பேராசைக்கு எதிராக ஒரு குரல்: மயிலம்மா : போராட்டமே வாழ்க்கை












மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை
ஜோதிபாய் பரியாடத்து
தமிழில் - சுகுமாரன்
எதிர் வெளியீடு
விலை ரூ. 55



நாம் தொடர்ந்து இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றவேண்டிய தேவை இருந்துகொண்டே இருக்கிறது. பெரிய நிறுவனங்கள், அவர்களுக்காக தரகு வேலை செய்யும் இந்திய நிறுவனங்கள், பேராசை கொண்ட தனிப்பட்ட முதலாளிகள், அறியாமை கொண்ட பேராசையின் சார்பில் நிற்கும் மனிதர்கள் என நாம் தொடர்ந்து இயற்கையை சீரழிக்கும் பல தீய எண்ணங்களுக்கு எதிராக போராடிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகிவருகிறது.



ஆதிவாசிப் பெண்ணான மயிலம்மாவும் தனது கணவரற்ற சூழலில் ஆறு குழந்தைகளோடு வாழ போராடி அவர்களுக்கான வாழ்க்கைப் பாதையினை உருவாக்கி கொடுத்ததோடு நிற்காமல் தனக்கு ஆதரவளித்த இயற்கை தாயினை, அவளது மடியினை ஈரத்தை பிறரும் உணர வாய்ப்பு தரும் பொருட்டு பிளாச்சிமடை பகுதியில் தொடங்கப்பட்ட கோக கோலா நிறுவனத்தின் நீர் சுரண்டலுக்கு எதிராக நீதி கேட்டு போராடியதன் மூலம் புகழ் பெற்றவர்.

இந்த நூல் வெறும் போராட்ட வடிவத்தை மட்டும் பேசாமல் மயிலம்மா தன் வாழ்க்கை எப்படி இருந்தது என்று இயல்பான தன் மொழியில் கூறிச்செல்கிறார். அதனால்தான் இந்த எழுத்துகள் வெறும் போராட்டம் சார்ந்தது என்று வாசிப்பதை தவிர்த்து ஒரு சுயசரிதை நூல் போலான தன்மையினையும் ஏற்படுத்துகிறது. 

பழங்குடி மக்களான இவர்களிடம் இருந்து சொற்ப விலைக்கு அல்லது விலையில்லாமல் பண்படுத்திய நிலத்தை  எப்படி அருகில் உள்ள தமிழ் கவுண்டர்கள் ஏமாற்றி  பெறுகிறார்கள் என்பதிலிருந்து  தொடங்குகிறது இவரது கதை. தனது பள்ளிபடிப்பு மீதான ஆசை, அதை தொடரமுடியாமல் கால்நடை மேய்ப்பது, வயது வந்த உடனே திருமணம் செய்வது, முடிந்தவரை பெண்ணை பிறந்த வீட்டிலிருந்து முற்றாக துண்டித்து விடுவது, பின் கணவரோடான வாழ்க்கை, ஆறு குழந்தைகளைப் பெறுவது, உடல் நலிவுற்று கிடக்கும் போது அவரது உறவினர் கூறும் வார்த்தை அவரது வாழ்க்கையினை எப்படி மாற்றுகிறது என்பதை கூறும் விதம், பின்னர் குழந்தைகளின் வாழ்க்கையினை அமைத்துக்கொடுத்தபின் கோலா நிறுவனத்திற்கான போராட்டத்தை தொடங்குவது அதில் சந்தித்த பிரச்சனைகள், அரசியல் கட்சிகளின் இரு முகங்கள், நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் பழங்குடி பெண்களின் அவதூறுகள், பெரும் சமூக செயற்பாட்டாளர்களின் அறிமுகம், தொடர்ந்து வரும் கோலா நிறுவனத்தின் அதிகார அடக்குமுறைகள், அரசின் மக்கள் மீதான வழக்கமான அலட்சியம்  என அனைத்தையும் தனது இயல்பான எளிய மொழியில் தான் புழங்கும் மொழியிலேயே எடுத்துரைக்கிறார். அது பிரச்சனையை நாம் புரிந்துகொள்ள பேருதவியாக இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் சுகுமாரனின் பங்கை இங்குதான் நினைத்துக்கொண்டு மனதார பாராட்டவேண்டியிருக்கிறது. 

ஆதிவாசி சமூகம் எப்படி நிலவுடைமைச் சமூகம் அவர்களை சுரண்டுகிறது என்பதையும் மட்டுமல்லாமல் ஆதிவாதி இனக்குழுக்களின் திருமண உறவு உணவுப்பழக்கம் உள்ளிட்டவற்றையும் விரிவாக பதிவு செய்கிறார் மயிலம்மா. நெருங்கிய உறவின் கூறும் வார்த்தை கடும் ஏளனமாக இருந்தாலும் அதை தனது வாழ்வில் எங்கும் தொய்ந்து விழாது இருக்க பயன்படுத்திக்கொண்ட பகுதியினை வாசிக்கும் யாரும் மறக்கவே முடியாது.

தன் வாழ்வின் பிரச்சனைகளைத் தாண்டி சமூகத்தினை தன் மண், நீர், நிலத்திற்கான போராடும் துணிவு பொருள் சார்ந்த உலகத்தில் எத்தனை பேரிடம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்புவதை விட அனைவரும் எழ வேண்டும் என்று ஆசைப்படுவதாக, எழவேண்டும் என்பதற்கான ஒற்றைக்குரலாக நமது மௌனத்தை  கலைத்து கவனம் குவிக்க வேண்டிய பிரச்சனை சமகாலத்தில் எது என்று கூறுவதாகவே மயிலம்மாவின் துணிச்சலான போராட்ட வாழ்க்கை இருக்கிறது.

வெறும் போராட்டத்தையோ தனிமனிதரை வழிபடக்கூறுகிற புத்தகம் அல்ல. பிறரது நலன்கள் மீதும் கவனம் குவிக்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த மண் இன்னும் மாசுபடாமல், உயிர்ப்போடு இருக்கிறது என்பதைக்கூறும் நூல்கூட. 

இறுதிப்பக்கங்களில் மயிலம்மா கூறும் வார்த்தைகள் அனுபவத்தின், இயற்கை மீதான பெரும் பிரியம் செறிந்தவை என்பதை இயற்கையினை நேசிக்கும் எவரும் புரிந்துகொள்ள முடியும்.