நல்லாத் தூங்கிட்டு இருக்கிற ஒரு நாள் நைட்டு வந்து அவர நல்லா வெளு வெளுன்னு வெளுத்துட்டு அவரு வளத்துக்கிட்டு இருக்கற நாயையும் கொன்னு அதையும் ஜானியையே பொதைக்க வைக்கறான். இவ்வளவு நடந்தப்பறமும் நாயகன் நெஞ்சுக்கு நீதி கேட்காமயா இருப்பாப்பல? சீஸ் மூஞ்சிக்காரனை பொலி போட்டு பொங்கல் வைக்கறதுதான் ஜான் விக் படத்தோட கதை. சிரிப்பு வருமே.. வேண்டாங்க சிரிக்காதீங்க. படம் முடிவுக்கு வரும்போது ஜானி போடற சண்ட இருக்குதே சாமி... துப்பாக்கி எடுத்து கருப்புக் கோட்டும் உள்ளே சிவப்பு சட்டையும் போட்டிருக்கிற எல்லாத்தையும் கண்ணுலயே சுடறாப்பல. பாருங்க எழுத எழுத கை, கால் நகம் உட்பட எல்லாமே நடுங்குது.
இதில் வர்ற சண்டையெல்லாமே முக்கியம்தாம்ப்பா. எப்படின்னா.. எல்லாமே மிக நெருக்கமாக நின்னுக்கிட்டு மிலிட்டரி ஆளுக போடும் சண்டை முறைகள் (ஜூ ஊ என இரு வார்த்தைகளை இஷ்டத்து பயன்படுத்தி வார்த்தைகளை உருவாக்குங்கள். ஜூடோ, ஜிட்ஸ்டு ஜூடு, சீல் இதுபோல). பெரும்பாலும் உடல்ரீதியான சண்டைகள் என்றாலே கீனூ ரீவ்ஸ்க்கு இன்னிக்கு அஷ்டமி நாளைக்கு பாத்துக்கலாமாங்கறா மாரி டல்லாயிருது மூஞ்சி. ஆனாலும் பரவால்லப்பா துப்பாக்கி வெச்சுக்கிட்டு சமாளிச்சு மூஞ்சில எங்கெல்லா சுடமுடியுமோ அங்கெல்லாஞ் சுடறாப்புல.
கிளப்புல ஜானியை எதிர்த்து சண்டை போடுறவரு செம டப் கொடுக்கறாரு. அப்பக்கூட நாமளும் ஜானி மாதிரியே மனசுக்குள்ள சொல்லிக்குவோம். என் ஏரியாவுக்கு வாடா உன்ன பொளக்கறேன்னு. அதுக்கான காலமும் வருது. அவனுக்கும் காட்டு காட்டுனு உசுரு பயத்த காட்டறாரு.
நாயகி உட்டுட்டமேப்பா. புள்ளய எரோட்டிகா எக்ஸ்ல நடிக்கறாமாதிரிதே. ஆனா வெஷம் வெஷம் அம்புட்டும் வெஷமப்பா. ஜானியோட ரூமுக்குள்ள வர்ற சண்டை இருக்குதே... அது சண்டை மாதிரியே தெரில. எல்லாத்துக்குமே வாய்ப்பு கொடுக்கணுமல்ல...
முதல்லயே சீஸ் மூஞ்சிக்காரன சுட்டிருக்கலாம். ஆனா ரெண்டு மணி நேரம் படம் ஓடணும். அத நம்பி நாம வேற டிக்கட்டு வாங்கிட்டோம் அப்படி நெனச்சுப்பாத்தாங்களோ என்னமோ... அவன அங்க வெச்சு ஜானி செய்ய மாட்டாரு. இப்படித்தான் மோகன் மெஸ்ல சாப்பிட வேண்டிய சப்பாத்திய உடுப்பி ஓட்டல்ல ஏசிரூம்ல முக்காமணி நேரம் கழிச்சு சாப்படற மாதிரி அலுப்பாயிருது.
சண்டைன்னா பாக்கலாம். கதைன்னா எந்திரிச்சர்லாம்.
இன்னும் என்ன புது விசயமுன்னா, அடுத்த சீக்குவல் வருதுப்பா நம்மு ஜானிவிக் படத்துக்கு. அதுலியாச்சும் விக்குக்கு டை அடிச்சு தலை அரிக்காம பொருத்தமாக போடுவாங்களான்னு பாப்போம்.
நிகழ்ச்சியை இணைந்து வழங்கியவர்கள்
தேய்வேனாகான் செப்பல்ஸ் - தலைமுறைக்கும் தொடரும் செருப்புகள்.
ஷில்பாசெட்டி கால்குண்டா பிரியாணி - நேசம் கொட்டி செய்வோம் நாங்க !காசைக்கொட்டி சாப்பிடணும் நீங்க!
நம்பிக்கை இமயமலைக்கு செல்கிறது - செல்யான் ஜூவல்லர்ஸ்