வனங்களின் சிப்பாய்

எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள்
நக்கீரன்
தடாகம் வெளயீடு
விலை : ரூ. 30










இந்த நூலில் எறும்புகள் எனும் சிற்றுயிர்கள் மனிதர்களுக்கு என்ன செய்கின்றன என்பதைக் குறித்து விளக்கமாகப் பேசுகிறார் நூலாசிரியர் நக்கீரன். குரங்களுக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒற்றுமையைக்காட்டிலும் எறும்புகளுக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒற்றுமையை பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் வழியே நிறுவுகின்ற இடம் சிந்திக்கவைப்பதாக உள்ளது. 

இன்றைய நாளில் மனிதர்கள் தம்மைத்தாண்டி எந்த உயிர் குறித்தும் நினைப்பதேயில்லை. ஆனால் அப்படி அமெரிக்காவில் சிவப்பு எறும்புகளை அழிக்கச் செய்த விபரீத முயற்சி பின்னாளில் அந்த விளைநிலத்தை பாலைவனமாக்கி விவசாயிகளின் வாழ்வை அழித்த கதையோடு அதை நடத்தி பூச்சிக்கொல்லி வணிகர்கள் எப்படி பொய்யாக கட்டுக்கதையை உருவாக்கினார்கள் என்பதையும் விரிவாகப் பேசுகிறார் நக்கீரன். 

பிரம்ம புத்திரா ஆற்றின் மறுபுறமிருந்த மணல் திட்டுகளை உள்ளடக்கி மலட்டுத்தன்மை கொண்ட மண்ணை எறும்புகள் மூலம் தனிமனிதர் அதனை அடர்வான காடாக உருவாக்கிய செய்தி தனிமனிதராக ஒருவரின் ஆழமான எண்ணத்தின் ஆற்றலை கூறுகிறதாக இருந்தாலும் அரசு இது குறித்த கவனம் இல்லாமல் இருக்கிறதே என்ற உண்மையையும் கூறுகிறது. 

எறும்புகள் உள்ளிட்ட சிற்றுயிர்கள் மற்ற உயிர்களோடு எப்படி தொடர்புகொள்கின்ற என்பதற்கு தினைக்கதிரை மழைக்காலத்தில் ஒரு பறவை சாப்பிட அனுமதிக்கும் நிகழ்வினை ஆசிரியர் விவரித்திருக்கும் இடம் அவ்வளவு நெகிழ்ச்சியான ஒன்றாக அமைந்திருக்கிறது. 

மனிதர்களோடு ஒப்பிடுவது குறித்து ஆசிரியர் முன்வைக்கும் முக்கியமானது அவற்றின் வீடு, கழிவறைக்கான தனி இடம், ஒழுங்கான அமைப்பு முறை, உழைப்பு ஆகியவற்றையும் ஒப்புமைபடுத்துவதோடு, எறும்புகளை எதிரிகளாக காட்டுவதன் ஆபத்தினையும் அதன் விளைவுகளையும் உதாரணங்களோடு விளக்குகிறார். 

உயிர்ச்சூழலின் கண்ணிகள் பெரும் நுகர்வு காரணமாக உடைபடும்போது ஏற்படும் சிக்கல்களையும் அதனை நாம் பொருட்டாக கொள்ளாதபோது ஏற்படும் சிக்கல்களையும் விளக்குகிறது திடுக்கிட வைக்கிற நிகழக்கூடிய வாய்ப்புள்ள உண்மையாகவே இருக்கிறது. 

சிற்றுயிரோ பேருயிரோ ஒவ்வொன்றுமே இயற்கையைப் பொருத்தவரை அதன் மதிப்பு ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நேர்த்தியான ஒரு நூல் இது.